மே 16 அன்று சென்னை பாவாணர் நூலக கட்டிடத்தில் நடந்த “மதிமாறன் பதில்கள்” நூல் வெளியீட்டு விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு உரையாற்றினார். இது நிகழ்ச்சியில் நூலாசிரியர் மதிமாறன் நிகழ்த்திய ஏற்புரை.

‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்பது இறை நம்பிக்கையாளர்களின் வாக்கியம். அதையே நான் இப்படி சொல்றேன், எல்லா புகழும் பெரியாருக்கே.

அரசியலில் நமது நிலை பதில் சொல்ற இடத்தில் இல்லை. கேள்வி கேட்கிற இடத்தில்தான் இருக்கு. அதனால் தான் என்னுடைய பதில்களும் கேள்விகளாலேயே நிரம்பியிருக்கு.

டாக்டர் அம்பேத்கராலும், தந்தை பெரியாராலும் பார்ப்பனியத்தை, இந்துமதத்தை நோக்கி எழுப்பப்பட்டக் கேள்விகளுக்கு இன்னைக்கு வரைக்கும் பார்ப்பனர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. மாறாக கண்டனங்கள்தான் வந்திருக்கு. வரலாறு நெடுகிலும் பார்ப்பனியம் தனக்கு எதிராக கேள்வி எழுப்பியவர்களை தண்டிச்சிருக்கு. அல்லது அந்தக் கேள்விகளை விழுங்கி செரிமானம் செஞ்சிருக்கு. ஒரு நாளும் அறிவு நாணயத்தோடு அது பதில் சொல்ல முயற்சித்ததுக்கூட இல்லை.

ஆனால், பெரியார் ஒருவர்தான், தொண்டைக்குள் சிக்கிய முள்ளாக பார்ப்பனியத்தை இன்று வரை மூச்சுத் திணற வைக்கிறார். காரணம், பார்ப்பனியம் வேறு, இந்து மதம் வேறு என்று பிரித்துப் பார்க்காத அவருடைய தாக்குதல்தான்.

நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம் இன்னும் தீட்சிதர்களிடம் இருக்கிறது. ஆனால் அதை 64 வது நாயன்மாரான ஆறுமுகசாமியின் மேல் கொளுத்திப் போடத்தான் தீட்சிதர்களால் முடியவில்லை. காரணம், நந்தனின் காலம் தந்தை பெரியாருக்கு முந்தைய காலம். பெரியவர் ஆறுமுகசாமியின் காலமோ தந்தை பெரியாருக்கு பிந்தைய காலம்.

துரியோதனனுக்கு உயிர் தொடையில் என்பது போல், ‘இந்து மதத்தின் உயிர் பார்ப்பனியத்தில் இருக்கிறது’ என்பதை புரிந்த பெரியார், பார்ப்பனியத்தின் தொடையில் அடித்தார். அது இந்து மதத்தின் தொண்டையைப் போய் அடைத்தது. அதனால்தான் பெரியார் ‘பார்ப்பான்’ என்கிற சொல்லை அழுத்தத்தோடு, உறுதியாக பயன்படுத்தினார்.

‘பார்ப்பான்’ என்கிற சொல்லை பயன்படுத்தாமல் பெரியார் இந்து மதத்தை எதிர்த்திருந்தால், அவர் இன்று பார்ப்பனர்களால் கொண்டாடப்படுகிற தலைவராக இருந்திருப்பார்.

‘பார்ப்பன எதிர்ப்பு’ இல்லாமல் இருந்தால், சிற்றம்பல மேடையில் ஏறி தமிழில் பாடுவதற்கு போராடும் துணிவு வந்திருக்காது. சிற்றம்பல மேடையில் ஏறி மக்கள் கலை இலக்கிய தோழர்களால், தமிழில் பாட முடிந்தது என்றால், அது தமிழ் உணர்வால் கிடைத்த வெற்றியல்ல. பார்ப்பன எதிர்ப்புக்குக் கிடைத்த வெற்றி. பார்ப்பன எதிர்ப்பால், தமிழ் மானம் காக்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்ட சாதி வெறி தமிழனை எதிர்த்து, இரட்டை தம்ளர் முறையை உடைத்து, பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்களால் உறுதியாக போராட முடிகிறது என்றால், அது வெறுமனே தமிழன் என்கிற உணர்வுக்குக் கிடைத்த வெற்றியல்ல. பெரியார் ஊட்டிய பார்ப்பன எதிர்ப்பு, சாதி ஒழிப்பு என்கிற உணர்வுக்குக் கிடைத்த வெற்றி.

தங்களை முற்போக்காளர்களாக அடையாளப்படுத்திக் கொள்கிற கவிதை, கதை, கட்டுரை எழுதுகிற இலக்கியவாதிகள், விமர்சகர்கள் - வெகு ஜன பத்திரிகைகளில் எழுதி தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக, அவர்கள் செய்கிற முதல் வேலை ‘பார்ப்பான்’ என்கிற வார்த்தையை பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்வது.

