தமிழ்நாடு அறிவியல் மன்றம் ஐந்தாவது ஆண்டாக நடத்திய குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் - 2017 இம் முறை பெங்களூருவில் நடத்தப் பட்டது. தமிழ்நாட்டில் சென்னை, மயிலாடுதுறை, பேராவூரணி, சேலம், மேட்டூர், ஈரோடு, திருப்பூர், கோவை, ஆகிய மாவட்டங்களில் இருந்து 60 குழந்தைகளும் பெங்களூருவில் 4 குழந்தைகளுமாக 64 பேர் கலந்துகொண்டனர். 14 பேர் நெறி யாளர்களாக இருந்து முகாமை நெறிப்படுத்தினர்.
12.5.2017 வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு பெங்களூர் எக்ஸ்பிரஸ் தொடர் வண்டியில் குழந்தைகள் நெறியாளர்கள் அனைவரும் பெங்களூரு புறப்பட்டனர். குழந்தைகளை தொடர் வண்டி நிலையத்திலிருந்து பயிற்சி நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல சொகுசுப் பேருந்துடன் பெங்களூருவில் தோழர்கள் காத்திருந்தனர். இரவு 10.00 மணியளவில் முகாம் நடக்கும் ஐஎஸ்ஐ பயிற்சி மையத்தை அடைந்தனர்.
13.5.2017 முதல் நாள் முதல் நாள் தொடக்க விழாவுடன் முகாம் தொடங்கியது. முகாமைத் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கியோர் ‘கற்பி, ஒன்று சேர்’ (Educate and Organize) அமைப்பின் கர்நாடக மாநில தலைவர் ஜார்ஜ், தலித் சமரசேனா நிறுவனர் கணேஷ், வழக்கறிஞர் பெங்களூரு அருண், தி.வி.க. தோழர் கணேஷ், தனது வாழ்த்துரையில் தாங்கள் அம்பேத்கரின் கொள்கை வழியில் சமூகப் பணி செய்து வருவது குறித்தும், பெரியாரின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதும் நமது கடந்த கால வரலாறு தலைவர்கள் குறித்து குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டியதும் காலத்தின் தேவை என்று கூறினார்.
வாழ்த்திப் பேசிய அனைவரும் தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் பழகு மகிழ்வு முகாம் ஏற்பாடுகள் குறித்து வியப்புடன் பாராட்டிப் பேசினர். வாழ்த்துரை முகாம் அறிமுகம், பயிற்றுநர் அறிமுகம் முடிந்து சுயஅறிமுகம் தொடங்கியது. ஏற்கனவே முகாம்களில் கலந்து கொண்ட குழந்தைகள் புதிய குழந்தைகள் அனைவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். இந்நிகழ்வு விளையாட்டுடன் கூடிய நிகழ்வாக நீலாவதி, சந்திரமோகன் ஆகியோரால் நடத்தப்பட்டது. உணவிற்குப்பின்னர் நாடகப் பயிற்சி ஓவியப்பயிற்சி இசைப்பயிற்சி ஆகியவற்றிற்கு குழுக்கள் பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. அத்துடன் வயது அடிப்படையில் சிறியோர் இளையோர் குழுக்களும் பிரிக்கப்பட்டனர்.
பின்னர் தற்காப்புக்கலை வகுப்பு நடத்தப்பட்டது. இதில் தடுத்தல், தற்காப்பு, தாக்குதல் முறைகளின் நுட்பம் பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மாலை வகுப்பாக ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்கும் உடலியல், உளவியல் கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டது. இதில் உடல் வளர்ச்சி உளவியல் மாற்றங்கள், பதின்ம வயதின் ஈர்ப்பு, அதைக் கடந்து செல்லுதல் ஆகியன குறித்த விவாதங்கள் நடத்தப்பட்டன.
14.5.2017இரண்டாம் நாள் காலை முதல் நாள் குறித்த ஆய்வுடன் தொடங்கியது. குழந்தைகள் முதல் வகுப்புகள் குறித்து கருத்து கூறினர்.
