நேர்காணல் - தொடர்

மு.சி.அறிவழகன்

சென்ற இதழ் தொடர்ச்சி...

வேதங்களிலும் தர்ம சாஸ்திரங்களிலும் உள்ள ஆதாரங்களைக் கொண்டு தனது ஆய்வை ஆழப்படுத்திய அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார்.

“இவற்றை எல்லாம் கொண்டு பார்க்கும்போது பார்ப்பனர்கள் மாட்டிறைச்சியைச் சாப்பிட்டது மட்டுமல்ல, யாகங்களில் விலங்குகளைக் கொல்பவர்களாகவும் இருந்து வந்தனர் என்பதற்கு இதற்கு மேல் சான்றுகள் ஏதும் தேவையில்லை என்றே தோன்றுகிறது.”

சரி இப்படி மாட்டைக்கொன்று தின்ற பார்ப்பனர்கள் சைவ உணவுக்கு மாறிய கதையை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கூறுகிறார் படியுங்கள்.

‘இவ்வாறிருக்கும்போது பிராமணர்கள் ஏன் களம் மாறினார்கள்? ஏன் திசை மாறினார்கள்? அவர்களிடையே ஏற்பட்ட மாற்றத்தை இரண்டு கட்டங்களாகப் பார்ப்போம். முதலாவதாக, மாட்டிறைச்சி சாப்பிடுவதை அவர்கள் ஏன் கைவிட்டார்கள்?.

மனுதடுத்தாரா?- மனுஸ்மிருதி கூறுவது என்ன?

V.28         ‘‘படைப்புகளின் அதிபதியான ப்ரஜாபதி உயிர்களுக்கு ஆதாரமாக இந்த உலகம் முழுவதையும் படைத்தார்: அசைவன, அசையாதன அனைத்தும் இந்த உயிர்களுக்கு உணவே ஆகும்.’’               

V.29         ‘‘இதில் தவிர்க்க முடியாதது எதுவெனில், கோரைப் பற்கள் உடையவை கோரைப்பற்களில்லாதவற்றுக்கு இரையாவதும், கரங்களற்றவை கரங்களைக் கொண்டவற்றுக்கு இரையாவதும், கோழை தைரியசாலிக்கு இரையாவதும்தான்.”

V.30         ‘‘பிரத்தியேகமாக உணவுக்காகவே படைக்கப்பட்டதை உண்பது பாவமாகாது: ஏனென்றால் உண்பவர்களையும் உண்ணப்படுபவற்றையும் கடவுளே படைத்திருக்கிறார்”.           

V.56         ‘‘மாமிசம் உண்பது பாபமில்லை: மதுவருந்துவதும் குற்றமில்லை: பாலுணர்ச்சி கொண்டு உடலுறவு கொள்வதிலும் தவறில்லை: இவையெல்லாம் உயிர்ப்பிராணிகளின் இயல்பாகும், எனினும் இவற்றைத் தவிர்ப்பது பெரும் நன்மை பயக்கும்”.        

V.27         ‘‘நீர் தெளித்து மந்திரம் ஓதி, புலால் உண்ணலாம், விதிமுறைப்படி சமயச்சடங்கில் ஒருவர் ஈடுபட்டிருக்கும்போது, பிராமணர்கள் விரும்பினாலும், ஒருவர் உயிர் ஆபத்தில் இருக்கும்போதும் மாமிசம் உண்பதில் தவறில்லை”.   

V.31         ‘‘தெய்வங்கள் வகுத்துத்தந்த விதியின்படி, யாகத்திற்காக இறைச்சி சாப்பிடுவது ஏற்புடையதே: ஆனால் மற்ற சமயங்களிலும் விடாது மாமிசத்தை உண்பது ராட்சதச் செயலாகும்.”

V.32         ‘‘தெய்வங்களுக்கோ மூதாதையர்களின் ஆவிகளுக்கோ மரியாதை செய்யும்போது, வாங்கியோ, விலங்கை தானே கொன்றோ அல்லது மற்றவர்களிடமிருந்து பரிசாகப் பெற்றோ மாமிசம் உண்பது தவறில்லை.”        

V.42         ‘‘வேதத்தின் உண்மையான பொருளை அறிந்த இருமுறை பிறந்தவன் (பார்ப்பனன்) இந்த நோக்கங்களுக்காக ஒரு பிராணியைக் கொன்றால் அவனும் அந்தப் பிராணியும் நற்கதி அடைவார்கள்.”               

V.39         ‘‘சுயம்புவே (தானாகத் தோன்றியவர்) யாகங்களுக்காக விலங்குகளைப் படைத்தார்: இந்த உலகம் முழுவதன் நலனுக்காகவே யாகங்கள் தோற்றுவிக்கப்பட்டன: எனவே, யாகத்திற்காக விலங்குகளைக் கொல்வது அந்த சொல்லின் வழக்கமான பொருளில் கொல்வதாகாது.

