sankaran nairThe Case that Shook the Empire One man’s Fight for the Truth about the Jallianwala Bagh Massacre. 

Raghu Palat and PusKa palat (2019)

BLOOMSBURY. New Delhi. London, New York. Sydney

(சென்ற இதழின் தொடர்ச்சி)

---அவையத்தார் அனைவரும் ஒருமித்த முடிவக்கு வர இயலவில்லை என்பதை அக்குழுவின் தலைவரிடம் நீதி மன்றத்தில் வினவி மக்கார்தி அறிந்து கொண்டார். நீண்டநாட்கள் நடந்த இவ்வழக்கின் விசாரணையானது தவறான முறையில் நடந்துள்ள ஒன்றாகக் குறிப்பிட அவர் விரும்பவில்லை.

அதே நேரத்தில் இவ் வழக்கில் நாயர் வெற்றி பெறுவதையும் விரும்பவில்லை. எனவே இரு தரப்பு வழக்கறிஞர்களிடமும், அவையத்தாரில் பெரும்பாலோர் கூறும், முடிவை ஏற்றுகொள்ள இசைவீர்களா என்று மக்கார்தி வினவினார்.

இருதரப்பு வழக்கறிஞர்களும் கலந்து உரையாடி மறுநாள் காலையில் தத்தம் முடிவை நீதிமன்றத்தில் நீதிபதியிடம் வெளிப்படையாக அறிவித்தனர். அவையத்தாரில் பெரும்பாலோர் எடுக்கும் முடிவை இருதரப்பினரும் ஏற்றுக் கொள்ள இசைவு தெரிவிப்பதை அவ் அறிவிப்பு வெளிப்படுத்தியது.

அவையத்தாரின் முடிவு

இதனையடுத்து அவையத்தாரின் தலைவரை நீதிபதி அழைத்தார். அவையத்தார் பன்னிருவரில் பதினொன்று பேர் ஓட்வியருக்கு ஆதரவாகவும் ஒருவர் நாயருக்கு ஆதரவாகவும் தீர்ப்பளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாயருக்கு ஆதரவாகத் தீரப்பு வழங்கியவர் இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் துணைப் பேராசிரியராக(ரீடர்) பணியாற்றிய மாண்புமிகு ஹெரால்டு லாட்ஸ்கி ஆவார். அவரது சக அவையத்தார் போன்று ஆங்கில தேசியம் சார்ந்தோ, நீதிபதியின் தூண்டுதலுக்கோ அவர் ஆட்படவில்லை. வழக்கு குறித்த தம் நிலைப்பாட்டினை அவையத்தாரிடம் அவர் முன்வைத்ததையும் அவர் நீதிமன்றத்தில் வெளிப்படையாகக் கண்டித்தார். இச்செயலானது சட்ட வரம்புக்கு உட்படாத செயல் என்றும் கூறினார்.

நீதிபதியின் தீர்ப்பு

இதன் பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஓட்வியருக்கு 500 பிரிட்டிஷ் பவுண்ட் இழப்பீடாகத் தருவதுடன் வழக்கிற்கான செலவுத் தொகையையும் நாயர் வழங்க வேண்டுமென்று தீர்ப்பில் கூறப்பட்டது. இத் தீர்ப்பின் வாயிலாக ஓட்வியரின் நற்பெயருக்கு நாயர் களங்கம் ஏற்படுத்திய குற்றத்தை செய்துள்ளார் என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

நாயர் மன்னிப்புக் கேட்டால் இழப்பீட்டையும் செலவுத் தொகையையும் ஏற்றுக்கொள்ளாமல் விட்டுவிடுவதாக ஓட்வியர் கூறினார். நாயர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.தாம் உண்மை என்று அறிந்ததை எழுதியமையால் மன்னிப்புக் கேட்க அவர் மறுத்துவிட்டார்.

இத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என்று வழக்கறிஞர் கூறியதை நாயர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் நீண்டகாலமாக வழக்கு நடத்தியமையால் இங்கிலாந்தின் நீதியமைப்பின்மீது அவர் ஏமாற்றமடைந்திருந்தார். அடுத்து ஒரு விசாரணை நடந்தால் வேறு பன்னிரு ஆங்கிலக் கடைக்காரர்கள் இதே முடிவுக்கு வருவார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார்.

உங்கள் நற்பெயர் என்னாவது என்று நாயரின் வழக்கறிஞர் கேட்டபோது அரசின் நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து என்னைக் குற்றவாளி என்று கூறினாலும் என்னுடைய நற்பெயர் எவ்விதத்திலும் பாதிப்படையாது என்று நாயர் அமைதியாக விடையளித்தார்.

