காந்தியின் 150 ஆவது பிறந்த தினம் நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காந்தியைக் கொன்றவர்கள் கூட அவரது பிறந்த தினத்தைக் கொண்டாட வேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலையை காந்தி இந்தியாவில் ஏற்படுத்தி இருக்கின்றார். காந்தியின் அரசியல் குறித்த மாற்றுக்கருத்து கொண்டவர்கள் கூட இன்றைய தினத்துக்கு காந்தியின் அகிம்சை நிச்சயம் தேவைப்படுகின்றது என்கின்றார்கள். இன்னும் சில படித்த அறிவுஜீவிகள் அவரின் கல்விக் கொள்கை, நவீன அறிவியல் பற்றிய கருத்துக்கள் போன்றவற்றை மெச்சி அவருக்குள் ஒரு தீர்க்கதரிசியை கண்டுபிடித்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஆன்மீகத்துக்கும், அறிவியலுக்கும் வித்தியாசம் தெரியாமல் இரண்டையும் ஒன்று போலவே பாவிக்கும் இந்திய மனங்களில் காந்தி ஒரு பெரும் கோட்டையாய் எழுந்து நிற்கின்றார். அவர்கள் ஒரு போதும் காந்தியை முழுமையாகப் படித்தவர்கள் கிடையாது. அவரை அம்பலப்படுத்தும் எந்தக் கருத்துக்கும் காது கொடுக்காதவர்கள். காந்தி ஒரு புனித பிம்பமாக கட்டமைக்கப்பட்டுவிட்டார். அதை மீறுவது என்பது காந்திக்கு செய்யும் துரோகம் என்பதைத் தாண்டி நாட்டுக்கு செய்யும் துரோகம் என்பதாக மாறிவிடும் என அச்சப்படுகின்றார்கள். ஆனால் அவர்கள் அச்சப்படுவதால் உண்மை, உண்மையில்லை என்று ஆகிவிடாது. நாம் கண்டு கொள்ளவில்லை என்றாலும், உண்மைகள் எப்பொழுதும் நம் மீது பாய்வதற்குத் தயாராகவே இருக்கும்.
1899 ஆம் ஆண்டு போயர் போர் மூண்டபோது பிரிட்டிஷ்காரர்களுக்கு ஆதரவாகக் காந்தி அதில் பங்கேற்றார். ஆயிரத்து நூறு இந்தியர்களைக் கொண்ட ஆம்புலன்ஸ் படையை உருவாக்கி அதற்குத் தலைமை தாங்கினார். அதே போல முதல் உலகப்போர் உக்கிரமாக நடந்துகொண்டு இருந்தபோது தென் ஆப்பிரிக்காவில் இருந்த காந்தி இந்தியாவுக்கான அரசுச் செயலரின் ஒப்புதலுடன் ஏகாதிபத்தியப் போரில் பணிபுரிய நூறு இந்தியர்களைக் கொண்ட ஆம்புலன்ஸ் படை ஒன்றை உருவாக்கினார். இதற்காக அவர் பயிற்சியும் எடுத்திருந்தார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட நுரையீரல் அழற்சியால் அந்தப் பணியில் சிறப்பாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. 1915 ஆம் ஆண்டு ஜனவரில் அரசு உதவிச் செயலர் வற்புறுத்தியதால் இந்தியாவுக்கு அதே ஆண்டு ஜனவரி 9 ஆம் நாள் திரும்பினார். அரசப் பிரதிநிதியான ஹாட்டிஞ் பிரபு காந்தியிடம் “வெளிநாட்டில் நீங்கள் ஆற்ற முடிந்த எதனைவிடவும் அதிகமான சேவையை அந்த நெருக்கடியான நேரத்தில் இந்தியாவில் இருப்பதன் மூலம் நீங்கள் ஆற்ற முடியும்” என்ற நம்பிக்கையை காந்திக்கு அளித்தார். அதன்படி பம்பாய் ஆளுநரிடம் தன் விருப்பத்தை முன்மொழிந்தார் காந்தி. ஏப்ரல் 30 அன்று அரசப் பிரதிநிதியின் தனிச்செயலருக்கு அவர் எழுதிய கடிதத்தில் “நான் உங்களுக்கு ஆள்சேர்க்கும் தலைமை முகவராக இருந்திருந்தால் உங்களிடம் ஆட்களைக் கொண்டுவந்து குவித்திருப்பேன்” என்றார்.
