babri masjid incidentஇந்து – மதம் - சாதி

இன்று, இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் இந்து தேசியவாதத்துடன் இணைந்து நிற்கின்றன. இதுவே இன்றைய அரசியலில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. இதனடிப்படையில், “இந்து மதம்” ஒரு பண்டைய கால மதம். அத்தோடு அதுவொரு புராண இனக்குழு மரபுடன் தோன்றியது. ஆகவே, இந்தியாவின் இயல்பான தன்மை என்பதே “இந்துக்களை” உருவாக்குகிற ஒன்றாக இருக்கிறது. இந்த அரசியல் திட்டமானது இந்தியாவைக் கடந்த காலத்திற்குத் திருப்ப முயற்சிக்கிறது. “மிலேச்சர்கள்” அல்லது தூய்மையற்றவர்களின் கலவையான - பண்டைய கிரேக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்களின் காலனியாதிக்கத்தின் பிடியிலிருந்து இந்துக்களை விடுவிக்க இது துணை செய்கிறது.

தீவிர அரசியல் பார்வையாளர்கள் பலரும் “இந்து அரசு" ஆகஸ்ட் 5, 2020 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகக் கூறி வருகின்றனர். ராமர் கோயில் கட்டுமானப் பணியானது ஒரு மத விழாவைப் போன்று கொண்டாட்டத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் கோவிலானது அயோத்தியிலுள்ள கோவில் நிலத்தில் கட்டப்பட்டு வருகிறது. பைசாபாத் என்று அழைக்கப்பட்ட அயோத்தியில், பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த மசூதி ஒன்று முன்னர் இருந்தது. இந்த மசூதியானது 1992 இல் இந்து மதத் தலைவர்களால் திரட்டப்பட்ட கும்பலால் இடிக்கப்பட்டது. தற்போது ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் அதன் தலைவர்களும் மசூதி இடிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த விழாவானது அனைத்து ஊடகங்களாலும் ஒளி பரப்பப்பட்டது. மதச் சார்பற்ற அரசியலமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கும் பிரதமர், இந்த மத விழாவில் பங்கேற்றார். பங்கேற்றதோடு ஒரு பூசாரியைப் போன்றும் செயல்பட்டார். இந்த நிகழ்வு ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக குறிப்பிட்ட தேதியில் நடத்தப்பெற்றது.

சரியாக ஒரு வருடம் முன்பு, அதாவது ஆகஸ்ட் 5, 2019 அன்று பாஜக அரசு இந்திய அரசியலமைப்பு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கியிருந்த சுயாட்சி என்கிற சிறப்பு அந்தஸ்தான 370 ஆவது பிரிவை ரத்து செய்தது. அத்தோடு அப்பகுதிகளில் துருப்புக்களையும் அதிகரித்தது. குடிமகனது உரிமைகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள் போன்றவை கடுமையாகத் தடை செய்யப்பட்டன. எதிர்ப்பின் எந்தவொரு முயற்சியாக இருந்தாலும் அதனை இந்திய அரசு அடக்கி ஒடுக்கியது. குடியுரிமை (திருத்தம்) சட்டம் 2019 நிறைவேற்றப்பட்ட பிறகு அதற்கெதிராகக் கிளம்பிய எதிர்ப்புகளை அரசானது அடக்கத் தொடங்கியது. அரசின் இதுபோன்ற அடக்குமுறை நடவடிக்கைகள் இப்போது இந்தியாவின் பிற பகுதிகளிலும் விரிவடைந்து கொண்டிருக்கிறது. இந்த அரசாங்கம் மதம் மற்றும் சாதி சார்புடைய பல பொது ஆர்ப்பாட்டங்களை இணைப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் சடங்குகளைச் செய்யும் பூசாரிகளைக் கருவியாகத் கொண்டுள்ளது. இந்த அரசானது அரசியலமைப்பின் பல அடிப்படைகளை அழித்துள்ளது. அரசியலமைப்பு என்பது ஓர் ஒப்பந்தம். ஜனநாயக வாக்குறுதி. இது இந்தியர்களாக வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்றாகக் கோட்பாட்டளவில் உருவாக்கப்பட்டதாகும்.