வழக்கின் எதிரொலி

ஓட்வியர் தொடுத்த வழக்கில் நாயருக்கு எதிராக நீதிபதி எடுத்த ஒருதலைச் சார்பு நிலை.இடையூறுகள் என்பனவற்றையெல்லாம் கடந்து இவ்வழக்கானது இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இங்கிலாந்திலும் இந்தியாவிலும் வெளிவந்த செய்தித்தாள்களில் வழக்கின் விவரங்கள் நாள்தோறும் சொல்பிறழாது அப்படியே வெளிவந்தன.

இவற்றுள் சில ஓட்வியர் மீதான சார்பு நிலையை எடுத்தாலும் ஜாலியன் வாலாபாக்கில் டயர் நடத்திய கொடுமைகளும் இராணுவச்சட்டம் நடை முறைப்படுத்தப் பட்டமையால் மக்கள் அடைந்த இன்னல்களும் வெளிப்பட்டன. மற்றொருபக்கம் இங்கிலாந்தில் மீண்டும் ஒரு மாவீரனாக டயர் சித்தரிக்கப்பட்டான். வெற்றியாளராக ஓட்வியர் பாராட்டப்பட்டார். நீதிபதி மக்கார்தியின். நடத்தையை சில இதழ்கள் கண்டித்தன.

இங்கிலாந்தின் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்ட முறையானது இனி ஆங்கிலேயரிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது என்ற எண்ணத்தை இந்திய மக்களிடம் தோற்றுவித்தது. இது விடுதலைக்கான போராட்ட உணர்வை வலுப்படுத்தியது.

நாயர் மீது ஓட்வியர் தொடுத்த வழக்கானது பஞ்சாபில் நடந்த கொடூரங்களை உலகத்தின் ஊடகங்களுக்குக் கொண்டு சென்றது. இதனால் ஜாலியன் வாலாபாக்கில் நிகழ்ந்த கொடூரங்களை உலகோர் அறிந்தனர். மற்றொரு ஜாலியன்வாலாபாக் மீண்டும் நிகழாதவாறு. இது தடுத்தது.

ஓட்வியர் தொடுத்த வழக்கில் நாயர் தோல்வியுற்றாலும் பஞ்சாப் மக்கள் உளப்பூர்வமாக நாயரை ஆதரித்தனர். ஒரு மாவீரனாக அவரைப் போற்றினர். இன்றும் கூட அமிர்தசரசில் உள்ள பொற்கோயில் அருகிலுள்ள ஜாலியன் வாலாபாக் அருங்காட்சியத்தில் அவரைப் போற்றும் வகையில் அவர் பெயர் பொறிக்கப்பட்ட பதாகை இடம்பெற்றுள்ளது.

இருப்பினும் அவர் தலைவர் பதவி வகித்த காங்கிரஸ் இயக்கமானது அவரை ஊக்கப்படுத்தியோ அனுதாபம் தெரிவித்தோ சிறு குறிப்புகூட அனுப்பவில்லை. இவ் வழக்கில் அவர் தனியாகவே போராடினார். தாம் சரி என்று நம்பியதற்காக அவர் போராடினார்.

நீதிபதி மக்கார்தி

வழக்கு முடிவுற்றதும் தோல்வியிலும் வெற்றி பெற்றவராக நாயர் இந்தியா திரும்பினார். ஆனால் மக்கார்தி விவாதத்திற்குரிய ஒருவராக ஆனார்.

இங்கிலாந்து பாராளுமன்றத்தின் காமனஸ் சபையில், நீதிபதி மக்கார்தியை நீக்கவேண்டுமென்ற தீர்மானம் முன் மொழியப்பட்டது. ஓர் உயரிய பதவிக்குரிய கடமையை நிறைவேற்றும் தகுதியற்றவர் என்று அவர் மீது குற்றம் சாட்டினர்.

தான் வெளிப்படுத்திய கருத்துக்கள் இழிவானவையாகப் பார்க்கப்படுவது பிடிக்காமல் தாம் பதவி விலகப்போவதாக மக்கார்தி எச்சரித்தார்.. தம்மைக் குறித்துப் பிரதமர் கூறிய கருத்துக்கள் உண்மையல்ல என்று மறுத்து அறிக்கை யன்றை வெளியிடும்படி அவைத் தலைவரிடம் அவர் வேண்டியது எடுபடவில்லை.