V.40         ‘‘மூலிகைகள், மரங்கள், கால்நடைகள், மற்றும் ஏனைய விலங்குகள் யாகங்களுக்காக அழிக்கப்பட்டால் அவை மீண்டும் பிறக்கும்போது உயர்ந்த நிலையை அடைகின்றன.’’             

V.35         ‘‘ஒரு புனிதச் சடங்கில் உரியமுறையில் ஈடுபட்டிருப்பவன் அதாவது அதை முன்னின்று நடத்துபவன் அல்லது அந்தச் சடங்கில் விருந்துண்பவன் இறைச்சி உண்ண மறுத்தால், இறந்தபின் 21 பிறவிகளில் ஒரு பிராணியாக இருந்து வருவான்.           ’’

இவை யாவற்றிலுமிருந்து, புலால் உண்பதை மனு தடை செய்யவில்லை என்பது தெளிவு. அதுமட்டுமல்ல, பசுவதையை மனு ஸ்மிருதி தடை செய்யவில்லை என்பதையும் மனு ஸ்மிருதியிலிருந்தே மெய்ப்பிக்க முடியும்.

ஒரு தாடையில் மட்டும் பற்கள் கொண்ட எல்லா வீட்டு வளர்ப்புப் பிராணிகளின் இறைச்சியைச் சாப்பிடலாம் என்று பொதுவான அனுமதியை இந்த சுலோகத்தின் மூலம் மனு வழங்குகிறார். இந்தப் பொதுவான விதிக்கு மனு ஒரே ஒரு விதிவிலக்கை மட்டும் அளிக்கிறார். அதுதான் ஒட்டகம், ஒரு தாடையில் மட்டும் பற்களை உடைய வீட்டு வளர்ப்புப் பிராணிகள் பட்டியலில் ஒட்டகம் மட்டுமின்றி பசுவும் இடம்பெறுவது அனைவருக்கும் தெரியும். ஆனால் அப்படியிருந்தும் மனு பசுவுக்கு விதிவிலக்கு அளிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எவரும் பசுவின் இறைச்சியை உண்பதில் மனுவுக்கு எத்தகைய ஆட்சேபமும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

பசுவதையை மனு ஒரு குற்றமாகக் கருதவில்லை, பாவங்களை மனு இரண்டாகப் பிரிக்கிறார். (i) மாபாவங்கள் (ii) சிறு பாவங்கள், மாபாவங்கள் பட்டியலில் மனு பின்கண்டவற்றைச் சேர்க்கிறார்.

ஓ1.55.    பிராமணனைக் கொல்வது, சுராபானம் எனப்படும் மதுவருந்துவது, பிராமணனுக்குச் சொந்தமான பொன்னைத் திருடுவது, குரு பத்தினியுடன் உடலுறவு கொள்வது, இத்தகைய குற்றவாளிகளுடன் உறவாடுவது. 

சிறுபாவங்கள் வரிசையில் மனு பின்கண்டவற்றைச் சேர்க்கிறார்.

ஓ1.60.    பசு வதை, தகுதியில்லாததற்கு யாகம் செய்வது, கூடா ஒழுக்கம், பிறரைப் பகைத்துக் கொள்வது, அன்றாடம் வேதம் ஓதுவதை நிறுத்துவது, ஆசிரியர், தாய், தந்தை அல்லது மகனைப் பழிப்பது, வீட்டுப் புனித நெருப்பைப் புறக்கணிப்பது.”            

பசுவைக் கொல்வது சிறிய பாவமே என்று மனு கருதுவது இதிலிருந்து தெளிவாகிறது. போதிய காரணமின்றிப் பசுவைக் கொல்வதுதான் வெறுக்கத்தக்கது. மற்றபடி பசுவதை கொடியதோ அல்லது விலக்கமுடியாததோ அல்ல. யாக்ஞவல்கியரின் கருத்தும் இதுதான்.

இவை யாவும் எதைக் காட்டுகின்றன? தலைமுறை தலைமுறையாக, வழிவழியாக பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உண்டு வந்திருக்கின்றனர் என்பதையே இவை புலப்படுத்துகின்றன. அப்படியானால், அவர்கள் ஏன் மாட்டிறைச்சி உண்பதை விட்டனர், உச்சக்கட்ட நடவடிக்கையாக மாமிசத்தை அறவே ஒதுக்கிவிட்டு மாங்கனிக்கு மாறுவானேன்?

கேள்விகளைக் கேட்ட அண்ணல் அம்பேத்கர் அவர்களே பதிலும் சொல்கிறார் படியுங்கள்மேற்கொண்டு..

