கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பசுவதை தடைச் சட்டம் இந்தியா முழுமைக்கும் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் மோடி ஆட்சிக்கு பிறப்பித்த ஆணையை அப்படியே ஏற்று மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமலேயே மத்திய அரசு சுற்றுச் சூழல் துறை வழியாக சந்தைகளில் கால்நடைகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை போட்டு விட்டது.

பசுமாடு மட்டுமல்ல; காளை, எருமை, கன்றுக்குட்டி, ஒட்டகம் உள்ளிட்ட அனைத்து கால்நடைகளையும் இறைச்சிக்காக இனி சந்தைகளில் இந்தியா முழுவதும் விற்கக் கூடாதாம். சந்தைகளில் கால்நடைகளை விற்றால் விவசாயிகள் இறைச்சிக்காக விற்க வில்லை என்று எழுத்துப் பூர்வமாக உறுதி மொழி தர வேண்டுமாம். வாங்குவோர் விற்போர் இருவரும் நிலத்தின் உரிமைப் பத்திரம், விவசாயி என்பதற்கான அடையாள சான்று உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டுமாம். அப்படி வாங்கிய கால்நடைகளையும் அடுத்த 6 மாதத்திற்கு வேறு எவருக்கும் விற்கக் கூடாதாம். இப்படிக் கூறுகிறது மோடி ஆட்சியின் சட்டம்.

இனி ஒவ்வொரு வீட்டிலும் இறைச்சி சமைத்தால் சமைத்த உணவை கண்காணிப்புக் குழுவின் பரிசோதனைக்கு உட்படுத்தி சமைக்கப்பட்டது மாட்டிறைச்சி அல்ல என்று உள்ளூர் வருவாய் அலுவலர் கால்நடை மருத்துவரிடம் தடையில்லா சான்றிதழ் பெற்ற பிறகே சமைத்த உணவை குடும்பத்தினர் சாப்பிட வேண்டும் என்று அவசர சட்டம்கூட வரலாம்.

புத்தர் இயக்கம் செல்வாக்கு பெற்ற காலம் வரை மாட்டிறைச்சியை ருசித்து ரசித்து வயிறு முட்ட விழுங்கியவர்கள் வேத - புரோகித பார்ப்பனர்கள். பார்ப்பனர்கள் நடத்திய யாகங்களில் பசுக்களை கால்நடைகளை எரித்து பிறகு அவற்றை சுவைத்து உண்டார்கள் என்பதை வேதங்களே கூறுகின்றன.

இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ள மிருக வதை தடைச் சட்டத்தின்படி வேதங்களின் இந்த பகுதிகளுக்குத் தடை போட்டு, இதை பரப்புவதோ ஓதுவதோ கிரிமினல் குற்றம் என்று அறிவித்திருக்க வேண்டும். அதைச் செய்வார்களா?

மிருக வதையை நியாயப்படுத்தும் வேதங்களைத் தடை செய் என்று வலியுறுத்தி வேத எரிப்புப் போராட்டத்தைத்தான் இனி நாம் தொடங்க வேண்டியிருக்கும்.

இராமனுக்கு கோயில் கட்டத் துடிப்பவர்கள் ராமன் மிகவும் விரும்பிச் சாப்பிட்ட மாட்டுக் கறிக்கு ஏன் தடை போடுகிறார்கள்?

மோடி ஆட்சியின் இந்த சர்வாதிகாரச் சட்டம் விளிம்பு நிலை மக்களுக்கும் சிறுபான்மை சமூகத்திற்கும் விவசாயிகளுக்கும் எதிராக கொண்டு வரப்பட்ட சட்டம், தனது வாழ்வாதரத்திற்குப் போராடும் விவசாயி பயன் தராத மாடுகளைத் தீவனத்துக்குக் கேடாய் எப்படி காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும்? இந்த அதிகார அடக்குமுறையை மக்களை பொறுமையாக சகித்துக் கொண்டிருக்கவே மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி, விவசாயிகள் அமைப்பு, கால்நடை விற்பனையாளர்கள் என்று பல்வேறு அமைப்புகளிலிருந்தும் உடனடியாக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கேரள மாநில முதல்வர் இதனை ஆர்.எஸ்.எஸ். செயல் திட்டம் என்றுகூறி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். மாநில உரிமைகளை காலில் போட்டு மிதித்து மக்களின் வாழ்வாதாரம் உணவு உரிமைகளை தடுக்கும், ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை விளிம்பு நிலை மக்களின் தொழில் வணிகங்களும் பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கியுள்ளன.

அனைத்திற்கும் மேலாக இந்தியா முழுமைக்கும் ஆர்.எஸ்.எஸ். அதிகார கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக் கூடிய முயற்சியே இது. பார்ப்பனீயமே இந்தியா; பார்ப்பனப் பண்பாட்டை ஏற்று அடிபணிந்து ஏற்று வாழ வேண்டும் என்பதே குடிமக்களின் கடமை என்ற ஒற்றைப் பார்ப்பன கலாச்சாரத் திணிப்பை நிலை நிறுத்துகிறது.

இந்த பச்சைப் பார்ப்பன பாசிச சட்டத்தை எதிர்த்து தமிழகம் போராட்ட களமாக மாற வேண்டும்!

கழகத் தோழர்கள் ஒத்த கருத்துடைய கட்சிகள் இயக்கங்கள் ஒன்றிணைந்து ஒரே குரலில் இந்த சட்டத்தை திரும்பப் பெற வைக்கும் போராட்டங்களை உடனே தொடங்கிட உரிய களப்பணிகளை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.