periyar 465வெறிமிகு வேகத்தில் பயணிக்காத வாகனங்கள்.

தனிமனிதத் துதியும், வெறுப்புமற்ற ,
சமூகநீதி வேண்டித் தாகமுடன் களம்காணும்
வேட்கை பொதிந்தப் பயணம் !

மகிழுந்தும், பெருவாகனமும்...
தும்பை வெள்ளையும்... பட்டை மோதிரமும்...
அத்தர் நெடியும்... பட்டைச் சங்கிலி சகிதம்
மதுக்கடையை மொய்க்காதக் கூட்டம்.!

நோட்டுகளை எண்ணுகிறதும்,
எண்ணுகிற நோட்டுக்காய் எச்சில் விழுங்கிக்
கையேந்தாதக் கரங்கள்.!

மனமெல்லாம் தாடிக்கிழவனை நிரப்பி...
பசியென்னும் உணர்வையே பறையிசையில் நிறைத்து...
நரம்பு நாணை சுயமரியாதைப் பாட்டால்
மீட்டும் கூட்டம்!

எம் கரமேந்தும் கருங்கொடி ...
சூரியனையும் மிஞ்சும் சுடரொளி!

எங்கள் கருந்தேகத்தைக் கிழித்திட்டால்
சிவப்பு நட்சத்திரமாய் மினுங்கும் புது ஒளி!

வரலாறைச் சுமந்த மூளை.
அடக்குமுறை எதிர்க்கும் தேகம்.
சமூகநீதிக்காய் நடந்து...
நடந்து உரமேறியக் கால்கள்.
தீமைக்கெதிரான சொற்கள்.
தீர்வு கிட்டும்வரை துஞ்சாதக் கண்கள்.

இவையே எங்கள் அடையாளம்.

போதையின் ஆக்கத்தால் ஆட்டமோ..
மாநாடுத் திடலில் குழாய்
விளக்குடைக்கும் நாட்டமோயின்றி...
அரைக்கல் அளவே இடமாயினும்...
நெஞ்சுநிமிர்த்தி அமர்ந்து...
பகலவனின் சித்தாந்தத்தை பகலிரவு
பாராது கேட்கும் காதுகள்.

இதுவே எங்கள் வளர்ப்பு!
பெரியாரியம் ஒன்றே எங்கள் உவப்பு..!

நான்குமுறை உலகம் சுற்றினதற்கு ஒப்பாம்....
எங்கள் அறிவாசானின் பயணங்கள்.!

அவனின் வார்ப்பு நாங்கள் சோடைபோவோமா?
இவ் வாய்ப்பிற்குத்தானேக் காத்திருந்தோம்.!
இக் காரியத்திற்குத்தானே துடித்திருந்தோம்.!
ஆயிரமாண்டுகள் ஆரியம் கொண்டாடிய
திருச்சிற்றம்பலத்தை
ஒரே நாளில் கருஞ்சிற்றம்பலமாய் மாற்றினோமே!

ஆயிரமாயிரம் ஆண்டுகள் பீடித்த பீடை
ஆரியத்தை அரை நூற்றாண்டில் உதைத்து
உடைத்த கலகக்காரனின் பிள்ளைகளல்லவா நாங்கள்.

அந்தத் திமிர் இன்னும் ஆயிரமாண்டுகள்
கடந்தாலும் குன்றாதே!

ஆதி நிறம் கருப்பு
அண்டி வந்தவனின் நிறமே காவியென மௌனமாய்
ஒரு யுத்தத்தில் தெளிய வைத்தோமே!

வைத்த முழக்கத்தில் வைதீக பூச்செல்லாம் உதிர்ந்தது.
கூடிய கூட்டத்தின் பிரதிபலிப்பு
கருமையடைந்த ஆரியத்தின் முகத்தில் தெரிந்தது.
யாவையும் நிறுத்திக்கொள் காவியே இது எச்சரிக்கை!
நாங்கள் திருச்சியில் வாசித்தது பெரும் நூலல்ல...
சிறு துண்டறிக்கை !

- பெ.கிருஷ்ணமூர்த்தி

(திருச்சி கருஞ்சட்டைப் பேரணி - மாநாடு குறித்த உணர்வில் ஈரோடு கழகத் தோழர் படைத்த உணர்ச்சி வரிகள்)

Pin It