சென்னை கழகத் தலைமை அலுவலகத்தில் 29.10.2024 அன்று நிமிர்வோம் வாசகர் வட்ட சார்பில் குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு சிறப்புக் கூட்டம் நடந்தது. அடிகளார் படத்தைக் கழகப் பொதுச் செயலாளர் திறந்து வைத்து ஆற்றிய உரை. கடந்த இதழின் தொடர்ச்சி..

அடிகளார் தனது குன்றக்குடி கிராமத்தைத் தொழில் வளர்ச்சி நிறைந்த கிராமமாக மாற்ற வேண்டும் என்பதில் அக்கறையுடன் செயல்பட்டார். அந்தக் கிராமத்துக்கு நேரு, இந்திரா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வருகை தந்துள்ளனர். பெரியாருக்கும், அடிகளாருக்கும் இடையே நிறைய உரையாடல்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதற்கு இடையில் பெரியாரும் அடிகளாரும் மதுரைக்கு தொடர்வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த போது அடிகளாருக்கு திருக்குறள் புத்தகத்தைக் கொடுத்து “குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும்” இந்தக் குறளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று பெரியார் கேட்டார். தனிப்பட்ட மான, அவமானம் பார்த்ததினால் தான் இந்தத் தமிழ் சமுதாயம் தோல்வியைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறது. பொதுத் தொண்டுக்கு வருபவருக்கு அது இல்லை என்று பெரியார் சொன்னார். பின்னர் பேசிய அடிகளார், இந்தக் குறளைப் பற்றி நான் பல்வேறு இடங்களில் பேசியுள்ளேன். ஆனால் தற்போது பெரியார் தந்த விளக்கம் தான் தன்னுடைய வாழ்க்கைப் போக்கையே மாற்றியமைத்தது என்றார்.

1962 பொதுத் தேர்தலை ஒட்டி வாக்காளர் மாநாட்டைப் பெரியார் நடத்தினார். அந்த மாநாட்டிற்கு குன்றக்குடி அடிகளார் தலைமை தாங்கினார். அப்போது விடுதலையில் ஒரு அறிவிப்பு வருகிறது. தவத்திரு குன்றக்குடி அடிகளார் சன்னிதானத்தை 07.01.1962 அன்று நடக்கும் ‘வோட்டர்கள்’ மாநாட்டிற்கு பிரதம ஸ்தானத்தை ஏற்றுக்கொள்ள ‘பிரார்த்தனை’ செய்யப்பட்டிருக்கிறது என்று அறிவிப்பு வந்தது. இதைப் படித்த பெரியாரின் உதவியாளர் புலவர் இமயவரம்பன், அய்யா விடுதலையில் இப்படி வந்துள்ளதே என்றார். அதற்கு ஆமாம் நான் தான் எழுதினேன், அப்படியே போடுங்கள் என்றார் பெரியார். சங்கராச்சாரிக்கு எப்படி பார்ப்பனர்கள் மரியாதையைத் தருகிறார்களோ, அதுபோல தான் தமிழர்களுக்கு என்று இருக்கிற அடிகளாருக்கு நாம் முழு மரியாதையை வழங்க வேண்டும் என்று வெளிப்படையாகவே பெரியார் எழுதினார். அப்படித்தான் அடிகளாரும் செயல்பட்டு வந்தார். கடல் கடந்து செல்லக்கூடாது என்ற தடையை முறியடித்து அமெரிக்கா, மலேசியா மற்றும் அரபு நாடுகளுக்குச் சென்றார். இப்படி பல முற்போக்கான செயல் திட்டங்களை எல்லாம் அவர் செயல்படுத்தினார்.

அவர் இந்து சமயத்தைக் கடுமையாகச் சாடினார். 1990-இல் வெளிவந்த பெரியார் பிறந்தநாள் மலரில் வெளிவந்த ஒரு கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார். “இந்துவாக இருந்தால் அறிவுக்குப் புறம்பான வேதங்களை ஒத்துக் கொண்டாக வேண்டும். வேதங்களை ஒத்துக் கொண்டால் அவ்வழிப் பிறந்த ஜாதி வேற்றுமைகளை ஒத்துக்கொண்டாக வேண்டும். சுற்றி வளைப்பானேன் நாமே நம்மை சர் சூத்திரன் என்றும், இழி மக்கள் என்றும் ஒத்துக் கொள்ள வேண்டும். இந்துவாகப் பிறந்தால் பார்ப்பனருக்கு உயர்ந்தப் பார்வையும், இடமும் கொடுத்தாக வேண்டும். இந்த இந்துமதத்தின் வழியில் நாம் வாழ்வது நியாயம் தானா?” என்றார் அடிகளார். சைவ மடாதிபதியான அடிகளார், இந்து சமயத்தைக் கண்டித்துப் பெரியாரின் குரலாகப் பல்வேறு இடங்களில் ஒலித்திருக்கிறார்.

