பாஜக ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனநாயகத்தின் மீதும், புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து மத்திய அரசின் கீழ் அனைத்து அதிகாரங்களையும் குவித்து வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநரைக் கைப்பாவையாக வைத்துக் கொண்டு தமிழ்நாடு மட்டுமின்றி மேற்கு வங்கம், மகாராட்டிரா, ஆந்திரா, தெலங்கானா, டில்லி, புதுச்சேரி மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்கிறது.

இந்தியாவின் பல்வேறு மொழி, இன, கலாச்சார, பண்பாட்டு அடையாளங்களை அழித்து விட்டு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சட்டம், ஒரே மதம், ஒரே தேர்தல் என ஒற்றைப் பாசிச சர்வாதிகார பாரத நாட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இராமர் கோவில் திறப்பு, பொது சிவில் சட்டம், குடியுரிமைத் திருத்தச் சட்டம் என ஜனநாயக இந்தியாவைத் தீவிர இந்துத்துவ நாடாக மாற்றுவதற்கான திட்டத்தோடு 2024 நாடாளுமன்றத் தேர்தலைப் பா.ஜ.க சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆர் எஸ்.எஸ். இன் நூறாண்டுக் கால கனவை நிறைவேற்ற மோடி, அமித்சா உள்ளிட்ட அடியாட்களை தேர்தல் களத்தில் இறக்கிவிட்டுள்ளது. இப்படியான வேளையில் காந்தி குடும்பத்திற்கு அப்பாற்பட்டு சமூக நீதி அடிப்படையில் காங்கிரசு கட்சிக்கு தலைவர் நியமித்து இந்தத் தேர்தலைக் காங்கிரசு சந்திக்கிறது. இந்துத்துவம் எதிர் சனநாயகம் என்ற அடிப்படையில் இந்தத் தேர்தல் புதிய களமாக அமைந்துள்ளது. இப்படியான வேளையில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இந்தியா கூட்டாட்சி (Federalism) நாடாகும். பல மாநிலங்களின் ஒன்றியம் (Union of states) தான் இந்தியா. ஆனால், அதற்கு மாறாக இந்தியாவை ஒற்றை நாடாக பா.ஜ.க மாற்றிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என அழைத்ததற்காக பாஜக தலைவர்கள் எப்படி கண்டனக் குரல் எழுப்பினார்கள் என்பதை நாம் அறிவோம்.

சட்டப்படி பொருந்தக்கூடிய ஒன்றியம் என்ற சொல்லைக் கூட பாஜக அரசு சொல்ல மறுத்த நிலையில் இந்தியா என்பது யூனியன் ஆப் ஸ்டேட்ஸ் என்று குறிப்பிட்டு இதுதான் இந்தியக் கூட்டாட்சியின் தத்துவம் என்று காங்கிரசு தனது தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தேசியக் கல்விக் கொள்கை மாநில அரசுகளின் ஆலோசனைகளுக்குப் பிறகே நடைமுறைப்படுத்தப்படும் என்றும் நீட், கியூட் போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம் என்றும் மாநில அரசுகள் தங்கள் விருப்பப்படி மாணவர்கள் சேர்க்கையை நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானதாகவும் கூட்டாட்சி தத்துவத்தைச் சிதைக்கும் நோக்கிலும், மாநிலக் கட்சிகளை இல்லாமல் ஒழிக்கும் திட்டத்தில் பா.ஜ.க.வால் முன்மொழியப்பட்ட, ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை கொண்டுவரப்படாது என்றும் காங்கிரசு தெரிவித்துள்ளது.

அரசியல் சாசனம் 8வது அட்டவணையில் ஏராளமான மாநில மொழிகள் சேர்க்கப்படும் என்றும் வரி வசூலில் மாநிலங்களை ஏமாற்றும் பாஜகவின் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் மாநிலங்களுக்கு அதன் உரிமைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

நாட்டின் எல்லை, பாதுகாப்பு, ராணுவம், நிதி, வெளியுறவு, அணுசக்தி, வான், கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட 100 துறைகள் மத்திய அரசிடம் உள்ளன. இத்துறைகளில் மத்திய அரசு மட்டுமே முடிவுகள் எடுக்க முடியும். அதற்குத் தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்ள முடியும்.

