காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பலியான ராணுவ வீரர்கள் எண்ணிக்கை 45ஆக உயர்ந்திருக்கிறது. தற்கொலைப் படையாகச் செயல்பட்ட 'ஆதில்' என்கிற அவரையும் சேர்த்தால் மொத்தம் 46 உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இதுபோக, படுகாயமேற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்கள் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு. கெடுவாய்ப்பாக, அவர்களில் சிலர் மரண எண்ணிக்கையை, பலி எண்ணிக்கையை உயர்த்திவிடக் கூடாது என்கிற பதைபதைப்போடு இதை எழுதுகிறோம்.

AgapPuram 5எப்படி நடந்தது இது என்கிற விவரணைக்கோ, பாதுகாப்பில் என்ன என்ன குறைபாடுகள் இருந்தது என்கிற தொழில் நுட்ப விடயங்களுக்கோ, உளவுத் துறை என்ன செய்தது என்கிற கேள்வியெழுப்புதல்களிலோ இந்த வார அகப்புறம் அலசவில்லை. மாறாக, ஏன் இது நடைபெறுகிறது, இதன் காரணம் என்ன, இதன் உள் அரசியல் என்ன என்பது குறித்துதான் இவ்வார அகப் புறம் பேசுகிறது.

இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல்களும், பலிகளும், இதுவே முதல் முறை அல்ல. மாறாக, இதுபோன்று பலமுறை நடந்திருக்கிறது.

பொதுவாகவே மனித குலம் என்பது புற அழிவுகளிலிருந்தும், மனிதத் தவறுகளிலிருந்தும், பாடங்கற்றுக் கொண்டு மீண்டும் அத்தகையதொரு அழிவு நடைபெறாவண்ணம் தன்னைத் திருத்திக் கொள்வது, மாற்றிக் கொள்வது, அதற்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்வது, வடிவமைத்துக் கொள்வது என்பதாகத்தான் இருக்கும். ஆனால், இதுபோன்று பலமுறை, பலப்பல முறை நடந்தேறிவிட்ட பின்பும், அழிவுகளால் பாதிக்கப்பட்ட போதும், ஏன் மாற்றாமல், மாற்றிடாமல், தீர்வு காணாமல், காணப்படாமல், இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது? பலிகளும், வலிகளும், இழப்புகளும் ஏன் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது?

காரணம். அதிகார அரசியல். ஆதிக்க அரசியல். அதற்குப் பலியாவதென்னவோ, இழப்புக்கு ஆளாவது என்னமோ ஏதுமறியாத சாதாரணக் குடிகள்தான்.

நமது அறிவுப் பேராசான் திருவள்ளுவன் சொல்வானே, 'நோய் நாடி... நோய் முதல் நாடி...' என்பது போல, நோயின் மூலத்தை அகற்றாமல், அதன் விளைவுளுக்கு மட்டுமே நிவாரணங்கள் அளித்துக் கொண்டிருந்தால் எப்படிக் கிடைக்கும் தீர்வு?

நோயின் மூலம் காஷ்மீரித் தேசிய இன விடுதலையில் இருக்கிறது. இது பயங்கரவாதப் பிரச்சனை அல்ல, காஷ்மீரத்து மக்களின் அரசியல் பிரச்சனை. இதனைத் தீர்க்காமல், தீர்க்க வழிவகை செய்யாமல், வேர்ச் சிகிச்சை செய்யாமல், புண்ணுக்குப் புனுகு தடவும் வேலையைச் செய்து கொண்டிருந்தால் எப்படித் தீரும் பிணி?

உலக வரைபடத்தில் இந்தியா என்று அழைக்கப்படுகிறதொரு துணைக் கண்டத்தில், பல்தேசிய இனக் கூட்டமைப்பு ஒன்றியமான இந்திய ஒன்றியத்தில், இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு, கூட்டாக வாழ்ந்து வருகிற நாம்... இந்த இந்தியா என்கிற கட்டமைப்பின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும்.

புவிக் கோளத்தின் நிலவரைவியலின்படி இப் புவிக் கோளம் ஐந்து கண்டங்களாகப் பிரிக்கப்பட்டது. அந்த ஐந்து கண்டங்களுள் ஒன்றான ஆசியாக் கண்டத்தில், தெற்கே இந்தியப் பெருங்கடலும், மேற்கே அரபிக்கடலும், கிழக்கே வங்காள விரிகுடா என முப்புறமும் கடலால் சூழப்பட்டு, வடக்கே பூட்டான், மக்கள் சீனம், நேபாளம் என நிலப்பரப்பைக் கொண்ட துணைக் கண்டப் பகுதிகளில் கி.பி 01.12.1600 அன்று உருவாக்கப்பட்ட ஆங்கிலேயரின் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பெனி, இந்திய அரசர்களிடம் தாங்கள் வாணிகம் செய்ய உரிமை வாங்கிக்கொண்டு, கடற்கரை ஓரமாகத் தங்களது வர்த்தகக் குடியேற்றங்களை ஏற்படுத்திக் கொண்டனர்.

