கடவுள் - மத மறுப்புகளைக் கடுமையாகப் பேசிய பெரியார், போராட்ட வடிவங்களிலும் கடுமையான அணுகுமுறை களையே பின்பற்றினார். பார்ப்பனியத்தில் ஊறிப் போய் நிற்கும் மக்களுக்கு இத்தகைய ‘அறுவை சிகிச்சை’ முறையே தேவை என்று கருதினார் பெரியார். ஆனால், தமிழ்நாட்டில் கொள்கை முரண் பாடுகளுக்கிடையே உரையாடல்களைத் தொடங்கி விவாதங்களுக்கு வழி திறந்து விட்டதுதான் பெரியார் இயக்கம், மாற்றுக் கருத்தாளர்களை எதிரிகளாக்கி வன்முறைக்கு தூபம் போட்டது இல்லை. இன்று எச். ராஜாக்களும், இந்து தீவிரவாத அமைப்புகளும் பேசும் தரமற்ற வன்முறைப் பேச்சுகளை பெரியார் இயக்கம் எப்போதும் பின்பற்றியதும் இல்லை.

சைவத்திலும் பக்தியிலும் ஊறித் திளைத்த காவி உடை சாமியார் குன்றக்குடி அடிகளாரும் பெரியாரும் ஒரே மேடையைப் பகிர்ந்து கொண்டார்கள். அவரவர் நிலையிலிருந்து கருத்து மோதல்களை நிகழ்த்தினார்கள். தமிழர் இன நலன் என்று வரும்போது ‘கருப்பும் காவியும்’ ஒரே குரலில் ஒலித்தது. இந்த வரலாற்றை இளைய சமுதாயத்துக்கு நினைவூட்டுவதற்காக பெரியார் - அடிகளாருக்கிடையே நிலவிய உறவுகளை ‘நிமிர்வோம்’ பதிவு செய்கிறது.

“1945ஆம் ஆண்டு, 20 வயதே நிரம்பிய குன்றக்குடி அடிகள், தருமபுரம் சைவமடத்தில் சேர்ந்து, சைவ சித்தாந்தம், சங்க இலக்கியங்கள் மற்றும் சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமைப் பெற்றார். அப்போது குன்றக்குடி, திருவண்ணாமலை சைவ மடத்துக்கு இளைய சாமியார் ஒருவரை தேடிக்கொண்டிருந்த போது, குன்றக்குடி அடிகளாருக்கு அழைப்பு விடுத்தது. தருமபுரம் மடம் அடிகளாரை அனுப்பி வைக்க மறுத்தாலும், பிறகு ஒரு வழியாக சம்மதித்தது. இளைய மடாதிபதியாக குன்றக்குடி மடத்தில் சேர்ந்த ஆதீனம், அடுத்த 3 ஆண்டுகளில் குன்றக்குடி மடாதிபதி ஆகி விட்டார். சைவத்தில் வெள்ளாளர் ஜாதியினர் மட்டுமே சைவ மடங்களில் சன்னிதானமாக முடியும். இவரும் அதே ஜாதிப் பிரிவைச் சார்ந்தவர்தான். ஆனால், சீர்திருத்த எண்ணங் களைக் கொண்டிருந்தார். மடத்துக்கு அருகே உள்ள தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு களுக்குச் சென்றார். ‘வழிபாட்டு மொழியாக தமிழ் இருக்க வேண்டும்’ என்றார்.

periyar and kundrakudi adikalar 350பெரியார், விநாயகன் எதிர்ப்பு, இராமன் எதிர்ப்பு இயக்கங்களை நடத்தியபோது, அதற்கு குன்றக்குடி அடிகளாரிடமிருந்து எதிர்ப்பு வந்தது. பெரியார் இயக்கங்களைக் கண்டித்து, துண்டறிக்கைகளை வெளி யிட்டார். பெரியார் இயக்கத்துக்கு எதிராக, “அருள்நெறி திருக் கூட்டம்” என்ற அமைப்பைத் தொடங்கி பெரியார் கடவுள் மத எதிர்ப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.

