வரலாற்றின் ஓட்டத்தில் நெடுங்காலம் சிதறுண்டோ அல்லது தனித்தன்மையின்றியோ இருந்த தமிழர் நிலம் ஒரு நவீன தேசத்துக்குரிய பண்பை தனக்கென ஓர் அரசின் (state) மூலம் பெற்ற நாள். எந்த இந்தியா தமிழ்நாட்டையோ வங்கத்தையோ காஷ்மீரையோ அசாமையோ கேரளத்தையோ மகாராஷ்ட்டிரத்தையோ தேசங்கள் என மறுக்கிறதோ அந்த இந்தியாவே தவிர்க்க இயலாத நிலையில் மொழிவழி அரசுகளை அங்கீகரித்த நாள்.

இந்த நாளின் அரசியல், வரலாற்று முக்கியத்துவத்தை அறிந்து நமது நிகழ்கால, எதிர்கால தமிழ்த்தேசிய அரசியலை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என தன்னாட்சித் தமிழகம் அறைகூவல் விடுக்கிறது. இந்த நாளின் முக்கியத்துவத்தை விளக்கி சில கருத்துகளைக் கூற விரும்புகிறேன்.

kashmi agitation in us1956 இல் மொழிவாரி மாநிலங்கள் என்றழைக்கப்பட்ட மொழிவழி தேசங்களின் உருவாக்கம் என்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றில் 1947 ஆகஸ்ட் 15 க்கு உள்ள முக்கியத்துவத்தை அனைவரும் கூறுவார்கள். ஆனால் இங்கே பல தேசிய இனங்களைப் பொறுத்தவரை 1956 நவம்பர் 1 அதைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ஏனென்றால் இன்றைய உலகின் அடிப்படை அலகுகளாக உள்ள தேசங்கள் என்கிற அலகின் நவீன வடிவத்தை இங்கே பல தேசிய இனங்கள் இந்த நாளில்தான் பெற்றன. அதாவது புவியியல் அலகுகளாகவும் நிர்வாக அலகுகளாலவும் இருந்த பல அமைப்புகள் இந்த நாளில் தேசிய அலகுகளாகவும் அரசியல் அலகுகளாகவும் உருப்பெற்றன.

ஐரோப்பாவில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நடைபெற்றது போன்ற தேச அரசு உருவாக்கம் இங்கே நடைபெற்றுவிட்டது என்று நான் கூறவரவில்லை. சாம்ராஜ்யங்கள் சிதைந்து நிலப்பிரபுத்துவம் உடைந்து முதலாளித்துவ ஜனநாயக தேச அரசுகள் அங்கே உருவாயின. முழுமையான இறையாண்மை கொண்ட தேசங்கள் உருவாயின. அந்நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்தியாவில் மொழிவழி அரசுகள் அமைந்தை மிகப்பெரிய பெரிய மாற்றம் என்று கூறுவதற்கு தோன்றாது.

ஆனால் இந்தியா அல்லது ஆசிய வரலாற்று எதார்த்தையும் காலனியச் சூழலையும் இந்தியாவின் சாதிய-நிலப்பிரத்துவ பின்புலத்தையும் ஜனநாயக அரசியல் கீழிந்து மேல்நோக்கி வராமல் மேலிருந்து கீழ்நோக்கி வந்த துணைக்கண்ட நிஜத்தையும் அடிப்படையாக வைத்துப் பார்த்தால், 1956 மிகவும் முக்கியமானதொரு மாற்றம்தான். ஐயமே இல்லை.

மொழிவழி மாநிலங்கள் என்கிற கருத்தாக்கத்தை இந்தியப் பேரரசு அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை. தொடக்கத்தில் தங்கள் கட்சியையேகூட மொழிவழியாக பிரித்துக்கொண்டிருந்தும், மொழிவழி மாநிலங்கள் அமைப்போம் என்று உத்தரவாதம் அளித்திருந்தும், சுதந்திரம் தங்கள் கைக்கு வந்தபிறகு, “உறுதிமொழிப் புகழ்” ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி. மொழிவாரி மாநிலக் கோரிக்கைகளை முதலில் ஏற்கவில்லை. 1948 இல் நியமிக்கப்பட்ட மொழிவாரி மாகாணங்கள் ஆணையம் (தர் ஆணையம்), இவ்விவகாரத்தை ஆராய்ந்துவிட்டு இந்தியாவின் ஒட்டுமொத்த நலனுக்கு மொழி வழியில் அரசுகளை அமைத்தல் சரியல்ல என்றே கூறியது. 1949 இல். ஜவஹர்லால் நேரு, வல்லபபாய் பட்டேல், பட்டாபி சீதாராமய்யா ஆகியோரைக் கொண்ட ஜேவிபி குழுவும் புதிய மாகாணங்களை அமைப்பதற்கு காலம் கனியவில்லை என்று நழுவியது. ஆனால் பெரும்பாலான மொழிவழி பகுதிகளில் – குறிப்பாக ஆந்திரத்தில் – நடைபெற்றப் போராட்டங்களும் பொட்டி ஸ்ரீராமுலுவின் உயிர்க்கொடையும் வேறுவழியின்றி நேருவை வழிக்குக் கொண்டுவந்துவிட்டது. மொழிவழி மாநிலங்கள் என்கிற கருத்தை இந்திய அரசு ஏற்றுக்கொள்ள நேரிட்டது.