கி.பி. 1612 இல் முதன் முதலாக சூரத்திலும், 1616ல் மசூலிப்பட்டிணத்திலும், 1633ல் அரிகர்பூரிலும், 1640ல் சென்னையிலும், 1669ல் பம்பாயிலும், 1686ல் கல்கத்தாவிலும் தங்கள் வர்த்தகக் குடியேற்றங்களை நிறுவினர்.

வர்த்தகம் செய்ய வந்தவர்கள் இங்கிருந்த வளமான நிலத்தையும், நன்கு உழைக்கக் கூடிய மக்களையும், சாதி, மதம் என்று பல்நூறு கூறுகளாகப் பிரிந்திருந்ததையும் கண்டவுடன் அவர்களுக்கு நாடு பிடிக்கும் ஆசை வந்தது. ஆதிக்கம் செலுத்தும் ஆசை வந்தது. செல்வ வளங்களைக் கொள்ளையடிக்கும் ஆசை வந்தது.

வெறுமனே செல்வ வளங்களைக் கொள்ளையடித்துச் செல்வது இயலாது என்பதனால், இந்த மண்ணில் தங்களது அரசை நிறுவிக் கொண்டு, அதன் மூலம் செல்வ வளங்களைத் தன் நாட்டிற்குக் கொண்டுபோக இயலும் என்பதற்காக முதற்கட்டமாக ஒரு கடற்படையை வைத்துக் கொள்ளவும், அந்தக் கடற்படைக்குத் தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்ளவும் பிரிட்டிஷ் ராணியிடம் உரிமை பெற்றார்கள்.

அதைத் தொடர்ந்து ஒரு நூற்றாண்டில், படிப்படியாக ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பல்வேறு பகுதிகளையும் ஒன்றாக இணைத்து, பல மொழி பேசுகிற பல்வேறு தேசிய இனங்களை, அவர்களின் தேசங்களை துப்பாக்கி முனையில் மிரட்டி, தங்களின் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்து, தங்கள் நிர்வாக வசதிக்குத் தக்கவாறு ஒரே நாடாக கற்பித்து, ‘இந்தியா’ என்று அதற்கொரு பெயரையும் கொடுத்து, 1947 வரை ஆண்டார்கள். இப்படியாக ஆங்கிலேயர்களால் அவர்கள் நிர்வாக வசதிக்கு ஏற்ப ஒருங்கிணைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட நாடுதான் ‘இந்தியா’.

ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன், இப்போது இருக்கும் இந்தியா என்கிற நாடு இருந்ததா என்ற கேள்விக்கு, இல்லை என்பதே நம் எல்லோருக்கும் தெரிந்த பதில்.

வட இந்தியாவை எடுத்துக் கொண்டால், அதன் 1800 ஆண்டு வரலாற்றில், ஒரே பகுதியாக இருந்ததாக வரலாறு கிடையாது. மவுரியர், கனிஷ்கர், குப்தர், ஹர்ஷவர்த்தனர், சுல்தான்கள் என பலரும் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர்.

தனித்தனி நிலப் பகுதிகளில் தனித்தனி ஆட்சிகளே நடந்தன. ஒரே குடையின் கீழ் பெரும் நிலப்பகுதி கொண்டு வரப்பட்டபோது கூட தன்னாட்சிகளை அழித்து விடவில்லை.

மராத்தியை மய்யமாகக் கொண்ட மத்திய இந்தியப் பகுதி தக்காணப் பிரதேசம் என்று அழைக்கப்படுவதாகும். இங்கும் தனித்தனிப் பிரதேசங்களும் தனித்தனி ஆட்சிகளுமே நடந்திருக்கின்றன. மராத்தி, ஒரிசா, கன்னடம் மற்றும் ஆந்திரப் பகுதிகளைக் கொண்ட தக்காணப் பிரதேசத்தில் சாதவாகனர் என்ற ஆந்திரர்கள், சாளுக்கியர், ராஷ்டிரகூடர், கங்கர், கடம்பர் என்று பல்வேறு வம்சத்தினரின் ஆட்சிகள் தனித்தனிப் பகுதிகளில் நடந்தன.