1918 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 அன்று அரசப் பிரதிநிதிக்கு பின்வருமாறு எழுதினார் “தாங்கள் செல்லும் பாதையிலிருந்து எம்மக்களை மாற்ற என்னால் முடிந்தால் போர் கவிந்து கொண்டிருக்கும் இக்கட்டத்தில் காங்கிரஸ் தன் தீர்மானங்கள் அனைத்தையும் திரும்பப் பெறுமாறும், தன்னாட்சி என்றோ, பொறுப்புடைய அரசாங்கம் என்றோ கேட்டுத் தொல்லை செய்யாதிருக்குமாறும் செய்வேன். பேரரசுக்கு நெருக்கடி சூழ்ந்துள்ள இந்த நேரத்தில் திடகாத்திரமான இந்தியர்கள் அனைவரையும் தியாகம் செய்ய முன்வருமாறு செய்வேன்” என்றார். காந்திக்கும் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கும் இப்படியாக ஒரு நெருக்கமான புனித உறவு எப்போதுமே இருந்து வந்தது. இந்த உறவை காந்தியே வழிய போய் ஏற்படுத்திக் கொண்டார். அதுவே அவரின் இயல்பாகவும் இருந்தது.
இப்படி தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர்களுக்கு ஆதரவாக சத்திய சோதனை செய்து கொண்டிருந்த காந்தியை தாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நபர் அவர்தான் என இந்திய பெருமுதலாளிகள் வர்க்கம் கண்டுகொண்டது. இந்தியத் தொழிற்துறையின் பெரும்புள்ளிகளும் ஐதராபாத் நிஜாமைப் போன்ற நிலக்கிழார்களும் காந்திக்கு பெரும் நிதியை அளித்தனர். காந்தியின் புரவலர்களில் பலரும் குஜராத்தி மற்றும் மார்வாடி சேட்டுகளாக இருந்தனர். அவர்களில் முதன்மையானவர்கள் அம்பாலால் சாராபாய், ஜம்னாலால் பஜாஜ், ஜி.டி.பிர்லா ஆகியோர் ஆவார். இந்தப் பணத்தின் மூலம்தான் காந்தி தன்னுடைய அரசியல் - சமுதாய - அற - ஆன்மீக நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொண்டார்.
செல்வந்தார்கள் காந்தியின் மீது கொண்டிருந்த பற்றுக்கு ஈடாக செல்வந்தர்கள் மீது காந்திக்கு பற்று இருந்தது. 1931 ஆம் ஆண்டு மார்ச் 22 நவஜீவன் (குஜராத்தி) ஏட்டில் ‘அரசர்களும் ஆண்டிகளும்’ என்ற தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் காந்தி “ ...செல்வந்தர்கள் மேல் வன்மம் வைக்காமல் இருப்பதுதான் ஏழைகளின் தர்மமாகும். தம் வறுமைக்குப் பெரிதும் காரணம் தம் சொந்தக் குற்றமே, தம் சொந்தத் தவறுகளே என்பதை ஏழைகள் உணர்ந்துகொள்ள வேண்டும்” என்றார். இதைவிட அப்பட்டமாக முதலாளிகள் மீதான தனது விசுவாசத்தை அன்று இந்திய அரசியலில் யாரும் வெளிப்படையாக சொன்னதாகத் தெரியவில்லை.
1931 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று லண்டனில் கூடிய வட்ட மேசை மாநாட்டின் கூட்டாட்சி வடிவமைப்புக் குழுவில் காங்கிரசின் ஒரே பிரதிநிதியாகக் கலந்துகொண்டு பேசிய காந்தி 'காமன்வெல்த்தில்...ஒரு குடிமகனாக இருக்க” தான் விரும்பியதாகவும், இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் “ஒரு பிரிக்க முடியாத பங்காளி உறவை” தான் விரும்பியதாகவும் சொன்னார். நட்புக்கே தான் ஏங்குவதாகவும் “அடிமை உடைமையாளனையும் கொடுங்கோலனையும் தூக்கியெறிவது என் வேலை அல்ல” என்றும், “இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிணைப்பை உடைக்க நான் விரும்பவில்லை” என்றும் மாநாட்டின் முழுநிறைவுக் கூட்டத்தில் உறுதியளித்தார்.
