பேரறிஞர் அண்ணா தொடங்கி அம்மையார் ஜெயலலிதா வரை தரக்குறைவாக விமர்சித்த தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையைக் கண்டித்து அக்கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தார்.
வெளியில் இப்படி சொல்லப்பட்டாலும் கூட அ.இ.அ.தி.மு.க - பா.ஜ.க இடையே கள்ளக் கூட்டணி தொடர்வதாக தி.மு.க தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியை உடைப்பதற்காகவும், சிறுபான்மையினர் வாக்குகளை கவர்வதற்காகவும் அ.இ.அ.தி.மு.க - பா.ஜ.க நடத்திய நாடகம் பலனளிக்கவில்லை.இந்நிலையில் 26.03.2025 அன்று இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. டெல்லி விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய பழனிச்சாமி "டெல்லியில் கட்டப்பட்டு வரும் தங்கள் கட்சி அலுவலகத்தை பார்வையிட" வந்ததாகத் தெரிவித்தார்.
ஆனால் அதே நாள் இரவு இன்னோவா, ஆடி, பென்ட்லி என பல கார்களில் மாறிமாறி பயணம் செய்து பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்துள்ளார். மக்கள் பிரச்சனைக்காகவே இந்த சந்திப்பு நடந்தாகக் கூறும் பழனிச்சாமி எதற்காக இத்தனை கார்களில் மாறி மாறி பயணம் செய்ய வேண்டும். கோரிக்கை மனு எதையும் அவர் உள்துறை அமைச்சரிடம் அளித்தாகவோ, மனுவின் நகலை ஊடகங்களிடம் வழங்கியதாகவோ தெரியவில்லை.
கடந்த ஜனவரி மாதம் பழனிச்சாமியின் உறவினரான ஈரோடு இராமலிங்கம் தொடர்புடைய 26 இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் ரூ.750 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதுடன்,
கணக்கில் வராத பணம் ரூ.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. பழனிச்சாமியின் மகன் மிதுன் ஈரோடு இராமலிங்கத்தின் தொழில் பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் அமலாக்கத் துறை டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடத்திய போது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட 41 எப்.ஐ.ஆரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவித்தது. அதில் 34 எப்.ஐ.ஆர் 2016 - 2021 அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் பதிவு செய்யப் பட்டதாகும்.
இதிலிருந்து தப்பிக்கவே டெல்லி சென்று அமித்ஷாவிடம் சரண் அடைந்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இதன் மூலம் *"பல்டி" பழனிச்சாமி, "பல கார்" பழனிச்சாமி* போன்ற சிறப்புப் பெயர்களைப் பெற்றுள்ள பழனிச்சாமி, அமித்ஷாவிடம் இருமொழிக் கொள்கையை வலியுறுத்தியதாக ஊடகங்களிடம் கூறியுள்ளார். 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பழனிச்சாமியின் தாயார் மறைவெய்திய போது இந்தியில் இரங்கல் கடிதம் அனுப்பினார் அமித்ஷா. அதையே கண்டிக்கத் திராணியற்ற பழனிச்சாமி இப்போது அவரிடம் இருமொழிக் கொள்கையை வலியுறுத்தினார் என்பதை எவ்வாறு ஏற்க முடியும்.
இந்த சந்திப்பிற்கு பிறகு "2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்" என்று எக்ஸ் வலைத்தளத்தில் அமித்ஷா பதிவு செய்துள்ளார். தமிழ்நாட்டில் மதுபானங்களின் மொத்த விற்பனையை 1983 ஆம் ஆண்டு மே மாதம் டாஸ்மாக் தொடங்கியது. அப்போது நடைபெற்றது எம்.ஜி.ஆர் ஆட்சி. தமிழ்நாட்டில் மதுபானங்களின் சில்லறை விற்பனையை 29.11.2003 ஆம் தேதி முதல் டாஸ்மாக் தொடங்கியது.
அப்போது நடைபெற்றது ஜெயலலிதா ஆட்சி. இந்திய ஒன்றியத்திலேயே ஊழலுக்காக உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரே முதல்வர் ஜெயலலிதா. இந்த உண்மை புரியாமல் இவர்களோடு கூட்டு வைத்து மது வெள்ளத்தையும், ஊழல் புயலையும் ஒழிக்கப் போகிறாராம் அமித்ஷா.
அமித்ஷா - பழனிச்சாமி சந்திப்பு பற்றிக் குறிப்பிடும் போது அ.இ.அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் "இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா. தமிழ்நாட்டின் இரும்பு மனிதர் பழனிச்சாமி" என்று கூறியுள்ளார். வீரபாண்டியக் கட்டபொம்மன் திரைப்படத்தில் "எனக்கு இரும்புத் தலையன் என்று பெயர்" என பானர்மேன் சொல்லும் போது, "உருக்க வேண்டிய பொருள் மீது இரக்கம் காட்டிப் பேசியது என் தவறு தான்" என்று பதிலுரைப்பார் கட்டபொம்மன். அதைப் போல தமிழ்நாட்டில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் அமித்ஷா கூட்டத்தையும், அவர்களுக்கு துணை நிற்கும் அடிமைக் கூட்டத்தையும் தமிழ்நாட்டு மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் முற்றிலுமாக நிராகரிப்பார்கள்.
- வழக்கறிஞர் இராம.வைரமுத்து