பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தில் சர் சார்லஸ் திரவேல்யன் என்ற ஒரு ஆளுநர் இருந்தார். அவர் சனாதனப் பெருமை பேசாதவர், ஆரியர்களின் பக்கம் நிற்காதவர், அரசுக்கு நெருக்கடி கொடுக்காதவர், ஆனால் சென்னை மாகாண மக்களால் மிகவும் போற்றப்பட்டவர். மக்களுக்காக பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்தே போர்க்கொடி உயர்த்தியவர்.

charles trevelyan1833 ஆம் ஆண்டு சென்னை, பம்பாய் மாகாண உரிமைகளைப் பறித்து கல்கத்தாவில் உள்ள மத்திய அரசிடம் சரணடைய செய்கின்ற ஒரு சட்டத்தை இயற்றியது. அதை பல மாகாண அரசுகள் ஏற்றுக் கொண்டன. அன்றைய சென்னை மாகாண ஆளுநராக இருந்த சார்லஸ் திரவேல்யன் மட்டும் கடுமையாக, முதுகெலும்போடு பிரிட்டிஷ் அதிகாரத்தை எதிர்த்தார். நான் எஜமான விசுவாசியாக இருக்க முடியாது என்றும் கூறினார். இந்த உரிமைகளைப் பறிக்கக் கூடாது என்றார். புகையிலை வரி, உப்பு வரி, தொழில் வரி என்று பிரிட்டிஷ் ஆட்சி மாகாணங்களுக்கு வரி விதித்த போது, அத்தனை வரிகளையும் துணிச்சலாக எதிர்த்தார். வரி போடுவதை நிறுத்தி அரசின் வீண் செலவுகளை குறையுங்கள் என்று பிரிட்டிஷ் ஆட்சிக்கு எடுத்துரைத்தார்.

மாகாண அரசுகளின் ஒப்புதல் இன்றி எப்படி வரி போடுவீர்கள் என்று தட்டிக் கேட்டார். தனது எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவித்து, அதை பத்திரிகைகளிலும் அறிக்கையாக வெளியிடச் செய்தார். ஆடிப் போனது கல்கத்தாவில் இருந்த பிரிட்டிஷ் மத்திய ஆட்சி.

14 மாதங்கள் மட்டுமே அவரை பதவியில் வைத்திருந்த பிரிட்டிஷ் அரசு, உடனடியாக அவரை திரும்பப் பெறும் உத்தரவையும் பிறப்பித்தது. அவரை திருப்பி அனுப்புகிற உத்தரவை பிறப்பித்த பிரிட்டிஷ் அதிகாரி சர் சார்லஸ் திரவேல்யனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் :- நேர்மையான அதிகாரியை இந்தியா இழந்து விட்டது, இது இந்தியாவிற்கு இழப்பு, நீங்கள் செய்த செயல் மத்திய அரசையும், அதன் அதிகாரத்தையும் எதிர்த்து பொதுமக்களை புரட்சிக்கு தூண்டுவதற்கு இணையாக அமைந்து விட்டது என்று எழுதியிருந்தார்.

அதற்கு திரவேல்யன் பதில் கடிதம் ஒன்றை எழுதினார். அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. “வட இந்தியர்களை விட தென்னிந்தியர்கள் வேறுபட்டவர்கள், எங்கள் மாகாணத்திற்கு ஏற்கனவே சட்டம் இயற்றும் அதிகாரம் இருந்தது. அதைப் பறித்தவர்கள் நீங்கள் (பிரிட்டிஷ் ஆட்சி). எங்களை கேட்காமலேயே பறித்தது தவறு, எங்கள் தென்னிந்தியாவில் தான் பிரிட்டிஷ் ஆட்சி முதன்முதலாக நிறுவப்பட்டது என்பதை மறந்துவிடக் கூடாது, அதற்கு பிறகு தான் பம்பாய், கல்கத்தா உள்ளிட்ட மாகாணங்களுக்கு சென்றீர்கள், நாங்கள் பெரிய மாகாணத்திற்கு உரியவர்கள், சிறிய மாகாணங்கள் பயப்படுவதைப் போல் நாங்கள் பயப்படத் தேவையில்லை” என்று அவர் துணிச்சலாக பதிலளித்தார்.

பிறகு பதவியை தூக்கி எறிந்து விட்டு இங்கிலாந்து திரும்பும் போது சென்னை மக்கள் பெருவாரியாக திரண்டு வந்து கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர் என்று வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. இப்படிப்பட்ட ஆளுநர்களையும் சென்னை மாகாணம் சந்தித்திருக்கிறது என்பதை நினைவூட்டவே நாம் இந்த வரலாற்றுச் செய்தியை குறிப்பிடுகிறோம்.

விடுதலை இராசேந்திரன்

Pin It