அதே போல பிரிட்டிஷ் இதழாளரும் பின்னர் புது தில்லியில் உள்ள அயல்நாட்டு அலுவலகத் துறையில் சேர்த்துக் கொள்ளப்பட்டவருமான கை வின்ட் என்பவருக்கு 1939 ஆம் ஆண்டு, ஏப்ரல் அன்று அளித்த பேட்டியில் “நாம் முற்றிலும் சுதந்திரமான ஒரு தேசமாக - கிணற்றுத் தவளைகளாக- ஆக முடியாது. எனவேதான் நான் உலக நட்பு என்ற கதகதப்பையே விரும்புகிறேன். எனவே நாம் சமமான விதிமுறைகளின் அடிப்படையில் பங்காளிகளாக ஆக முடியும் என்றால் இந்திய-பிரிட்டிஷ் பங்காளி உறவு நிரந்தரமாக இருப்பதையே நான் விரும்புகிறேன்.” என்றார். இந்திய சுதந்திரத்தின் மீதான ஆழமான பற்றுகொண்ட தேசப்பிதாவின் வார்த்தைகள் தான் இவைகள்.
1919 ரவுலட் சத்தியாகிரகம் , 1920-22 ஒத்துழையாமை இயக்கம், 1930-1931 சட்ட மறுப்பு இயக்கம் ஆகியவற்றின் முதன்மை நோக்கம் காந்தி அஞ்சிய வெகுமக்களின் ஏகாதிபத்திய, நிலக்கிழமை எதிர்ப்புப் போராட்டங்களை முன் உணர்ந்து தடுப்பதும், போராட்ட சக்திகளை மடை மாற்றுவதுமாகவே இருந்தது. இதன் மூலம் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை மழுங்கடித்ததுடன் தன்னுடைய போராட்டங்கள் மூலம் உள்நாட்டுச் சுரண்டல் வர்க்கங்களுக்கு சில சலுகைகளையும் பெற்றுக் கொடுத்தார் காந்தி. ஒவ்வொரு இயக்கத்தைத் தொடுப்பதற்கும் முன் அவர் தெளிவாக்கியதைப் போல “நாய் வாலை ஆட்டவில்லை, வால்தான் நாயை ஆட்டியது” அவரது போராட்டங்கள் ஒரு சேப்டி வால்வாகவே பயன்பட்டன. மேலும் காங்கிரஸ் தலைமை வகுத்த வரம்புகளை எப்பொழுதெல்லாம் இயக்கங்கள் மீறி ஆட்சியாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் தரும் வகையில் பதற்றத்தை விளைவித்தனவோ, அப்போதெல்லாம் அவை சட்டென திரும்பப் பெறப்பட்டன. அதன் விளைவாக தார்மீகச் சீரழிவும் சகோதரப் படுகொலைகளும் நடைபெற்றன.
மேலும் காந்தி கடைபிடித்த அகிம்சை என்பது பெரும் அபத்தமான கோட்பாடகவே அவரளவில் இருந்தது. “இம்சையை நேருக்கு நேர் எதிர்கொள்வதில்தான் உண்மையான அகிம்சை அடங்கியிருக்கிறது. பசுக்களுக்கு நுண்ணறிவைத் தர முடிந்தால், அத்தகைய பசுக்கள் போதிய எண்ணிக்கையில் புலியின் கைக்குள் அகப்படும்படிச் செய்தால் பசு இறைச்சியை உண்பதில் புலி ஆர்வம் இழந்துவிடும்; தன் இயல்பை மாற்றிக்கொண்டுவிடும்.” என்றார். மேலும்
“போல்ஷ்விசம் என்றால் என்ன என்பதை இன்னமும் நான் அறியாதவனாகவே இருக்கிறேன்… ஆனால் அது வன்முறையையும் கடவுள் மறுப்பையும் அடிப்படையாகக் கொண்டது என்றளவில் அது பற்றி எனக்குத் தெரியும். அது எனக்கு வெறுப்பூட்டுவதாகவே உள்ளது என்பதை நான் அறிந்தே இருக்கிறேன்… உயர்ந்த நோக்கங்களுக்கு உதவுவதற்காகக்கூட வன்முறை வழிகளை ஏற்கமுடியாத அளவுக்கு அவற்றுக்குச் சமரசமற்ற எதிரி நான்.”