பிரிட்டிஷ் காலத்திலும் பிறகும் நடைபெற்ற கூட்டாட்சி-தன்னாட்சி விவாதங்களோடு இந்த மாற்றங்களைச் சேர்த்துப்பார்த்தால், இந்திய அரசின் வேண்டாவெறுப்பான முடிவாக இது இருந்தாலும், இந்தியாவிலுள்ள பல்வேறு தேசிய இனங்களைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய வரலாற்று மைல்கல்லாகும் என்பதே உண்மை.

இதில் இந்தியா போன்ற சில நாடுகளே விதிவிலக்கு. காலனியாதிக்கத்துக்கு உட்பட்டிருந்த வேறு பல ஆசிய, ஆஃப்பிரிக்க நாடுகளில், காலனிய காலத்துக்குப் பின் இத்தகைய மாற்றங்கள் நடைபெறவில்லை என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். இலங்கை ஓர் எடுத்துக்காட்டு. 1984 திம்புப் பேச்சுவார்த்தையின் போதுகூட இலங்கையின் வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைக்க வேண்டும் என்று கோரி தமிழீழத் தாயகத்தின் நில உறுதிப்பாட்டை போராளிகள் முன்வைத்தார்கள். குர்திஸ்தான். பாலஸ்தீனம் என பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். வரையறுக்கப்பட்ட தாயக நிலம் என்பது இவர்களுக்கு இந்த நிமிடம் வரை கனவாகவே இருக்கிறது.

தங்கள் நிலப்பரப்பில் முழுமையாக அல்லவென்றாலும் சட்டபூர்வமான ஓர் அதிகாரத்தையாவது பெற வேண்டும் என்பதற்கானப் போராட்டங்கள் இந்த உலகில் அப்போதும் இப்போதும் ஏராளம். தனி நாடு, தன்னாட்சி, தனி மாநிலம், தனி மாகாணம், சுய நிர்வாகம், சுயாட்சிக் குடியரசு. சுயாட்சி மாவட்டம், சிறப்புப் பிராந்தியம் என பல பெயர்களால் தாயகப் போராட்டங்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. கூர்க்காலாந்தும் போடாலாந்தும்கூட இதற்கு எடுத்துக்காட்டுகள்.

இவ்வாறாக பலப்பல தேசிய இனங்கள் தாம் வாழும் நிலத்தின்மீதான சட்டபூர்வ வரையறைசார்ந்த அதிகாரத்தை பெறுவதே பெரும்பாடாக இருக்கும் நிலையில், இந்தியாவிலுள்ள தேசிய இனங்களுக்கு 1956 ஒரு மிகப்பெரிய வரலாற்றுப் பாய்ச்சலாகும்.

பிற்காலத்தல் தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட, 1956 நவம்பர் 1 இல் உருவான சென்னை மாநிலம் என்பது தமிழ்நாட்டின் வரலாற்றில் அவ்வாறான ஒரு படிநிலையாகும். நாம் எல்லைப்புறங்களில் சிலவற்றை இழந்திருக்கலாம். இந்த அரசு என்பது முழுமையான இறையாண்மை கொண்ட அரசு இல்லைதான். ஆனால் இந்த அரசின் உருவாக்கம் எத்தகைய வரலாற்று வாய்ப்பு என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
அதன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துகொள்ளவே இல்லை. இந்த நாளை நாம் கொண்டாடுகிறோமா இல்லையா என்கிற சாதாரண கேள்வி அல்ல இது. இந்த வரலாற்றுப் புள்ளியை நாம் எப்படி கடந்திருக்கிறோம் என்கிற கேள்வி.