இக்கோட்பாடு தற்போதும் தனது வெளிப்படையான ஆதிக்கத்தைத்; தொடர முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இந்திய மக்கள் அனைவர் மீதும் இந்து மத அடையாளத்தைத் திணிக்கும் திட்டமானது செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அரசு தொடர்ந்து நீடிக்க முடியாதபடி அதன் செயல்பாடுகள் ஆரம்பத்திலிருந்தே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்தியத் துணைக் கணடத்தின் நவீன அரசியலின் ஆரம்ப நாட்களில், அதாவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், இரண்டு தனித்துவமான அரசியல் விதிகள் செயலாற்றத் தொடங்கின. முற்போக்கான அரசியல் முயற்சியானது நேருவால் பாராட்டப்பட்டது. இந்த இரண்டு அரசியல் திட்டங்களும் ஆரம்ப காலத்தில் இருந்தே பரஸ்பரம் பொருந்தாது இருந்தன. மேலும், அவை இரண்டும் வெவ்வேறு வகையான அரசியலாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. ஒன்று சாதி அடிப்படையிலான தொடர்ச்சியைத் தேடியது. அதாவது, உயர்த்தப்பட்ட சாதிகளது மேலாதிக்கத்தின் கீழ் ஒடுக்கப்பட்ட சாதிகளின் அமைப்பு முறையானது நிலையாக இருக்க வேண்டும் என்பதை விரும்பியது. அதற்கான முயற்சிகளையும்; செய்து கொண்டிருந்தது. மற்றொன்று உண்மையான சுதந்திரத்தைக் கற்பனை செய்தது. அதாவது, சாதி மற்றும் பாலின பாகுபாடு இல்லாத சமத்துவ சமுதாயத்தை விரும்பியது. அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தது. தற்போது இந்து தேசியவாதம் ஊக்குவிக்கப்படுவதால் இது வீரியத்தைப் பெற்றுள்ளது. முதலாவது சிந்தனை மரபிற்கு உதாரணமாக அரசியல்வாதி பால கங்காதர திலகரைக் கூறலாம். இதன் எதிர் சிந்தனைக்கு உதாரணமாக, அரசியல் சிந்தனையின் இணையற்ற மேதையாகவும், யாராலும் அசைக்க முடியாத செயல்பாட்டாளருமாகத் திகழ்ந்த ஜோதிராவ் புலே அவர்களைக் கூறலாம். இந்தச் சிந்தனை மரபை காங்கிரஸ் உட்பட அனைத்து உயர்த்தப்பட்ட சாதியத் தளங்களும் அடக்க முற்பட்டன.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தாழ்த்தப்பட்டவர்களின் நவீன விடுதலைக்கு முதன்முதலாக புலே தலைமை தாங்கினார். அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளைப் பகுப்பாய்வு செய்தார். அத்தோடு அவர்களது கல்விக்காவும், சமூக முன்னேற்றத்திற்காகவும், விடுதலைக்காகவும் பாடுபட்டார். மேலும் அவர் பெரும் வலையமைப்போடு கூடிய நிறுவனங்களையும் உருவாக்கினார். 1873 இல், அவர் சத்யசோதக் சமாஜ் அல்லது உண்மையைத் தேடுபவர்கள் என்கிற அமைப்பினை நிறுவினார். இவ்வமைப்பு, சாதி அமைப்பைக் கண்டித்ததோடு, பூசாரிகளின் தேவையையும், உருவ வழிபாட்டையும், சிக்கலான சடங்குகளையும் நிராகரித்தது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், புலேயிஸ்டுகள் ஒரு பெரிய அரசியல் சக்தியாக மகாராஷ்டிராவில் உருவெடுத்தனர். அங்கு அவர்கள் எதிர்க் கருத்தியல்களுக்குச் சவால் விட்டதோடு, பெண் விடுதலைக்கு எதிராக இருப்பவைகளையும் திறம்பட அகற்றினர். மரபு வழியிலான பார்ப்பன சாதிச் சார்பு மற்றும் அதன் குறிப்பிடத்தக்க அரசியல் அபிலாஷைகள் அனைத்தையும்; இவ்வமைப்பு தடுத்தது எனலாம்.

