இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு சென்ற இந்து சனாதனவாதிகள் தங்களின் ஜாதியையும் உடன் சுமந்து போய் ஜாதியமைப்பே இல்லாத நாட்டில் ஜாதியத்தையும் அதன் பாகுபாடுகளையும் திணித்து விட்டார்கள். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மேலை நாட்டுக் கலாச்சாரம் - நமது சனாதன கலாசாரத்தை சீரழித்து விட்டது என்கிறார். உண்மையில் சனாதன கலாச்சாரம் தான் மேலை நாடுகளின் சமத்துவப் பண்பாட்டை சீர்குலைத்து வருகிறது. அதன் எதிரொலிதான் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்திலுள்ள சியாட்டில் நகராட்சி ஜாதிப் பாகுபாடுகளைத் தடை செய்து தீர்மானம் நிறைவேற்றியதாகும்.

அமெரிக்காவுக்குக் குடியேறிய அந்நாட்டு குடிமக்களாகிய தெற்கு ஆசியர்களிடையே ‘இந்து சனாதனம்’ திணித்த ஜாதியப் பாகுபாடுகளால் பணியிடங்களிலும் குடியேறிய மக்களிடமும் பாகுபாடுகளைக் கொண்ட ‘மனுவாதம்’ தலைவிரித்தாடத் தொடங்கியது. நவீன தொழில்நுட்பங்களுடன் இயங்கும் தொழில் நிறுவனங்களிலும் அமெரிக்காவின் மிகப் பெரிய தொழில் நுட்பப் பூங்கா இயங்கும் சிலிகான் பள்ளத்தாக்கிலும் பணியிடங்களில் பாகுபாடுகள் காட்டப்படுகின்றன.

இந்தப் பூங்காவில் மிகப் பெரிய தொழிலதிபராகக் கருதப்படும் சிஸ்கோ என்பவர், தொழிலாளர்கள் மீது ஜாதிப் பாகுபாடு காட்டுகிறார் என்று அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இதற்கு எதிராக ஜாதி எதிர்ப்பு அமைப்புகளும் தலித் அமைப்புகளும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.

சியாட்டில் நகராட்சி உறுப்பினரும் ஜாதிய பாகுபாடுகளை எதிர்த்துப் போராடி வருபவருமான ஷாமா சவந்த் (Kshama Sawant) கடந்த பிப். 21, 2023 அன்று ஜாதிப் பாகுபாடுகளைத் தடை செய்யும் தீர்மானத்தை நகர சபையில் கொண்டு வந்து மாபெரும் புரட்சியை நடத்தியிருக்கிறார். 6 உறுப்பினர்கள் ஆதரவாகவும் ஒரு உறுப்பினர் எதிர்த்தும் வாக்களித்துள்ளனர். இனம், பால் (பெண்-ஆண்), மதம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது என்று ஏற்கனவே அமெரிக்காவில் சட்டம் இருக்கிறது. அந்தச் சட்டத்தில் ஜாதியையும் இணைத்து அவசரப் பிரகடனம் ஒன்றை சியாட்டில் நகராட்சி வெளியிட்டிருக்கிறது. ஏற்கனவே ஹார்வார்ட், பிரவுன், கலிபோர்னியா பல்கலைக்கழகங்கள் இதேபோன்று பல்கலைச் சட்டங்களைத் திருத்தி அமைத்துள்ளதையும் குறிப்பிட வேண்டும். இந்து சனாதன கலாச்சாரம் இதற்கு மாறாக இந்தியப் பல்கலைக் கழகங்களில் ‘அகில இந்திய வித்தியார்த்தி பரிஷத்’ என்ற இந்து மாணவர்கள் அமைப்புகளைத் தான் உருவாக்கி வைத்துள்ளது.

சியாட்டில் தீர்மானம் ஜாதியை மிகச் சரியாக வரையறை செய்திருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.  “கெட்டுதட்டி இறுகிப் போய் கிடக்கும் சமூக முடக்கத்திற்குக் காரணம் ஜாதி ஆகும். பாரம்பர்யம், அகமணம், பழக்க வழக்கம், மதங்களால் உருவாக்கப்பட்ட சமூகத் தடைகளைக் கொண்டதே ஜாதியமைப்பு” என்று தீர்மானம் குறிப்பிடுகிறது. (Rigid, social stratification Characterised by heredictary status, endogamy and social barriers sanctioned by custom, law or religion) ‘தலித் சமத்துவ ஆய்வகம்’ என்ற அமைப்பை 2016ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வரும் அதன் இயக்குனர் தேன்மொழி சவுந்தரராசன், தங்களின் தொடர் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

“அமெரிக்காவில் நான்கில் ஒரு தலித், வாய்மொழியாகவோ உடல்ரீதியாகவோ பணியிடங்களில் பாகுபாடுகளுக்கு உள்ளாகிறார். வழிபாட்டு இடங்கள், சமூக சந்திப்புகளில் பாகுபாடுகள் காட்டப்படு வதோடு, மைக்ரோ சாப்ட், அமேசான், போயிங் விமான நிறுவனங்களில் தலித்துகள் பாகுபாடுகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்” என்றார். ஆந்திராவைச் சார்ந்த அமெரிக்க தொழிலதிபர் (லேக்கி ரெடி பாக்கி ரெட்டி) கலிபோர்னியா - பொக்கிலி நகரத்தில் ஆந்திராவிலிருந்து முறைகேடாக அழைத்து வரப்பட்ட தலித் மக்கள் மற்றும் மைனர் பெண் குழந்தைகள் மீது பாகுபாடு காட்டிய குற்றத்துக்காக தனது மகனோடு சிறையில் முதன்முதலாக அடைக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

ஆனால் அமெரிக்காவில் செயல்படும் பார்ப்பன உயர்ஜாதியினரைக் கொண்ட ‘இந்து அமெரிக்கர்கள் சம்மேளனம்’ இத் தீர்மானத்தை எதிர்க்கிறது. ஜாதிப் பாகுபாடுகள் கூடாது என்பது நியாயம் தான் என்றாலும் ஜாதி தெற்கு ஆசியர்களின் அடையாளமாக இருப்பதால் அவர்களை தனிமைப்படுத்துகிறது இந்தச் சட்டம் என்று கூறி, ஜாதிப் பாகுபாடுகளுக்கு உரம் சேர்க்கவே விரும்புகிறது.

“நாங்களும் தீண்டாமையை எதிர்க்கிறோம். ஆனால் காலம்காலமாக பின்பற்றப்படும் ஆகமங்கள் கூறும் தீண்டாமை மதம் சார்ந்தது; அதை மாற்ற முடியாது” என்று இங்குள்ள பார்ப்பனர்கள் பேசுவதையே எதிரொலிக்கிறார்கள்.

சியாட்டில் தீர்மானம் மனுசாஸ்திரத்திற்கு மரண அடி தந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ‘சியாட்டிலாக’ ஒவ்வொரு நகரமும் கிராமமும் மாற வேண்டும். அதற்குத் தடைப் போடும் சனாதன சக்திகளுக்கு எதிரான உறுதியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It