அரசு என்பது ஒன்று. அந்த அரசின் அதிகாரங்களுக்கான போராட்டம் என்பது மற்றொன்று. இந்த அரசு எவ்வளவு குறைபாடுகள் கொண்டதாக இருந்தாலும் இது நமது அரசு. இந்த எண்ணம் நமக்குத் தோன்ற வேண்டும். இது எவ்வளவு குறைபாடு உடையதாக இருந்தாலும்சரி - இது நமது அரசு. இதன் அதிகாரங்கள் ஒரு நகராட்சியின் அதிகாரத்தைவிட குறைவாக இருக்கிறது என்று புலம்பினாலும் சரி, இது நமது அரசு. (அரசு என்று சொல்லும்போதெல்லாம் STATE என்ற சொல்லின் முழுமையான அர்த்தங்களைக் கொண்டு சொல்கிறேன். GOVERNMENT என்று அல்ல. GOVERNMENT என்பதை அரசாங்கம் என்றே சொல்வோம்).

State Government என்கிற ராஜ்ய சர்க்காரின் மீதான நமது அணுகுமுறை என்பது வேறு. State மீதான நமது அணுகுமுறை என்பது வேறு. எது நமது அரசு என்பதும் அதை யார் ஆள்கிறார்கள், எப்படி ஆள்கிறார்கள் என்பதும் வேறு வேறு.

ஆனால் நமக்கு தமிழ்நாடு என்று ஒரு State இருக்கிறது, அதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய Government இருக்கிறது. அதற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் இல்லையென்றாலும் அதற்கு இயல்பாகவே ஒரு மக்களேற்புத்தன்மை கொண்டது (legitimate) என்பதால் சர்வதேச அமைப்புகள் அதை மதிக்கவும்செய்கின்றன என்பதையெல்லாம் நாம் சரிவர உணர்வதே இல்லை. நேற்று மாகாணம் இருந்தது போல இன்று மாநிலம் இருக்கிறது. இது ஒரு நிர்வாக அலகு என்றுதான் நாமும் நினைக்கிறோம்.

இதன் காரணமாகத்தான் தமிழ்நாடு என்கிற அரசின் அரசியல் உரிமைகள் குறித்த விவகாரத்தில் நாம் தெளிவான முடிவுகளை எடுக்கமுடியாமல் போகிறோம். நமக்கென ஓர் அரசு அமைந்திருப்பதன் வரலாற்று முக்கியத்துவத்தை நாம் அறியாமலிருக்கிறோம். நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதுபோல, அந்த அரசின் அடிப்படைகளை இன்றைய பாஜக அரசு அடித்துநொறுக்கும்போது மட்டும் துடிக்கிறோம். எடப்பாடியை பார்த்து எரிச்சலுகிறோம். பிணராயி விஜயனைப் பார்த்து பொறாமைப்படுகிறோம். ஆனால் ஆண்டாண்டு காலமாக நவம்பர் 1 ஆம் தேதியை கேரள பிறவி தினம் என கேரளத்தின் பிறந்தநாளாக அவர்கள் (கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ்காரர்கள்) கொண்டாடி வருவதை நாம் பார்க்கத் தவறுகிறோம். அவர்கள் சாட்சாத் அக்மார்க் இந்தியர்களாக இருந்துகொண்டே பச்ச மலையாளிகளாகவும் இருக்கிறார்களே என்று குழம்புகிறோம். தலையைச் சொறிந்து கொள்கிறோம்.

tamil naduதேசிய இனங்களின் வரலாறும் அவர்கள் முழுமையான இறையாண்மையைப் பெறுவதற்கான போராட்டங்களின் அனுபவமும் சொல்வதென்ன? தமக்கென ஒரு மக்களேற்புத் தன்மை கொண்ட அரசாங்கத்தைப் (legitimate government) பெறுவதும் பிறகு அதை தன்னாட்சி அல்லது தனியாட்சியை நோக்கி நகர்த்துவதுமான ஒரு போக்கு இயல்பானதுதான். தமக்கென வரையறுக்கப்பட தாயகப் பரப்பைக்கூட வென்றெடுக்க முடியாமல் பல இனங்கள் அவதியுறும்போது. அதை கால ஓட்டத்தில் – அவ்வளவாக போராடாமலேயே – பெற்ற தமிழ்நாட்டினருக்கு அதன் அருமை தெரியவில்லை என்றுதான் சொல்ல முடியும்.

