(சென்னை கழகத் தலைமை அலுவலகத்தில் 29.10.2024 அன்று நிமிர்வோம் வாசகர் வட்ட சார்பில் குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு சிறப்புக் கூட்டம் நடந்தது. அடிகளார் படத்தைக் கழகப் பொதுச்செயலாளர் திறந்து வைத்து ஆற்றிய உரை. கடந்த இதழின் தொடர்ச்சி..)
பெரியார் பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டத்தை அறிவிக்கிறார். ஏனெனில் வருணாசிரம கொள்கை நாட்டில் மேலோங்கி விட்டது, வருணாசிரம கொள்கையை எதிர்ப்பதற்காக பிள்ளையார் சிலை உடைப்பை நடத்துகிறேன் என்று பெரியார் அறிவிப்பு வெளியிட்டார். பிள்ளையார் சிலைக்கும் வருணாசிரம தர்மத்திற்கும் என்ன தொடர்பு என்றால், எல்லா அரச மரத்தடியிலும் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டுள்ளது. புத்தருக்கு அரச மரத்தடியில் அறிவு ஒளி (ஞானம்) கிடைத்தது என சொல்கிறார்கள். அந்த அரச மரத்தடியில் பல இடங்களில் புத்தருக்கு சிலைகள் வைக்கப்பட்டன. அந்த சிலைகளைத்தான் பல இடங்களில் சிதைத்து, உடைத்து உருமாற்றம் செய்து அது விநாயகர் சிலையாக மாற்றப்பட்டதாக தகவல்கள் உண்டு. இடைக்காலத்தில் பல்லவ மன்னனின் படைத்தளபதி பரஞ்சோதி வாதாபிக்கு படையெடுத்துச் சென்ற போது அங்குள்ள விநாயகர் சிலையைப் பார்த்து வியந்து தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்தான் என்பது வரலாறு.புத்தர் குறித்து நடந்த விழாவில் பெரியார் உள்பட அனைவரும் பேசுகிறார்கள். சென்னை வானொலி அந்த உரைகளை பதிவு செய்து ஒலிபரப்புகிறது. ஆனால், பெரியாரின் உரையை மட்டும் ஒலிபரப்ப மறுக்கிறது. உடனே பெரியார் எல்லோரின் உரைகளையும் வெளியிடும்போது புத்தர் விழாவில் எனது உரையை ஏன் வெளியிட மறுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார். அத்துடன், “புத்தர் விழாவில் எனது கருத்தை இருட்டடிப்புச் செய்ததால், புத்தரை ஒழிப்பதற்கு மாற்றாக வந்த வருணாசிரம தர்ம குறியீடான விநாயகரின் சிலையை உடைப்பது” என்று தீர்மானித்து அந்த போராட்டத்தை நடத்துகிறார். கோயில்களில் உள்ள விநாயகர் சிலைகளை எடுத்து உடைக்க வேண்டும் என பெரியார் சொல்லவில்லை. காசு கொடுத்து வாங்கி விநாயகர் பொம்மையை சாலையில் போட்டு உடையுங்கள், காவல் துறை எதிர்ப்பு தெரிவித்தால் வீட்டுக்குள்ளேயே போட்டு உடையுங்கள் என்று அறிவுறுத்துகிறார்
இராஜாஜி முதல்வராக இருந்த காலம். அவர் யாரையும் கைது செய்யவில்லை. அப்போது திமுக பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம், பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை எடுத்தது. பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டத்தின் போது குன்றக்குடி அடிகளாருக்கு கோபம் வந்துவிட்டது. தமிழகத்தில் உள்ள மடாதிபதிகள் உள்ளிட்டோரை அவர் தனது மடத்திற்கு அழைத்து கலந்துபேசி, இதனை விடக்கூடாது, எதிர்த்து பெரிய போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறுகிறார். அப்போது, பெரியாருக்கு எதிராக, அவருடைய போராட்டங்களுக்கு எதிராக நெருக்கடியை உருவாக்க வேண்டும் என்பதற்காக குன்றக்குடி அடிகளார் தலைமையில் தமிழ்நாடு அருள்நெறிக் கழகம் என்ற அமைப்பை உருவாக்குகிறார்கள். திராவிடர் கழகம் நடத்தும் கூட்டங்களில் எல்லாம் அருள்நெறிக் கழகத்தினர் சென்று கலகம் செய்கிறார்கள். அருள் நெறிக் கழகத்தினர் நடத்தும் கூட்டங்களில் திராவிடர் கழகத்தினர் கலகம் செய்கிறார்கள். இரு தரப்பினரும் கூட்டம் நடத்த முடியாத அளவு பல இடங்களில் அடி தடி நடந்து ரத்தம் சிந்தப்படுகிறது.
