நான் என்னுடைய நாடாளுமன்ற உரையில் பேசுகின்ற பொழுது, இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று குறிப்பிட்டேன். நான் மாநிலங்கள் என்று சொல்கிறேன் என்றால், அந்தச் சொல் எங்கிருந்து வந்தது ? ஒரு மாநிலம் என்றால் என்ன ?

மண்ணைப் பற்றியது மட்டுமல்ல; மக்களிடமிருந்து அந்த மண்ணினுடைய தன்மையை அறிவது - மக்களிடமிருந்து அவர்களுடைய குரல் வெளிவருவது - அவர்களுடைய குரலிலிருந்து அவர்களுடைய மொழி வெளிவருகின்றது- மொழியிலிருந்து கலாச்சாரம் வருகின்றது - கலாச்சாரத்திலுருந்து சரித்திரம் வருகின்றது - பின்னர் வரலாற்றிலிருந்து மாநிலம் உருவாகுகிறது.

இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று சொல்கின்றபொழுது, மாநிலங்களிலிருந்துதான் இந்தியா என்பதே வருகின்றது என்பதை நான் அழுத்தமாகச் சொன்னேன்.

எழுத்துக்கள் சேர்ந்து சொல்லாக மாறுகின்றது; வார்த்தைகள் சேர்ந்து வாக்கியமாக மாறுகிறது; வாக்கியங்கள் ஒன்று சேர்ந்து கவிதையாக மாறுகின்றன.

எழுத்துக்களை மதிக்கவில்லை என்றால், சொற்களை மதிக்கவில்லை என்றால், வாக்கியத்தை மதிக்கவில்லையென்றால் வேறு எதையும் மதிக்க முடியாது.

*

பிரதமர் இங்கு வருகிறபொழுதெல்லாம் பொருள் புரியாமல், தமிழ்நாட்டைப் பற்றி பேசுகிறார். அது 3000 ஆண்டுகள் பழமையுள்ள ஒரு பாரம்பரியமான நாடு.

அவர் சொற்களைப் புரிந்து கொள்வதில்லை - வாக்கியங்களைப் புரிந்து கொள்வதில்லை - மொழியைப் புரிந்து கொள்வதில்லை - பிறகு எந்த அடிப்படையில் அவர் தமிழ்நாட்டைப் பற்றி பேசுகிறார்?

தமிழ்நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக நீட், ஜி.எஸ்.டி என்பது நியாயமற்றது அது எங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்துவது என்று கூறுவதைப் புரிந்து கொள்ளாமல், நீங்கள் அவர்களை அவமதிக்கிறீர்கள்.

நான் நாடாளுமன்றத்தில் பேசுகிறபொழுது சொன்னேன் ; அவர்கள் தமிழ்நாட்டினுடைய வரலாற்றைப்பற்றியும் தெரிந்து கொள்வதில்லை; இந்த நாட்டினுடைய வரலாற்றையும் புரிந்து கொள்ளவில்லை.

பிறகு 3000 ஆண்டுகளில் இன்றுவரை தமிழ்நாட்டின்மீது யாராலும், எதையும் திணிக்க முடிந்ததில்லை.

*

நீங்கள் யார் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு ? இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்ற அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது ?

ஏன் இந்திய நாட்டு மக்கள் - இந்தியா எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிக்கக் கூடாது ? உங்களுக்கு யார் அந்த அதிகாரத்தைக் கொடுத்தது ?

இதுதான் இன்றைக்கு இருக்கின்ற முக்கியமான - மய்யப் பிரச்சனையாகும் இந்த நாட்டைப் பொறுத்தவரையில்.

நம்முடைய அமைப்பு, மக்களுடைய குரல்தான் எதிரொலிக்க வேண்டும். ஆனால், திட்டமிட்டுத் தொடர்ச்சியாக மக்களுடைய உரிமைகளும், உணர்வுகளும் நசுக்கப்படுகின்றன. நீதித்துறை, தேர்தல் ஆணையம், பத்திரிக்கைத் துறை ஆகியவை எல்லாம் தொடர்ச்சியாகத் திட்டமிட்டு நசுக்கப்படுகின்றன.

பாரதீய ஜனதா, எந்தக் கற்பனையான உலகத்திலும் வாழ வேண்டாம் ; அவர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். ஏனென்றால், அவர்கள் வரலாற்றை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள் - அவர்களால் வெற்றி பெற முடியாது - தோற்றுக் கொண்டே தான் இருப்பார்கள்.

(முதல்வர் மு.க.ஸ்டாலின் சுயசரிதை வெளியீட்டு விழாவில் இராகுல் காந்தி பேசியது - பிப்.28, 2022)

காஷ்மீர் உரிமைக்கு குரல் கொடுத்த தமிழ்நாடு

துன்பமான நேரங்களில் தான் உண்மையான நண்பர்கள் யாரென்பதை அறிய முடியும். நண்பர்களாக நாங்கள் யாரை நினைத்தோமோ அவர்கள் ஆகஸ்ட் 05,2019ல் (காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நாள்) எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு வாய் திறக்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டு மக்கள் எழுப்பிய குரல் காஷ்மீர் வரை எதிரொலித்தது. இதை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம்.

(ஒமர் அப்துல்லா - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் - முதல்வர் மு.க.ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில்)

Pin It