கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரத்தில் பங்கு போட்டுக் கொண்ட பார்ப்பனர்கள், சமூக சீர்திருத்தச் சட்டங்களைக் கொண்டு வந்த நிலையில், ‘தேச பக்தர்களாகி’, ‘சுதந்திரப்’ போராட்டம் நடத்திய காங்கிரசுக்குள் புகுந்து கொண்ட வரலாறுகளைப் பார்த்தோம். எதிர்பார்த்தது போலவே, ‘சுதந்திரம்’ - பார்ப்பன-பனியாக்களுக்கானதாகவே இருந்தது. இதைத் தான் பெரியார் எச்சரித்தார். சுதந்திர நாளை துக்க நாள் என்றார். இந்தப் பின்னணியில் அரசியலமைப்பு சபை எப்படி உருவானது என்ற வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.

முதலில் இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய அரசியல் நிர்ணய சபை, மக்கள் அனைவராலும் ஓட்டுப் போட்டு தேர்வு செய்யப்பட்ட அமைப்பு அல்ல. 1935ஆம் ஆண்டு பிரிட்டிஷார் உருவாக்கித் தந்த சட்டத்தின்படி படித்தவர்கள், சொத்துள்ளவர்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை. அந்த அடிப்படையில் மாகாண சபைக்கு தேர்வு செய்யப்பட்ட மாகாண சட்டசபைகள் அரசியல் அமைப்பை உருவாக்கும் சபைகளாக அறிவிக்கப்பட்டன. அதில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் 299 பேர் (பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு). 11 முறை இந்த சபை கூடி, 3 ஆண்டுகள் விவாதித்து சட்டத்துக்கு இறுதி வடிவம் தந்தன. இதில் பெண் உறுப்பினர்கள் 15 பேர் மட்டுமே. சட்டத்துக்கு வடிவம் தருவதற்கு (Drafting Committee) 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. டாக்டர் அம்பேத்கர் தலைவர். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், என். கோபால்சாமி அய்யங்கார், கே.எம். முன்ஷி, முகம்மது சாதுல்லா, பி.எல். மிட்டர், டிபி. கைத்தான். இதில் டாக்டர் அம்பேத்கர், முகம்மது சாதுல்லா இருவரைத் தவிர, அனைவருமே பார்ப்பனர்கள். செல்வாக்கும் அதிகாரமும் கொண்ட இந்த வரைவுக் குழு தயாரித்த சட்ட நகல்களே, அரசியல் நிர்ணய சபையில் பெருமளவில் விவாதிக்கப்பட்டன. வரைவுக் குழுவின் ஆலோசகராக இருந்தவர் பி.என். ராவ். இவர் உலகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து பல நாடுகளின் அரசியல் சட்டங்களை ஆய்வு செய்தார்.

பார்ப்பனர்கள் ஆதிக்கம் நிறைந்த அரசியல் வரைவுக் குழுவில் அம்பேத்கர் தலைவராக இருந்தும் கூட அவரால், தான் எண்ணியவாறு முழு உரிமையுடன் செயல்பட முடியாத நிலையில் கைகள் கட்டப்பட்டிருந்தன. “நான் வாடகைக் குதிரையாகவே செயல்பட்டேன்” என்று அவரே பிறகு மனந்திறந்தார். இந்த சட்டத்தை எரிப்பதில் நானே முதல் மனிதராக இருப்பேன் என்று பின்பு மாநிலங்களவையிலேயே பேசினார். இந்த அரசியல் பின்புலத்தில் அரசியல் சட்டம் எப்படி உருவாக்கப்பட்டது என்ற சோகம் நிறைந்த வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம்:

1935ஆம் ஆண்டு பிரிட்டிஷார் உருவாக்கித் தந்த சட்டத்தின் பெரும் பகுதியை அப்படியே சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு ஏற்றுக் கொண்டது. 1935ஆம் ஆண்டு சட்டம் மாகாண உரிமைகளுக்கு எதிரானது என்று எதிர்த்துக் கொண்டிருந்த காங்கிரசார், அதே மாநிலங்களின் உரிமை பறிப்புகளுக்கு பச்சைக் கொடி காட்டினார்கள்.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், ‘சனாதன தர்மத்தில்’ ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவரும் அரசியல் நிர்ணயசபை உறுப்பினரும், 1948இல் நேரு அமைச்சரவையில் தொடர்வண்டித் துறை அமைச்சராக இருந்தவருமான கே. சந்தானம் (அய்யங்கார்) அரசியல் சட்டம் பற்றி இவ்வாறு கூறுகிறார்:

“பிரிட்டிஷ் அரசைக் கடுமையாக எதிர்த்து வந்த இந்திய தேசியத் தலைவர்கள் 1935இல் பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் நிலைநாட்டும் நோக்கத்துடன் உருவாக்கிய ஒரு அரசியல் சட்டத்தை அப்படியே அடிமைத்தனத்துடன் ஏற்றுக் கொண்டனர். (adopting almost slavishly) அதற்கான அசாதாரணமான சூழ்நிலையை அவ்வளவு சுலபமாக விளக்கிட முடியாது” என்கிறார். (Federal Financial Relations and other Essays). 1935ஆம் ஆண்டு சட்டத்தைத் தவிர, புதிய அரசியல் அமைப்பில் சேர்க்கப்பட்ட பகுதிகள் என்ன தெரியுமா? குடியரசு தலைவர் அதிகாரம், தேர்தல் நடத்தும் முறை, அடிப்படை உரிமைகள் பற்றிய சில பகுதிகள், அரசாங்கக் கொள்கைக்கான நோக்கங்கள், அரசியல் அமைப்புச் சட்டத்திருத்தங்கள் - இவை தொடர்பானவை மட்டுமே சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டன.

Rajaji and Nehruஇந்தியவில் கூட்டாட்சி அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே புதிய அரசியலமைப்பு ‘சுதந்திர’ இந்தியாவுக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் அத்தனையும் தலைகீழாக மாறிவிட்டது. இரண்டு உதாரணங்களை மட்டும் சுட்டிக் காட்டுகிறோம். 1935ஆம் ஆண்டு பிரிட்டிஷ் உருவாக்கித் தந்த சட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதுவரை தேர்தலைப் புறக்கணித்த காங்கிரஸ், தனது நிலையை மாற்றிக் கொண்டது. (நீதிக்கட்சி ஆட்சி தேர்தலில் பங்கேற்று, பார்ப்பனரல்லாத மக்களின் உரிமைகளுக்காக வகுப்புவாரி உரிமை, அறநிலையத் துறை சட்டம், பல்கலைக்கழகங்களை உருவாக்கும் சட்டம் மற்றும் சீர்திருத்த சட்டங்களைக் கொண்டு வந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ் பார்ப்பனர்கள், தேர்தலில் போட்டியிட கட்சிக்குள் அழுத்தம் தந்தனர். சுயராஜ்ய கட்சி என்ற போர்வையில் களம் இறங்கினர்.)

அப்போது சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று இராஜகோபாலாச்சாரி (ராஜாஜி), சட்டப் பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டவுடன், “1937 - பிரிட்டிஷ் கவர்னரை நேரில் சந்தித்து ஆளுநர் தனது விருப்பம்போல் நிர்வாகத்தில் தலையிட மாட்டார் என்ற உறுதி மொழியைத் தர வேண்டும் என்றார். கவர்னரின் தலையீடு மாகாண சுயாட்சி உரிமையை மறுப்ப தாகும். முழுமையான சுயாட்சி உரிமை இருந்தால் மட்டுமே பதவி ஏற்பேன் என்று நிபந்தனை விதித்தார். அதே நேரத்தில் காந்தியும், மாநில சுயாட்சியை உறுதி செய்ய வேண்டும். பதவிக் காலத்தில் அமைச்சர்கள் முடிவுகளில் ஆளுநர் குறுக்கிடக் கூடாது” என்று கோரிக்கை விடுத்தார் (1937, மார்ச் 30).