தமிழ்நாடு என்கிற அரசு நம்முடையது. இந்த அரசு இன்று கொண்டிருக்கும் அதிகாரங்களைக் காப்பாற்றுவதும் இந்த அரசுக்காக மேலும் அதிகாரங்களை வென்றெடுப்பதும் நமது கடமையாகும். தில்லிப் பேரரசியவாதிகள் நமது அதிகாரங்களை தொடர்ந்து பறித்துக் கொண்டிருப்பதற்கு எதிராக நாம் இந்த அரசை நமது அரசாக கருதி அதற்கான சாசன உரிமைகளுக்காகப் போராட வேண்டும். திட்டமிட்ட அல்லது தங்குதடையற்ற குடியேற்றங்கள் மூலமாக தமிழ்நாட்டை நமது தாயகமாகவே இல்லாமலாக்குவதற்கான நிலைமைகள் தொடர்ந்தால், நாளை மக்களேற்புத்தன்மையுள்ள நமது அரசு, நமது அரசாகவே இல்லாமல் போய்விடும். ஸ்காட்லாந்தைப் போல. அதன் பிறகு போராடினால்கூட பயனின்றி போகலாம்.

மாநில உரிமைகள் என்றோ தன்னாட்சி என்றோ அழைக்கப்படுகிற போராட்டங்கள் அவ்வகையில் இக்காலத்தில் மிகவும் முக்கியமானவையாகும். தனிப்பட்ட முறையில் கல்வி உரிமை, மொழி உரிமை, கனிமவள உரிமை அல்லது வரி உரிமை என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று என்கிறோம். தமிழ்நாட்டில் தமிழ்நாட்டவர்க்கே 90 சதவீத வேலை எனச் சட்டமியற்று என்கிறோம். வடகிழக்கு மாநிலங்கள் போல இங்கேயும் உள்வரம்பு அனுமதி வேண்டும் என்கிறோம். இவையெல்லாம் இடைக்காலமானவைதான் என்றும் கூறுகிறோம். ஆனால் இவற்றையெல்லாம் இணைத்து ஒரு தன்னாட்சி உரிமைக்கான போராட்டமாக உயர்த்துவதில்தான் இங்கே நிறைய பேருக்கு சிக்கல் இருக்கிறது.

இந்த மனத்தடையை இந்த நாளில் நாம் தகர்த்தெறிய வேண்டும் என்று விரும்புகிறோம். அதைத் தகர்த்தெறிய வேண்டுமானால், 1956 இன் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழர்களே, தமிழர்களுக்கென்று ஒரு தனி மாநிலம் அல்லது அரசு அமைந்ததும், பின்பு அது தமிழ்நாடு என்று பெயர் பெற்றதும், அது ஓர் அரசியல்சாசன ரீதியில் சட்டபூர்வ இறையாண்மை கொண்ட அரசாக இந்திய ஒன்றியத்தில் நீடிப்பதும் யதார்த்தம். அந்த புறநிலையின் சாத்தியங்களை நாம் மேலும் புரிந்து கொண்டு, அதை நீட்டித்தால் அது தமிழர்களின், தமிழ்நாட்டின் இறையாண்மைக்கான போராட்டத்துக்கான ஆகச்சிறந்த போர்க்களமாக அது திகழமுடியும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இது நமது அரசு. அதாவது இந்த அரசு நமக்கே நமக்குச் சொந்தமானது. வேறு யாருக்கும் அல்ல. இந்த அரசின் ஆட்சி பீடத்தில் நாம்தான் இருக்க வேண்டும். அதற்கு உள்ளும் வெளியுமாக நாம் நமது உரிமைகளுக்காக போராட வேண்டும். நாம் அங்கே இல்லையென்றால் யாரையெல்லாம் எதிரிகள் என்றும் துரோகிகள் என்றும் சொல்கிறோமோ அவர்கள் அங்கே உட்காருவார்கள்.

இன்று மக்களேற்பு பெற்றுள்ள இந்த அமைப்பை தில்லி வல்லாதிக்கத்தின் ஆசிபெற்ற ஜனநாயக விரோதிகள் சிதைத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழர்களின் அரசியல் அடித்தளத்தை தில்லிப் பேரரசு உடைத்துக்கொண்டிருக்கிறது. நீங்களோ கருணாநிதி என்ன கிழித்தார், எடப்பாடி என்ன செய்வார் என்று எகத்தாளம் செய்துகொண்டிருக்கிறீர்கள். உள்ளேயே உங்களுடைய ஜன்மவிரோதி அமர்ந்து 1956க்கு முன் காலத்தை பின்நகர்த்த முயல்கிறான். நீங்கள் அதனாலென்ன, இது முழுமையான தீர்வு அல்லவே எனப் பாடுகிறீர்கள்.