சிறியோர் குழுவிற்கு பேய், பிசாசு, சொர்க்கம், நரகம் பற்றிய மூட நம்பிக்கைகள் பேயாடுதல், பேயோட்டுதல் குறித்து அதன் அறிவியல் விளக்கம் சிவகாமி, தமிழ்ச்செல்வன் ஆகியோர் வகுப்புகள் எடுத்தனர். இளையோர் குழுவிற்கு, “நான் யார்?” என்பது குறித்த தேடல், “ஒரு சொல் வழி உலகம்” என்ற தலைப்பிலான கற்பித்தல் முறைகள் வகுப்பினை மணிமாறன் நெறிப்படுத்தினார்.
பிற்பகல் நாடகம், இசை, ஓவியப் பயிற்சிகள் தற்காப்புக்கலை வகுப்புகள் நடந்தன. இளை யோருக்கு இட ஒதுக்கீடும் அவற்றின் தேவைகளும் குறித்து சிவகாமி வகுப்பு எடுத்தார்.
16.5.2017 மூன்றாம் நாள் 15.5.2017இல் நடந்த நிகழ்வுகளின் மீதான குழந்தைகள் கருத்துக் கூறலுடன் தொடங்கியது. மூன்றாம் நாள் நிகழ்வு. முகாமைச் செம்மையாக நடத்துவதற்கான வழிமுறை களையும் குழந்தைகள் விவாதித்தனர்.
பின்னர் தற்காப்புக்கலை வகுப்பு இளையோருக் கும், திறன்வளர்ப்பு சிறியோருக்கும் நடத்தப்பட்டது.
விவாதங்களைத் தூண்டிய வகுப்பு
பிற்பகல் சமூகக் கல்வி நிறுவனத்தின் நிறுவனர் சியாம் சுந்தர், மோனிகா, “குழந்தைகள் உரிமை” என்ற தலைப்பில் வகுப்பு எடுத்தனர். பல்வேறு துணைக் கருவிகள், விளையாட்டு முறைகளைப் பயன் படுத்தியும் விவாதங்கள் மூலமும் குழந்தைகளுக்கான உரிமைகள், அவற்றை செயல்படுத்த வேண்டிய கடமை யாருக்கு உள்ளது என்பது குறித்தும் தெளிவான கருத்துக்களைக் கூறுவதாக இவ்வகுப்பு அமைந்தது. மாலை இளையோருக்கு பேய், பிசாசு சொர்க்கம், நரகம் குறித்து ஆசிரியர் வீரா கார்த்தி வகுப்பு எடுத்தார். செயல்முறை விளக்கம் நடிப்புடன் கூடிய இவ்வகுப்பு குழந்தைகளிடையே எண்ணற்ற கேள்விகளைத் தூண்டி விடைதேடச் செய்த வகுப்பாக அமைந்தது. வகுப்பு முடிந்த பின்னரும் குழந்தைகள் இது குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர். சிறியோர் வாசிப்பு வகுப்பை மணிமொழி, சுதா, பொன்மயில், பாரதி ஆகியோர் நெறிப்படுத்தி வாசிப்பை ஊக்குவித்தனர்.
16.5.2017 நான்காம் நாள் சுற்றுலா நாள், பெங்களூருவில் அமைக்கப்பட்டிருந்த பொருட் காட்சியில் மீன்கள், பறவைகள் கண்காட்சியைக் குழந்தைகள் பார்வையிட்டனர். அழிந்து போன பழங்கால உயிரினங்கள் உயிருடன் இருப்பது போன்ற கண்காட்சி அரங்கையும் பார்த்து களித்தனர். பின்னர் லால்பூங்காவிற்குச் சென்று அங்குள்ள ஏரியைக் கண்டுகளித்தனர். பூங்காவில் விளையாட்டு, நாடகப் பயிற்சி நடந்தது. சுற்றுலா நாளன்று குழந்தைகளுக்கான விளையாட்டுகள், பயிற்சிகளை நீலாவதி சந்திரமோகன் ஆகியோர் மேற் கொண்டனர்.
