காலனி ஆதிக்கத்தின் மறுவடிவமாகவே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் அமைந்துள்ளன என்பதைப் பற்றிப் பல அரசியல் சட்ட வல்லுநர்கள் ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி வருகின்றனர்.

ஆர்கியா சென்குப்தா காலனி அரசமைப்புச் சட்டம் உருவான கதை (An Origin Story – The Colonial Constitution, 2023, Juggernaut Books) என்ற நூலை அண்மையில் எழுதியுள்ளார். இந்நூலில் உள்ள பல கருத்துகள் ஏற்கெனவே பல ஆய்வாளர்களால் குறிப் பிடப்பட்டாலும் ஆர்கியா சென்குப்தா புதிய பல தரவுகளை அளித்து இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் வலியுறுத்தப்பட்ட சுயச்சார்பு அரசியல் கொள்கையும் மக்களாட்சி மாண்பைப் போற்றும் விதிகளும் இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளில் காண்பது அரிதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு இந்திய அரசமைப்புச் சட்டம் பிரித்தானிய அடக்குமுறை ஆட்சியின் மறுவடிவ மாக இருப்பதுதான் காரணமாக உள்ளது என்றும் குறிப்பிடுகிறார்.

1833ஆம் ஆண்டு தாமஸ் மெக்காலே இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது ஐரோப்பிய நிறுவனங்களின் அமைப்பு முறைகளையே எதிர்காலத்தில் இந்தியர்கள் பின்பற்றுவார்கள். அது உண்மையாகும் போது அது ஆங்கில வரலாற்றின் பெருமைக்குரிய நிகழ்வாக அமையும். இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் ஆழ்ந்த அடிமைத்தனத்திலும் மூடநம்பிக்கையிலும் மூழ்கிய நிலையில் எல்லாக் குடிமகன்களுக்கும் உள்ள உரிமைகளைத் தருகிற வகையில் நமது ஆட்சி அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இக்கருத்தையே நூலின் முதல் பகுதியில் முடிவுரையாக சென்குப்தா குறிப்பிட்டுள்ளார். ஏன் நூலாசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார்?

1935ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டம் வந்த போது ஜவகர்லால் நேரு இது ஒரு அடிமைச் சட்டம் என்று குறிப்பிட்டார். ஆனால் இந்த அடிமைச் சட்டத்தின்கீழ் 1937ஆம் ஆண்டு காங்கிரசு சென்னை மாகாணம் உட்படப் பல மாகாணங்களில் ஆட்சியமைத்தது. எதிர்த்த காங்கிரசு இதை ஏற்றுக்கொண்டது.

1950ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டம் 1935ஆம் அரசமைப்புச் சட்டத்தின் மறுபதிப்பாகவே உள்ளது என்பதைப் பல்வேறு தரவுகளோடு நூலா சிரியர் விளக்கியுள்ளார். வெள்ளையர் இந்திய மக்கள் மீது உருவாக்கிய ஆதிக்க மனப்பான்மை அப்படியே அரசமைப்புச் சட்டத்தில் இருப்பதால் ஒன்றிய அரசின் அதிகாரங்கள் எல்லை மீறிச் செல்கின்றன என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.stop misuse of edபிரித்தானிய ஆட்சியின் அடக்குமுறைச் சட்டங்கள் அப்படியே தொடர்கின்றன. அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் இருந்தாலும் பேச்சுரிமை, எழுத்துரிமை, மத உரிமைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டாலும் பிரித்தானிய அடிமைச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட அடக்குமுறைச் சட்டங்கள் இன்றும் பின்பற்றப்பட்டுச் சமத்துவத்திற்கு எதிராகவும் சுதந்திர உரிமைகளுக்கு எதிராகவும் செயல்பட ஒன்றிய அரசுக்கு அதிகாரங்களை வழங்கியுள்ளது என்று குறிப்பிடுகிறார்.

ஏற்கெனவே அதிகாரக் குவிப்பின் உச்சநிலையில் உள்ள ஒன்றிய அரசு விடுதலைக்குப் பின்னர் பல சட்டத்திருத்தங்கள் வழியாக ஒரு புதிய சர்வாதிகார ஆட்சி யாகவே மாறிவிட்டது. மாநில உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன. கூட்டாட்சி இயல் கொள்கை குழிதோண்டிப் புதைக்கப்படுகிறது.