தென்னிந்தியா என்பது இன்றிருப்பது போலத் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் என்று தனித் தனி மாநிலங்களாக அன்று இல்லை. மாறாக, இவையனைத்தும் ஒன்றாக ஒரே பிரதேசமாக இருந்தது.

வாணிபம் செய்வதற்காக இந்தியத் துணைக் கண்டத்தில் வந்து இறங்கிய கிழக்கிந்திய வணிகக் கம்பெனியாரின் ஒரு பிரிவு, சென்னப்ப நாயக்கன் பட்டிணத்தை 1639ல் விசய நகரப் பேரரசிடமிருந்து குத்தகைக்கு எடுத்து, 1640ல் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டியது. பின்னர் கொஞ்ச நாட்களிலேயே அந்த புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து தனது ஆதிக்கத்தைத் துவக்கியது கிழக்கிந்தியக் கம்பெனி.

ஏற்கெனவே இங்கு தமிழகத்தின் பல பகுதிகளைத் தம் வசம் வைத்திருந்த மொகலாய அரசர்களுக்கும், ஆங்கிலேயக் கம்பெனியாருக்கும் இடையில் நிகழ்ந்த ஆதிக்கப் போட்டி மற்றும் போர்களால், இம் மண்ணில் நிகழ்ந்த ஆற்காட்டுப் போர்களும், தெற்கே ஆண்டு கொண்டிருந்த பாளையப்பட்டுக்களை வென்று கைப்பற்றிய தென்பகுதிகளையும், இதே வேளையில் தற்போது புதுச்சேரி என்றழைக்கப்படும் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலூன்றிய பிரெஞ்சுக்காரர்களோடு தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருந்த மோதல் போக்குகளும் என கொஞ்சங் கொஞ்சமாய்த் தமிழகத்தை படிப்படியாக ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து, கிழக்கிந்திய வாணிபக் குழுமத்தின் சென்னை ஆளுநருக்குக் கட்டுப்பட்டதாக ஆக்கினார்கள்.

இதேபோல கல்கத்தா, பம்பாய் ஆகிய பகுதிகளிலும் காலூன்றிய ஆங்கிலேயர்கள், தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை ஒன்றிணைத்து கிழக்கிந்திய வாணிபக் குழுமத்தின் ஆளுநர்களின் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்தார்கள். இவ்வாறு ஏற்பட்ட சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய மூன்று மாகாணங்களின் ஆளுநர்களுக்கிடையே ஒரு முறையான தொடர்பும் ஒருங்கிணைவும் இல்லாமல், அவரவர்கள் தங்கள் மனம் போன போக்கின்படி அதிகாரத்தைச் செலுத்தி வர, ஆங்கிலேய வாணிபக் குழுமத்திற்கு நிர்வாக ரீதியில் பல பிரச்சனைகள் எழ, அவற்றைச் சரி செய்து ஒழுங்கு செய்யும் பொருட்டு 1773ல் ஒரு ஒழுங்கு முறைச் சட்டத்தைக் கொண்டு வந்தது வெள்ளையர் அரசு.

அந்த ஒழுங்கு முறைச் சட்டத்தின் மூலம் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய மூன்று ஆளுநர்களது நிர்வாகத்தையும் ஒருங்கிணைத்து கல்கத்தா ஆளுநரைத் தலைமை ஆளுநராகவும், மற்ற ஆளுநர்களான சென்னை, பம்பாய் ஆளுநர்களை அவருக்குக் கீழ் உட்படுத்தியும் ஒரு வித அரசு ஒழுங்கமைப்பினை ஏற்படுத்தியது வெள்ளை அரசு. இதன்படி வெள்ளை இந்தியாவின் நிர்வாகத் தலைநகர் கல்கத்தா என ஆகியது. தமிழகம் அதற்குக் கீழ்ப்படுத்தப்பட்டது.

பின்னர் தொடரும் வெள்ளையராட்சியின் நிர்வாகச் சீர்திருத்தத்தின்படி 1911ம் ஆண்டு தலைநகரம் தில்லிக்கு மாற்றப்பட்டது. ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும் இப்போது தில்லியில் குவிக்கப்பட, தமிழகம் இப்போது தில்லிக்குக் கீழ்ப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை தமிழகம் தில்லியின் அதிகாரத்திற்குக் கீழ்தான் இருந்து வருகிறது. நிலைமை இன்றவுளவும் கூட மாறவில்லை என்பதுதான் யதார்த்தம். நாம் வரலாற்றைத் தொடர்வோம்.