“அகிம்சை வழி ஒத்துழையாமையின் நிலைப்பாட்டிலிருந்து பார்த்தால் அது (பிரிட்டிஷ் பண்டங்களைப் புறக்கணிப்பது என்பது) முற்றிலும் நியாயப்படுத்த முடியாததாகவே எனக்குத் தோன்றுகிறது. அது பழிவாங்கும் ஒரு நடவடிக்கையே; அந்த வகையில் அது தண்டனை நடவடிக்கையும் கூட.” என்றார்.
1938 ஆம் ஆண்டு டிசம்பரில் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் மதப் பரப்புநர்களின் ஒரு குழுவின் முன் காந்தி பின்வருமாறு வருத்தம் தெரிவித்தார்: “தன் அகிம்சையைச் சோதிப்பதற்கான தருணம் வந்த போது அந்தச் சோதனையின் அடிப்படையில் சீனா தோற்றது. அதன் நிலைப்பாட்டை அகிம்சையின் அடிப்படையில் ஆராயும் போது, நானூறு மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாடு – ஜப்பானுக்கு இணையான பண்பாட்டைக் கொண்ட நாடு - ஜப்பானின் ஆக்கிரமிப்பை முறியடிக்க ஜப்பானின் முறைகளையே நாடுவது பொருத்தமில்லை என்பதை நான் சொல்லியாக வேண்டும். சீனர்கள் ஜப்பானிடம் 'உங்கள் (அழிப்பு) யந்திரத்தைக் கொண்டுவாருங்கள்; எம் மக்களில் பாதிப்பேரை அதற்குப் பலி தருகிறோம்; ஆனால் மீதமிருக்கும் இருநூறு மில்லியன் பேர்கள் உங்களுக்கு மண்டியிட மாட்டார்கள்’ என்று சொல்லியிருக்க வேண்டும். சீனர்கள் அப்படிச் செய்திருந்தால் ஜப்பான் சீனர்களுக்கு அடிமையாகி இருக்கும்" என்று உபதேசித்தார். ஆனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், உள்நாட்டுச் சுரண்டல் வர்க்கங்கள் ஆகியவற்றின் நலன்களுக்கு அச்சுறுத்தல் எழுந்த நேரங்களில் அவர்களின் நலன்களைக் காப்பதற்காக வன்முறை கையாளப்பட்ட போது அவ்விசயத்தில் ஒரு போதும் அவர் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை; வன்முறைக்கு ஆதரவாகத் தன் அகிம்சை நெறியை மறுத்தொதுக்க ஒரு போதும் தயங்கவில்லை.
1930 அம் ஆண்டு, ஏப்ரல் மாதம் பெசாவரில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஆயுதம் ஏதுமின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரைச் சுடமறுத்தனர் கார்வாலி வீரர்கள்; அதன் விளைவாக இராணுவ நீதிமன்ற விசாரணைக்குள்ளானார்கள். தூக்குத் தண்டனை, ஆயுள்தண்டனை, நிரந்தரமாக நாடு கடத்தப்பட்டது போன்ற தண்டனைகளை அவர்களுக்கு விதிக்கப்பட்டன. ஆனால் அவர்களின் விடுதலையை வலியுறுத்தி ஃபென்னர் பிராக்வே அனுப்பிவைத்த அறிக்கையில் கையெழுத்திட காந்தி மறுத்துவிட்டார். இது பற்றி பிரஞ்சு இதழாளரிடம் “சுடு என்னும் உத்திரவுக்குக் கீழ்படியாத போர்வீரன் தான் எடுத்திருக்கிற உறுதிமொழியை மீறுகிறான். கீழ்ப்படியாமை எனும் குற்றத்தை இழைத்தவன் ஆகிறான். அதிகாரிகளையும் படைவீரர்களையும் பணிய வேண்டாம் என்று கேட்டுகொள்ள என்னால் முடியாது. ஏனெனில் நான் அதிகாரத்தில் இருக்கும்போது எப்படியும் இதே அதிகாரிகளையும் படைவீரர்களையுமே நான் பயன்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கும்.” என்றார்.
பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு 1931 மார்ச் 23 அன்று தூக்கிலிடப்பட்டார்கள். ஆனால் காந்தி இவர்களை விடுவிக்க எந்தவித முயற்சியுமே மேற்கொள்ளவில்லை. காரணம் அன்று பகத்சிங்கின் பெயர் காந்திக்கு இணையான புகழுடன் விளங்கியது. பகத்சிங்குக்குத் தண்டனை குறைப்பு எதுவும் கிடைத்துவிடக் கூடாது என்பதில் காந்திக்கும் இர்வினுக்கும் இடையில் ஒத்த புரிதல் இருந்தது. காந்தி “தண்டனை குறைப்பிற்காக வாதிடவில்லை... ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தண்டனையைத் தள்ளிவைக்கும்படி கேட்கவே செய்தார்” என்று எழுதினார் இர்வின். ஆனால் இன்றும் கூட சில பொய்யர்கள் காந்தி இவர்களின் விடுதலைக்கு பாடுபட்டார் என கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பேசியும், எழுதியும் வருகின்றார்கள்.
