தந்தை பெரியார் எப்போதும் கலை, இலக்கியங்களின் மீது ஈடுபாடு இல்லாதவர் என்று சொல்லப்படுவதுண்டு. புராண, இதிகாசக் கதைகளே அன்று நாடகங்களாகவும், திரைப்படங்களாகவும் வெளிவந்து கொண்டிருந்தமையால், மூட நம்பிக்கைகளைப் பரப்பும் அவற்றின் மீது பெரியார் வெறுப்புற்றிருந்தார் என்பது உண்மைதான். எனினும், கலைக்கோ, இலக்கியத்திற்கோ அவர் ஒரு நாளும் எதிரி இல்லை. நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகங்களைப் பார்த்து அவர் பாராட்டியுள்ளார். “ராதாவின் நாடகங்களுக்கு அரசாங்கம் முதல் ஸ்தானம் கொடுக்க வேண்டும் ” என்று கூடச் சொல்லியிருக்கிறார்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ என்னும் நாடகத்தை எழுதியுள்ளார். பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கொண்டுள்ள அந்த நாடகம், 1934 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி, சீர்திருத்த நாடக சங்கத்தாரால், சென்னையில் நடிக்கப்பட்டது. அந்நாடகத்திற்குத் தந்தை பெரியாரே தலைமை ஏற்று உரையாற்றினார்.

அதன் பிறகு அதே நாடகம் 1936 ஆம் ஆண்டு, வாணியம்பாடி அருகில் உள்ள அம்பலூர் என்னும் சிற்றூரில் நடைபெற்றது. ஜூலை மாதம் 4 ஆம் தேதி நடைபெற்றுள்ள அந்நாடக நிகழ்ச்சி குறித்து, ஜுலை மாதம் 19 ஆம் தேதி குடியரசு இதழில் பெரியார் குறிப்பிட்டுள்ளார்.

அம்பலூர் நிகழ்ச்சியில் தலைமையேற்றுப் பேசிய பெரியார், தன் உரையில்,  “இன்று  நாடகம் நடத்திய தோழர் அர்ச்சுனன் வெகு வீரமுடன் நடந்து கொண்டதைக் காண, எனக்கும் இரணியனாக வேட­ம் போடலாமா என்ற ஆசை என்னை அறியாமல் ஏற்படுகின்றது. ஆனால் தாடி இருக்கிறதே என்று  யோசனையைக் கைவிட்டேன்  ” என்று  குறிப்பிட்டுள்ளார்.

இதனை நான் கலைஞர் தொலைக்காட்சியில், ஒன்றே சொல், நன்றே சொல் பகுதியில் குறிப்பிட்டதைக் கேட்டு விட்டு, சென்னை, சைதைப் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள அறம்வாழி அம்மையார் எனக்குத் தொலைபேசி செய்தார்.  “எங்கள் அப்பாவைப் பற்றி நீங்கள் சொன்னதைக் கேட்டு நாங்கள் எல்லோரும் மிக மகிழ்ச்சியடைந்தோம்” என்றார்.

எனக்குப் புரியவில்லை.  “உங்கள் அப்பாவைப் பற்றியா, எப்போது?” என்று கேட்டேன்.  “பெரியார் பாராட்டிய நாடக நடிகர் அர்ச்சுனன்தான் எங்கள் அப்பா” என்று அவர் கூற, பெரு வியப்பாய் இருந்தது எனக்கு.  “அம்மா இன்னும் உயிருடன்தான் இருக்கிறார். வயது 98” என்று அவர் கூறியபோது, மேலும் ஓர் இன்ப அதிர்ச்சி.

அம்மாவின் பழைய பெயர் ருக்மணி. ஆனால் அதனைத் திருமணம் முடிந்தவுடனேயே அம்பொழில் என்று அர்ச்சுனன் மாற்றிவிட்டாராம். இன்று அம்பொழில் அம்மா என்றுதான் அந்தக் கிராமத்தில் பாட்டி அறியப்படுகிறார். தன் மனைவியின் பெயரை மாற்றியதோடு மட்டுமின்றி, பிள்ளைகள் அனைவரின் பெயர்களையும் அழகு தமிழில் அமைத்திருக்கிறார். அதிலும் இரண்டு நிபந்தனைகள். அனைவரின் பெயர்களும் ‘ அ ’ கரத்தில் தொடங்க வேண்டும். சிறப்பு ‘ ழ ’ கரம் கண்டிப்பாய் இடம் பெற வேண்டும். ஆம் ! அருத்தமிழ்ச்செல்வி, அழகுள்ளம், அறம்வாழி, அறிவிதழ், அமைஎழில், அகமகிழ் என்பன அவர் பிள்ளைகளின் பெயர்கள். அழகுள்ளம் மட்டும் பல  ஆண்டுகளுக்கு முன்பே காலமாகி விட்டார்.

பெரியாருக்குத் தமிழ்ப்பற்று இல்லை என்பதுபோல் ஒரு நச்சுக் கருத்து இங்கே பரப்பப்படுவதுண்டு. அவரைப் பின்பற்றிய அர்ச்சுனனே எவ்வளவு தமிழ்ப் பற்றுக் கொண்டுள்ளார் என்பதை இங்கு நாம் அறிய முடிகிறது. பெரியாரும் பல அழகிய தமிழ்ப் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டியுள்ளார்.