இந்த நிலையில் 1955இல் பெரியார் மலாயா (இப்போது மலேசியா) பயணமான போது, குன்றக்குடி அடிகளாரும் பெரியார் பிரச்சாரத்துக்கு மறுப்பு தெரிவிக்க மலேயா பயணமானார். இந்து மடாதிபதிகள் கடல் தாண்டக் கூடாது என்ற மரபையும் மீறி குன்றக்குடி அடிகளார் மலேயாவுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. ‘நாத்திகர்களின் விஷமப் பிரச்சாரத்தை முறியடிக்கவே’ சம்பிரதாயங் களையும் மீறி கடல் தாண்டி கப்பலில் வந்ததாக கூறினார். மலாயாவில் தொடர்ச்சியாக பல கூட்டங்களில் பேசிய குன்றங்குடி அடிகளார், “சைவ மதத்தில் ஜாதிக்கு இடமில்லை; பல கடவுள் நம்பிக்கையையும் ஏற்கவில்லை” என்று அவர் பேசிய கருத்துகள் பெரியாருக்கு எட்டின. பெரியாருக்கு எதிராக பார்ப்பனரல்லாத ஒரு மடாதிபதி களமிறங்கியிருப்பது காஞ்சி பார்ப்பன மடத்துக்கு மகிழ்ச்சியூட்டியது. காஞ்சி மடம் குதூகலமடைந்தது. இந்த நிலயில் அடிகளாரின் ஜாதி எதிர்ப்பு கருத்து பெரியாரை ஈர்த்தது. தமிழகம் திரும்பிய பெரியார், குன்றக்குடி சன்னிதானம் மலேசியா வில் பேசியது பற்றி கேள்விப்பட்டவுடன் அவர் குறித்து விசாரித்தார்.

“அவர் நம்முடைய ஆள்; அவர் போட்டிருக்கிற வேடத்துக்காக நம்மை எதிர்த்து பேசி வருகிறார். தோழர்கள் அவருக்கு எந்த தொல்லையும் தரக்கூடாது” என்று தோழர்களுக்கு அறிவுறுத்தினார். ஒட்டு மொத்த தமிழர் நலனுக்காக பெரியார் – அடிகளார் முரண்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற பொதுவான சிந்தனைக்கு தோழர்கள், உணர்வாளர்கள் வந்தனர்.

இருவருக்கிடையே ‘நட்பு’ உருவாக வேண்டும் என்று விரும்பிய சிலர், ஈரோட்டில் இரு தலைவர்களுக்குமிடையே இரகசிய சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர். அடிகளார் இருந்த வீட்டுக்கு பெரியார் சென்றார். இரண்டாவது தளத்தில் அடிகளார் இருந்தார். பெரியார் வருகை அறிந்து மாடியிலிருந்து கீழே இறங்கி வர அடிகளார் தயாரானபோது, பெரியார் தடுத்து, ‘சன்னிதானத்துக்கென்று ஒரு மரியாதை உண்டு; அதை குலைக்கக் கூடாது; நானே மேலே வருகிறேன்’ என்று கூறி, பெரியார் படி ஏறி 2ஆவது தளத்துக்குச் சென்றார். அடிகளார் எழுந்து நின்று பெரியாரை வரவேற்றார். பெரியார் எழுந்து நின்று வணக்கம் செலுத்திய போது, அவரது கைத்தடி கீழே விழுந்து விட்டது. ‘நீங்கள் அமருங்கள்’ என்று அடிகளாரிடம் கூறினார் பெரியார்.

இரண்டு பேர் அமரும் அந்த இருக்கையில் தனக்கு அருகே அமர பெரியாரை அடிகளார் அழைத்தபோது, பெரியார் மறுத்து, ‘சன்னிதானத்தோடு சமமாக அமருவது மரபு அல்ல’ என்று கூறினார். இத்தனைக்கும் அடிகளார் பெரியாரைவிட 50 வயது இளையவர். இருவரும் மனம் விட்டு பேசினர்.

மதமும், கடவுளும், ஜாதியையும் தீண்டாமையையும் நியாயப்படுத்தி, பார்ப்பன அடிமைகளாக பெரும் பகுதி மக்களை நிலை நிறுத்தியிருப்பதை பெரியார் ஆவேசத்துடன் கூறியபோது அடிகளார் அமைதியாக கேட்டார். “அப்பர், இராமலிங்க அடிகள், இராமானுஜர் கூறிய கருத்துகளை உண்மையாகப் பின்பற்றி இருந்தால் இந்த நிலை வந்திருக்காது” என்று வேதனையுடன் அடிகளார்கூறினார்.