“கடவுளை மற! மனிதனை நினை!” என்று பெரியார் சொன்னதைப் போலவே 1992-இல் ‘மனிதனை நினை’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார் குன்றக்குடி அடிகளார். அதில், “ஏன் இந்த அவலம். மனிதனை மதிக்கும் பண்பு நமது பண்பாட்டில் இல்லை. எல்லோரும் கடவுளை மட்டுமே நாடுகிறார்கள், நெருங்குகிறார்கள். மனிதனை நெருங்குபவன்,

கடவுளை நெருங்குகிறான் என்பது மதத்தின் உபதேசமாக இருந்தாலும் செயலில் அப்படி இல்லை. இன்னும் நமது நாட்டில் மனித மதிப்பீட்டு சமுதாயம் தோன்றவில்லை. கடவுளும் பணமும் தான் மதிக்கப்படுகின்றன. கடவுளுக்குப் பணம் துணை. பணத்திற்குக் கடவுள் துணை. இது இன்றைய சமுதாயப் போக்கு. இந்தப் போக்கு மாற வேண்டும்” என்று எழுதினார்.

பெரியார் பற்றி அடிகளார் எழுதிய ஒரு கட்டுரையில், “இந்தியாவில் எங்கு பார்த்தாலும் மதச் சண்டைகள், ஜாதிக் கொடுமைகள். இன்று இந்தியாவை, தமிழ்நாட்டை வருத்துபவை அறியாமை, ஏழ்மை, வறுமை, சமூகக் கொடுமைகள். இன்று இந்தியாவில் பக்திக்குப் பஞ்சமில்லை. ஆனால் உழைப்பும் பகுத்தறிவும் தான் இல்லை, இன்று தேவை பகுத்தறிவும் கடுமையான உழைப்பும்” என்று எழுதினார். கிட்டத்தட்ட ஒரு பெரியாரிஸ்ட் பார்வையில் தான் அவரது செயல்பாடுகள் இருந்தன.

1971, தமிழ்நாட்டில் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டம் வலுப்பெற்றது. அதற்குக் காரணம், அப்போது சேலத்தில் நடைபெற்ற ‘மூடநம்பிக்கை ஒழிப்பு’ மாநாட்டில் விநாயகன் - இராமன் - சிவன் உள்ளிட்டப் பல்வேறு கடவுளர்களின் பிறப்புகளைச் சித்திரமாக (Cartoon) வரைந்து ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டது. அந்த ஊர்வலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ‘ஜனசங்கம்’ கருப்புக் கொடி காட்டினார்கள். அப்போது ஊர்வலத்தை நோக்கி செருப்பை எடுத்து வீசினார்கள். ஊர்வலத்தில் பங்கேற்ற பெரியார் தொண்டர்கள் அந்தச் செருப்பை எடுத்து கடவுளர் படங்களை அடித்துக் கொண்டே வந்தனர். அது தேர்தல் பிரச்சனையாக மாற்றப்பட்டது. ‘துக்ளக்’ படம் பிடித்து வெளியிடப்பட்டது. கலைஞர் ‘துக்ளக்’ இதழைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். அப்போது இருந்த காங்கிரஸ், சுதந்திரா கட்சிகள் இந்தச் சம்பவத்தைத் தேர்தல் பிரச்சனையாக முன் வைத்தன.