1955ஆம் ஆண்டு பெரியார் மலேசியாவுக்கு செல்கிறார். அவர் அங்கு சென்று சுயமரியாதை இயக்கக் கருத்துகளைப் பிரச்சாரம் செய்தார். பெரியார் மலேசியாவுக்கு சென்று பிரச்சாரம் செய்கிறாரா? நான் விடமாட்டேன் என்று சொல்லி குன்றக்குடி அடிகளாரும் மலேசியாவுக்குச் சென்று பிரச்சாரம் செய்தார். இன்னும் சொல்லப்போனால் இந்துத் துறவிகள் கடல் தாண்டி போகக் கூடாது என்பது இந்து மதத்தின் விதி. கடல் தாண்டி சென்றாலும் கூட நான் பெரியாரை விட மாட்டேன் என்று சொல்லித் தான் மலேசியாவுக்கு சென்றார் குன்றக்குடி அடிகளார். இப்படி இருவருக்கும் இடையில் கடுமையான மோதல் போக்கு நிலவிவந்தது. ஆனால் மலேசியாவில் பேசிய குன்றக்குடி அடிகளார் சைவத்தில் ஜாதி தீண்டாமை கிடையாது என்றும், ஆனால் பெரியார் சைவத்தை குறை கூறி பேசி வருகிறார் என்றும் அடிகளார் பேசிவந்தார். இந்த செய்தி பெரியாரின் காதுக்கு வரும் போது பெரியார் சொன்னார், சைவத்தில் பெரும்பாலும் பிற்போக்காளர்களாகவும், வர்ணாசிரமத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தான் இருப்பார்கள். ஆனால் இந்த சாமியார் சைவத்தில் ஜாதி தீண்டாமை இல்லை என்று சொல்கிறாரே என்று கவனிக்கத் தொடங்கினார்.
பெரியாருக்கு வேண்டியவர்களும், அடிகளாருக்கும் வேண்டியவர்களும் இருவருக்கும் இடையில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தனர். அந்தச் சந்திப்பானது 1954இல் ஈரோட்டில் உள்ள சென்னியப்ப முதலியார் என்பவரது இல்லத்தில் நடைபெற்றது. அந்த சந்திப்பின் போது அடிகளார் வீட்டின் மாடியில் அமர்ந்து கொண்டிருந்தார். பெரியார் உள்ளே செல்கிறார். பெரியார் வந்துவிட்டார் என்றால் நான் கீழே இறங்கி வருகிறேன் என்றார் அடிகளார். ஆனால் பெரியார். இல்லவே இல்லை, அவர் சன்னிதானம் என்கிற உயரியப் பொறுப்பில் உள்ளார். அவருக்கு உரிய மரியாதையை நாம் கொடுத்தாக வேண்டும். எனவே அடிகளார் கீழே இறங்கி வர வேண்டாம், நான் மேலே வருகிறேன் என்று சொல்லிவிட்டு பெரியார் மாடிக்குச் சென்றார்.
மேலே சென்றவுடனேயே அடிகளார் பெரியாரை அருகே உட்காரச் சொன்னார். ஆனால் பெரியார் மறுத்துவிட்டார். உங்கள் மடாதிபதிக்கு என்று தனி இருக்கை உள்ளது. தமிழிர்களுக்கான மடாதிபதியாக நீங்கள் இருப்பதால் நீங்களும் நானும் சமமாக உட்காருவது சரியாக இருக்காது என்று சொல்லிவிட்டு தனியாக நாற்காலி எடுத்துப் போட்டு பெரியார் அமர்ந்தார். கடவுள் மறுப்பு, ஜாதி ஒழிப்பு பேசக்கூடிய ஒருவர் உயரிய பண்போடும், நாகரீகத்தோடும் அணுகுவதைப் பார்த்து அடிகளார் மெய் சிலிர்த்துப்போனார்.
