அமெரிக்காவில் சீட்டில் நகரசபையைத் தொடர்ந்து - கலிபோர்னியா மாநிலத்திலும் ஜாதி ஒழிப்புத் தீர்மானம் நிறைவேறியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஜாதிப் பாகுபாடுகளைத் தடை செய்கிறது அத் தீர்மானம். ஜாதிய நிகழ்வுகள் நடத்துவது அதில் பங்கேற்பது குற்றம் என்கிற தீர்மானம்

34 உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்த தீர்மானத்திற்கு ஒருவர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.caste discrimination in californiaஇதில் குறிப்பிடத்தக்க சிறப்பு என்னவென்றால் இந்த மசோதாவை கலிபோர்னியாவின் செனட் சபையில் கொண்டு வந்தவர் ஆயிஷா மஹால் என்ற இஸ்லாமியப் பெண். கலிபோர்னியா மாகாண சபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இஸ்லாமிய பெண்ணும் இவர்தான். இவர் ஆப்கான் - அமெரிக்க தம்பதிகளுக்குப் பிறந்தவர். இதற்காக முழு முயற்சிகளில் இறங்கி இந்த மசோதாவை ஒரு மாதத்திற்கு முன்பு அறிமுகப்படுத்தினார். செனட் சபையின் சட்ட ஆலோசனைக் குழு மசோதாவைப் பரிசீலித்து ஒப்புதல் தந்தது.

ஜாதி, தீண்டாமையை எதிர்த்து அமெரிக்காவில் போராடிக் கொண்டிருக்கும் (Equality Lab) சமத்துவ ஆய்வகம் என்ற அமைப்பு இதற்கு உறுதுணையாக இருந்தது. செனட்டைத் தொடர்ந்து இதே போன்ற மசோதா பிரதிநிதிகள் சபையிலும் கொண்டு வரப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கே ஆளுநர்கள் சட்டசபை மாண்பு அறிந்தவர்கள், ‘ஆர்.என். ரவிகள்’ அல்ல; ஒப்புதலை கட்டாயம் வழங்கிடுவார்கள். இதுவரை அமெரிக்காவில் ஜாதி என்பது பாதுகாக்கக்கூடிய ஒரு அம்சமாகத் தான் இருந்து வந்தது.

ஏற்கனவே வாஷிங்டன் மாகாணத்தில் சீட்டில் நகர சபை இப்படி ஒரு தீர்மானத்தை இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவேற்றி இருக்கிறது. அதுபோல மாகாண அளவில் முதல் மாகாணமாக கலிபோர்னியா இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது. SB403 இச்சட்டத்திற்கு இடப்பட்ட குறியீட்டுப் பெயராகும். அமெரிக்காவில் குடியேறிய பார்ப்பனியம் பல தொழில் நிறுவனங்களில், உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதியை திணித்துக் கொண்டு வருகிறது. இதை எதிர்த்து சமத்துவ ஆய்வகம் போன்ற இயக்கங்கள் போராடிக் கொண்டிருக்கின்றன. அவர்களின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

ஆனால் இந்தியாவில் இந்துத்துவா பெருமை, சனாதனம் பேசிக் கொண்டிருப்பவர்கள் ஜாதியைப் பற்றி ஒரு வார்த்தை கூட வாய் திறந்து பேசுவது கிடையாது. சமூகத்தையே அழித்துக் கொண்டிருக்கிற இந்த வியாதியைப் பற்றி பேசாமல் சமூக மாற்றம் இங்கு நிகழாது என்பது தான் பெரியாரியல், அம்பேத்கரியலின் அடிப்படையான கோட்பாடு. இவைகளை புறந்தள்ளிவிட்டு இந்து ஒற்றுமை பற்றி பேசிக் கொண்டுள்ளனர், இந்து தர்மம் கடல் தாண்டி போவதே குற்றம் என்கிறது, கடல் தாண்டி போகும் குற்றத்தை செய்துவிட்டு அங்கேயும் இந்து தர்மத்தையும், சனாதனத்தையும் திணித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனியத்திற்கு கலிபோர்னியா மாகாணம் பலத்த அடி கொடுத்திருக்கிறது.

கலிபோர்னியா மாகாண தீர்மானத்தை நாம் வரவேற்போம்!

- விடுதலை இராசேந்திரன்

Pin It