1935ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சி தன் ஆதிக்கத்திற்கு உட்பட்ட இந்தியக் காலனியை முழுமையாக ஆள்வதற்காக ஒருங்கிணைந்த இந்தியக் காலனிக்கான சட்டத்தினை இயற்றியது. அதன்படியேயான 1935ம் ஆண்டுச் சட்டத்தின்படி தில்லி அரசை கூட்டாட்சி அரசாங்கங்கள் (Federal Government) என்றழைத்தது. நாடாளுமன்ற மக்கள் அவையை கூட்டாட்சி மன்றம் (Federal legistature) எனவும், உச்ச நீதி மன்றத்தை கூட்டாட்சி நீதி மன்றம் (Federal court) எனவும், இரயில்வேயை (Federal Railway) எனவும் அழைத்தது.

ஆங்கிலேயர்கள் இவ்வாறு இந்தியா என்கிற பல்தேசிய இன மக்களின் தேசியங்களை ஒருங்கிணைத்து, ஒரு காலனியாகத் தம் காலடியில் அடிமையாக வைத்துக் கொண்டு, பல் தேசிய இன மக்களின் செல்வங்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள்.

இதைச் சகித்துக் கொள்ளவியலாத பல்தேசிய இன மக்கள், விடுதலை வேட்கையோடு எதிர்த்துப் போராடினார்கள். பல்தேசிய இனத் தலைமைகள் முகிழ்த்தன. மக்களின் போராட்ட ஒருங்கிணைவு நாடெங்கும் ஏற்பட, இயல்பாகவே இந்தியப் போராட்ட ஒருமைப்பாடு முகிழ்த்தெழுந்தது. போராட்டங்களின் முடிவில், இனியும் காலனியாக வைத்துக் கொண்டிருக்கவியலாது என்கிற நிலையினை வந்தடைந்த ஆங்கிலேயர்கள், இந்திய விடுதலைக்கு ஒத்துக் கொண்டார்கள்.

1947ல் ஆங்கிலேய ஆட்சியின் கீழிருந்த நிலப் பரப்புகளைக் கொண்ட சுதந்திர இந்தியா பிரகடனம் செய்யப்பட்டது. பண்டித ஜவாஹர்லால்நேரு தலைமையில் அரசு அமைக்கப்பட்டது. அப்போது காஷ்மீர், திருவிதாங்கூர், ஐதராபாத் போன்ற, இன்ன பிற நூற்றுக்கணக்கான சமஸ்தான அரசுகள் தங்களைத் தனிச் சுதந்திர அரசுகளாக ஆக்கிக் கொள்ளப் போவதாக அறிவித்திருந்தன.

அந்த நூற்றுக்கணக்கான சமஸ்தானங்கள், இந்தியாவுடன் சேருவதா, பாகிஸ்தானுடன் சேருவதா அல்லது தனிநாடாக இருந்து கொள்வதா என்று முடிவெடுக்க யோசித்துக் கொண்டிருந்தபோது, நேருவின் அரசு சமஸ்தானப் பகுதிகளை இந்தியாவுடன் இணைத்து விடும்படியும், அதுவரை ஆண்டு கொண்டிருந்த சமஸ்தான மன்னர்களுக்கு, மன்னர் மானியம் வாங்குவதாகவும் வாக்களித்தது.

ஆக, கடைசியில் 1950ல் காஷ்மீர், திருவிதாங்கூர், ஐதராபாத் போன்ற இன்ன பிற சமஸ்தானங்களையும், பிரெஞ்சுக் காலனி ஆதிக்கத்திலிருந்த பிற குடியேற்றப் பகுதிகளையும் வலுக்கட்டாயமாகச் சேர்த்துக் கொண்டு, ‘இந்தியா’ என்கிற ஒரு குடியரசு நாடாகத் தன்னை அறிவித்துக் கொண்டது.

அப்பொழுது காஷ்மீர் சமஸ்தானத்திற்கு டோக்ரா வம்சத்தைச் சேர்ந்த இராஜபுத்திர அரசர் ஹரிசிங் என்பவர் மன்னராக இருந்தார். இவர் இந்து மதத்தைச் சார்ந்தவர். மக்களில் பெரும்பாலோனர் முஸ்லிம்கள். எனவே, இந்துப் பெரும்பான்மையுள்ள இந்தியாவிலும் சேராமல், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தானுடனும் சேராமல், தனி நாடாக இருக்கப் போவதாக அறிவித்தார்.

ஆனால், இந்தியாவும், பாகிஸ்தானும் இதனை ஏற்கவில்லை. அவைகள் தத்தமது நாட்டோடு அப் பகுதிகளை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பின. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளைச் சேர்ந்த ஆளும் வர்க்கங்களும், ஆட்சியாளர்களும் ஆசை காட்டுதல், திரைமறைவுச் சூழ்ச்சிகள், மிரட்டுதல், நேரடியாகப் படையெடுத்தல் போன்ற எல்லா வழிமுறைகளையும் கையாண்டு, எப்படியாவது காஷ்மீரைத் தங்களது ஆதிக்கத்தில் கொண்டுவந்துவிட வேண்டுமென்று முயன்று கொண்டிருந்தன.