குறிப்பாக ஒன்றிய அரசில் ஆட்சியில் இருக்கும் கட்சி வைத்ததுதான் சட்டம், நீதி, நிர்வாகம் என்ற நிலை மேலோங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் நிர்வாக ரீதியாக நடுநிலையாக இயங்கக்கூடிய வருமான வரி, புலனாய்வு, அமலாக்கத் துறைகள் ஒன்றிய அரசின் அடியாட்களாக மாற்றப்பட்டுவிட்டன. நிர்வாகத் துறையில் நடுநிலை என்பது முழுமையாகச் சாய்ந்துவிட்டது.

பாஜகவினர், பெரு முதலாளிகள், முதலாளித்துவ சாமியார்கள் செய்யும் எல்லாவித நாட்டு விரோத, சமூக விரோத, மக்கள் விரோத பொருளாதாரக் குற்றங்களை மேற்கூறிய துறைகள் கண்டுகொள்வதே இல்லை. எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் ஆதாரங்களோடு ஆவணங்களோடு சில வழக்குகளை எடுத்துக் காட்டினால் கண்துடைப்பு நடவடிக்கைகள் கானல் நீர் போன்று காட்சியளிக்கின்றன.

சான்றாக 1963ஆம் ஆண்டிலிருந்து ஒன்றிய அரசின் புலனாய்வுத் துறை (Central Bureaue of Investigation) இயங்கி வருகிறது. பொதுவாழ்வில் நெறியைப் பாதுகாக்கவும் பொருளாதாரம் நல்ல நிலையில் இயங்குவதற்கும் இத்துறை உறுதுணை யாக இயங்கும் என்று இவ்வமைப்பின் குறிக் கோளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் நடைபெறும் வங்கி மோசடி, பன்னாட்டுச் செலாவணி மோசடி, கள்ளக்கடத்தல், போதைப் பொருள் தடுப்பு நட வடிக்கைகள் உட்பட அனைத்து பொருளாதாரக் குற்றங் களையும் கண்டறிந்து விசாரணையை மேற்கொண்டு நீதித்துறையின் வழியாக உரியத் தண்டனைகளைப் பெற்றும் தரும் என்றும் இந்த அமைப்பு தொடங்கிய காலத்தில் தனது குறிக்கோளாகக் கொண்டிருந்தது.

இது எவ்வாறு சீரழிக்கப்பட்டது என்பதற்குச் சான்று பகர்கின்ற வகையில் 2007ஆம் ஆண்டு ஒன்றிய புலனாய்வுத் துறையின் இணை இயக்குநராகப் பணி யாற்றிய பி.ஆர்.லால், ‘ஒன்றியப் புலனாய்வுத் துறை யார் கையில் உள்ளது வெளிப்படையான உண்மை’ (Who Owns CBI- The Naked Truth, 2007) என்ற நூலில் பல அரிய தகவல்களை அளித்துள்ளார். புலனாய்வுத் துறை ஊழலின் சக்தி வாய்ந்த தலைமைப் பீடத்தை உடைப்பதில் தோல்வியைத் தழுவியுள்ளது. காரணம் அதிகாரத்தில் உள்ள உயர் பிரிவினரைப் பாதுகாப்பது தான் புலனாய்வுத் துறையின் எண்ண ஓட்டமாக உள்ளது. இலக்கற்றதாகவும் உரிய உதவியைப் பெற முடியாததாலும் முழுமையாகச் செயல்பட முடியாத தன்மையாலும் புலனாய்வு முகமைகள் சுயநல சக்திகள் மீது வழக்குப் போட முடியாமல் தடுமாறுகின்றன.

புலனாய்வுத் துறையின் உண்மைகள் சில மனிதர்களை அடையாளம் காட்டினாலும் அவர்களை விசாரிக்கக் கூடாது. புலனாய்வு விசராணை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் அல்லது திசையை மாற்ற வேண்டும் அல்லது நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். காலப்போக்கில் வழக்கினைச் சாகடித்துவிட வேண்டும் என்பதுதான் புலனாய்வுத் துறையில் எழுதப்படாத சட்டமாக உள்ளது (The unwritten rule was that persons were not to be touched and if the line of investigation reached them, the investigation should be diluted, diverted or dropped and scuttled in due course, p.18)” என்று நூலாசிரியர் லால் குறிப்பிட்டுள்ளார்.