‘இரண்டு புரட்சிகளின் சங்கமம் என இதனைக் கூறலாம். பிராமணர்களது தெய்வீக சட்டவல்லுநரான மனுவின் உபதேசங்களால் இந்தப் புரட்சிகரமாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. அவரது ஆணைகளைப் புறக்கணித்தே இந்தப் புரட்சி நடைபெற்றிருக்கிறது. இத்தகைய ஒரு நடவடிக்கையைப் பிராமணர்கள் ஏன் மேற்கொண்டார்கள்? தத்துவத்தின் தூண்டுதல் இதற்குக் காரணமா? அல்லது இது வெறும் ஒரு தந்திரோபாயமா?

இதற்கு இரண்டு விளக்கங்கள் கூறப்படுகின்றன. ஒரு விளக்கம் பசுவைத் தெய்வீக சக்தியாகப் போற்றுவது, அத்வைத சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது. யாவற்றுக்கும் மேலான, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு சக்தி பிரபஞ்சம் முழுவதும் படர்ந்து பரவியிருக்கிறது. அவ்வகையில் எல்லா மனித ஜீவன்களும், விலங்குகளும் புனிதமானவை என்கிறது இந்த அத்வைத சித்தாந்தம். இவ்விளக்கம் திருப்திகரமானதல்ல என்பது வெள்ளிடைமலை. முதலாவதாக, உண்மைகளுடன் இது பொருந்தவில்லை. அனைத்து உயிர்களும் ஒன்றே என்று பிரகடனம் செய்யும் வேதாந்த சூத்திரம் கூட (11.1.28) யாக நோக்கங்களுக்காகப் பிராணிகள் பலியிடப்படுவதைத் தடுக்கவில்லை. இரண்டாவதாக, அத்வைத இலட்சியத்தை அடைய வேண்டும் என்ற ஆர்வமே இந்த மாற்றத்துக்குக் காரணம் என்றால், பசுவுடன் மட்டும் அது ஏன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்குத் தகுந்த முகாந்திரமே இல்லை. இதர விலங்குகளைப்பற்றியும் அது கூறியிருக்க வேண்டும்.

இரண்டாவது விளக்கம் முதல் விளக்கத்தை விடவும் சாமர்த்தியமானதாக இருக்கிறது: ஆன்மா ஒரு உடலிலிருந்து இன்னோர் உடலுக்கு மாறுகிறது என்னும் சித்தாந்தம் மேன்மேலும் செல்வாக்கு பெற்றுவந்ததன் காரணமாகவே பிராமணர்களின் வாழ்க்கையில் இந்த மாற்றம் ஏற்பட்டது என்கிறது இந்த விளக்கம். ஆனால் இந்த விளக்கமும் எதார்த்த நிலைமைகளுக்குப் பொருந்துவதாக இல்லை. ஆன்மா கூடுவிட்டுக் கூடுபாய்கிறது என்ற சித்தாந்தத்தை ஆதரிக்கும் (VI-2) பிருகதாரணியக உபநிடதம்கூட தனக்கு அறிவாற்றல்மிக்க ஒரு மகன் பிறக்க வேண்டும் என்று ஒருவன் விரும்பினால் பொலிமாடு அல்லது எருதின் அல்லது வேறு ஏதேனும் இறைச்சியை சாதத்துடனும் நெய்யுடனும் கலந்து படையல் வைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. உபநிடதங்கள் முன்வைக்கும் இந்தச் சித்தாந்தம் மனுஸ்மிருதி காலம்வரை ஏறத்தாழ 400 வருடங்கள் பிராமணர்களிடம் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாதிருந்தது என்பது புரியாத புதிராக இருக்கிறது. இந்த விளக்கம் விளக்கமே இல்லை என்பது கண்கூடு. மூன்றாவதாக, ஆத்மா உடல் விட்டு உடல் மாறுகிறது என்ற சிந்தாந்தம் காரணமாகவே பிராமணர்கள் காய்கறி உண்பவர்களாக மாறினார்கள் என்றால், அந்த சித்தாந்தம் பிராமணரல்லாதவர்களையும் மரக்கறி உண்பவர்களாக ஏன் மாற்றவில்லை?

இப்படி பார்ப்பனர்கள் சொன்ன ஒவ்வொரு காரணத்தையும் அறிவின் உரைகல்லில் உரசிப் பார்த்து அவை எந்த விதத்திலும் பொருத்தமானவையாக இல்லை என்று நிராகரித்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வரலாற்றின் படிக்கப்படாதப் பக்கங்களைக் கொண்டு உண்மையான காரணத்தை நிறுவினார்.