இரண்டாம் உலகப் போர் மூண்டபோது பிரிட்டனின் போர் முயற்சிகளுக்கு காங்கிரஸ் நிபந்தனையற்ற ஒத்துழைப்பு தர வேண்டுமென்று காந்தி விரும்பினார். 1944 ஆம் ஆண்டு ஜூலையில் நியூஸ்க்ரானிக்கிள் (லண்டன்)ஐச் சேர்ந்த ஸ்ட்டுவர்ட் ஜெல்டருக்கு அளித்த பேட்டியில் “நேசநாடுகளின் போர் முயற்சியைத் தடுப்பதல்ல, அதற்கு உதவுவதே" தன் நோக்கம் என அவர் சுட்டிக்காட்டினார்; அதே கையோடு ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கெடுத்தவர்களின் அழிவு வேலையையும் பிற தலைமறைவு நடவடிக்கைகளையும் “அவை எல்லாம் வன்முறை…" என்றும் சொல்லி கண்டனம் செய்தார்.
கல்கத்தா முதல் நவகாளி வரை வகுப்புவாதக் கலவரங்கள் பரவியபோது காந்தி நவகாளிக்கு ஓர் அமைதிப் பயணம் சென்றார். காந்தியின் இந்தப் பயணம் பற்றி காந்தியவாதியும் நவகாளியில் காந்தி தங்கி இருந்தபோது அவரின் செயலராக இருந்தவருமான பேராசிரியர் நிர்மல் குமார் போஸ் கூறும்போது “எனவே உண்மையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றியோ, பொருள் சேதத்தின் மொத்த அளவு பற்றியோ அவருடைய (காந்தியுடைய) அக்கறை அதிகம் இருக்கவில்லை; மாறாக அந்த நடவடிக்கையின் பின்னணியில் செயல்பட்டுக் கொண்டிருந்த அரசியல் உள்நோக்கங்களையும் அவற்றை வெற்றிகரமாக முறியடிக்கும் வழிகளையும் காண்பதிலேயே அதிகமும் இருந்தது.”
காந்தியின் சிந்தனைகள் முரண்பாடுகளின் குவியலாகவே எப்பொழுதும் இருந்தது. அவரது அனைத்து நடவடிக்கைகளும் சந்தர்பவாதமாகவே இருந்தன. அவர் இரண்டு வகையான வழிமுறைகளை கடைபிடித்து வந்தார். அது வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கும், இந்திய பெரு முதலாளிகளுக்கும் ஒன்றாகவும் கோடான கோடி சாமானிய இந்திய மக்களுக்கும் வேறு ஒன்றாகவுமே இருந்தன. அவரது அகிம்சை கோட்பாடு அருவருப்பு நிறைந்த சுய அழித்தலை, அதுவும் ஒடுக்கப்படும் மக்களின் சுய அழித்தலையே கோரி நின்றது. அது ஒருபோதும் வெள்ளை ஏகாதிபத்தியத்தையும், இந்தியப் பெரு முதலாளிகள், நிலக்கிழார்கள் போன்றோரிடம் சுய அழித்தலை கோரி நிற்கவில்லை. காரணம் காந்தியம் என்ற கோட்பாடே இதன் மீதுதான் கட்டமைக்கப்பட்டிருந்தது.