2007இல் குறிப்பிட்ட இந்தக் கருத்துக்கேற்பவே புலனாய்வுத் துறை மட்டுமல்லாமல் வருமான வரித் துறையும் அமலாக்கப் பிரிவும் கடந்த பத்தாண்டுகளாக ஒன்றிய பாஜக ஆட்சியில் செயல்பட்டு வருகின்றன என்பதற்கு இக்கால நிகழ்வுகள் சான்று பகர்கின்றன.

2008ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தின் மாலேகன் குண்டு வெடிப்பில் 10 பேர் உயிரிழந்தனர். 82 பேர் படுகாயம் அமைந்தனர். இந்தக் குண்டு வெடிப்பில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டு நீதிமன்றப் பிணையில் வெளி வந்துள்ள பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூரை பாஜக நாடாளு மன்றத் தேர்தலில் போட்டியிடச் செய்து அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கியது. மேலும் கோட்சே பிறந்த நாளைக் கொண்டாடி, காந்தியைக் கொன்ற குற்றவாளி கோட்சே நாட்டுப் பற்றாளன் என்று தொடர்ந்து அந்தப் பெண் சாமியார் கூறி வருகிறார். இந்தச் செயலைக் கண்டிப்பதற்கு பிரதமர், உள்துறை அமைச்சர் யாரும் முன்வரவில்லை. மதவெறி அரசியல் தூண்டப்படுவதற்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டைக் காட்ட முடியும்.

2023 செப்டம்பரில் தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது இந்தப் பெண் சாமியார் இரண்டு மணி நேரம் காலம் தாழ்த்தி வந்தார். கால் வலியால் நடக்க முடியவில்லை என்று காரணம் கூறினார். நீதித்துறை கால்வலியோடு காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது (இந்து ஆங்கில நாளிதழ் 25 செப்டம்பர் 2023).

மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நீதிமன்றத் திற்குத் தாமதமாக வந்தால் கடும் கண்டனம் தெரிவிக்கும் நீதிமன்றம் இந்தப் பெண் சாமியார் காலதாமதத்தைப் பற்றிக் கண்டுகொள்ளவே இல்லை. புலனாய்வுத் துறை முதல் நீதிமன்றம் வரை பாஜக ஆட்சியில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கு இது ஒரு சிறிய சான்றாகும்.

பாஜகவின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய மல்யுத்த சங்கத்தின் தலைவருமான பிரிஜ் புசன் சிங் என்பவருக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்தோடு அளித்துப் பல மாதங்கள் புதுதில்லியில் போராட்டக்களம் அமைத்துப் போராடினர். பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியா சார்பில் வெற்றி பெற்ற பல புகழ் மிக்க மல்யுத்த வீரர்களும் விளையாட்டுத் துறையில் ஈடுபடும் வீரர்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர். இருப்பினும் பிரிஜ் புசன் மீது கடுமையான பிரிவுகளில் கீழ் வழக்குத் தொடரவில்லை. இன்று வரை அவர் மீது எந்த ஒரு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரசுத் தலைவர்களில் ஒருவரான அஜித் பவார் ரூபாய் எழுபதாயிரம் கோடி அளவிற்கு நீர்ப்பாசன திட்டங்களில் ஊழல் செய்தார் என்று பிரதமர் நரேந்திர மோடி பல மாதங்களுக்கு முன்பு மேடைக்கு மேடை முழங்கினார். தேசியவாதக் கட்சி ஊழல் கட்சி என்று குற்றம் சாட்டினார். ஆனால் அஜித் பவார் பெரும்பான்மையை இழந்த பாஜக அரசிற்கு ஆதரவாகச் செயல்பட்டவுடன் அவரைத் துணை முதல் அமைச்சராக ஆக்கி ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க வைத்தார்.

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த முகுல் ராய் திரிணாமுல் காங்கிரசுக் கட்சியின் முன்னணி தலைவர். இதற்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஒன்றிய அரசின் அமைச்சராகவும் பணியாற்றியவர். சாரதா நிதி அமைப்பு தனது உறுப்பினர்களிடமிருந்து 30 கோடி ரூபாய் அளவு நிதியைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இந்த மோச டியில் முகுல் ராய் ஈடுபட்டார் என்று ஒன்றிய அரசின் வருமான வரி, அமலாக்கத் துறைகள் வழக்குப் பதிவு செய்தன. உடனடியாகக் கட்சி மாறி பாஜகவில் சேர்ந்த வுடன் வழக்குகள் கிடப்பில் போடப்பட்டன.

