ஜூலை 12, 2019 அன்று கோவை அண்ணாமலை அரங்கில் கோவை திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் புதிய கல்வித் திட்ட நகல் குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நிகழ்த்திய உரை: (சென்ற இதழ் தொடர்ச்சி)

prince gajendrababuஒரு பள்ளி வளாகத்திற்குள் சென்றீர்க ளென்றால், நீங்கள் ஒரு பள்ளியில் எவையெல்லாம் இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களோ அவையனைத்தும் அனைத்துப் பள்ளியிலும் இருக்க வேண்டும். என் வீட்டிற்கு அருகில் ஒரு பள்ளிக்கூடம் இருக்கிறது, நீங்கள் எவையெல்லாம் ஒரு பள்ளியில் இருக்க வேண்டுமென்று கூறினீர்களோ அவை யனைத்தும் என் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளியில் இருந்தால், நான் அதை தவிர்த்து விட்டு ஏன் வேறு பள்ளியில் சேர்க்கப் போகிறேன். உலகம் முழுக்க இருக்கக் கூடிய நடைமுறை, ஒரே சீரான பள்ளி அமைப்பு என்பதாகும் ஆனால் இந்தியாவில் 70 ஆண்டுகாலம் அதைப் பற்றி பேசுவதற்குக்கூட தயாராக இல்லையென்பது எப்படி? சரி கோத்தாரி குழுவின் கல்விக் கொள்கை 1968இல் வெளி வந்தது. அதன் பிறகு 1980களில் இந்தியா உலக வங்கியில் கடன் வாங்க ஆரம்பித்தது. அதுவரை உலக வங்கியில் கடன் வாங்கவில்லை. அய்.எம்.எப். இடம் கடன் வாங்கவில்லை. உலக வங்கியில் கடன் வாங்கி, அய்.எம்.எப். இடம் கடன் வாங்கிய பின் தான் உருவானது 1986 கல்விக் கொள்கை. ஆனால் அதில் குறைந்தபட்ச ஜனநாயகம் இருந்தது. என்னவென் றால் நிலை அறிக்கை என்று ஒன்றை வைத்தார்கள்.

1986 கல்விக் கொள்கை உருவாவதற்கு முன் அன்றைய கல்வியின் நிலை என்ன? என்று ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார்கள். அந்த அறிக்கை விவாதிக்கப்பட்டுத்தான் 1986 கல்விக் கொள்கை வந்தது. வந்தப் பிறகு 1986 கல்விக் கொள்கையை எதிர்த்து கடுமையாக போராட்டம் நடத்தியிருக் கிறோம். ஏதோ 2014 முதல் 2019 வரை மட்டும் தான் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் சிலர். “மூட்டா” என்றொரு அமைப்பு இருக்கிறது. மதுரை, காரைக் குடி, அழகப்பா, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு. அந்த ‘மூட்டா’ அமைப்பு இரண்டு ரூபாய்க்கு புத்தகம் போட் டுள்ளது. அதை வாய்ப்பிருந்தால் படித்துப் பாருங்கள்.

1986, 1991 கல்விக் கொள்கைகள் பற்றிய விமர்சனம் அது. இதே கல்விக் கொள்கைகளை விமர்சித்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி என்று ஒரு அமைப்பு உள்ளது வெறும் 25 பைசாவில் ஒரு புத்தகம் போட்டுள்ளார்கள். எதற்கு அப்போது எதிர்த்தோம்? மாவட்டம்தோறும் கல்லூரிகளை திறக்கச் சொன்னால் திறந்த பல்கலை, திறந்த பள்ளிகளைத் திறக்கப் போவதாக பள்ளி, கல்லூரிகளுக்குப் போகாமலே படிக்கலாம் என்றார்கள். அப்போது கல்லூரிக்குள் நான் போய் படிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கு என்று கேட்டோம். ஆனால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள், கல்லூரிக்குள் வராமலே படியுங்கள் என்று சொல்கிறீர்கள். அது எப்படி?