17.5.2017 முகாமின் இறுதி நாளன்று நிறைவு விழாவாக நடந்த ஐஎஸ்ஐ வளாகத்தில் மிகப் பெரிய அரங்கு நமக்கு தரப்பட்டது. அங்கே குழந்தைகளின் படைப்புகளைக் கொண்டு அவர்களே மேடையை அழகுபடுத்தினர். முதல் நிகழ்வாக முகாமில் பயிற்சி எடுத்த 2 நாடகங்கள் நிகழ்த்திக் காட்டப்பட்டன. ஒரு பாடல் பாடப்பட்டது. பின்னர் குழந்தைகள், ஆசிரியர்கள் முகாம் குறித்த நிறை குறைகளைப் பற்றிய நமது கருத்துக்களைக் கூறினர். நாடகப் பயிற்றுநர் சந்திரமோகன் தனது அனுபவங்களைப் பதிவு செய்தார். வாழ்த்துரையாக தலித் சமரசேனா கணேஷ், கற்பி ஒன்று சேர் ஜார்ஜ், கர்நாடகத் தமிழ்மக்கள் இயக்கம் பன்முகம், தி.வி.க பழனி, வழக்கறிஞர் பெங்களூரு அருண் ஆகியோர் பேசினர். இந்நிகழ்வில் சித்தார்த்தன் முயற்சியால் பக்தர்களுக்கு
“100 கேள்விகள்” என்ற புத்தகம் கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்டு தி.வி.க. தலைவர் கொளத்தூர் மணி வெளியிட கணேஷ் பெற்றுக்கொண்டார். முகாம் வரவு செலவு அறிக்கையை பொருளாளர் தமிழ்ச்செல்வன் வாசித்தார். இறுதியாக குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கழகத் தலைவர் சிறப்புரையாற்றினார். மதிய உணவுடன் முகாம் நிறைவடைந்தது.
முகாமில் பங்கேற்க கருத்தாளர்கள் அனைவரும் சிறப்புற பணியாற்றினர். பவானி சாகர் கோமதி - ஓவியம், கைவினைப் பொருள்கள் குறித்து பயிற்சியளித்தார். பாடல் வகுப்பை யாழினி, பொன்மயில் ஆகியோரும் நாடகப் பயிற்சியை BUFTO பயிற்றுநர் சந்திரமோகன் நெறிப்படுத்தினர். குழந்தைகள் நடிப்பில் பல்வேறு நுணுக்கங்களை ஆர்வத்துடன் அறிந்து கொண்டு வெளிப்படுத்தினர். கோபி மணிமொழி, மேட்டூர் சுதா, சென்னை பாரதி, காஞ்சிபுரம் பொன்மயில், சென்னை மணிமேகலை ஆகியோர் குழந்தைகள் தேவைகள் பிரச்சனைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தினர். அத்துடன் அனைத்து வகுப்புகளையும் முழுமையாகக் கவனித்து குறிப்பு எடுத்து அதன் நிறை, குறைகளை விவாதித்தனர். தாங்களும் பழகு மகிழ்வு முகாமில் கருத்தாளர்களாகப் பங்கெடுப்போம் என்ற கருத்தையும் தெரிவித்தனர். திருப்பூர் தனகோபால் ஐந்து நாட்கள் நிகழ்வையும் காணொளிக் காட்சியாகவும், புகைப்படமாகவும் பதிவு செய்தார். தற்காப்புக் கலை பயிற்சியை தமிழ்நாடு உதைக் குத்து, சண்டை கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் சூலூர் சிவக்குமார் அளித்தார். சிறப்பான பயிற்சியாக அது அமைந்தது. தொடர்ந்தும் பயிற்சி எடுக்க சில குழந்தைகள் ஆர்வம் தெரிவித்தனர்.
வேறொரு மாநிலத்தில் முகாம் நடத்துகிறோம். என்ற உணர்வே வராதவாறு பெங்களூரு தோழர்கள் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து இருந்தனர்.