திலகர்; மற்றும் அவரைப் பின்பற்றுபவர்கள் ‘இந்து அரசியல் திட்டமானது பார்ப்பனிய உலகக் கண்ணோட்டத்துடன் கண்டிப்பாக வரையறுக்கப்பட வேண்டும்’ என்று கருதினர். சாதியப் படிநிலையை மீறிய ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பெண்களின் விடுதலையைத் திலகரைப் பின்பற்றுபவர்கள் கடுமையாக எதிர்த்தனர். வெளிநாட்டினர் மற்றும் முஸ்லிம்கள் உட்பட அனைவரையும் அனைத்தையும் நிராகரித்தனர். அவர்கள் இந்திய துணைக்கண்டத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தாலும் நிரகாரிக்கப்பட்டனர். சமூகத் தளத்தில் பயன்படுத்தப்படும் திலகரின் திட்டமானது, நவீன ஜனநாயக முறைகள் மற்றும் நீதி அமைப்பை முறியடிப்பதாக இருந்தது. இது பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிலும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. தற்போதைய ஆட்சியில் இது துரிதப்படுத்தப்பட்டு படு வேகத்தில் தொடர்ந்து நிகழும் ஒரு நிகழ்வாக மாறி இருக்கிறது.

1980 - 1990 களில் இந்த இரண்டு விதிகளும் அரசியல் அரங்கில் தங்களது வீழ்ச்சியைச் சந்திக்கத் தொடங்கின. மண்டல் ஆணையமானது, பிற்படுத்தப்பட்ட மக்களின் மக்கள் தொகையைக் கணக்கெடுத்து, அவர்களுக்கான இடஒதுக்கீடுக் கொள்கைகளைப் பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்டது. 1980 இல் இந்த அறிக்கையை மண்டல் ஆணையம் சமர்ப்பித்தது. அக்காலத்தில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த காங்கிரஸ் அரசாங்கம், பரிந்துரைகளைச் செயல்படுத்துவதற்கான அவசியத்தையும் வழிமுறைகளையும் கண்டடையவில்லை. 1984 இல் இந்திராகாந்தியின் படுகொலையைத் தொடர்ந்து ராஜீவ்காந்தி பிரதமராக ஆட்சிப் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து பாபர் மசூதிக்குள் வழிபாடு செய்வதற்கான அனைத்து வாசல்களும் இந்துத்வவாதிகளுக்குத் திறந்து விடப்பட்டன.

ஆகஸ்ட் 1990 இல், வி.பி.சிங் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. மண்டல் ஆணைய பரிந்துரைகளைச் செயல்படுத்திட வி.பி.சிங் அரசு முயன்றது. வி.பி.சிங்கின் இந்த முடிவைக் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உட்பட முக்கிய அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.

இதனைத் தொடர்ந்து வெகுவேகமாக, அதாவது செப்டம்பர் 1990 இல், பாஜகவும் ராஷ்டிரியா சேவா சங்கமும் ரத ஊர்வலத்தை நடத்தின. இதன் முகமாக எல்.கே. அத்வானி இருந்தார். பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமர் கோவிலை அமைக்கும் கோரிக்கையை முன்வைத்து இவ்வூர்வலம் நடைபெற்றது. சோம்நாத் கோவிலிலிருந்து பாபர் மசூதியை நோக்கி ஊர்வலம் சென்றது. 1992 நவம்பர் 16 இல், வி.பி. சிங் அரசால் எடுக்கப்பட்ட மண்டல் அறிக்கையை அமல்படுத்துதல் நிலைப்பாட்டை உச்சநீதி மன்ற அமர்வு உறுதி செய்தது. அதன் பிறகு வி.பி.சிங் அரசு மண்டல் ஆணைய பரிந்துரைகளை அதிகாரப்பூர்வமாகச் செயல்படுத்தத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அடுத்த மூன்று வாரங்களுக்குள், டிசம்பர் 6 இல் பாபர் மசூதி இருந்த பகுதி ஒரு கும்பலால் இடிக்கப்பட்டது. இதற்கு மிக முக்கியக் காரணமாக ரத ஊர்வலம் அமைந்தது. அப்போது காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் மத்தியில் பெரும்பான்மை ஆட்சிப் பலத்தோடு வீற்றிருந்தது. 2020 இல் விசாரணை நீதிமன்றமானது 32 நபர்களைப் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவித்தது. அத்தோடு அத்வானி உட்பட பிற தலைவர்கள்; குற்றவாளிகள் அல்ல என்றும் அறிவித்தது.