பிரச்சனை முற்றியது. அதற்கு முன்னதாக திரு. ஷேக் அப்துல்லா அவர்களின் தலைமையில், 1932இல் அமைக்கப்பட்ட “அனைத்து ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு” என்ற கட்சி, காஷ்மீர் தனி நாடாகவே இருக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துப் போராடிக் கொண்டு வந்தது. ஆரம்பத்தில் முஸ்லிம் மத உணர்வைப் பிரதானப்படுத்தி செல்வாக்குத் தேட முயன்ற தேசிய மாநாட்டுக் கட்சி, பின்னர் சூழலை உணர்ந்து கொண்டு, மத வேறுபாடின்றிப் போராட ஆரம்பித்தது.

1944இல் “புதிய காஷ்மீர்” என்ற பெயரில் ஒரு கொள்கை அறிக்கையை வெளியிட்டது. அதில், “காஷ்மீர், பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட்ட தனிநாடாக வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட அவை மற்றும் அதற்குப் பொறுப்பான அமைச்சரவை" என்பது போன்ற இறையாண்மை கொண்ட அரசாங்கத்திற்கானத் திட்டங்கள் அதில் வெளியிடப்பட்டிருந்தன.

காஷ்மீரைப் பாகிஸ்தானுடன் இணைத்துக் கொள்ள ஷேக் அப்துல்லாவைப் பயன்படுத்த ஜின்னா எண்ணினார். அதேபோல, இந்தியாவும் எண்ணியது. பெரும்பாலும் மாறி மாறித் தமது ஊசலாட்டத்தைக் காண்பித்தாலும் ஷேக் அப்துல்லா, இருவரின் வலையிலும் விழவில்லை.

“எல்லா மதத்தினரும் சமமாகவும் இணக்கமாகவும் வாழுகின்ற சுதந்திரத் தனி நாடாகவே காஷ்மீர் இருக்க விரும்புகிறது. இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ அது சேர விரும்பவில்லை” என்று அறிவித்து மக்களைத் திரட்டினார் ஷேக் அப்துல்லா. காஷ்மீர் மக்களும் இதையே விரும்பினர். காஷ்மீரத்து மக்கள் மீண்டுமொரு விடுதலைப் போருக்காய்ப் போராடிக் கொண்டிருந்தனர்.

1947 அக்டோபர் 22ல் பாகிஸ்தான் படைகள் காஷ்மீருக்குள் நுழைந்தன. தனது ஆக்கிரமிப்பைச் செலுத்த படை தொடுத்தன. அப்போது மன்னர் ஹரிசிங்கின் இராணுவமோ மிகப் பலவீனமான நிலையில் இருந்தது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான் படைகள் வேகமாக முன்னேறின. பெரிய அளவுக்கு எதிர்ப்பு இல்லாமல் காஷ்மீரைச் சூறையாடி முன்னேறி, தலைநகர் ஸ்ரீநகரையே வளைத்துக் கொண்டன. ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சித் தொண்டர்கள் ஆங்காங்கே பாக்கிஸ்தான் படையினை எதிர்த்துப் போராடினார்கள்.

pulwama blastஇந்நிலையில், மன்னர் ஹரிசிங் இந்தியாவின் இராணுவ உதவியை நாடினார். இந்தியா சமயோசிதமாக இந்தச் சூழ்நிலையைக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டது. இத்தகையதொரு மோசமான சூழ்நிலையில், வேறுவழியின்றி 1947 அக்டோபர் 26ஆம் நாள் காஷ்மீரை இந்தியாவுடன் இடைக்காலமாக (தற்காலிகமாக) இணைக்க, இணைப்புக்கான ஒப்பந்தத்தில் மன்னர் ஹரிசிங் கையெழுத்திட்டார். ஷேக் அப்துல்லாவும் அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டார்.

உடனே, பாகிஸ்தான் படையின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தி பின்னோக்கி விரட்டிட இந்தியப் படைகள் அனுப்பப்பட்டன. இந்தியப் படைகள் ஸ்ரீநகர் முற்றுகையை உடைத்து முன்னேறின.