முகுல் ராய் பாஜக சார்பில் 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே ஆண்டில் மீண்டும் திருணாமுல் காங்கிரசுக் கட்சியில் இணைந்தார். பாஜக இவரை மிரட்டியதால்தான் முகுல் ராய் உடல்நலம் பாதிக்கப்பட்டார் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேடையிலேயே குறிப்பிட்டார்.

மற்றொரு அரசியல் நிகழ்வில் திருணாமுல் காங்கிரசுக் கட்சியின் அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி 2020இல் ஆசிரியர் தேர்வு வாரிய முறை கேட்டில் ஈடுபட்டார் என்று வருமான வரித்துறையும் அமலாக்கத் துறையும் இணைந்து வழக்குகள் பதிவு செய்தன. கைது செய்யப்பட்டார். அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டார். பின்பு பாஜகவில் இணைந்தார். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராம் தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜக சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் மீது இருந்து வழக்குகள் தற்போது என்ன ஆயிற்று என்பது ஒன்றிய அரசுக்கும் பிரதமருக்கும் மட்டுமே தெரிந்த பெரும் இரகசியமாகும். ஊழல் நாயகன் என்று பாஜகவினரால் வருணிக்கப்பட்ட சுவேந்து அதிகாரிதான் மேற்கு வங்க சட்டமன்றத்தின்பாஜகசார்பில்எதிர்க்கட்சித்தலைவரானார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் 2019ஆம் ஆண்டு காங்கிரசு, தேசியவாத காங்கிரசு உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு சிவசேனாவின் தலைவரான உத்தவ் தாக்கரே முதல்வராகப் பொறுப்பேற்றார். மூன்றாண்டுகள் நிறைவடையும் நேரத்தில் ஏக்நாத் ஷிண்டே துணை யுடன் சிவசேனா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக விலைக்கு வாங்கியது. விலை மதிப்பு பல நூறுகோடிகள் என்று ஊடகங்கள் கணித்தன.

பிளவுபட்ட சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களின் துணையோடு ஏக்நாத் ஷிண்டே பாஜக ஆதரவுடன் முதல்வரானார். நாக்பூர் நகரில் அமைந்துள்ள நகர்ப்புற மேம்பாட்டுக் கழகத்தில் 110 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளார் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று குற்றம் சாட்டியுள்ளனர். இருப்பினும் இதைப் பற்றி ஒன்றிய பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை.

பாஜக ஒன்றிய அரசில் பொறுப்பேற்ற பிறகு கடந்த 9 ஆண்டுகளாக காங்கிரசு சார்பாகவும் மாநிலக் கட்சிகளின் சார்பாகவும் வெற்றி பெற்றுப் பல அரசுகள் அமைந்த பிறகு 6 மாநிலங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் விலை போயினர். தேர்தலில் தோல்வி அடைந்த பாஜக, ஆட்சிகளைக் கைப்பற்றியது. கட்சி மாறும் தடைச்சட்டங்கள் கண்மூடிக் கொண்டன. நீதிமன்றங்கள் மௌனம் காத்தன.

சான்றாக. மணிப்பூரில் நடைபெற்ற இன அழிப்பு உலக அளவில் விவாதிக்கப்பட்ட நிலையிலும் மணிப்பூர் கலவரப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பிறகும் பாஜக முதலமைச்சர் தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார். ஆனால் மற்ற மாநிலங்களில் சிறுசிறு அற்ப காரணங்களைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு குலைந்துவிட்டன என்று ஓங்காரக் குரல்கள் சங்கிகளால் எழுப்பப்படுகின்றன.

