கல்வித்துறையைக் காவி மயமாக்குவது – கல்வியின் நோக்கத்தையே சிதைக்கும் மாபெரும் ஆபத்து; வர்ணாசிரமக் கட்டமைப்பைக் குலைக்கக்கூடிய மாபெரும் சக்தியே கல்வி தான். வரலாறு அதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. ஒன்றிய பாஜக ஆட்சி, கல்வியை காவிமயமாக்கும் தீவிர முயற்சிகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆசிரியர்களில் பலரும் காவி சிந்தனையில் மூழ்கிக் கிடக்கிறார்கள், அதுவும் தமிழ்நாட்டில் இந்த நிலை என்பது மிகவும் கவலைக்கும், கண்டனத்திற்குரியதாகும்.

இரண்டு உதாரணங்களை சுட்டிக்காட்டலாம். அண்மையில் சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை மாதிரி அரசுப் பள்ளிகளில் மகா விஷ்ணு என்ற சனாதனவாதி, உடல் ஊனம் என்பது முன் ஜென்மப் பாவம் என்று மாணவர்களிடத்தில் பேசியது கடும் விவாதத்துக்குள்ளானது. திருச்சி – அரியலூர் – பெரம்பலூர் மாவட்டக் கல்வி அதிகாரிகள், மாணவர்களை விநாயகர் சதுர்த்தி உறுதிமொழி ஏற்கக் கட்டாயப்படுத்தினார்கள். ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையிலானக் குழு பள்ளி மாணவர்களிடையே ஜாதி, மத, நச்சுக் கருத்துக்களைத் திட்டமிட்டு பரப்புவதைத் தடுக்க அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தமிழ்நாடு முதல்வரிடம் அறிக்கையாக வழங்கியிருக்கிறது. இது தமிழ்நாடு அரசே நியமித்த குழுவாகும். அரசு இந்த அறிக்கையை செயல்படுத்த முன்வர வேண்டும் என்பது நமது உறுதியான கருத்து.

ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், குறிப்பாகத் தமிழ் ஆசிரியர்கள், திராவிடக் கருத்தியலின் தூதுவர்களாக இருந்தார்கள். மாணவர்களிடையே பார்ப்பனிய எதிர்ப்பையும், சமூகநீதியையும் விதைத்தார்கள். இன்று நிலைமை தலைகீழாகி விட்டது. அண்மையில் ‘திராவிடர் கருத்தியல் ஆசிரியர் சங்கம்’ என்ற அமைப்பை சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இது காலத்துக்குத் தேவையான அவசியமான முயற்சியாகவே நாம் கருதுகிறோம். கல்லூரி – பல்கலைக்கழகங்களில் பார்ப்பனிய – சனாதனக் கருத்தாளர்கள் அதிகரித்து வருவதையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.

அமைச்சர் பொன்முடியின் “திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்” நூல் வெளியீட்டு நிகழ்வில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிடம் குறித்த தனது தெளிவான பார்வையை முன் வைத்ததைக் குறிப்பிட வேண்டும். மொழி, நிலம், பண்பாடு இம்மூன்றையும் உள்ளடக்கியதே திராவிடம் என்று மிகச்சரியாக சுட்டிக்காட்டியுள்ளார். திராவிடம் ஆரியத்தை எதிர்ப்பது மட்டுமல்ல; பதம் பார்க்கும் கருத்து என்றும் எச்சரித்துள்ளார்.

திராவிடம் என்பதே வட மொழிச் சொல் தான் என்று திராவிடக் கருத்தியலை எதிர்ப்போரும் உண்டு. மொழி அறிஞர் தேவநேயப் பாவாணார், திராவிடம் என்பது வட மொழிச் சொல் அல்ல என்று சொல் ஆய்வு வழியாக உறுதி செய்துள்ளார். அப்படியே அது வட மொழி என்றாலும், பார்ப்பனர்களை விலக்கி வைக்கக் கூடிய மாற்றுச் சொல்லைப் பரிந்துரைத்தால், அதைத் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன் என்றார் பெரியார். திராவிடம் என்ற கருத்தியலை அரசியலில் மட்டுமின்றி பண்பாட்டுத் தளத்திலும் முன்னெடுக்கப்படா விட்டால் ‘ஆரியம் சூழ்ச்சியாக வெவ்வேறு வடிவங்களில் தன்னை நிலைநிறுத்தி விடும் ஆபத்தை பெரியார் எச்சரித்தார். அரசியலில் மட்டும் பார்ப்பன எதிர்ப்பையும், பண்பாட்டில் பார்ப்பனிய ஆதரவையும் பின்பற்றியது நீதிக்கட்சி. அதன் காரணமாகவே ‘திராவிடர் கழகத்தை’ உருவாக்கினார் பெரியார்.

பார்ப்பன – பார்ப்பனரல்லாதார் போராட்டம் அரசியல் உரிமைகளுக்கானது என்றால் ‘பிராமணர்’ – ’சூத்திர’ போராட்டம் பண்பாட்டு அடிமைத்தனங்களுக்கு எதிரான சுயமரியாதைக்கானது என்றார். பண்பாட்டு விடுதலையை தவிர்த்துவிட்டு பெறக்கூடிய அரசியல் உரிமைகள் முழுமையாகாது என்றார்.

இந்து மதம் கட்டமைத்த பண்பாட்டுப் பண்டிகைகள் அனைத்தும் திராவிடர்களை ஆரியர்கள் சூழ்ச்சியால் வீழ்த்தியதை உள்ளடக்கியதே என்று சான்றுகளுடன் எடுத்துக்காட்டினார் பெரியார். திராவிட அசுரனை தேவர் என்ற ஆரியக் கூட்டம், வஞ்சகமாக கொலை செய்ததைக் கொண்டாட முடியுமா? என்று கேட்டார்.

அதன் காரணமாகவே திராவிட இயக்கம் தீபாவளிக்கு வாழ்த்துக் கூறுவதில்லை. இந்த திராவிட இயக்க மரபை அண்ணா, கலைஞர் கட்டிக்காத்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும் இதில் உறுதியாக நிற்கிறார். இதுவே கொள்கைக்கான அடையாளம். அண்மையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “நம்பிக்கையுள்ளவர்களுக்கும் – கொண்டாடுபவர்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்” என்று பேசியிருப்பது வியப்பாக இருக்கிறது. இது ஏற்கத்தக்கக் கருத்து அல்ல.

சனாதனம் என்ற கொடிய நோய் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியவர் உதயநிதி ஸ்டாலின். அதனால் இந்தியா முழுமைக்கும் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறார். என்றாலும் தனது கருத்தில் உறுதியாக நிற்பதைப் பாராட்ட வேண்டும். அவரே “நாங்கள் சனாதனத்தை எதிர்க்கிறோம், சனாதனத்தை நம்பிக்கையோடு கொண்டாடுபவர்களுக்கு எங்களது வாழ்த்துகள்” என்று அவர் ‘தீபாவளி வாழ்த்து’ போலக் கூறினால் ஏற்க முடியுமா? இந்த கேள்வி இயல்பாகவே எழுகிறது. திராவிடக் கருத்தியலை முன்னெடுக்கும் போராட்டத்தில் கருத்துச் சிதைவுகளை உருவாக்கிவிடக்கூடாது. இப்போது தீபாவளி கொண்டாடுவோருக்கு வாழ்த்து, அடுத்து ‘தீபாவளி’ வாழ்த்து வரும் என்று பாஜகவினர் வரவேற்று வாழ்த்துப்பா பாடுவதையும் கவனிக்க வேண்டும்.

விடுதலை இராசேந்திரன்