பதவியில் இருந்து ஓய்வு பெற்றபின் மறக்கப்பட்ட மனிதராக மக்கார்தி ஆகிப்போனார்.பெண்கள் மீதான நாட்டமும் சூதாட்டத்தில் ஈடுபாடும் அவரிடம் இடம் பெற்றன. இது அவரிடம் பணமின்மையை ஏற்படுத்தி கடன்வாங்கத் தூண்டியது. இதன் தொடர்ச்சியாகக் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாது கடன் கொடுத்தவர்களின் நெருக்கடிக்கு ஆளானார்.

மனம் உடைந்த நிலையில் 1933ஆவது ஆண்டில் (?) தற்கொலை செய்து கொண்டார். லெண்டின் அந்தோனி இவரைக் குறித்து எழுதிய வாழ்க்கை வரலாற்று நூலின் அடிப்படையில் (Mr. Justice McCardie  (1869-1933): Rebel, Reformer, and Rogue Judge) இச் செய்திகளைக் குறிப்பிடும் நூலாசிரியர்கள் இலண்டன் நகரில் உள்ள “மிடில் டெம்பிள்ஹால்” என்ற இடத்தில் உள்ள ஓர் அறையில் பெயர் குறிப்பிடப்படாத நிலையில் வெண்கலத்தாலான இவரது தலைமட்டும் இடம் பெற்றுள்ளதாகவும் இதற்கு நேர் மாறாக நாயரின் ஆளுயுர ஓவியம் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் இலண்டனிலுள்ள தேசிய ஓவியக்கூடத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் பதிவுசெய்துள்ளனர்.

அடுத்து பஞ்சாப் படுகொலை நிகழ்வுகளில் முக்கியப் பங்காற்றியஜெனரல் டயர் குறித்தும் சில செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

ஜெனரல் டயர்

நாயர் மீது ஓட்வியர் தொடுத்த வழக்கின் மையப்புள்ளியாக அமைந்தது நாயர் எழுதிய நூல்தான். அந்நூல் தன் புகழுக்கும் நற்பெயருக்கும் இழுக்கேற்படுத்திவிட்டது என்பதே ஓட்வியரின் குற்றச்சாட்டாகும். ஆனால் மக்கார்தி தேவையின்றி டயரின் பெயரை உள்ளிழுத்து அவரின் பாதுகாவலராக மாறி வழக்கைத் திசை திருப்பினார்.

ஓட்வியரின் வழக்கறிஞர் கெட்டிக்காரத்தனமாக டயரின்உடல்நலக்குறைவைக் கூறி வழக்குமன்றத்திற்கு டயர் வராமல் செய்துவிட்டார். இருப்பினும் டயரின் செயல்பாடுகளே வழக்கின் விவாதப் பொருளாக இருந்தது.

இங்கிலாந்தின் பாராளுமன்றத்தாலும் போர்த் துறைக்கான செயலாளராலும் கடிந்துகொள்ளப் பட்டாலும் டயருக்கென்று ஆதரவாளர்கள் இருந்தனர். “மார்னிங் போஸ்ட்” என்ற இதழ் டயருக்காக நிதி திரட்டியது. ஆங்கிலப் பேரரசில் வாழ்ந்த மக்கள் மனமுவந்து நிதிவழங்கினர். இவ்வாறு நிதி வழங்கியோரில் இந்தியாவில் பிறந்து வளர்ந்த ரூடியட் கிப்ளிங்கும், உண்டு அவரது காலனியச் சார்பு நிலை இதன் மூலம் வெளிப்பட்டது. இறுதியாக 26,317 பவுண்ட் நன்கொடை டயருக்கு வழங்கப்பட்டது.

பிரிகேடியர் ஜெனரல் என்றறியப்பட்டிருந்த டயருக்கு அப்பதவியானது தற்காலிகமாகவே வழங்கப்பட்டிருந்தது. பிரிகேட் என்றளவிலான படைப்பிரிவின் தலைமைப் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டதும் பதவியிறக்கம் செய்யப்பட்டு. கணெல் (Colonel) பதவி வழங்கப்பட்டது.

பிரிகேடியர் ஜெனரல், பட்டத்தை மீண்டும் வழங்கும்படி அவர் வேண்டியது ஏற்றுக் கொள்ளப்படாததால் கணெல் பட்டத்துடனேயே தன் வாழ்நாளைக் கழித்தார். அவருக்கு வழங்கப்பட்ட கட்டாய ஓய்வு அவரை மனமுடையச் செய்துவிட்டது.