தமிழ்நாடு - இது நமது அரசு. நாம் யாரும் அனைத்து மனிதவுரிமைகளையும் வாய்த்தவர்கள் அல்ல. ஆனால் அதற்காக போராடுகிறோம். அதைப்போலவே இந்த அரசும் எல்லா உரிமைகளையும் கொண்டதல்ல. நாம் அதற்காக போராடுவோம். பாட்டாளிகளின் உரிமைப் போராட்டமும் ஒடுக்கப்பட்டோரின் உரிமை போராட்டமும் நீண்ட நெடுங்காலம் நீடிப்பதுபோல நமது தாயகத்தின் உரிமைப் போராட்டமும் நீண்ட நெடுங்காலம் நீடிக்கவே செய்யும். முழுமையான பொதுவுடைமை வரும்வரை தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடுவது தவறு என்று சொல்ல முடியாது. சாதியற்ற சமூகம் மலரும்வரை இட உரிமை போன்றவற்றை சலுகை என்று கூற முடியுமா?

தன்னாட்சி என்பது அப்படிப்பட்டதுதான். தன்னாட்சி என்பது பொருள் அல்ல. அது ஒரு நிகழ்முறை. அது இலக்கிடம் (destination) அல்ல, பயணம்.

பின்னோக்கிச் சுழன்று கொண்டிருக்கிறது இந்தியத் துணைக்கண்ட வரலாற்றுச் சக்கரம். இப்போது ஒருவேளை நாம் தமிழ்நாட்டைக் காப்பாற்றாமல் போனால், பின் எப்போதும் அதைக் காப்பாற்றும் வாய்ப்பில்லாமல் போய்விடுமோ என்று உண்மையிலேயே அச்சப்பட வேண்டியிருக்கிறது. இந்த நாடு கூறுப்போடப்படுமோ இந்த மண்ணில் தேர்தல் முடிவுகளை மாற்றக்கூடிய அளவுக்கு புலப்பெயர்ச்சிகள் நடக்குமா என்றெல்லாம் எண்ணிப் பார்க்கவும் முடியாத அச்சம் ஏற்படவே செய்கிறது. எதிரிகள் தமிழர்களை சாதிவெறியூட்டி பிரிப்பதில் பெருவெற்றி பெற்றிருக்கிறார்கள். இங்கே ஒவ்வொரு தமிழ்க்குழுவும் சுயமோகம் பிடித்தலைகிறது.

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகப் போராடுகிறேன் என்று சொல்பவர்களில் ஆகப் பெரும்பான்மையோர் கற்பனை உலகத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்கள். அல்லது “நான் முதல்வரானால் ... ” என்று பத்தாம் வகுப்பு கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பக்குவமும் உலக அறிவும் வாய்ந்த தலைவர்கள் பலர் இல்லாத சூழலில் நாம் சிக்கிக்கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டைக் காப்பாற்றுவதற்கான போராட்டம் என்பது வேறு எதுவும் அல்ல. தமிழ்நாட்டு அரசாங்கத்தை நமது கையில் வைத்திருப்பதுதான். அதை நேரடியாக கைப்பற்றி வைத்திருப்பீர்களோ அல்லது யார் ஆட்சியில் இருந்தாலும் அவர்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கைகொள்வீர்களோ – அது வேறு விஷயம். அது அவரவர் அரசியல் தந்திரோபாயத்தைப் பொறுத்தது. ஆனால் அது ஒருபோதும் நமது எதிரிகளிடமோ அல்லது எதிரிகளின் கையாட்களிடமோ இருக்கக்கூடாது. அப்படி இருக்குமானால் நமக்கு தோல்வி நிச்சயம், சர்வ நிச்சயம். அது நம்மிடம்தான் இருக்க வேண்டும். அது மட்டுமல்ல, வரலாறு கொடுத்த மாபெரும் வாய்ப்பை மண்ணாக்கிவிடக்கூடிய உச்சகட்ட மூடத்தனம் அது. பச்சைத் துரோகம்.