அம்பலூர் வீட்டைச் சுற்றி ஏராளமான தென்னை மரங்கள்.  “இன்னும் ஏராளமான தென்னை மரங்கள் இருந்தன. எல்லாவற்றையும் காந்தியார் சொன்னபடி, கள் இறக்கும் எதிர்ப்புப் போராட்டத்தில் வெட்டிவிட்டார் ” என்றார்கள். பெரியாரின் சீடரல்லவா !

பெண்கல்வியில் அர்ச்சுனன் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார். தன் மகள்களைப் படிக்க வைப்பதற்கு, அந்தச் சிற்றூர் ஆதரவு காட்டவில்லை. எனவே, தன் சொத்தில் ஒரு பகுதியை விற்றுச் சென்னைக்குக் குடியேறி, சென்னையில் பெண் பிள்ளைகளைப் படிக்க வைத்திருக்கிறார். 1940, 50களில் பெண்களைப்படிக்க வைப்பது என்பது அவ்வளவு எளிய செயலன்று. பெரியார் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட, இரணடாம்  வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த அந்த கிராமத்து மனிதர் அதைச் செய்து முடித்திருக்கிறார். பெரியாருடன் இவர்  கொழும்புக்கும் சென்றுள்ளார்.

வரும் மார்ச்சில் 99 வயது தொடங்கும் அம்பொழில் பாட்டிக்குப் பழைய நினைவுகள் சரியாக இல்லை. விட்டுவிட்டுச் சில செய்தி களைச் சொன்னார்.

“அம்பலூரில் மூனு ராத்திரி நாடகம் நடந்திச்சு. ரெண்டாவது நாளு, எங்கள எல்லாம் கூட்டிகிட்டுப் போனாங்க ” என்றார்.

“பெரியார் வந்திருந்தாரா? ” என்று கேட்டதற்கு,  “என்னிக்குன்னு ஞாபகம் வல்லியே” என்றார்.  “ஏதோ ஒரு நாள் வந்தாரா? ” என்றபோது,  “ஆமா, வந்தது வந்ததுதான். வீட்டுக்குக் கூட வந்தாரே” என்றார்.

அர்ச்சுனனின் கடைசி மகள் அகமகிழ் அம்மையார்தான் தன் தள்ளாத வயதுக் தாயாரைப் பார்த்துக் கொள்கிறார். அருகிலேயே உள்ள மகன் அறிவிதழும், அவர் மனைவியும் உதவியாக உள்ளனர். அவர்கள் வீட்டில்தான் சந்திப்பு நடந்தது.

“அப்பாவுக்கு டைரி எழுதற பழக்கமுண்டு. பாக்குறீங்களா?” என்றார் அகமகிழ்.  “அடடா, அது அரிய சொத்தாயிற்றே, எடுத்து வாருங்கள்” என்றேன். பழைய டைரிகள் ‘செல்’லரித்துப் போய்விட்டன.1980களில் எழுதிய நாட்குறிப்பு கள்தான் கிடைத்தன. அவற்றுள் அரசியல் செய்தி கள் கூடுதலாகக் கிடைக்கவில்லை. அது அவரு டைய வயது முதிர்ந்த காலம், என்றாலும் அவரின் குணநலன்கள் பலவற்றை அறிந்து கொள்ள அவை உதவின.

காலை 6 மணிக்கு எழுந்ததிலிருந்து, இரவு 9 அல்லது 10 மணிக்குப் படுக்கச் சென்றது வரை, எல்லாவற்றையும் எழுதியுள்ளார்.   "இன்று காலை 5 மணிக்கே எழும்பிவிட்டேன். வடக்குப் பட்டு மணியக்காரர் யிளைய மகள் கலியாணத்திற்குப்போய் வந்தேன்” என்பது போன்ற அன்றாடச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. ‘இ’ என்பதற்குப் பதில் ‘யி’ என்னும் எழுத்தையே மொழி முதலிலும் பயன்படுத்தியுள்ளார். ஒவ்வொரு நாளும், செலவழித்த ஒவ்வொரு பைசாவிற்கும் அவரிடம் கணக்கு உள்ளது. வரவு  செலவுக் கணக்கு, அவர் நாட்குறிப்பின் முக்கியமான ஒரு பகுதி.

எல்லாவற்றிலும் பெரியாரை அவர் பின்பற்றி உள்ளார். பிள்ளைகளுக்குச் சீர்திருத்தத் திருமணம் செய்து வைத்துள்ளார். இறுதிவரை பகுத்தறிவாளராகவே வாழ்ந்துள்ளார். 1989 மார்ச் 11  தன் 89 ஆம் வயதில் அம்பலூரில் காலமானார்.

சிறந்த நடிகர் என்று பெரியாரால் பாராட்டப்பட்ட அர்ச்சுனன். சிறந்த மனிதராகவும், சிறந்த பகுத்தறிவாளராகவும் வாழ்ந்துள்ள அருமையை அம்பலூர் நமக்கு உணர்த்தியது.

- சுப.வீரபாண்டியன்

Pin It