கவிஞர் விடுதலை சிகப்பி மீது சென்னை அபிராமபுரம் காவல்துறை பொய் வழக்கு ஒன்றை பதிவு செய்திருக்கிறது. அவர் இந்து கடவுள்களை அவமதித்து விட்டார் என்று பாரத் இந்து முன்னணி என்ற ஒரு அமைப்பு கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கவிஞர் விடுதலை சிகப்பி கவிதையில் மலக்குழியில் இறக்கிவிடப்பட்டு அன்றாடம் செத்து ஒழிவதற்கென்றே சில ஜாதிகளை கடவுள் தான் படைத்தார் என சொல்லப்பட்டால் அந்த கடவுள் ஒருநாள் இறங்கி இந்த வாழ்வு எவ்வளவு கொடியது என்பதை நேரடியாக உணரட்டும் என்ற ஆவேசத்துடன் அவர் எழுதிய கவிதை.

தன்னுடைய கற்பனை சிந்தனைத் திறனை இராமன், இலட்சுமணன் மலக்குழியில் இறங்குவது போல் அவர் சித்தரித்தார். இது இந்து கடவுள்களைப் புண்படுத்திவிட்டது என்று ஓலமிடுகிறார்கள்.

சக மனிதனை ஜாதியின் பெயரால் இழி தொழில் செய்ய வைத்து மனித மலத்தை எடுக்கச் சொல்வதும், மலக்குழியில் இறங்கச் சொல்வதும் எவ்வளவு பெரிய சமூக அவமானம். எவ்வளவு பெரிய புண்படுத்தும் நடவடிக்கை என்பதைப் பற்றி இவர்களுக்கு கவலையில்லை. கடவுளை புண்படுத்தகூடாது என்பதுதான் இவர்களுக்கு கவலையாக இருக்கிறது.

இது கடவுள் படைத்த படைப்பு, கடவுள் படைத்த படைப்பின் படிதான் அவர்கள் செய்கிறார்கள் என்று கூறுவதற்கு பதிலாக அந்த கடவுளையே மலக்குழியில் இறக்கிவிட்டால் எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனையில் எழுதப்பட்ட ஒரு கவிதை. இன்றைக்கு பிரதமராக இருக்கிற மோடி கூட மனித மலத்தை மனிதர்களாக எடுப்பவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று ஒருமுறை கூறியுள்ளார்.

கடவுளுக்கு நிகரானவர்கள் கடவுளை அந்த வேலையை செய்ய அழைக்கும் போது ஏன் புண்படுகிறது என்று ஓலமிட வேண்டும். இது குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் சில வழக்குகளையும் எடுத்துக்காட்டி இருக்கிறது.

ஆபாசத்தை எப்படி மதிப்பிடுவது? அது படைப்பாளியின் பார்வையில் இருந்து பார்க்க வேண்டும்; அவர் எதைச் சொல்ல வருகிறார் என்பதை உணர வேண்டும்; படைப்பாளியின் தரப்பில் இருந்து அதை பார்த்த பிறகு அதை படிக்கும் வாய்ப்புள்ள ஒவ்வொருவரும், ஒவ்வொரு நிலையிலும் இருந்தும் அதைப் பார்த்து, அதன் பிறகே விருப்பு வெறுப்பற்ற ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று, சமரேஷ் போஸ், அமல் மித்ரா 1985 ஆம் ஆண்டு வந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி இருக்கிறது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில் தான் இந்துக்களால் வணங்கப்படும் ஆண் பெண் தெய்வங்களை எஃப்.எம். உசேன் தனது ஓவியங்களால் அவமதித்து விட்டார் என்ற குற்றச்சாட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேபோல் பெருமாள் முருகன் ‘மாதொரு பாகன்’ நாவல் மீது தொடரப்பட்ட வழக்கிலும் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. ஆக ஒரு படைப்பாளியின் கருத்துரிமைக்கு இப்படிப்பட்ட அச்சுறுத்தல் வருதல் என்பது கருத்துரிமையை மீறிய ஒரு அப்பட்டமான செயல். தமிழ்நாடு அரசு தலையிட்டு இந்த வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று நாம் வலியுறுத்திகிறோம்.

கடவுளாகக் கொண்டாடப்படும் இராமன், சூத்திர சம்பூகன் பிராமணர்களை தொழுவதற்கு பதிலாக கடவுளை நேரடியாக தொழுதான் என்பதற்கு அவன் தலையை வெட்டினான். சூத்திரர் களை இப்படி அவமதித்த இராமனுக்காக நாம் என்ன தண்டனை கொடுப்பது என்ற கேள்விக்கு கடவுளை அவமதித்து விட்டதாக, புண்படுத்தி விட்டதாக பதறுகிறவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It