காஷ்மீரை இந்தியாவுடன் இடைக்காலமாக (தற்காலிகமாக) மட்டுந்தான் இணைப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், காஷ்மீரின் பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள், தகவல் தொடர்பு ஆகிய மூன்று துறைகளை மட்டும் கவனித்துக் கொள்ளும் அதிகாரம் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. மற்றபடி இந்த இணைப்பு ஒப்பந்தம் வேறு எதையும் குறிக்கவில்லை.

அப்போது இந்தியாவிற்குச் சுதந்திரம் வழங்கப்பட்டு விட்டாலும், அதிகாரம், ஆட்சி செய்தல் என்கிற அம்சங்களில் முற்றிலுமாய் வெளியேறி விடாத வெள்ளை அரசாங்கம், மவுண்ட் பேட்டன் பிரபுவின் ஆலோசனையின் பேரில் நிபந்தனையொன்று அந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது.

அதாவது, “படையெடுப்பாளர்கள் துரத்தப்பட்டு அமைதியான சூழ்நிலை நிலைநாட்டப்பட்டபின், காஷ்மீர் மக்களின் பொதுவாக்கெடுப்பு மூலம், காஷ்மீர் மக்களது விருப்பத்தின் அடிப்படையில், காஷ்மீரின் இணைப்பு பற்றி இறுதி முடிவெடுக்கப்படும்” என்பதே அது.

இதற்கிடையே பாகிஸ்தானின் போர் நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி ஐ.நா.சாசனத்தின் 3வது விதியைக் காட்டி ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலிடம் இந்தியா முறையிட்டது. பிரச்சனை ஐநாவுக்குப் போனது.

ஐ.நா. மன்ற சமரச அதிகாரி சர் ஓவன் டிக்சனின் மேற்பார்வையில், காஷ்மீர் பிரச்சினை குறித்து பாக். பிரதமர் லியாகத் அலி கான் மற்றும் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு இடையே ஜூலை 20, 1950 அன்று பேச்சுவார்த்தை நடந்தது. கடைசியில் ஐ.நா. சபையின் தலையீட்டால் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

அப்போது ஐ.நா ஒரு பொதுப் பஞ்சாயத்து செய்தது. தற்போது நிலவும் கட்டப் பஞ்சாயத்துத்தனமான தீர்ப்பொன்றைச் சொன்னது. அதன்படி இரு நாட்டுப் படைகளும், தாங்கள் அதுவரை ஆக்கிரமித்திருந்த காஷ்மீரத்தின் பகுதிகள் அந்தந்த அரசுகளின் ஆதிக்கத்தில் கீழ் இருக்கும். பிறகு, காஷ்மீரின் எதிர்காலம் குறித்து ஐ.நா.சபையின் மேற்பார்வையில் “காஷ்மீர் மக்களிடையே ஒரு கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தி காஷ்மீரின் எதிர்காலம் பற்றித் தீர்மானிக்கப்படும்” என்று ஐ.நா. சபை தீர்மானித்தது. இதை இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்றுக் கொண்டன.

இப்படித்தான் காஷ்மீரை இந்தியாவும், பாகிஸ்தானும் பங்கு போட்டுக் கொண்டன. ஆக, இதுதான் நோயின் மூலம்.

ஆச்சு. ஒப்பந்தம் போடப்பட்ட 20 ஜூலை 1950லிருந்து இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நாள் வரை மொத்தம் 68 வருடங்கள், 6 மாதங்கள் 3 வாரங்கள் 6 நாட்கள் எனக் காலம் கடந்து போய்விட்டது, கடத்தியாகிவிட்டது. பிரச்சனையைத் தீர்க்கத்தான் ஒருவருமில்லை.

மாறாக, என்னிடம் அணு ஆயுதம் இருக்கிறது. இல்லை இல்லை, உன்னுடையதைவிட என்னிடம் பலமான அணு ஆயுதம் இருக்கிறது. இனி பொத்தானை அழுத்துவதொன்றுதான் பாக்கி என்று மாறி மாறி இரண்டு அரசுகளும் கொக்கரித்துக் கொண்டிருக்கின்றன. ஆகக் கடைசியில் பலியாகப் போவதென்னவோ இரு நாட்டு மக்களும்தான்.

சரி. நோயின் மூலம் கண்டாயிற்று. அது நீடித்திற்கக் காரணம் என்ன? அதை எப்படி அகற்றுவது? ஒன்றன் பின் ஒன்றாகப் பார்ப்போம்.

உண்மையில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பது என்னவோ கட்சி அரசியல்வாதிகள்தான் என்றாலும், உண்மையில் அவர்களை ஆட்டுவித்து அதிகாரம் செலுத்துவது பெரு முதலாளியமே ஆகும். இங்கு ஆட்சியில் அமர்ந்திருப்பது காங்கிரஸ் கட்சியோ அல்லது பார‘தீய’ சனதாக் கட்சியோ அல்லது வேறு எந்தக் கட்சிகளாயினும் சரி. அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்து ஆட்டுவிப்பவர்கள் பெரு முதலாளியர்களே ஆவார்கள். அவர்களுக்கு விரிவான சந்தை வேண்டும்.