காவல், சட்டம் ஒழுங்கு, பொது சுகாதாரம், உள்ளாட்சி, சிறைத்துறை, பொது வழிபாடு, மது விற்பனை உள்ளிட்ட 61 துறைகள் மாநில அரசுப் பட்டியலில் உள்ளன. இத்துறைகளில் மாநில அரசுகள் தனித்து முடிவுகள் எடுக்கலாம். தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்ளலாம். அதே நேரம் எப்போது நினைத்தாலும் மாநில அரசின் பட்டியலில் உள்ள எந்தவொரு துறையையும் மத்திய அரசு கையில் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு உதாரணம், நெருக்கடி நிலை காலத்தில் இந்திரா காந்தி (1976 இல்) கல்வி, நீதி, நிர்வாகம் உள்ளிட்ட 5 துறைகள் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்குக் கொண்டு சென்றார்.

மின்சாரம், தொழில் உள்ளிட்ட 52 துறைகள் பொதுப்பட்டியலில் உள்ளன. இத்துறைகள் குறித்து மாநில அரசுகளும் முடிவு எடுக்க உரிமை உண்டு. ஆனால், இதில் மத்திய அரசு தலையிடும் போது மாநில அரசால் ஒன்றும் செய்ய முடியாது. இப்படியான நிலையில்,

பொதுப்பட்டியலில் உள்ள பலதுறைகளை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்து ஆய்வு செய்யப்படும் என காங்கிரசு அறிவித்துள்ளது.

பா.ஜ.க காசுமீரின் சிறப்பு அதிகாரத்தைப் பறித்து காசுமீரைச் சிதைத்தது. அதற்கு மாற்றாக ஜம்மு-காசுமீருக்கு முழு மாநில அந்தஸ்து உடனடியாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இப்படியாக காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் மாநில உரிமைகள் குறித்துக் கவனம் செலுத்தியுள்ளது. ஒருவேளை இந்தியா கூட்டணி வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மேற்கண்டவைகளை நடைமுறைப்படுத்துமா என்றால் அது நம் கையில்தான் உள்ளது.

காங்கிரஸ் கட்சி மட்டும் தனித்து இருந்திருந்தால் இப்படியாக தனது தேர்தல் அறிக்கையைத் தயாரித்திருக்காது. மாநில உரிமைகள் பேசும் கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியில் இருப்பதால்தான் இந்த மாற்றத்தை காங்கிரஸ் கொண்டு வந்துள்ளது. ஏனெனில் காங்கிரசும் மாநில உரிமைகளைப் பறித்த கட்சிதான்.

1942 இல் புதுடில்லியில் கூடிய காங்கிரஸ் செயற் குழு மாநிலங்களுக்குப் பிரிந்து வாழும் உரிமை உண்டென்று உறுதிகூறி

“ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்களை அவர்கள் விருப்பத்திற்கு மாறாக, இந்திய யூனியனுள் இருக்கும்படிக் கட்டாயப்படுத்த காங்கிரஸ் விரும்பவில்லை...” என்று தீர்மானம் நிறைவேற்றியது.

பாகிஸ்தான் பிரிவினையை ஏற்கும் தீர்மானத்தை முன்மொழிந்து டில்லி நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு பேசியபோது,

"விரும்பாத மாநிலம் அல்லது மாநிலங்களுக்கு இந்திய சமஷ்டியிலிருந்து பிரிந்து வாழும் உரிமை உண்டென்று காங்கிரஸ் மகாசபை ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படித்தான் இப்போது ­பாகிஸ்தானிலுள்ள மாநிலங்கள் பிரிந்து செல்ல அனுமதிக்கப் பட்டிருக்கின்றன." என்று கூறினார். பின்னாட்களில் காங்கிரசும் சரி, காங்கிரசு தலைவர்களும் மிகக் கொடுமையாகத் தேசிய இனங்களை ஒடுக்கினர். மொழி வழி மாநிலங்கள் அமைவதைக் கூட தடுத்து வன்முறைத் தாண்டவமாடினர். தற்போது உள்ள பா.ஜ.க.வுக்கு மாநில உரிமைகளை ஒடுக்குவதில் முன்னோடி காங்கிரசு தான் என்றால் மிகையாகாது.