அந்தப் பத்திரிகைளில் மட்டுமல்ல, முழுவதுமான தங்களின் எழுத்துக்களில்கூட அவர்கள் ‘பார்ப்பான்’ என்ற வார்த்தையை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து விடுகிறார்கள். வெகுஜன பத்திரிகைகளின் எழுத்து நடைக்கு தங்களை மாற்றிக் கொள்கிறார்கள்.

இப்படியெல்லாம் மாறினால்கூட பார்ப்பனப் பத்திரிகைகள், திராவிட இயக்க ஆதரவு எழுத்தாளர்களுக்கு எப்போதாவது ஒரு வாய்ப்பும், அதற்கு நேர் எதிராக, திராவிட இயக்க எதிர்ப்பு எழுத்தாளர்களுக்கு எப்போதும் ஒரு முக்கியத்துவமும் தந்து கொண்டுதான் இருக்கின்றன.

நாலு வருஷத்துக்கு ஒரு முறை நம்மள ஒரு பேட்டி எடுத்து போடுறாங்க அப்படிங்கறதுக்காக, நம்மாளுங்களும், இந்த வெகுஜன பத்திரிகைகளின் மக்கள் விரோத நடவடிக்கைளை கண்டிக்கறதையும் விட்டுறாங்க.

இந்தியச் சமூக அமைப்பில் மிகப் பெரும்பாலும், ஒரு தனி நபரின் வெற்றி ஏதோ ஒரு வகையில் பார்ப்பனியத்தோடு சமரசம் செய்து கொள்ளாமல் சாத்தியப்படுவதில்லை.

பெரியாரின் காலங்களில் அவர் செய்திகளை புறக்கணித்த பார்ப்பனப் பத்திரிகைகள், இன்று அவரின் பார்ப்பன எதிர்ப்பை இருட்டடிப்புச் செய்து அவரை ஒரு பொதுவான தலைவரைப் போல் சித்தரித்து தங்களை நடுநிலையாளர்களாகக் காட்டிக் கொள்கின்றன.

ஒரு நடிகனாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பாத நடிகவேள் எம்.ஆர்.ராதா, பெரியாரின் தொண்டராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். பத்திரிகைகள் அவரை ஒரு நடிகனாக பேட்டி காணச் சென்றபோது, பத்திரிகைகளையும், ரசிகர்களையும் கடுமையாக கண்டித்திருக்கிறார்.

பத்திரிகையாளர்களை ‘காக்கா’ பிடிக்கிற எழுத்தாளர்கள், பிரபலங்கள் மத்தியில், ரசிகர்களை அல்லது வாசகர்களை ‘தன் உயிரினும் மேலானவர்கள்’ என்று ஏமாற்றி பிழைக்கிற நடிகர்கள் மத்தியில், நடிகவேள் எம்.ஆர்.ராதா தனக்கு ரசிகனாக இருப்பவரைக்கூட கடுமையாக கண்டித்திருக்கிறார்.

ஒரு பத்திரிகையில், ஒரு வாசகர், நடிகவேள் எம்.ஆர். ராதாவிடம், “தாங்கள் இந்த நாட்டின் முதல் மந்திரியானால்?” என்று கேட்ட கேள்விக்கு, நடிகவேள், “இந்த மாதிரி கேள்வி கேட்பவர்களை தூக்கில் போட சட்டம் கொண்டு வருவேன்” என்று பதில் அளித்திருக்கிறார். அதேபோல், நடிகவேளின் சிறை வாழ்க்கையில் ஒரு சம்பவம், ஒரு பார்ப்பனர் திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு வந்திருக்கிறார். “பார்ப்பனர்களை அய்யர் என்று அழைக்கக் கூடாது” என்கிற பெரியார் கருத்தில் ஊறிய நடிகவேள், அந்தக் கைதியை, ‘அய்யரே... அய்யரே...’ என்று உரக்கக் கூவி அடிக்கடி அழைக்கிறார்.

உடன் இருந்தவர் நடிகவேளிடம், “நீங்கதான் அய்யர்ன்னு சொல்ல மாட்டிங்களே, அப்புறம் எதுக்கு அவரை அய்யர் அய்யர்ன்னு கூப்புடுறீங்க?” என்று கேட்டாராம்.

அதற்கு நடிகவேள், “அய்யர்ன்னா யோக்கியமானவன்னு ரொம்ப பயலுங்க நினைச்சிக்கிட்டு இருக்கான். திருட்டு வழக்கில வந்திருக்கிறவன் ஒரு அய்யர்ன்னு மத்தக் கைதிக்கெல்லாம் தெரியுட்டு மேன்னுதாய்யா அப்படி கூப்பிடுறேன்” என்றாராம். இதுதான் எம்.ஆர். ராதா.

ஆனால், பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும் அவரை ஒரு சிறந்த நடிகராக மட்டுமே சித்தரித்து, அவரின் அரசியலான பார்ப்பன எதிர்ப்பை இருட்டடிப்பு செய்தன - என்றார் மதிமாறன்.

Pin It