ஜாலியன்வாலாபாக்கில் தான் செய்த செயல்கள் சரியானதா தவறானதா என்பது குறித்து அவருக்கே அய்யப்பாடு எழுந்தது. தன் வாழ்நாளின் இறுதிக்காலத்தில் உடல்நலம் சீர் கெட்டவராகவே அவர் வாழ்ந்தார். அவருக்கு ‘தமனி பெருங்குடல் அழற்சி’ (arteriosclerosis) நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அந்நோய்க்கான ஒரே தீர்வு நல்ல ஓய்வாகும். சிறிய அளவிலான மன எழுச்சிக்கூட அவரை இதயத்தாக்குதலுக்கு ஆளாக்கிவிடும்.

கிராமப் பகுதி ஒன்றுக்கு இடம்பெயர்ந்து சென்றால் அங்கு கிட்டும் அமைதியான வாழ்க்கையால் நோய்த் துன்பத்திலிருந்து அவர் விடுபடலாம் என்று அவரது மனைவி கருதினார். ஆனால் அது நிறைவேறவில்லை. பலமுறை நிகழ்ந்த இதயத்தாக்குதலால் பக்கவாதத்திற்காளாகி பேச முடியாமல் போனார்.

அமிர்தசரசில் தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் சரியா தவறா என்ற மனப்போரட்டம் இறுதிவரை அவரிடம் நிகழ்ந்துகொண்டே இருந்தது.அவரைக் குறித்த ஒரு நூலில் (The Butcher Of Amritsar : General Reginald Dyer)  டயரின் கூற்றாகப் பின்வரும் தொடர்கள் இடம் பெற்றுள்ளன:

“அமிர்தசரசின் நிலைமை அறிந்தவர்கள் நான் செய்தது சரி என்கிறார்கள்... ஆனால் வேறு பலர் நான் செய்தது தவறு என்கிறார்கள்.நான் இறக்க விரும்புகிறேன். என்னைப் படைத்தவனிடமிருந்து நான் செய்தது சரியா தவறா என்பதை அறிந்து கொள்வேன்.’’

பலமுறை இதயத்தாக்குதலுக்கு ஆளாகி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பேச்சுத்திறன் இழந்து 1927 இல் டயர் தன்னைப் படைத்தவரைச் சந்திக்கச் சென்றுவிட்டார்.

வழக்கின் தாக்கம்

நாயர் மீது அவதூறு வழக்குத் தொடுத்து அதில் வெற்றிபெற்றதன் மூலம் ஹண்டர் விசாரணை ஆணையம் தம்மைக் குறித்துப் பதிவிட்ட எதிர்மறையான கருத்துக்களில் இருந்து விடுபட்டதாக ஓட்வியர் எண்ணினார். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை என்பது இந்நூலாசிரியர்களின் கருத்தாகவுள்ளது. செய்தித்தாள்கள் வாயிலாகப் பஞ்சாபில் உண்மையில் நடந்தது என்ன என்பதை உலகத்தார் அறிந்துகொள்ள வழக்குத் துணை நின்றது.

அத்துடன் அந்நிய ஆட்சியாளர்களிடம் நீதி கிடைக்காது என்பதை இந்தியர்களுக்கு உணர்த்தியது.வெகுமக்கள் இயக்கங்கள் பல நிகழத்தொடங்கின. சைமன் ஆணையப் புறக்கணிப்பு, சிவில் சட்ட மறுப்பு இயக்கம் என்ற இயக்கங்கள் நிகழ்ந்தன. மிதவாதிகள் இந்திய அரசியலில் காணாமல் போயினர். இந்தியர்கள் ஆங்கிலேயரை நம்புவதற்கு இனியும் தயாராய் இல்லை. இச்செய்திகளை முன் வைத்து “தோல்வியிலும் நாயர் பெரும் வெற்றியடைந்தார்” என்ற வரிகளுடன் நூல் முடிவடைகிறது.

ஓட்வியரின் மரணம்

டயரின் கொடூரச் செயல்களுக்குத் துணை நின்ற ஓட்வியருக்கு 1940 மார்ச் 13ஆம் நாள் மரணதண்டனை நிறைவேற்றப் பட்டது. இத் தண்டனை இங்கிலாந்து அரசால் வழங்கப்படவில்லை.இது குறித்து மிகச் சுருக்கமாக சில வரிகளில் நூலாசிரியர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்நிகழ்வு குறித்து அனிதா ஆனந்த் முந்நூறு பக்க அளவில் தனி நூலே எழுதியுள்ளார். இவர்.வானொலி அறிவிப்பாளர், இதழாளர், நூலாசிரியர் என்ற பணிகளில் ஈடுபட்டு வருபவர். இலண்டன் நகரில் வசித்து வரும் இவர் உலகின் பல பகுதிகளில் ஆய்வு நடத்தி இந்த நூலை எழுதியுள்ளார்.