காங்கிரசும் பாஜகவும் திலகியவாதத் திட்டத்தை செயல்படுத்தும் இரு வேறு அமைப்புகளாகும். இவை இரண்டும் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. பாபர் மசூதியை இடிப்பதற்குரிய ஒரு காரணமாக மண்டல் ஆணைய பரிந்துரை செயல்பாட்டைப் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதற்குக் காரணமாக இருக்கும் நவீன இந்தியாவின் இரண்டு கருத்தியல்களுக்கு இடையேயான மோதலைப் புரிந்து கொள்வது மிகமிக அவசியமாகும்;. பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு அதனை அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொண்டனர் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனைப் புரிந்து கொள்ள பிரச்சனைக்குரிய அயோத்தி நில தீர்ப்பு மற்றும் சடங்குகள் அனைத்தும் தொலைக்காட்சிகளால் நேரடியாக ஒளிபரப்பட்டன என்பதை இத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். இதற்குள்ளாக இந்து என்கிற வார்த்தையால் மறைக்கப்பட்டுள்ள வன்முறையை உணர்ந்து கொள்வதும் அவசியமாகும்.

மேலும், கடந்த மூன்று தசாப்தங்களாக கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ‘இந்து மதத்தை’ இந்துத்துவத்திலிருந்து வேறுபடுத்தியே கூறி வந்தன. அத்தோடு, இந்து மத பெரும்பான்மை வாதத்திலிருந்து மதச் சிறுபான்மையினரைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் விளக்கின. இந்து என்பதன் பொருளை மறைப்பதற்காகக் காங்கிரஸ் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் அதிக கவனம் செலுத்தியுள்ளன.

இந்தியாவில் மதச் சிறுபான்மையினரைக் குறிப்பாக இசுலாமியர்களை எதிரியாகக் கட்டமைப்பதில் இந்துத்வவாதிகள் அதிக கவனம் செலுத்தியுள்ளனர். அதேவேளை இந்து மத மோசடிகள் குறித்த எழுத்துக்களை குறைவாகவே எழுதி வந்தனர். ‘இந்து’ எனகிற சொல்லின்; வரையறையானது புறநிலை எதார்த்தமற்றதும், பல்வேறு மாறுபாடான கருத்துகளுக்கு இடம் கொடுப்பதாகவும் அமைந்துள்ளது. ஒடுக்கப்பட்ட சாதிகளின் அரசியல் விருப்பங்களை ஒடுக்கவும் கட்டுப்படுத்தவும் இந்து மதமானது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. கடந்து நூற்றாண்டில் எந்தவித கலந்தாலோசனைகளும் இல்லாமல் இந்து மதத்திற்குள் விழுந்தவர்களே, இந்து மதத்தைப் பெரும்பான்மை மக்களின் மதமாகக் கட்டமைக்க காரணமாக இருந்தனர். பார்ப்பனிய ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான இந்துத் தேசியவாதிகள் இந்து மதப் பெரும்பான்மையைக் கோருவதற்கும், இந்து மதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் இதுவே காரணமாக அமைந்தது எனலாம். இதனடிப்படையில், இந்தியத் துணைக்கண்டத்தில் உயர் சாதியினர் நவீன அரசியல் ஜனநாயகத்தைப் பயன்படுத்தி சாதிய ஒடுக்குமுறையையும் அரசியல் அதிகாரத்தையும் கைப்பற்றிக் கொண்டனர். இத்துணைக்கண்டத்தில் ‘இந்து மதம்’ குறித்த பரவலான புகழுரைகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வந்தன. இது இந்து மதம் குறித்த பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட மக்களின் சுய புரிதலைக் கடந்த ஒரு நூற்றாண்டிற்குள் கணிசமான அளவுக்கு மாற்றிவிட்டது எனலாம். பெரும்பான்மை மக்கள் இதனை அமைதியாக ஏற்றுக் கொண்டனர். இம்மக்கள் இதனை அமைதியாக ஏற்றுக் கொள்ள வரலாற்றாசிரியர்களும் அறிவுஜீவிகளும் ஊடகங்களும் காரணமாக அமைந்தனர்.