சரவணன், பிரபு பேராசிரியர் லூர்துநாதன் ஆகியோர் உடனிருந்து உதவி செய்து நெகிழச் செய்தனர். முகாமிற்கு இடம் பார்த்த நாள் முதல் இறுதியாக தொடர்வண்டியில் ஏற்றிவிடும் வரை உடனிருந்தும், வாகன வசதி செய்து கொடுத்தும் இன்னும் பல உதவிகளையும் செய்தவர்கள் சித்தார்த், ஜார்ஜ். அதுமட்டுமல்லாமல் ஒரு குழந்தைகளுக்கு ரூ.485 ஒரு நாளைக்கு கட்டணம் ரூ.340 என்ற அளவில் குறைத்துப் பேசியும் வகுப்பு நடந்த அரங்கின் கட்டணமின்றியும் பெற்றுத் தந்தவர் ஜார்ஜ். இது பெருமளவிற்கான பொருளாதார உதவியாக அமைந்தது. 5 நாள்களும் நம்மோடு உடனிருந்து உற்ற தோழராய் உதவி செய்தவர் ஜோதி. பெற்றோர்களான திருப்பூர் பாண்டியன் குமரேசன் ஆகியோர் தாங்களாகவே முன்வந்து முதல் நாள் உடனிருந்து உதவி செய்தும் நெகிழ்வில் இருந்தது.
முகாமில் பங்கேற்ற குழந்தைகள் வழக்கமாக உணவு, தங்குமிடம் குறித்து ஏதேனும் மாற்றம் கூறுவார்கள். ஆனால் இம்முறை அவை குறித்த சிறப்புக் கருத்துக்களைத் தெரிவிக்காமல் கொண்டாட்டம் நட்புணர்வு பயிற்சிகள் என ஒன்றிப்போனது. சிறப்பான ஒன்றாகத் தெரிந்தது. மொழி தெரியாத நிலையிலும் இங்கு வேறொரு பயிற்சிக்கு வந்த கன்னட இந்தி இளைஞர்களிடம் ஆங்கிலத்தில் கலந்துரையாடியதும் அவர்கள் நீங்களனைவரும் உறவினர்களா எனக் கேட்க, இல்லை, உறவினர்கள் மாதிரி (not relations, like relations) என்று கூறியதும் அவர்களை வியப்பிலாழ்த்தி யது. குழந்தைகள் அனைவருக்கும் கருப்பு வண்ணத்தில் ஒரு த.நா.அ.ம என்று அச்சிடப்பட்ட பனியன்கள் மயிலாடுதுறை ஜாகிர், திருப்பூர் முகில்ராசு, மாதவன் ஆகியோரால் வழங்கப்பட்டது.
பெங்களூருவிலிருந்து தொடர் வண்டியில் வரும்போது நமது குழந்தைகள் அணிந்திருந்த பனியனைப் பார்த்ததும் நமது குழந்தைகள் கடவுளின் தோற்றம், ஜாதிக் கொடுமைகள் குறித்து விவாதித்ததைப் பார்த்ததும், ஆம்பூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நமது குழந்தைகளை மிகவும் பாராட்டினர். அத்துடன் தங்கள் குழந்தைகளையும் அடுத்த ஆண்டு முகாமில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்து தொலைபேசி எண்களை வாங்கிச் சென்றனர். அக்குடும்பத்துடன் ஆசிரியர் ஒருவரும் நம்முடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார்.
ஐ.எஸ்.ஐ. நிறுவன மேலாளர் நமது குழந்தைகளைத் “தங்கமான பசங்க” என்றதும் குழந்தைகள் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆசிரியர் சிவகாமி, மற்றும் தமிழ்ச் செல்வன் ஆகியோரால் ஒருங்கிணைக் கப்பட்ட இந்த ஐந்தாம் ஆண்டு முகாம், கருத்தாளர்களின் கூட்டுறவு, உழைப்பு, தோழர்களின் உதவி, உழைப்பு பெற் றோர்களின் நம்பிக்கை, ஒத்துழைப்பு ஆகியவற்றை வெளிக் காட்டும் விழாவாகவும், தொடர்ந்து செல்ல வேண்டிய திசையை நமக்கு சுட்டிக் காட்டிய முகாமாகவும் அமைந்தது.