கோவா, மத்தியப் பிரதேசம், அசாம், கர்நாடகம், அருணாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பணம் கொடுத்துச் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் அரசியல் வணிகம் வெளிப்படையாக பாஜக வால் நடத்தப்பட்டது. மாநிலம் விட்டு மாநிலம் சென்று பல சொகுசு விடுதிகளில் கட்சி மாறிய சட்டமன்ற உறுப்பி னர்கள் ஆடிய ஆட்டங்களை ஊடகங்கள் படங்களுடன் வெளியிட்ட பிறகும் ஒன்றிய அரசின் அடியாட்களாகச் செயல்படும் எந்தத் துறையும் விசாரணை செய்யக்கூட முன்வரவில்லை.

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட தகவல்களின்படி வருமான வரியை உரிய முறையில் செலுத்தாமலும் வருமான சட்டப்பிரிவுகளை மீறியது தொடர்பாகவும் வருமான வரி தீர்ப்பாயங்களில் 92,338 வழக்குகள் நிலுவையில் உள்ளன. உச்ச நீதிமன்றத்தில் 6,357 வழக்குகளும் உயர் நீதிமன்றங்களில் 38,481 வழக்குகளும் டிசம்பர் 2020 ஆண்டு வரை நிலுவையில் இருந்தன. இதன் காரணமாக ரூபாய் 5 இலட்சம் கோடி வருமான வரி ஒன்றிய அரசுக்குக் கிடைக்காத நிலையில் உள்ளது.

அமலாக்கப் பிரிவு ஒன்றிய அரசின் துறையாக 1956இல் உருவாக்கப்பட்டது. பிரதமர் நேரு, சாஸ்திரி தொடங்கி வாஜ்பாய் காலம் வரை வெளிநாடுகளுக்குச் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்வதைப் புலனாய்வு செய்தது. அந்நியச் செலாவணி மோசடிகளைக் கண்டறிந்து வழக்குகளைத் தொடுத்தது. அந்நியச் செலாவணி பரிமாற்ற மேலாண்மைச் சட்டம் ((Foreign Exchange Management Act, 1999 (FEMA)), முறை கேடாகப் பணப் பரிமாற்றத்தடுப்புச் சட்டம்  (Prevention of Money Laundering Act, 2002 (PMLA)), பொருளாதாரக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் சட்டம் Fugitive Economic Offenders Act, 2018 (FEOA) போன்ற பல சட்டங்கள் வழியாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் இயங்கி வருகின்றன.

தவறான முறையில் பணப்பரிமாற்றம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக இச்சட்டங்களை அமலாக்கத் துறையின் ஆளுகையின் கீழ் ஒன்றிய அரசு கொண்டு வந்தது. குறிப்பாக உலகமயமாக்கல் முறையை இந்தியா பின்பற்றிய பிறகு வெளிநாடுகளுக்குப் பணம் எடுத்துச் செல்லும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனைப் பயன்படுத்திப் பல பெரு முதலாளிகளும் பெரு வணிகர்களும் பல அரசியல் தலைவர்களும் பல இலட்சம் கோடி ரூபாயை வெளிநாடுகளில் மறைமுகமாக முதலீடு செய்யத் தொடங்கினர். இதற்கு வெளிநாடுகளில் உள்ள சட்டங்கள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் ஆதரவை அளிக்கும் நிலையில் உள்ளன. சான்றாக சுவிட்சர்லாந்து ஒரு சிறிய நாடாக இருப்பினும் கணக்கில் காட்டாத கள்ளப்பணத்தை வங்கிகளில் சேமிக்கும் முறையைச் சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இன்றளவும் உச்ச நீதிமன்றம் பலமுறை வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட பிறகும் இந்தக் கள்ளப்பணக் கணக்கை வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியல்களை சுவிட்சர் லாந்து போன்ற நாடுகளில் இருந்து பெற்ற பிறகும் வெளிப்படையாக ஒன்றிய அரசு வெளியிடவில்லை. உச்ச நீதிமன்றத்திற்கு மட்டும் இந்தப் பட்டியலைக் கமுக்கமாக ஒன்றிய அரசு அளித்துள்ளது.

ஒன்றிய அரசு சட்டங்கள் வழியாக இந்த அமைப்பு களை வைத்துக் கொண்டு பாஜகவிற்கு நிதியளிப்பவர்களுக்குச் சலுகைகளை அளித்து வருகிறது. அரசியலில் வேண்டாதவர்களைப் பழிவாங்கும் பயமுறுத்தும் முதன்மைக் கருவிகளாகப் பயன்படுத்துகிறது.