இந்து மதம் ஒரு பழங்கால மதம் என இந்துத்வவாதிகளால் உரிமை கோரப்படுகிறது. இந்துத்வம் பரந்த கல்வியறிவு கொண்ட ஒரு தேவதையைப் போன்றது, நியாயமானது. இதுபோன்ற கருத்துகள் இந்து மதம் பற்றிய சமீபத்திய கண்டுபிடிப்புகளாக முன் வைக்கப்படுகின்றன. ஒரு நம்பிக்கையின் அமைப்புக்கு ஒரு மதத்திற்குரிய தகுதியையோ, பதவியையோ வழங்க வேண்டுமானால் அம்மதம், மக்களால் புரிந்து கொள்ளத்தக்கதாகவும், மக்கள் அல்லது குழுவால் அந்த நம்பிக்கை முறையாகப் பகிர்ந்து கொள்ளத்தக்கதாகவும் இருக்க வேண்டும். இந்து மதத்தைப் பொறுத்தவரை, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டிஷ் அரசாங்கம் யாரையெல்லாம் இந்து எனக் கருதலாம் என்கிற ஒரு வரையறையை உருவாக்க முயன்றது. அதுவரை பிரிட்டிஷ் அதிகாரிகள் தங்கள் வசதிக்காக இந்து என்கிற வார்த்தையை ஒரு வசதிக்குரிய வார்த்தையாகப் பயன்படுத்திக் கொண்டனர். யாரெல்லாம் கிறித்தவர்கள் இல்லையோ, யாரெல்லாம் யூதர்கள் இல்லையோ, யாரெல்லாம் இசுலாமியர்கள் இல்லையோ அவர்கள் அனைவரும்; இந்து என்கிற ஓர் எதிர்மறை அடையாளத்தை மிஷனறிகள் உருவாக்கிக் கொண்டனர். கிறித்தவர்களிடமிருந்தே இந்து என்கிற இந்தப் பெயரை இவர்கள் பெற்றனர்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஊழியர் லூயிஸ் மெக்லவர் என்பவர், 1881 இல் வெளியிட்ட மெட்ராஸ் மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையானது, மதம் அல்லது இனம் குறித்துப் பதிவு செய்யப்பட்ட வரையறையானது துல்லியமானதாகவும் தெளிவானதாகவும் இருக்க வேண்டும். ஆரிய பார்ப்பனர்கள், சில சத்திரியர்கள் மற்றும் தென்னிந்தியாவில் வாழும் வெள்ளாளர்கள், கள்ளர்கள், மேற்கில் வாழும் நாயர்கள், தென்னிந்திய மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர்கள் போன்ற பல்வேறு குழுக்களை ஒட்டு மொத்தமாக இந்து மதம் என்கிற சொல்லானது குறிப்பிடுகிறது. திருநெல்வேலி மற்றும் தெற்குக் கனராவிலுள்ள பேய் வழிபாடானது ஒரு மத வழிபாடு என்னும் நிலையில் வேத நம்பிக்கையின் எஞ்சியிருக்கும் வடிவங்களைக் கொண்டுள்ளன.