‘இராமனைச் செருப்பால் அடித்த திமுகவுக்கா உங்கள் ஓட்டு’ என்று போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். அந்தச் சமயத்தில் பெரியாரின் படத்தையும் செருப்பால் அடித்தனர். தீயிட்டுக் கொளுத்தினார்கள். அப்போது பெரியார், நன்றாக செருப்பால் அடியுங்கள். உங்களில் யாருக்காவது எனது படம் தேவைப்பட்டால் விடுதலை அலுவலகத்திற்கு எழுதுங்கள். நான் பாதி விலைக்கு செருப்பையும், படத்தையும் அனுப்பி வைக்கிறேன் என்றார். இதை ஏன் அனுப்பி வைக்கிறேன் என்றால் “இராமசாமி நாயக்கன் இராமனைச் செருப்பால் போட்டால், ஏன் இராமசாமி நாயக்கன் செருப்பால் போட்டான் என்று மக்கள் கேட்பார்கள். இராமன் படத்தை செருப்பால் அடித்தார்கள் என்று நீங்கள் சொல்வீர்கள். ஏன் இராமன் படத்தை செருப்பால் போட்டார்கள் என்று மக்கள் கேட்பார்கள். இதன் வழியாகத்தான் எனது கொள்கைகள் வளரும்” என்றார் பெரியார். எனது கொள்கைகள் எப்போதும் எதிரிகள் வழியாகத்தான் பரப்பப்பட்டு இருக்கிறது என்றார். அந்தத் தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அப்போது கலைஞர் பெரியாருக்கு ஒரு தந்தி அனுப்பினார். “நீங்கள் உலகப் புகழ் பெற்று விட்டீர்கள்‌. என் மீது விழுந்தப் பழி நீங்கி விட்டது” என்று அந்தத் தந்தியில் குறிப்பிட்டிருந்தார்.

அப்படிப்பட்ட காலகட்டத்தில் குன்றக்குடி அடிகளார் எடுத்த நிலைப்பாடு என்ன?

எது வேண்டும்?

ஒன்றே குலம் ஒருவனே தேவன்.

 - இது உண்மை சமயம்.

இன்று ‘ஆஸ்திகம்’ என்பது உயர் சாதியினர் நலம்.

இன்று ‘நாஸ்திகம்’ என்பது பெருவாரியான தமிழ் மக்களின் நலம்.

உங்களுக்கு இதில் எது வேண்டும்?

என்று குன்றக்குடி அடிகளார் வெளிப்படையாக அறிவித்தார். இது மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பைப் பெற்றது. எந்தவொரு நிகழ்வானாலும் அதில் கொள்கைக்கான அணுகுமுறை – சந்தர்ப்ப சூழலோடு பொருத்திப் பார்க்க வேண்டும். பழுத்தக் கடவுள் நம்பிக்கைக் கொண்ட ஒரு ஆதீனம் ‘நாத்திகத்துக்கு’ ஆதரவாக குரல் கொடுப்பதை முரண்பாடு என்று பார்க்கக்கூடாது. அந்த அரசியல் சூழலில் ‘ஆன்மீகம்’ எந்தச் சக்திகளுக்கு துணையாக நின்றன என்ற அணுகுமுறையே சரியான இயங்கியல் கண்ணோட்டம்.

 பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதைக் கூட அடிகளார் ஏற்றுக் கொண்டார். அதற்கான விளக்கத்தையும் கூறினார். “தமிழ் அறிவியல் தமிழாக வளர முடியவில்லை. வளர்க்க வேண்டும் என்ற முனைப்பும் இல்லை. தெருக்களில் வழக்கமானப் பட்டிமன்றங்கள் தான். கைகேயியா - கூனியா போன்ற தலைப்புகள். எங்கனம் தமிழன் முன்னேறுவான், தமிழ் வளரும். ஆதலால் பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார். இப்படிப் பெரியார் சுரணை வரும்படி திட்டியும் கூட தமிழை வழிபடும் மொழியாக்கியுள்ளனர். இன்னமும் தமிழ் வழிபாட்டுக்குரியதாகவே இருக்கிறது. இன்று கூட தமிழ், தமிழினத்திற்கு வளர்ச்சித் தரக்கூடியதாக இல்லை என்று பெரியாரின் கருத்துகளை அடிகளார் பேசினார்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதில் கூட அடிகளாருக்கு மாற்றுக் கருத்து உண்டு. “இது தமிழர் பண்பாடு அல்ல, தமிழர் பண்பாடு என்பது அர்ச்சகர் என்பதே கிடையாது. தமிழர்களாக இருக்கிற எவரும் நேராக கடவுளிடம் சென்று பூச்சொரிந்து, நீர் சொரிந்து உள்ளே போய் வழிபட வேண்டும். அர்ச்சகர் என்ற இடைத்தரகர் வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் தான் அவர் இருந்தார்.

(தொடரும்)

விடுதலை இராசேந்திரன்