மாறாக, பல்லினத் தேசிய இன அரசுகளாக, தனித் தனியாக இருந்தால் சந்தை பிளவுபட்டு விடும். அவ்வாறு இருப்பது என்பது முதலாளியத்தின் சந்தைக்குக் கேடு. எனவே, விரிவடைந்த, ஒன்று சேர்ந்த, ஒட்டு மொத்தமான சந்தை தேவை. அதற்காக பல்லினத் தேசிய அரசுகளை ஒன்றாக்கி, கட்டுப்படுத்தி, ஓர் ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வருவதுதான் முதலாளியத்திற்கு நலம் பயக்கும்.

எனவேதான் ‘மாநிலங்களின் ஒன்றியம்’ என்று அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்திருந்தாலும், அந்த வரையறுப்பை ஓர் ஓரத்தில் தூக்கிப் போட்டுவிட்டு, பல்லினத் தேசிய அரசுகளை வலுக்கட்டாயமாக ஒன்றிணைத்து ‘இந்தியா’ என்கிற நாடாக்கி, அந்தப் பல்லினத் தேசிய இனங்களை மாநிலங்களாக்கி, அந்த மாநிலங்களைக் கட்டி அடக்கி ஆளும் மத்திய அரசாக்கி, ‘இந்தியா ஒரு தேசம்’. ‘நாமெல்லாம் இந்தியக் குடிமக்கள்’. நாமெல்லாம் வேறு வேறு இனத்தவர்களாக இருந்தாலும், ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்றெல்லாம் கதையாடல்கள் கட்டப்பட்டு, ‘நாமெல்லாம் இந்தியர்கள்’. ‘நாம் இந்தியர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம்’ என்றெல்லாம் கட்டமைக்கப்பட்ட ‘இந்தியன்’ என்கிற கருத்தியல் ஒருவனுக்குள் ஆழமாக, மிக வலுவாக விதைக்கப்பட்டு, ‘தேசிய ஒருமைப்பாடு’ என்கிற உணர்வு ஆலமரமாகப் பெருக, நரம்பு புடைக்க எழுந்த நின்று 'வந்தே மாதரம்' சொல்லி வீர வணக்கம் செய்கிறோம்.

நாம் என்னதான் 'இந்தியன்' என்ற பெருங்கதையாடலுக்குள் கட்டப்பட்டிருந்தாலும், ஓர் அகில இந்தியத் தேசிய உணர்வு நமக்குள் ஓடினாலும், நாம் இன்று இருப்பது, வாழ்வது என்னவோ உலகமயம் என்கிற ஒற்றைத் துருவ சூழலுக்குள்தான். இதில் மூலதனம், தொழில் நுட்பம், சந்தை ஆகிய மூன்றிலும் ஏகாதிபத்தியங்களைச் சார்ந்திருக்கிற பார்ப்பன, பார்சி, பனியா போன்ற இந்தியப் பெரு முதலாளி வர்க்கமும், தேசிய முதலாளிகள் என்று வரையறுக்கப்படுகிற செட்டியார், அய்யங்கார், கவுண்டர் போன்ற தமிழ்த் தேசிய முதலாளிய வர்க்கமும், அகில இந்திய அளவிலேயே தங்களது செயல்பாட்டையும் சந்தையையும் அமைத்துக் கொண்டிருக்கின்றன.

மேலும், அகில இந்திய அளவிலான சந்தைத் தேவையை அவர்கள் கொண்டிருப்பதாலும், தொழில் நுட்பம், விரிவாக்கப்படுவதற்கான மூலதனம், வர்த்தக வளர்ச்சிக்கான உலகலாவிய சந்தை என இவற்றிற்காக அகில இந்திய முதலாளிய வர்க்கமும், தமிழ்த் தேசிய முதலாளிய வர்க்கமும் (சாரத்தில் தாங்களும் ஏதாவது ஒரு தேசிய இனத்தைச் சார்ந்தவர்கள்தான் என்றாலும்,) தங்கள் செல்வக் குவியல், ஏதாவது ஒரு தேசிய இன மக்களிடம் இருந்த வந்தவைகள்தான் என்றாலும், முதலாளியத்தின் லாப வெறி, மேலும் மேலுமான லாப வேட்கை வெறி, அவர்களை தேசிய இன விடுதலைக்கானவர்களாக ஆக்குவதில்லை.