1921 இல் பிரிட்டிஷ் ஆணையாளரின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையின்பின்படி, “எந்தவொரு இந்தியனும் தனது மதம் என்கிற நிலையில் ‘இந்து’ என்கிற வார்த்தையை அறிந்திருக்கவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை இங்குள்ள ஒரு சில உயர்சாதி இந்தியர்கள் குறிப்பாக ஆங்கில மொழிக் கல்வி கற்றவர்கள் மட்டுமே இந்து மதத்தின் ஓர் அங்கமாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். கடந்த நூற்றாண்டில்தான் ‘இந்து’ என்கிற வார்த்தை பெருந்தொகையான மக்களும், நாடும் அறிகிற ஒரு தெளிவான வார்த்தையாக உருமாற்றம் பெற்றது. குறிப்பாகப் பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட மக்கள் மீது இந்து என்கிற அடையாளம் திணிக்கப்பட்டது. இந்து மதமானது இருபதாம் நூற்றாண்டின் கண்டுபிடிப்பு என்பதை நிரூபிக்க முடியும். ஆதிக்க உயர்சாதி சமூகங்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பாலான மக்களையும் தங்களையும் ஒரே மதம் என்கிற அடையாளத்தால் அடையாளம் காணவில்லை. அதேவேளை தனிப்பட்ட சாதிகளால் அதிகரித்து வரும் சாதியாதிக்க அட்டூழியங்கள் இந்த நவீன காலத்திலும் மாறவில்லை என்கிற உண்மையை எடுத்துக் காட்டுகின்றன. ஆரம்ப காலத்தில் யாரை அவர்கள் தீண்டத்தகாதவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்று கருதினார்களோ, அந்த மக்களோடு இணைத்து இந்து என ஒன்றாக அடையாளப்படுத்துவதை இவர்கள் எதிர்த்தனர்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்திய உயர்சாதி அரசியல் தலைவர்கள் அரசியல் அதிகாரத்திற்கான வெளிப்படையான அடிப்படைத் திட்டமாக இந்து மதத்தைக் கண்டு கொண்டனர். காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மோகன்தாஸ் காந்தியோ, ஜவஹர்லால் நேருவோ இவ்வாறு ஒரே மதமாக மக்களை ஒன்றிணைப்பதைக் கேள்வி கேட்கவில்லை. கேள்வி கேட்டால், அது அரசியல் அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட சாதி பெரும்பான்மை மக்களோடு பகிர்ந்து கொள்ள வழி செய்யும் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். இந்து மதம் என்பதன் கீழ் பெரும்பான்மை மக்களை உயர்சாதியினர் கட்டுப்படுத்தினர். இது அவர்கள் அரசியல் அதிகாரத்தைப் பெற்றிட வழிவகுத்தது. 1940 களின் பிற்பகுதியில் ஆங்கிலேயரிடமிருந்து அதிகார பரிமாற்றம் இந்த ஆதிக்கச்சாதியினரின் கைகளில் அதிகாரத்தைக் குவித்தது.

ஏனைய உயர்சாதியினரும் இந்து மதம் என்கிற திட்டத்தை எவ்விதத் தடையுமின்றி கையில் எடுத்துக் கொண்டனர். ஆர்ய சமாஜத்தின் பனியா தலைவர் லாலா லஜபதி ராய், மரபு வழியிலான சனாதன இயக்கத்தின் பார்ப்பன தலைவர் மதன் மோகன் மாளவியா ஆகியோர் 1915 இல் ஒன்றாக இணைந்து இந்து மகா சபையை உருவாக்கினர். பாரதிய ஜனசங், பாரதிய ஜனதா போன்ற இந்து தேசிய கட்சிகளுக்கு இதுவே முன்னோடி. 1925 இல், மகா சபையின் உறுப்பினரான கேசவ் பலிராம் ஹெக்கேவரால், இந்து மத அடையாளத்தை உருவாக்குவதற்காகவும் பிரச்சாரம் செய்வதற்காகவும் ஆர்.எஸ்.எஸ். என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டு அர்ப்பணிக்கப்பட்டது.

உயர் சாதி தலைவர்கள் இருபதாம் நூற்றாண்டு முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைத்திடவும் இந்து மதத்திற்குள் கையகப்படுத்திடவும் முயன்றனர். இதன் மூலம் ஓர் இந்துப் பெரும்பான்மையை உருவாக்கிட முயற்சிகள் செய்து வந்தனர். அவர்கள் ஆதிக்கச்சாதிகளின் கடவுள்களைத் திணித்து, ஒடுக்கப்பட்ட மக்களின் பாரம்பரியத்தை அழிக்க முயன்றனர். அத்தோடு, இந்து மத நம்பிக்கை சார்ந்த ஒருமைப்பாட்டையும் உருவாக்க முயன்றனர்.

ஜெர்மன் உளவியலாளர் ஹென்ரிச் வான் ஸ்டீடென்கிரான் “உயர் சாதியினரின் தெய்வங்கள் மற்றும் கதைகளால் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்கள் பற்றிப் பேசுகிறார். வடமேற்கு மாகாணங்களிலுள்ள உயர் சாதியினர், உள்ள+ர் தெய்வங்களை இந்து மயமாக்குவதற்கான செயல்களை இந்தியாவின் பல பகுதிகளிலும் மேற்கொண்டனர். இந்தத் திட்டத்தை மதச் சீர்திருத்தத்தின் பெயரில் நடைபெற்ற ஓர் இனப்படுகொலை என்றும் விவரிக்கலாம். பழங்குடியினர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் கலாச்சார நடைமுறைகள் வெகுவாக மாற்றப்பட்டன. உதாரணமாக, ஒடிசா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் நீண்ட கால பாரம்பரிய தெய்வங்களாக விளங்கிய மாரியம்மன், பூசுனி, மனினேகேஷ்வரி, மாடன் மற்றும் தம்புரான் போன்ற உள்ளுார் தெய்வங்கள் சிவன் மற்றும் துர்கா முதலிய பெரிய தெய்வங்களின் பெயரில் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். கோயில் நுழைவு திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இது இந்தியாவின் பல பகுதிகளிலும் கோயில் வருவாயை அதிகரித்தது.