சோழ, பாண்டிய பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பின். நாம் நமது இறையாண்மையை இழந்தோம். அத்துடன் நமது நாடும் துண்டுதுண்டுகளாக ஆகி இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு சாம்ராஜ்யங்களின் கோரப்பசிகளுக்கு இரையாகிவந்த்து. பின்பு பிரிட்டிஷாரின் ஏகாதிபத்திய வேட்டைக்கு இரையானோம். ஆனால் பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளின் கீழ் நாம் ஒரு ஒருங்கமைந்த நிலமாக மீண்டும் உருவானோம். இந்தியா மட்டுமல்ல, தமிழ்நாடும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ்தான் நிர்வாக ரீதியில் இணைக்கப்பட்ட பெருநிலமாக (தமிழ் பேசாத பிற பகுதிகளோடு இணைந்திருந்தாலும், தமிழ் பேசும் சில பகுதிகளை இழந்திருந்தாலும்) உருவானது. அந்த மாகாணம் – சென்னை மாகாணம் – மாநிலமாக உருவானபோது, கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, நமக்கான நிலம் கிடைத்தது. நமது நிலம் மறுபிறவி எடுத்தது. அழகாக அதற்குத் தமிழ்நாடு எனப் பெயர்சூட்டி மகிழ்ந்தோம்.

இன்று நாம் வரலாற்று ரீதியில் தேசமாகவே (NATION) உள்ளோம். அரசியல்சாசன ரீதியில் அரசாக (STATE) இருக்கிறோம். தொலைதூரத்தில் ஒரு தேசிய-அரசு இருக்கிறது (NATION STATE). ஆனால். அது தொலைதூரத்தில்தான் இருக்கிறது.

ஆனால் இன்று நாம் தேசமாகவும் அரசாகவும் இருக்கும் யதார்த்தத்தை மறந்துவிடக்கூடாது. இந்த தேசத்தையும் இந்த அரசையும் காப்பாற்றியாக வேண்டும்.

இந்த அரசை, இந்த அரசாங்கத்தை, அந்த அரசாங்கத்தின் துறைகளை, இந்த அரசாங்கத்தின் பொதுச்சொத்துகளை, கிட்டத்தட்ட நூறாண்டுகளாக நாம் போராடிப் போராடிப் பெற்ற சட்ட உரிமைகளை, திட்டங்களை, வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பை நாம் தில்லிப் பேரரசியவாதிகளிம் இழந்துவிட முடியாது. இழந்துவிடவும் கூடாது. கையில் உள்ள அதிகாரத்தை இழந்துவிட்டு கனவில் உள்ள அதிகாரத்துக்காக வாயைப் பிளந்து நிற்கும் ஏமாளிகளாக நாம் ஆகிவிடக்கூடாது. நிஜத்திலிருந்து உண்மையைத் தேடுங்கள் என்றார் மாவோ. காலம் கருது என்றார் வள்ளுவர். எண்ணித் துணிக கருமம் என அவரிடமிருந்து கடன் பெற்றுச் சொன்னார் அண்ணா.

வரலாற்றுப் பாதையில் நடைபோடுவது, ஓடுவது, பாய்ந்து முன்னேறுவது, தாவி இலக்கை அடைவது, அல்லது தாவும்போது கீழே விழுவது, அடிபடுவது, முட்டிக்கொள்வது, பின்னோக்கி நகர்வது. பின்னங்கால் பிடரியில் பட திரும்பி ஓடிவருவது. அப்படியே படுத்து தூங்கிவிடுவது. ஓய்வெடுப்பது, பிறகு எழுவது, நகர்வது. ஊர்வது. நிமிர்வது. பிறகு மீண்டும் நடைபோடுவது. ஓடுவது, பாய்ந்து முன்னேறுவது... என எல்லாம் இருக்கும். இப்படித்தான் இந்த உலகம் சென்றுகொண்டிருக்கிறது. தமிழ்நாடும் விதிவிலக்கல்ல.

ஏமாளிகளாகவும் கற்பனாவாதிகளாகவும் இருக்காதீர்கள். நிஜ உலகுக்கு வாருங்கள். இந்த அரசை, இந்த அரசாங்கத்தைக் கைப்பற்றுங்கள். இறுதி இலக்கை அடையும் வரை போராடுங்கள்.

இப்போது, தமிழ்நாட்டின் தேசியத் தன்னாட்சிக்காகப் போராடத் தொடங்குங்கள்.
1956 ஐ 1965 ஆக மாற்றுங்கள்.

எல்லை காத்த சாமிகளுக்கு வீரவணக்கங்களுடன்,

- ஆழி செந்தில்நாதன், தன்னாட்சித் தமிழகம்

Pin It