1963-இல் பிரிவினைத் தடைச் சட்டத்தை இந்திய அரசு கொண்டு வந்து மொழிவழித் தேசிய இன கோரிக்கை முற்றிலும் ஒடுக்கப்பட்டது. இதன் பின்னனியில் திராவிட நாடு விடுதலைக் கோரிக்கையை அறிஞர் அண்ணா கைவிட்டு விட்டு, விடுதலைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன; நாங்கள்தாம் கைவிட்டு விட்டோம் என்றார்.

" சுதந்திரத்திற்குப் பிறகு மத்திய, மாநில அரசுகளின் உறவு தற்போது மிகவும் மோசமாகியுள்ளது என்று தெரிவித்துள்ளதை எளிதில் கடந்து போக முடியாது. எனவே, வெளியுறவு, பணம் அச்சடிப்பு, எல்லைப் பாதுகாப்பு, இராணுவம், தொலைத் தொடர்பு உள்ளிட்ட துறைகளை மத்திய அரசும் கல்வி, மருத்துவம், வேளாண்மை, காவல், வருவாய் ஈட்டல் உள்ளிட்ட துறைகள் முழுமையாக மாநில அரசின் தன்னாட்சி அதிகாரமாக இருக்க வேண்டும் என்றும் மாநில சுயாட்சி முழக்கத்தை அறிஞர் அண்ணா வலியுறுத்தினார்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாநில சுயாட்சி கோரிக்கைகள் பரவத் தொடங்கின. மாநிலக் கட்சிகள் வலுவாக உள்ள மாநிலங்களில் எல்லாம் மாநில சுயாட்சிக் கொள்கை முன்னெடுக்கப்பட்டது. ஜோதிபாசு, என்.டி.ராமராவ், ராமகிருஷ்ண ஹெக்டே எனப் பல முதல்வர்கள் மாநில சுயாட்சிக் கோரிக்கையை முன்வைத்தார்கள். அறிஞர் அண்ணா கூறியதைத் திராவிட இயக்கங்கள் இன்றும் தொடர்கின்றன.

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு தனது கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குப் பாரபட்சம் காட்டுகிறது, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றை மத்திய அரசுகள் தவறாகப் பயன்படுத்துவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து கொண்டிருக்கிறது. அதிக வரி வருவாயை மத்திய அரசுக்கு கொடுத்தாலும், தமிழ்நாடு உள்ளிட்ட பா.ஜ.க அல்லாத மாநிலங்களுக்கு மிகக் குறைவாகத் திரும்ப கிடைக்கிறது. அங்குள்ள மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது என்பதையும் எல்லா மாநிலங்களும் உணர்ந்து கொண்டன. இந்த நெருக்கடியைக் காங்கிரசும் எதிர்கொண்டுள்ளது. இதன் விளைவாகத்தான் இந்திய நாடாளுமன்றத்தின் தற்போதைய தேர்தலில் மாநில சுயாட்சி உரிமை பேசு பொருளாக இருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு அதிகாரத்தில் இருந்தாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் அந்த அரசு செயல்பட முடியும். குறிப்பாக முதலமைச்சர் இருக்க, மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் ஒப்புதலின்றி எதுவும் இங்கு நடைமுறைப்படுத்த முடியாது.

இதன் விளைவாகத்தான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் போன்றோரும் ‘கூட்டாட்சி’ பற்றி குரலை எழுப்பிவருகின்றனர். மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் காங்கிரசு உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் துடைத்தெறியப்படும் என்ற அச்சம் அக்கட்சிகளுக்கு மேலோங்கியுள்ளது. தீவிர இந்துத்துவம் பேசும் சிவசேனையைக் கூட அந்த அச்சம் பற்றிக் கொண்டுள்ளது.

 இதுதான் இந்தியக் கூட்டணியின் குரலாக வெளிவந்திருக்கிறது. இந்த அழுத்தம் தான் காங்கிரசை சமூக நீதி பேச வைத்திருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நாமும் கூட்டாட்சித் தத்துவத்தின் தேவையை மக்களிடத்தில் கொண்டு செல்வோம். அதன் வழியாகத் தேசிய இனங்களின் உரிமைகளைப் பரப்புவோம், தமிழ்த் தேசிய உணர்வை மக்கள் மயமாக்குவோம். சுதந்திர தேசங்களை உருவாக்குவோம்.

- க.இரா.தமிழரசன், தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம்

Pin It