சாதிகளுக்கிடையிலான பதட்டங்கள் உருவாகும்போதும், அவை உயர் சாதியினர் நலன்களுக்குத் தடையாக அமையும் போதும், அந்த மோதல்கள் மதக் கலவரங்களாகத் திசை திருப்பப்பட்டன. சாதி கலவரங்கள் பெரும்பாலும் இந்து முஸ்லீம் வன்முறையாக மாற்றப்பட்டன. ஒடுக்கப்பட்ட சாதிகள் ஆதிக்கத்தின் பிடியிலிருந்து மீண்டிட சமூக நீதியைக் கோரும்போதெல்லாம், அதிலிருந்து அவர்களைத் திசை திருப்ப இசுலாமியர்களை ஒரு பொது எதிரியாகக் கட்டமைத்தனர். இப்படி ஒரு பொய்யான பிரச்சாரத்தைச் சொல்லி, பொய்யானதொரு இந்துப் பெரும்பான்மையை இந்திய உயர்சாதியினர்; கட்டமைத்தனர். உண்மையில் பெரும்பான்மையாக ஒடுக்கப்பட்ட மக்களே இருந்தனர். இந்து மதம் என்கிற பொய்யான பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் விருப்பங்களைக் குழி தோண்டிப் புதைத்தது. இது போல, முஸ்லிம்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினரும் இந்த இந்து மத மோசடிக்குப் பலியாயினர்.

சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்ட ஓர் உண்மை என்னவெனில், ஒரு மதத்தைச் சீர்திருத்துவதன் மூலம்; பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட மக்கள் மீது உயர் சாதியினர் தங்கள் அதிகாரத்தைச் செலுத்துகிறார்கள் என்பதாகும். தற்போதும் கூட, ஒடுக்கப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழைந்தாலோ, சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டாலோ கொலை செய்யப்படுகின்றனர். தண்ணீரை அசுத்தப்படுத்தியதாகக் கூறியும் கொலை செய்யப்படுகின்றனர். அவர்களின் சொந்தக் கிணறுகள் தண்டனை என்கிற பெயரில் விசம் கலக்கப்படுகின்றன. உயர் சாதியினர் தங்கள் ஆதிக்கத்தின் நினைவூட்டலாகத் தலித் பெண்களை வன்புணர்வு செய்கின்றனர். இந்தியாவிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடிகள் அரசியல், வணிகம், ஊடகங்கள், நீதித்துறை என அனைத்துப் பொது வாழ்விலும் பிரதிநித்துவப்படுத்தப்படாமல் ஒதுக்கப்பட்டுள்ளனர். ஒடுக்கப்பட்ட சாதித் தலைவர்கள் பலர் சீர்திருத்தத்தை அடையவும், பாகுபாடுகளை ஒழிக்கவும் பல அரசியல் இயக்கங்களை நடத்தியுள்ளனர்.

ஆதிக்கச் சாதிகள் இந்து மதப் பெரும்பான்மை, இந்து ஒற்றுமை என்கிற சொல்லாட்சியின் மூலம் தங்களது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர். பண்டைய சமூகத்தின் ஆதிக்கத்திலிருந்தும் சாதிய இழிவுகளிலிருந்தும் விடுபடுவதற்கான ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களின் போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டு அரசியல் கருத்துகளுக்கு இடையிலான போராட்டமே நவீன இந்திய வரலாற்றை வடிவமைத்துள்ளது எனலாம்.

மூலம்: திவ்யா திவேதி, ஷாஜ் மோகன் மற்றும் ஜெ. ரகு

ஆங்கிலத்திலிருந்து தமிழில்:  சுஜா ராஜேஷ்

Pin It