1986 இல் நவோதயா என்று சொன்னார்கள். நவோதயாவை ஏன் எதிர்த்தோம்? இப்போ எல்லாரும் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்தி மற்றும் சமஸ்கிருதத்திற்காக எதிர்த்தார்கள் என்கிறார்கள். அது மட்டும் தானா? வேறு எதற்காகவும் எதிர்க்கவில்லையா? 1947 க்கும் 1986 க்கும் இடையில் எத்தனை வருடம் 40 வருடம் ஆகிறதே, 40 ஆண்டுகால விடுதலை பெற்ற இந்தியா, குடியரசு பெற்ற இந்தியா, இந்த 40 ஆண்டு காலத்தில் அத்தனை பேருக்கும் கட்டணமில்லா கல்வியை கொடுக்க வேண்டும். அது தானே சட்டப்படியான கடமை. ஆனால் 1986 கல்விக் கொள்கையில் என்ன செய்கிறார்கள்? மாவட்டத்திற்கு ஒரு பள்ளிக்கூடம் அதற்கு பெயர் நவோதயா! மாவட்டத்திற்கே ஒன்று மட்டும் தான். அதற்கு பல கோடி ரூபாய். எத்தனை பேர் பயில்வார்கள்? ஒரு பிரிவிற்கு 40 பேர் இன்னொரு பிரிவிற்கு 40 பேர் மொத்தம் 80 பேர். எதிர்த்ததற்கான காரணம் என்னவென்றால், 80 பேருக்கு உயர்தர கல்வியை கொடுக்க வேண்டு மென்பதற்காக 8 ஆயிரம் பேருக்கு தரமற்ற கல்வியை கொடுப்பீர்களா? இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 14 என்ன சொல்கிறது? சமத்துவக் கோட்பாட்டைச் சொல்லவில்லையா? எது தரமென்று கூறுகிறீர்களோ அதை எல்லோருக்கும் கொடுங்கள் சமமாக. இது தான் உயர்ந்த கல்வி என்றால், இது தான் உயர்ந்த கற்பித்தல் முறை என்றால் இந்த வசதி அடுத்த பள்ளிகளுக்கும் வேண்டாமா? இந்தக் காரணங்களுக்காத் தான் எதிர்த்தோம்.

1986 புதிய கல்விக் கொள்கை வந்த பிறகு கூட, 1991இல் ஒரு கல்விக் கொள்கை வந்த பின்பு கூட அரசின் பொறுப்பில்தான் கல்வி என்பதில் எந்த மாற்றமும் இல்லையே. குறைந்த பட்சம் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு எட்டாம் வகுப்பு வரை கல்வி கொடுக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லையே. மருத்துவக் கல்லூரியில் சேர மோகினி என்ற பெண் போட்ட வழக்கில் உச்சநீதி மன்றம் ஒரு தீர்ப்பு கொடுத்தது. என்னவென்றால் கல்வி என்பது அடிப்படை உரிமை என்று தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்றம், பிரிவு 14 , பிரிவு 21, பிரிவு 41, பிரிவு 45 இதையெல்லாம் விவாதிக்கிறது. அரசியல் சட்டத்தின் வழிகாட்டும் நெறிகளில் இருக்காமல் இனி அடிப்படை உரிமை என்ற பிரிவில் கல்வி வருகிறது என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.

பெற்றோர் அல்லது பாதுகாவலருடைய கடமை என்ன? கல்வியைக் கொடுப்பது. இந்தியா விடுதலை கிடைத்த போதே 1947 ஆகஸ்டு 15 இல் இந்தியா எத்தகைய வறுமையில் இருந்தது. அப்போது அரசமைப்பில் என்ன எழுதினார்கள்? கல்வி வழங்குவது அரசின் கடமை என்று எழுதினார்கள். ஆனால் 2002 இல் அப்போது அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசு, பேராசிரியர் முரளி மனோகர் ஜோஷி தான் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், அதில், அரசின் கடமையாக இருந்த கல்வியை, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கடமையாக திருத்தப்பட்டது. 2002இல் விதை போட்டால் அது 2019இல் அது மரமாக வருமல்லவா! அப்போது 2002இல் போட்ட விதை தான் இப்போது புதிய கல்வித் திட்டமாக வந்திருக்கிறது.

(தொடரும்)

Pin It