இந்திய சமூகத்தில் மிக ஆழமாக வேறுன்றி இருந்த சாதிய, மதவாத, பிற்போக்கு சிந்தனைகளை காந்தி மிகத் திறமையாக பயன்படுத்திக்கொண்டார், அதை ஊக்குவிக்கவும் செய்தார். அவரது ராமராஜ்ஜிய கருத்து எப்படி இந்துத்துவத்திற்கு உரமாக இன்று பயன்படுகின்றதோ, அதே போல தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான அவரது ‘அரிஜனங்கள்’ கருத்தும் இன்று சமூகத்தில் மேலாதிக்கம் செய்துகொண்டு இருக்கின்றது. பாவ்நகரில் 1925 ஜனவரி 8 ஆம் தேதி நடைபெற்ற கத்தியவார் அரசியல் மாநாட்டில் காந்தி “நான் ஏதாவது பதவிக்கு விழைகிறேன் என்றால் அது பங்கியின் பதவிக்குத்தான். அழுக்குகளை சுத்தப்படுத்துவது ஒரு புனிதமான பணி. அதை ஒரு பிராமணரும் செய்யலாம், பங்கியும் செய்யலாம். முன்னவர் அதன் புனிதம் குறித்த ஞானத்துடன் அதைச் செய்கிறார். பின்னவர் அது இல்லாமல். நான் அவர்களிருவரையுமே மதிக்கிறேன். கெளரவம் தருகிறேன். இவர்கள் இருவரில் ஒருவர் இல்லாவிட்டாலும் இந்துமதம் நிச்சயமாக அழிந்துபோகும் நிலை உருவாகும். நான் சேவையின் பாதையை விரும்புகிறேன்; அதனால் நான் பங்கியை விரும்புகிறேன். என் உணவை அவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் உங்களை அவர்களுடன் பகிர்ந்து ஒன்றாக உண்ணவோ, அவர்களுடன் கலப்புத் திருமணம் செய்துகொள்ளவோ நான் கேட்கவில்லை. நான் எப்படி அப்படி அறிவுறுத்த முடியும்?" என்றார்.
சாதி, தீண்டாமை பற்றிய காந்தியின் முழுமையான சிந்தனையை வெளிப்படுத்தும் வரிகள் இவை. இதே கருத்தைத்தான் சங்பரிவாரமும் இன்று சொல்கின்றது. பார்ப்பனர்கள் அவர்களின் வேலையை பார்க்கட்டும், மலம் அள்ளுபவர்கள் அவர்களின் வேலையைப் பார்க்கட்டும். இரண்டுமே புனிதமானவைதான். அதனால் இரண்டு புனிதங்களும் நிரந்தரமாக பாதுகாக்கப்பட வேண்டியவை. இதில் ஏதாவது ஒரு புனிதம் மீறப்பட்டால் அது இந்து மதத்தை அழிவில் கொண்டுபோய் நிறுத்திவிடும். மேலும் காந்தியால் தாழ்த்தப்பட்டவர்களின் வீட்டில் மேல் சாதி இந்துக்கள் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்றோ, அவர்களுடன் சாதி மறுப்புத் திருமணங்கள் செய்துகொள்ள வேண்டும் என்றோ அவரால் உறுதியாக சொல்ல முடியவில்லை. காரணம் காந்தியின் சிந்தனையில் உருக்கொண்ட ராமராஜ்யத்தில் அவை எல்லாம் தடை செய்யப்பட்டவை.
இன்று யாரெல்லாம் பார்ப்பனியத்தையும், முதலாளித்துவத்தையும் தூக்கிப் பிடிக்கின்றார்களோ அவர்கள்தான் திட்டமிட்டு இல்லாத காந்தியின் சிந்தனைகளை தூக்கிப் பிடிக்கின்றார்கள். அவர்களின் நோக்கம் பார்ப்பனியத்துக்கும், முதலாளித்துவத்திற்கும் எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதுதான். அவர்கள் கம்யூனிசத்துக்கு மாற்றாக வெற்றுக் கோட்பாடான காந்தியத்தை முன்னிறுத்துகின்றார்கள். ஆளும் வர்க்கத்தின் உதவியுடன் இது திட்டமிட்டு பரப்பப்படுகின்றது. இன்று நாட்டு மக்களின் விடுதலைக்குத் தேவை கம்யூனிசமே தவிர காந்தியம் அல்ல. அது மட்டும்தான் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வை தன்னகத்தே கொண்டிருக்கின்றது.
உதவிய நூல்கள்
1) இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் தொகுதி 1- சுனிதி குமார் கோஷ்
2) இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் தொகுதி 2- சுனிதி குமார் கோஷ்
3) காங்கிரஸ் மகாசபை சரித்திரம்- பட்டாபி சீதாராமய்யா
4) டாக்டரும் புனிதரும் அறிமுகம்-அருந்ததி ராய்
5) அதிகார மாற்றம் உண்மையா …….. சடங்கா? - சுனிதி குமார் கோஷ்
- செ.கார்கி