முறைகேடாகப் பண பரிமாற்றத்தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act, 2002 (PMLA)) வழியாக 2004 முதல் 2014 வரை 112 சோதனைகள் அமலாக்கத் துறையால் மேற்கொள்ளப்பட்டன. 104 வழக்குகள் போடப்பட்டு 5,346 கோடி ரூபாய் அளவிற்குச் சொத்துகள் முடக்கப்பட்டன. ஆனால் இதுவரை ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.

2014-2022 வரை 3,010 சோதனைகள் மேற் கொள்ளப்பட்டன. இவை காங்கிரசுக் கூட்டணி தலைமையில் நடைபெற்ற ஆட்சிக் காலத்தைக் காட்டிலும் 27 மடங்கு அதிகமாகும். 888 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 99,356 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டன. 23 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. 869 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில் அதானி மீது ஹிண்டன்பர்க் அறிக்கை பல இலட்சம் கோடி ரூபாய் மோசடிகளை அம்பலப்படுத்தியது. இதுவரை அமலாக்கத்துறை இந்த மோசடிகள் பற்றி ஆய்வு செய்யக்கூட முன்வரவில்லை. மீண்டும் பைனான்சியல் டைம்ஸ் (Financial Times) ஏடு அதானி குழுமம் செய்த பல ஆயிரம் கோடி நிலக்கரி ஊழல் பற்றி ஆதாரங்களோடு வெளியிட்டது. இந்த ஊழலின் காரணமாக மின்கட்டணம் செலுத்தும் சிறு, குறு / நடுத்தரத் தொழில் முனைவோர்களும் நடுத்தரப் பிரிவினருமே பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹிண்டன்பர்க் அறிக்கையின் மீது இராகுல் காந்தி அதானி குழுமத்திற்கும் பிரதமருக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வியை எழுப்பியவுடன் அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்தது பெரும் அதிர்வலைகளை இந்தியாவில் ஏற்படுத்தியது. இந்த அதிர்வலைகள் வழியாக இரு உண்மைகள் வெளிப் பட்டன. ஒன்று மோடி ஜனநாயகரீதியாக நாடாளுமன்றத் தைச் சந்தித்து ஊழல் குற்றச்சாட்டு மீது பதிலளிக்கப் பயப்படுகிறார். மற்றொன்று அதானி குழும ஊழலை மறைக்க முயல்கிறார் என்பதே ஆகும்.

இதைப் பற்றி இன்றுவரை ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்பும் வருமான வரித் துறையும் அமலாக்கப் பிரிவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. காரணம் இவர்கள் மோடியின் நண்பர்கள். குறிப்பாக 2014க்குப் பிறகு ஒன்றிய அரசில் பொறுப்பேற்ற பாஜக அரசு எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கு வதற்காகவே ஒன்றிய அரசின் ஊழல் தடுப்பு அமைப்புகள் இயக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு நாடாளுமன்றத்திலேயே வைக்கப்பட்டது.

அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், இராஜஸ்தான், புதுதில்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள அமைச்சர்கள் மீதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் பல வழக்குகளை அமலாக்கத் துறை பதிவு செய்து கடும் நடவடிக்கைகளைப் புயல் வேகத்தில் மேற்கொள்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் பல மாதங்கள் சிறையில் இருந்தும் பிணை அளிப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடி இவர்களை விடுதலை செய்யக்கூடாது என்று ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை வாதாடுகிறது. பாஜக சார்பு அரசியல் நிலையில்தான் நாங்கள் இயங்குகிறோம் என்ற உண்மையையும் வெளிப்படுத்துகிறது.

அமலாக்கத் துறையின் முன்னாள் இயக்குநர் சஞ்சய் மிஸ்ராவிற்கு மூன்று முறை பதவி நீட்டிப்பை ஒன்றிய பாஜக அரசு வழங்கியது. மூன்றாவது முறை வழங்கும் போது பதவி நீட்டிப்புக் காலம் இரண்டாண்டுகள் என்பதை மூன்று ஆண்டுகளாக மாற்றியது. ஒன்றிய அரசு இதற்கென்று ஒரு சட்டத் திருத்தத்தினைக் கொண்டு வந்தது. இதை எதிர்த்துச் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த போது இந்தச் சட்டத்திருத்தம் செல்லாது என்று நீதிபதிகள் கூறினர்.

