சாதி ஒழிய வேண்டும் என்பது ஐயா தந்தை பெரியாரின் கொள்கை.

அதற்குக் குறுக்கே கடவுள், மதம், வேத புராணம் என்று எவை வந்தாலும் அவைகளையும் எதிர்த்தார், பெரியார்.

பெண்ணடிமையின் மூலமே மதமும், சாதியும்தான். மதமும்,சாதியும் அமைதியைக் கெடுக்கும், கலவரத்தை உருவாக்கும், கொலைகளுக்கும் அவையே காரணம்.

2015ஆம் ஆண்டில் நடைபெற்ற பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை சாதி ஆணவக் கொலையாகும், அதுவும் கொடூரமானதாகும்.

பட்டியலினத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், மாற்றுச்சமூகத்தைச் சேர்ந்தப் பெண்ணுடன் நல்ல நட்பு கொண்டிருந்தார்.

இதைக்கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத மாவீரன் தீரன் சின்னமலைப் பேரவையின் தலைவர் யுவராஜ், கோகுல் ராஜைத் தலையை வெட்டி, நாக்கை வெட்டி, தண்டவாளத்தில் வீசியிருக்கிறார், அவரைச் சேர்ந்தவர்களோடு என்பது வழக்கறிஞர் ப.பா.மோகனின் நேர்காணல் மூலம் தெரிய வந்துள்ளது.

ஏன் இந்தக் கொடூரக் கொலை?... சாதி, சாதி, சாதிதான்.

ரிக் வேதத்தில் சொல்லப்பட்ட நால்வருணங்கள், மனுஸ்மிருதி மூலம் சாதிகளாகக் கூர்மைப் படுத்தப்பட்டன.

சாதியைப் படிநிலைகளாகச் சொல்லி, அதில் தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம், மேல்சாதி - கீழ்சாதி என்ற பார்ப்பனிய விதைகளே இன்று கோகுல்ராஜ் போன்றவர்களின் மீது ஆணவக் கொலைகளாக வந்து நிற்கிறது.

இந்த வழக்கில் குற்றம் செய்தவர்கள் அனைவருக்கும் வாழ்நாள் தண்டனைகள் கிடைத்து, நீதி நிலை நின்றுள்ளது.

நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது என்பது சரிதான்.

அதை விட இத்தகைய ஆணவக்கொலைகள், சாதியக் கொலைகள், சாதிய வன்முறைகள் நடைபெறாமல் இருப்பதும், அத்தகைய சமூக அமைப்பு உருவாக வேண்டும் என்பதும் மிக முக்கியமல்லவா?

அதற்கு ஒரே வழி தந்தை பெரியார் சொன்னதுதான் “சாதி ஒழிய வேண்டும் !’’

Pin It