“இதைத் தவிர எனக்கும் கடவுளுக்கும் இந்து மதத்துக்கும் வேறு என்ன தகராறு? நான் கடவுளை கண்ணால் பார்த்ததுகூட இல்லையே! பிறகு அவருடன் எனக்கென்ன பிரச்சினை?” என்றார் பெரியார். இருவருக்கும் தமிழர் இனமான உணர்வுக் கண்ணோட்டத் தில் புரிதல் உருவானது. 1956ஆம் ஆண்டு திருச்சி பொன்மலையில் பெரியார் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்துக்கு திராவிடர் கழகத் தோழர்கள் அடிகளாரை அழைத்தனர். முதலில் தயங்கிய அடிகளார், பிறகு ஒப்புக் கொண்டார். அந்தக் கூட்டத்தில், திராவிடர் கழகத் தோழர் ஒருவர், மதத்தைக் கடுமையாக தாக்கிப் பேசியபோது, பெரியார் தனது கைத்தடியால் தட்டி, அடிகளாரை மேடையில் வைத்துக் கொண்டு அப்படி பேச வேண்டாம் என்று சைகையால் தடுத்தார். அந்தக் கூட்டத்தில் அடிகளார் பெரியாருக்கு ஒரு சால்வை போர்த்தினார். இது, இரு தரப்பினரிடையேயும் சலசலப்பை, விவாதங்களை உருவாக்கியது. அக்கூட்டத்தில் பெரியாரின் ஜாதி எதிர்ப்பு, கருத்துகளைப் பாராட்டிப் பேசிய அடிகளார், நாத்திக கருத்துகளை ஒவ்வொன்றாக மறுத்தார். பெரியார் தனது ஏற்புரையில் மிகவும் பெருந்தன்மை காட்டினார். “எங்களுடைய சமுதாயம் சூத்திரர் என்று இழிவுபடுத்து வதற்கு இந்த கடவுளும் மதமும் காரணமாக இருக்கும்போது இதை ஒழிப்பதைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது?” என்று கேட்டார். கூட்டம் முடிந்து இருவரும் ஒரே காரில் திருநெல்வேலி வரை பயணமானார்கள். தங்களுக்குள் கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் ஜாதி ஒழிப்பில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பில் இருவரும் இணைந்தே பயணித்தார்கள். குன்றக்குடி மடத்துக்கு அடிகளார் அழைப்பை ஏற்று பெரியார் சென்றார். யானை ஒன்று பெரியாருக்கு மாலை போட்டு வரவேற்றது. மடத்தின் ஊழியர் ஒருவர் பெரியாருக்கு விபூதி பூச முயன்ற போது, குன்றக்குடி அடிகளார்அதைத் தடுத்தார்.

1973இல் பெரியார் இறக்கும் வரை இந்த நட்புப் பயணம் தொடர்ந்தது” – என்று அந்தக் கட்டுரை பதிவு செய்திருக்கிறது.

1971ஆம் ஆண்டு சேலத்தில் இராமனை பெரியார் செருப்பாலடித்தார் என்று பார்ப்பனர்கள் ஒரு ‘பிரளயத்தை’யே உருவாக்கியபோது, அடிகளார் பெரியார் பக்கம் நின்றார். “இன்றைய நாத்திகம் தமிழர் நலன் சார்ந்தது; இன்றைய ஆத்திகம் உயர்ஜாதி நலன் சார்ந்தது” என்று வெளிப் படையாகவே அடிகளார் அறிவித்தார். குன்றக்குடி மடத்தின் நிர்வாகத்துக்கு உள்பட்ட கோயில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கினார் அடிகளார். தி.மு.க. ஆட்சியில் அவருக்கு மேலவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. கருப்பு உடையும் காவி உடையும் ஒரே மேடையில் இனவுணர்வுப் பிழம்பாக தோன்றிய காட்சிகள் திராவிடர் கழகத் தோழர்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தந்தது. அந்த மேடையில் அடிகளாரிடம் பெரியார் உரிமையோடு எழுப்பிய விவாதங்களும் அதற்கு அடிகளார், சிரித்துக் கொண்டே நாகரிகத்தோடு தனது பதிலை முன் வைத்த நிகழ்வுகளும் உண்டு. மாற்றுக் கருத்துகளை அங்கீகரிக்கவும், விவாதிக்கவும் கூடிய உன்னதமான தலைமைப் பண்பு பெரியாரிடம் இருந்தது. அடிகளார்அதை ஆழமாகப் புரிந்திருந்தார். அதுவே அவர்களின் நட்புக்கு அரண் சேர்த்தது.

(ஆய்வாளர் ஆ.இரா.வெங்கடாசலபதி, 2016, செப்.16 ‘இந்து’ ஏட்டில் எழுதிய கட்டுரையின் சுருக்கமான தமிழாக்கம்.)

Pin It