மாறாக, அவர்களுக்குத் தேவையான பிளவுபடாத, பிரிவுபடாத, ஒட்டு மொத்த விரிந்த சந்தை, திரட்டப்படும் நிதி மூலதனம் போன்றவைகள், ஒட்டு மொத்த தேசங்களின் ஒருங்கிணைப்பில்தான் சாத்தியப்படும். எனவே, தேசிய இன ஒடுக்கு முறையின் பின்புலமாக இந்தியப் பெரு முதலாளிகளும், தமிழ்த் தேசியப் பெரு முதலாளிகளும் இருக்க முடியுமே தவிர, தேசிய இன விடுதலைக்கோ, எழுச்சிக்கோ, அதை வழி நடத்தவோ, தலைமை தாங்கவோ அவர்கள் முன் வருவதில்லை. வரவும் மாட்டார்கள்.

கெடு வாய்ப்பாக அவர்கள் ஒரு அகில இந்தியத் தேசியக் கட்டமைப்புச் சிதறிவிடாதவாறு காப்பாற்றிக் கொள்ளவே தீவிரங் காட்டுவார்கள். இதில் தனக்குத் துணையாக, முற்றிலும் ஒழிந்து விடாத, அரை குறையாய் இன்னும் உயிரோடு இருக்கும் நிலக் கிழமையையும் உடனிணைத்துக் கொள்வார்கள்.

மேலும், இன்றைய உலகமயமாக்கல் விளைவுகளை நேரடியாக அனுபவித்து வருபவர்கள் நாம். பொருளாதாரத்தின் மீதான அரசுக் கட்டுப்பாடுகளை அகற்றுதல், எல்லையற்ற இறக்குமதி, திறந்த சந்தை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட மக்கள் நலக் கடமைகளிலிருந்து அரசு விலகிக் கொள்ள, சகலத்தையும் தனியார் மயமாக்கிய சூழல்.

‘மக்கள் நல அரசு’ என்பது மெல்ல மெல்ல மாறி, வெறும் ‘சட்டம் ஒழுங்கு அரசு’ என்பதாக முற்றிலுமாய் மாறி்விட்ட சூழல். இப்போதைய அரசுகளின் முதன்மைப் பணி என்பது மக்கள் அரசுக்கெதிராக, அதிகாரத்திற்கெதிராகக் கிளர்ந்தெழாமல் பார்த்துக் கொள்வதுதான்.

ஆக, உலகமயமாக்கலும், முதலாளியமும், அரை நிலக்கிழமையும் ஒரு சேரக் கொண்ட இந்திய ஏகாதிபத்தியம், தேசிய இன விடுதலைகளை ஒருபோதும் ஒப்புக் கொள்ளாது. ஏற்றுக் கொள்ளாது. மாறாக, தேசிய இன ஒடுக்குமுறைகளை முன்னிலும் அதிகப்படுத்தி, அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கி, ஒடுக்குமுறைகளைத் தீவிரப்படுத்தி, தேசிய இன விடுதலைக்கான எழுச்சியை அழித்தொழிக்கவே களத்தில் எதிர் நிற்கும். இதுதான் நோய் நீடித்திருக்கக் காரணம்.

நாம் நோயின் மூலம் கண்டோம். அது நீடித்திருக்கக் காரணம் என்ன என்று கண்டோம். இப்படியான நோய் நாடி நோய் முதல்நாடி அது நீடித்திருக்கும் வாய் நாடி இறுதியில் எப்படி அகற்றுவது என்றால்...

அது முதலில் தத்தமது தேசிய இன விடுதலையில் இருக்கிறது தீர்வு. எமது மொழி தமிழ். எமது இனம் தமிழர். எமது தாயகம் தமிழர் நாடு. அதை முதலில் சமைப்போம். அந்த இறையாண்மை கொண்ட தமிழர் நாட்டில் நின்றுகொண்டு, நம்மைப் போலவே பிற தேசிய இன விடுதலைக்கும் ஆதரவுக் கரம் நீட்டி, குரல் கொடுத்து, பிற தேசிய இன விடுதலைக்கும் சேர்ந்து பாடுபட்டு, தேவையேற்படுமானால் அந்தந்தத் தேசிய இன விடுதலைத் தன்னுரிமைத் தாயகங்களோடு இணைந்து “பல் தேசிய இன நாடுகளின் கூட்டமைப்பு அரசு” (Multi Nationalities Federal States) ஒன்றைக் கட்டிக் கொண்டு, அதிலிருந்து உலகு தழுவிய மானுடந் தழுவுவோம்.

- பாட்டாளி

Pin It