‘பிராமணர்கள் ஏன் திடீரென்று பசுவை வணங்க ஆரம்பித்தார்கள் என்ற புதிருக்கான விடையை புத்த மதத்திற்கும் பிராமணீயத்துக்கும் இடையே நடைபெற்ற போராட்டத்தில் காணலாம்: புத்தமதத்தின்மீது தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டும் ஒரு சாதனமாகவே பிராமணீயம் பசு வழிபாட்டை மேற்கொண்டது எனலாம். பௌத்தத்துக்கும் பிராமணீயத்துக்கும் இடையே நடைபெற்ற போராட்டம் இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுைனயாகும். இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல், இந்து சமயத்தின் சில முக்கிய அம்சங்களை விளக்குவது சாத்தியமில்லை, துரதிருஷ்டவசமாக இந்திய வரலாற்று மாணவர்கள் இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை அறவே உணரத் தவறி விட்டனர்.

இந்தியாவில் பிராமணீயம் இருந்து வந்தது அவர்களுக்குத் தெரியும். ஆனால் தத்தமது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு பிராமணீயமும் பௌத்தமும் நடத்தி வந்த போராட்டத்தையும், சுமார் 400 வருட காலம் நீடித்த இந்தப்போராட்டம் இந்தியாவின் சமயத்திலும், சமுதாயத்திலும், அரசியலிலும் அழிக்க முடியாத சில முத்திரைகளைப் பதித்ததையும் இவர்கள் முற்றாகக் காணத் தவறிவிட்டார்கள் என்றே கூறவேண்டும்.

மாட்டிறைச்சி உண்பதை பிராமணர்கள் நிறுத்தியதன் நோக்கம் பௌத்த பிட்சுக்களிடமிருந்து மேலாதிக்கத்தைக் கைப்பற்றுவதே என்பது பிராமணர்கள் மரக்கறி உணவுக்கு மாறியதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. பிராமணர்கள் சைவ உணவாளர்களாக மாறியது ஏன்? பிிராமணர்கள் மரக்கறி உணவாளர்களாக மாறவில்லை என்றால், தங்களுடைய எதிராளிகளிடமிருந்து அதாவது புத்த மதத்திடமிருந்து தாங்கள் இழந்த செல்வாக்கை மீட்க முடியாது என்பதே இக்கேள்விக்கு அளிக்கக்கூடிய சரியான பதிலாக இருக்க முடியும். புத்தமதத்துடன் ஒப்பிடும்போது பிராமணீயம் பொது மக்களின் நன்மதிப்பை இழக்கக் காரணமாக இருந்த ஒரு அம்சத்தை இங்கு நினைவுகூருவது அவசியம். பிராணிகளைப் பலியிடும் நடைமுறையே அந்த அம்சம். இது பிராமணீயத்தின் அடிப்படை சாராம்சமாக இருந்தது.அதேசமயம் புத்த மதம் இதைக் கடுமையாக எதிர்த்தது.

எனவே விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட பெருவாரியான மக்களிடையே புத்தமதம் மதிப்பும் மரியாதையும் பெற்றிருந்ததும், பசுக்கள், எருதுகள் உட்பட பிராணிகளைக் கொன்று குவிக்கும் பிராமணீயத்திடம் அவர்கள் அருவருப்பு கொண்டிருந்ததும் முற்றிலும் இயல்பே. இத்தகைய நிலைமையில் பிராமணர்கள் தாங்கள் இழந்த செல்வாக்கை எவ்வாறு மீட்க முடியும்? இறைச்சி உண்பதைக் கைவிடுவதன் மூலமும், மரக்கறி உண்பவர்களாக மாறுவதன் மூலமும்தான் இதைச் சாதிக்கமுடியும். இதைத்தான் அவர்கள் செய்தார்கள். பிராமணர்கள் சைவ உணவாளர்களாக மாறியதன் நோக்கமே இதுதான் என்பதை பல்வேறு வழிகளில் மெய்ப்பிக்க முடியும்.

இப்படி ஆதாரப்பூர்வமாக பார்ப்பனர்கள் சைவ உணவாளர்கள் ஆன வரலாற்றினை விளக்கியதுடன் மிக அடிப்படையான இரண்டு செய்திகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். 1. மனு பசுவின் மாமிசம் உண்பதை ஆதரித்தார்.

2.மனுவின் சட்டத்திற்கு எதிராக பசுவைக் கொல்ல தடை விதித்தவர்கள் இந்து மதத்தை ஆட்சியில் அமர்த்திய குப்த மன்னர்கள்.

இந்தியாவின் வரலாற்றில் குப்தர் காலம் பொற்காலம் என்று பார்ப்பனர்கள்எழுதி வைத்ததன் காரணமும் இதுவே.

சரி பார்ப்பனர் அல்லாத மக்களிடையே மாட்டுக்கறி உண்பவர்கள் கீழானவர்கள் என்கிற எண்ணமும் தீண்டாமையும் எப்படி ஏற்படுத்தப்பட்டது என்பதைப் பார்ப்போமா??

- நேர்காணல் தொடரும்

Pin It