இலண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள ஓட்வியர் வந்து மேடையில் அமர்ந்திருந்தார். அவரை ஆயிரக் கணக்கானோர் கண்முன்பாக உத்தம்சிங் என்ற பஞ்சாபி இளைஞன் குறிதவறாது சுட்டுக் கொன்றான். வண்ணார் சமூகத்தைச் சேர்ந்த இவ்விளைஞன் ஜாலியன்வாலாபாக் நிகழ்வின்போது காயமுற்றவன்.

குண்டடிபட்டு வீழ்ந்தவர்களின் குருதியில் தோய்ந்த மண்ணை ஒரு கைப்பிடியளவு எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு இக்கொடுமையை நிகழ்த்தியவர்களைப் பழிவாங்குவேன் என்று உறுதிமொழி எடுத்தவாறு வெளியேறியவன் என்று இவனை மையமாகக் கொண்டு பழமரபுக்கதை ஒன்றுண்டு.

ஜாலியன்வாலாபாக் கொடூரச் செயல் நிகழ்ந்து இருபது ஆண்டுகள் கடந்து தன் உறுதிமொழியை உத்தம்சிங் நிறைவேற்றிவிட்டான். இடைப்பட்ட இருபதாண்டுக் காலத்தில் என்ன நிகழ்ந்தது என்பதை இந்நூல் ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளது. அரிய ஒளிப்படங்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

ஓட்வியர் தொடுத்த வழக்கிற்குக் காரணமாக அமைந்த சங்கரன் நாயர் எழுதியுள்ள நூலில் காந்தியின் இஸ்லாமியச் சார்பு நிலை பதிவாகியுள்ளதாகவும் அவரது கருத்தில் தமக்கு உடன்பாடு என்றும் பதிவிட்டுள்ளார். நூலின் செய்திக்குப் பொருத்தமாகவே “பொறுமை காத்த கொலை”( The Patient Assassin) என்று தலைப்பிட்டுள்ளார்.

பின் நிகழ்வுகள்

ஆங்கில ஏகாதிபத்தியத்தின், வன்முறை பஞ்சாப் மக்களின் உள்ளத்தில் அழுத்தமாகப் பதிவாயிருந்தது.இது குறித்த நினைவுச் சின்னம் அமைக்க அறக்கட்டளை ஒன்று 1920இல் நிறுவப்பட்டது.இதன் பொருட்டு அப்பகுதியில் நிலம் வாங்கப்பட்டது. போராளிகளின் நினைவாக 1951 இல் நினைவகம் ஒன்று இதில் கட்டப்பட்டது.

அதில் விடுதலை இயக்கப் போராளிகளின் உருவம் தீட்டப்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. உத்தம் சிங்கையும் சங்கரன் நாயரையும் போற்றும் வகையில் அவர்களது உருவம் தீட்டப்பட்ட ஓவியங்களும் இவற்றுள் அடக்கம்.

ஓட்வியர், நீதிபதி மக்கார்தி போன்ற ஆங்கிலேயர்கள் ஒருபக்கம் இருக்க இங்கிலாந்தின் அரசியல் தலைவர்கள் பஞ்சாபில் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளைக் கண்டித்துள்ளர்கள். அவர்களது கூற்றுகள் வருமாறு:

கொடூரமான ஒன்று (வின்சென்ட் சரச்சில்).

ஆங்கிலேய இந்திய வரலாற்றில் துன்பம் தரும் ஒரு நிகழ்வு (1997இல் இந்திய வருகையில் இரண்டாம் எலிசபெத் ராணி).

பிரிட்டிஷ் வரலாற்றில் மிகக் கேவலமான நிகழ்வு. இங்கு நடந்ததை நாம் மறந்துவிடக் கூடாது (2013இல் இந்தியா வந்தபோது இங்கிலாந்துப் பிரதமர் டேவிட். காமரூன்).

இவற்றைக் குறிப்பிடும் நூலாசிரியர்கள் இந்திய மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று டேவிட் காமருன் கருதாதது வருத்தமே என்று குறிப்பிட்டுள்ளனர்.

- ஆ.சிவசுப்பிரமணியன்

Pin It