செய்தி: ஆசிரியர் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர்)
உக்கம்பருத்திக்காட்டில் கழகத்தின் இரண்டு நாள் பெரியாரியல் பயிலரங்கம்
சேலம் மாவட்டம், கொளத்தூர் ஒன்றியம், காவலாண்டியூர் கிளை கழக சார்பில் 24, 25.05.2017 ஆகிய இரண்டு நாள்கள் கொளத்தூர் உக்கம்பருத்திக்காடு பெரியார் படிப்பகத்தில் பெரியாரியல் பயிலரங்கம் நடைபெற்றது. இப்பயிலரங்கில் முதல்நாள் முதல் வகுப்பு “மதவாத அரசியல்” (முஸ்லிம், மாட்டுகறி, சமஸ்கிருதம்) எனும் தலைப்பில் பேராசிரியர் சுந்தரவள்ளி வகுப்பு எடுத்தார். மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு “பெரியாருக்கு முன்னும் பின்னும்; நீதிகட்சி சாதனைகள்” குறித்து புலவர் செந்தலை கவுதமன் வகுப்பு எடுத்தார். தேநீர் இடைவேளைக்கு பிறகு “தி.வி.க. உங்களிடம் எதிர்பார்ப்பது” எனும் தலைப்பில் விடுதலை இராசேந்திரன், “இடஒதுக்கீடு - ஓர் அறிமுகம்” எனும் தலைப்பில் பால்.பிரபாகரன் ஆகியோர் வகுப்பு எடுத்தனர். இரவு 8.30 மணிக்கு முதல் நாள் வகுப்பு முடிவுற்றது. இரவு உணவுக்கு பின் குறும்படங்கள் திரையிடப்பட்டன.
25.5.17 அன்று காலை “உலகின் தோற்றம் உயிர்களின் தோற்றம்” குறித்து மருத்துவர் எழிலன் வகுப்பு எடுத்தார். தொடர்ந்து “ஜாதி தோற்றம், இருப்பு, ஒழிப்பு” எனும் தலைப்பில் விடுதலை இராசேந்திரன், “கடவுள் மறுப்பு” குறித்து கொளத்தூர் மணி, “சோதிடப் புரட்டு” குறித்து மருத்துவர் எழிலன் ஆகியோர் வகுப்புகள் எடுத்தனர். தொடர்ந்து முதல் நிலைத் தோழர்கள் வீதி நாடக நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர். தோழர்கள் இரண்யா, பரத் இந்த நாடகத்தை சிறப்பாக உருவாக்கியிருந்தனர். தொடர்ந்து பயிற்சியில் கலந்து கொண்ட தோழர்களின் அய்யங்களுக்கு விளக்கங்கள் தரப்பட்டன. இரண்டு நாட்கள் தொடர்ந்து பயிற்சியில் கலந்துகொண்ட தோழர்களுக்கு மட்டும் சான்றிதழ் தரப்பட்டது. இரண்டு நாள் பயிலரங்கத்திற்கான உணவு செலவுகளை காவலாண்டியூர் கிளை கழகமும், தோழர்கள் தங்குமிடம் உக்கம் பருத்திக்காடு பெரியார் படிப்பக பராமரிப்பு வேலைகளை உக்கம்பருத்திக்காடு கிளை கழகமும் ஏற்று சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
முதல்நிலைத் தோழர்களுக்கு தோழர்கள் இரண்யா, பரத் ஆகியோர் மூடநம்பிக்கை குறித்து விளக்கம் மற்றும் பாடல், வீதி நாடகப் பயிற்சி அளித்தனர். இரண்டாம் நாள் மதிய நேரத்தில் குழந்தைகளுக்கான பேய் குறித்த பயத்தை போக்க சுடுகாட்டிற்கு குழந்தைகளை அழைத்துச் சென்று ஒரு பிணக்குழியை சுற்றி நிற்க வைத்து கடவுள், பேய் போன்றவை இல்லை எல்லாம் மன பயமே இதிலிருந்து குழந்தைகள் விடுபட வேண்டும் என விளக்கினர். அதே இடத்தில் குழந்தைகளின் கையில் கோழிக்கறியை கொடுத்து உண்ணச் செய்தனர். இருநாள் பயிலரங்கத்திலும் 100 இளம் தோழர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.