2023 செப்டம்பர் இறுதி வரையாவது இயக்கு நருக்குப் பதவி நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் வாதிட்டார். உச்ச நீதிமன்றம் இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டது. இந்தத் தீர்ப்பின்படி மிஸ்ரா மூன்று முறை பதவி நீடிப்பு பெற்று செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.

ஒரு தனிநபருக்காக மூன்று முறை பதவி நீட்டிப்பு வழங்கும் ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசின் தேர்வாணையக் குழுவின் தலைவர் பதவிக்கு மாநில அரசு சட்டப்படி ஒருவரைப் பரிந்துரை செய்த போது அவருக்கு ஓராண்டுதான் இருக்கிறது என்று கூறி இரு முறை ஆளுநர் கோப்பினைத் திருப்பி அனுப்பினார்.

இந்தியாவில் உள்ள சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுமா? அல்லது ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்பின் காரணமாக ஜனநாயக நெறிகளும் நிர்வாக விதிகளும் மிதிக்கப்படுகின்றனவா? என்ற கேள்விகள் எழுகின்றன.

180 உலகநாடுகளில் ஊழல் வரிசைப் பட்டியலில் இந்தியா 85ஆம் இடத்தில் உள்ளதாக 2022ஆம் ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பின்பற்றப்படும் மோசமான அரசியல் சூழ்நிலைகள் இந்த அறிக்கைகளில் சுட்டப்படுவதில்லை. ஆளுங்கட்சி ஊழல் செய்தால் அது ஊழலல்ல. எதிர்க்கட்சிகள் செய்தால் மாபெரும் ஊழல். இதுதான் அறிவிக்கப்படாத ஒன்றிய அரசின் சட்டம். இந்தச் சட்டத்தின்படி தான் எல்லாத் துறைகளும் இயங்கி வருகின்றன.

ஊழலை ஒழிப்பதில் கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகள், இந்தியா போன்று அரசியல் சார்போடு இயங்கு வதில்லை. அந்நாடுகளின் நீதிமன்றங்களும் இத்தகைய செயல்களைக் கண்டும் காணாமல் இருப்பதில்லை.

ஊழல் இந்தியாவில் இருந்து துரத்தப்பட வேண்டும். ஊழல் பெருமளவிற்கு ஏழைகளைத்தான் துயரத்திற்கு உள்ளாக்குகிறது (Corruption is paid by the poor) என்று போப் பிரான்சிஸ் ஒரு முறை குறிப்பிட்டார். இக்கருத்து இந்தியாவிற்கு மிகப் பொருத்தமாக அமைகிறது.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச் சபையில் 2018ஆம் ஆண்டு ஊழலைத் தடுப்பதற்கும் தடை செய்வதற்கும் உலகளாவிய ஒருங்கிணைந்த ஒரு அணுகுமுறை தேவை என்று வலியுறுத்தியது. மீண்டும் 2021இல் நடைபெற்ற சிறப்பு பொதுச் சபைக் கூட்டத்தில் ஊழலைத் தடுப்பதற்கு உலகளவிலான ஒரு கூட்டுறவு அமைப்பை வலிமைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது (Our common commitment to effectively addressing challenges and implementing measures to prevent and combat corruption and strengthen international cooperation).

இந்தியாவில் ஒன்றிய அரசு அளவில் லோக்பால் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்தாலும் தற்போது அதற்கு உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தலைவராகவும் இரண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் உறுப்பினர்களாக இருந்தாலும் சிறந்த முறையில் இயங்கும் தன்மையில் அமைய வில்லை.

மேற்கூறிய ஒன்றிய அரசின் தவறான எதிர்மறை நடவடிக்கைகளில் இருந்து இதைப் புரிந்து கொள்ள முடியும். ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு லோக்ஆயுக்தா என்ற அமைப்பு பல மாநிலங்களில் பெயரளவில் இயங்கி வருகின்றன. ஒன்றிய அரசின் பழிவாங்கல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் அரசு நிர்வாகம் நேர்மையாகவும் நடுநிலைமையோடு இயங்குவதற்கும் லோக்பால், லோக் ஆயுக்தா அமைப்புகள் சிறப்பாகச் செயல்படுவதற்கு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

- பேராசிரியர் மு.நாகநாதன்

Pin It