பெரியாருக்கு என்று ஒரு கொள்கை இருக்கிறது. அந்தக் கொள்கைகளில் எப்போதும் உறுதியாக இருப்பார். அதே நேரம் பொது ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்பதிலும் பெரியாருக்கு உறுதியான நிலைப்பாடு உண்டு. பெரியார் என்றைக்குமே பொது ஒழுக்கம் என்ற சொல்லைத் தான் பயன்படுத்துவார். ஒழுக்கம் என்ற சொல்லை அவர் பயன்படுத்தியது கிடையாது. நாட்டில் ஒழுக்கம் என்பது திருடாதே, பொய் சொல்லாதே, மாமிசம் உண்ணாதே, மதுப்பழக்கம் கூடாது என்கிறது. ஆனால் மனிதனை சமமாக நடத்து, தீண்டாமையை கடைபிடிக்காதே, நேரத்தை வீணடிக்காதே, ஏற்றுக்கொண்ட வேலையை உண்மையாக செய், மற்றவனை ஏமாற்றாதே என்ற பொது ஒழுக்கத்தைப் பற்றி யாரும் பேசவில்லை. பெரியார் தான் பேசினார். கடவுள் நம்பிக்கையற்ற பெரியார் அவையில் கடவுள் வாழ்த்துப் பாடப்பட்டால், தள்ளாத வயதிலும் எழுந்து நிற்பார். தேசியகீதம் பாடப்பட்டாலும் எழுந்து நின்று உரிய மரியாதையை செலுத்தியவர் பெரியார்.
இருவரும் உரையாடும் போது பெரியார் அடிகளாரிடம் கேட்கிறார். நாட்டில் ஜா திமதக் கொடுமைகள் இருக்கிறது. இதை மதமும், கடவுளும் சகித்துக் கொண்டு இருக்கிறதே நியாயம் தானா என்று கேட்டார். உடனே அடிகளார், இது மனிதர்கள் செய்த தவறு, கடவுள் சொல்லவில்லை என்று பதிலளித்தார்.
“அப்படியானால் கடவுள் அப்படி சொல்லவில்லை என்பதை நீங்கள் பிரச்சாரம் செய்யுங்கள். கடவுள் அப்படி செய்தார் என்பதலால் தானே கடவுளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்கிறோம். இல்லையென்றால் கடவுளை எதிர்க்க வேண்டிய அவசியம் எனக்கு என்ன வந்தது? எனக்கும் கடவுளுக்கும் தனிப்பட்ட முறையில் என்ன பகை இருக்கிறது? நான் கடவுளைப் பார்த்ததுக் கூட இல்லையே என்றார் பெரியார்.
அந்த உரையாடலில் நீங்கள் ஜாதித் தீண்டாமை ஒழிப்பில் உடன்படுகிறீர்கள். நானும் உடன்படுகிறேன். எனவே இந்த விசயத்தில் நாம் இருவரும் இணைந்து செயல்படுவோம் என்ற முடிவுக்கு இருவரும் வருகிறார்கள்.
அடிகளார், தொடர்ந்து பெரியார் பிறந்தநாள் விழாக்களில் பங்கெடுத்துப் பேசுகிறார். பெரியாரின் பிறந்த நாளுக்காக விடுதலை நாளேடு சிறப்பு மலரை ஆண்டுதோறும் வெளியிடுவது வழக்கம். அதில் குன்றக்குடி அடிகளாரின் கட்டுரை இடம்பெறாத மலரே கிடையாது. பெரியார் காமராசரை ஆதரித்த போது அடிகளாரும் காமராசரை ஆதரித்தார். அண்ணாவை ஆதரித்த போது அவரும் அண்ணாவையும் ஆதரித்தார். இப்படியான ஆரோக்கியமான புரிதல் தான் அவர்களுக்குள் இருந்தது. தன்னுடைய குன்றக்குடிப் பகுதியில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்காக கோயில்களை திறந்து வைத்தார். தமிழ் வழிபாடுமுறையை அறிமுகப்படுத்தினார். பார்ப்பனர் தமிழ் வழிபாட்டை எதிர்த்து எழுதிய போது, அதற்கு பெரியார் பதிலடி கொடுத்தார்.
ஒருமுறை குன்றக்குடி அடிகளாரின் மடத்திற்கு பெரியார் சென்றார். அப்போது மடத்தின் வழக்கப்படி கட்டளைத் தம்பிரான் என்ற அடிகளாரின் சீடர் மடத்தில் வழமைக்கேற்ப பெரியார் நெற்றியில் திருநீறு பூசினார். பெரியார் எதிர்க்கவில்லை. இதைப் பார்த்துப் பதறி போன அடிகளார், பெரியாருக்கு ஏன் விபூதி பூசினீர்கள் என்று அவேசமாகக் கேட்டார். நான் மதத்திற்காகப் பூசவில்லை, சன்னிதானத்திற்காகத்தான் விபூதி பூசிக் கொண்டேன் என்று பெரியார் அமைதியாக பதில் கூறினார்.
(தொடரும்)
- விடுதலை இராசேந்திரன்