பல்லாயிரக்கணக்கான மக்களிடம் துண்டறிக்கை; நிதி திரட்டல்; சென்னையை கலக்குகிறார்கள் கழக செயல் வீரர்கள்
ஜூன் 4ஆம் தேதி சென்னையில் தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடும், ஜூன் 5ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்களில் இந்திப் பெயர் அழிப்புப் போராட்டமும் நடைபெற இருக்கிறது. சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் நிகழ்ச்சியின் வெற்றிக்கு தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த 10 நாள்களாக கழகத் தோழர்கள் 15 பேர் முதல் 20 பேர் கொண்ட குழு, கழகக் கொடி, கருப்புச் சட்டையுடன் நகரின் பல்வேறு பகுதிகளில் வணிகர்கள் பொது மக்களை சந்தித்து துண்டறிக்கைகளை வழங்கி, நன்கொடைகளை திரட்டி வருகிறார்கள். திருவல்லிக்கேணி, மைலாப்பூர், சைதாப்பேட்டை, கோயம்பேடு, எம்.ஜி.ஆர். நகர், புரசைவாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, இராயப்பேட்டை பகுதிகளில் மாலையில் தொடங்கி, இரவு வரை ஒவ்வொரு கடையாக இந்த வசூல் பணி நடந்தது.
தோழர்களிடம் பொது மக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார்கள். தோழர்கள் இந்த கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை பொறுமையாக அளித்து வருகிறார்கள். சனி, ஞாயிறு நாள்களில் காலையிலும் வசூல் பணிகள் நடந்தன. பார்ப்பனக் கோட்டையான மயிலாப்பூரில் கபாலீசுவரர் கோயிலைச் சுற்றி நடை பாதைக் கடைகள், வணிக நிறுவனங்கள் நடத்தி வரும் மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. நெற்றியில் மதச் சின்னம் அணிந்தவர்கள்கூட - பெரியார் மட்டும் இல்லாதிருந்தால் இந்த மயிலாப்பூர் பகுதிகளில் நாங்கள் கடைபோட்டு வியாபாரம் நடத்தியிருக்க முடியாது” என்று உணர்ச்சியுடன் பலரும் கூறி நன் கொடை வழங்கினர். பெண் தோழர்களும் வசூல் பணியில் பங்கெடுத்து வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. அவர்கள் மக்கள் கேட்கும் கேள்விக்கு பொறுமையாக விளக்கங்களை வழங்கு கிறார்கள்.
துண்டறிக்கையை படித்து விட்டு, பிறகு அதில் குறிப்பிடப்பட்டுள்ள அலைபேசி எண் வழியாக தொடர்பு கொண்டு ஒவ்வொரு நாளும் கழகப் பொறுப் பாளர்களிடம் பேசுகிறார்கள். பா.ஜ.க. தரப்பிலிருந்து எதிர் வாதங்களை முன் வைக்கிறார்கள். இளைஞர்கள் கூட்டமாக ஒவ்வொரு பகுதிக்கும் சென்று துண்டறிக்கை வசூல் பணிகளில் ஈடுபடுவதை சகிக்க முடியாத பார்ப்பனர்கள், மதவாத சக்திகள், காவல் துறையிடம் புகார் தருவதும், காவல்துறையினர் கெடுபிடி காட்டினாலும் அவர்களுக்கு உரிய விளக்கங்களை தந்து கெடுபிடிகளை முறியடித்து தோழர்கள் இந்தப் பணியை தொடர்ந்து செய்து வரு கிறார்கள்.
பொது மக்களுடன் நேரடியாக நிகழ்த்தி வரும் இந்த சந்திப்பு, தோழர் களை மிகவும் உற்சாகப்படுத்தி வருகிறது. இதுவரை 15,000 துண்டறிக்கைகள் பொது மக்களிடம் சேர்க்கப்பட்டுள்ளன.