இந்த இடத்தில் ஒரு முக்கிய வரலாற்றுத் தகவலை பதிவு செய்ய வேண்டும். இராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) திராவிட நாடு தனியாகப் பிரிய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியவர்தான். அது முக்கிய செய்தி. இது குறித்து ‘மலர்க மாநில சுயாட்சி’ ஆய்வு நூலை எழுதிய கு.ச. ஆனந்தன் பின்வருமாறு எழுதியுள்ளார்:

“1942ஆம் ஆண்டு ஏப். 29இல் அலகாபாத்தில் நடைபெற்ற காங்கிரசு செயற்குழுவில், “வட இந்தியத் தலைவர்களால் சென்னை மாகாணம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் தனி பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கையைப் போன்று இந்திய துணைக் கண்டத்திலிருந்து தனி சென்னை மாகாணமும் பிரிவினை செய்யப்பட வேண்டும்” என்ற தீர்மானத்தை இராஜாஜி கொண்டு வந்தார். இதனைக் கடுமையாக எதிர்த்து மற்றொரு பார்ப்பன காங்கிரஸ் தலைவரான சத்தியமூர்த்தி, ‘பிரிவினைவாதத்தை எழுப்பும் நச்சு மனிதன் இராஜாஜியை காங்கிரசிலிருந்து நீக்க வேண்டும்’ என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அடுத்த நாள் இராஜாஜி காங்கிரஸ் செயற்குழுவிலிருந்து பதவி விலகினார். அதற்குப் பிறகு நடந்த அலகாபாத் காங்கிரஸ் மாநாட்டிலும் இராஜாஜி இதே தீர்மானத்தைக் கொண்டு வந்தார். கடுமையான கண்டனங்களுடன் அங்கிருந்து வெளியேற்றப் பட்டார்.

பின்னர் ஈரோட்டில் இருந்த பெரியாரிடம் நேரில் சென்று, நாட்டுப் பிரிவினைக்கு ஆதரவு தருவதாகக் கூறினார். அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசும்போது, “பெரியார் கேட்கும் திராவிடஸ்தானை பிரித்துக் கொடுத்து விட வேண்டும்” என்று இராஜாஜி பேசினார்.

1945ஆம் ஆண்டு மே 26இல் சென்னை கோகலே மண்டபத்தில் பேசிய ராஜாஜி தமிழ்நாடு விடுதலைக் கோரிக்கையை ஆதரித்துப் பேசினார். “தமிழர்கள் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று சொல்வதில் தவறில்லை. தமிழ்நாட்டில் கால்பங்கு பரப்புள்ள அயர்லாந்தை ஏமன்டிவேலரா என்ற தனிநாடாக ஆளும்போது தமிழ்நாடு ஏன் தனித்து இயங்காது?" என்று கேட்டார்.

இப்படி திராவிட நாடு - தமிழ்நாடு பிரிவினையை ஆதரித்துப் பேசிய இராஜாஜி, நாடு சுதந்திரம் பெறப் போகும் கட்டத்தில் மீண்டும் காங்கிரசுக்குள் நுழைந்து மத்திய அமைச்சர் மேற்கு வங்க ஆளுநர் - கவர்னர் ஜெனரல் பதவிகளைப் பெறத் தயங்கவில்லை. இந்திய தேசியம் வழியாக பதவி, அதிகாரம் கிடைத்தால் தேசியவாதிகளாக மாறுவார்கள். அதிகாரங்களில் இல்லாதபோது நாட்டுப் பிரிவினையும் பேசுவார்கள். இதுவே பார்ப்பனர்கள் அணுகுமுறை.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மாநிலங்கள் உரிமைகளுக்கும் மொழிவாரி உரிமைகளுக்கும் அழுத்தமாகக் குரல் கொடுத்தது காங்கிரஸ். தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனும் நீதிக் கட்சி திரவிட நாடு பிரிவினையை ஒலித்தது என்பது வரலாறு:

  • 1946ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி, பிரதமர் நேரு அரசியல் நிர்ணய சபையில் மாநிலங்களின் முழு சுயாட்சியை வலியுறுத்தும் தீர்மானத்தையே முன்மொழிந்தார். எந்த மாநிலத்தின் மீதும் ஒன்றிய ஆட்சி முடிவுகளைத் திணிக்காது என்றும் தங்களுக்கான நிர்வாக அமைப்பை மாநிலமே தேர்ந்தெடுக்கலாம்; அது மன்னராட்சி என்ற முடிவாக இருந்தாலும்கூட ஒன்றிய ஆட்சி தலையிடாது என்றும் நேருவின் தீர்மானம் கூறியது.
  • மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்படாத காலத்திலேயே 1921ஆம் ஆண்டிலேயே காங்கிரஸ் கட்சியின் அமைப்புகள் மொழி வழி மாகாணங்கள் அடிப்படையில் மாற்றி அமைக்கப் பட்டன. ‘இராஜ்ய மாகாண காங்கிரஸ்’ என்ற பெயரில் செயல்பட்ட அமைப்பு, ‘தமிழ் மாகாண காங்கிரசாக’ மாற்றப்பட்டது. அதன் முதல் தலைவராக இருந்த பெருமை பெரியாருக்கு உண்டு.
  • பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் காங்கிரஸ் கட்சி இந்தியாவுக்கு அரசியல் சட்டத்தை உருவாக்குவதற்கு நியமித்த மோதிலால் கமிட்டியும் மாகாணங்களின் சுயாட்சியையே அழுத்தமாக பரிந்துரைத்தது.
  • தென்னிந்திய நலஉரிமைச் சங்கமான நீதிக் கட்சி, 1940இல் திருவாரூரில் நடைபெற்ற இரண்டு நாள் மாநாட்டில் ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்பதை தனது இலட்சியமாக அறிவித்தது.
  • பார்ப்பன-பனியாவுக்கு அதிகார மாற்றம் தரும் ஒரு நாட்டில் தமிழர்கள் அடிமைத்தளையில் சிக்கி விடக் கூடாது என்பதில் உறுதி காட்டிய பெரியார், தனது திரவிட நாடு கோரிக்கைக்கு (சென்னை மாகாணத்தை தனித் தேசமாக்க வேண்டும்) ஆதரவு திரட்ட - 1940 ஜனவரியில் முஸ்லிம் லீக் தலைவர் ஜின்னாவை சந்திக்க பம்பாய் சென்றார். அப்போது பெரியாருக்கும் அவருடன் வந்த குழுவினருக்கும் அம்பேத்கர் வரவேற்று விருந்தளித்து பார்ப்பனியத்தை ஒழிப்பதில் பெரியாரோடு இணைந்து செயல்படுவதில் பெருமையடைவதாகவும் கூறினார். அம்பேத்கர் அந்தப் பேச்சை தமிழில் மொழி பெயர்த்தவர் பெரியாருடன் சென்ற அண்ணா.
  • 1940ஆம் ஆண்டு திருவாரூர் மாநாட்டைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் திராவிட நாடு பிரிவினை மாநாடு நீதிக் கட்சி சார்பில் நடந்தது. பெரியார் ‘சென்னை மாகாணம்’ என்ற திராவிட நாட்டை தனி நாடாக்க வேண்டும் என்று பேசி தீர்மானம் நிறைவேற்றச் செய்தார்.
  • அப்போது பேசிய ‘திராவிட நாடு’ என்பது கேரளா, ஆந்திரா, கருநாடக மாநிலங்களை உள்ளடக்கியது அல்ல; பிரிட்டிஷார் உருவாக்கிய ‘சென்னை மாகாணம்’ என்ற முழு தமிழ் நாட்டையும் ஒரு சில ஆந்திர, கருநாடக மாவட் டங்களையும் உள்ளடக்கிய பகுதியைத்தான் என்பதை குறிப்பிட வேண்டும். மொழி வழி மாநிலப் பிரிவினைக்குப் பிறகு பெரியார் தமிழ்நாடு விடுதலை என்ற முழக்கத்தையே முன் வைத்தார்.

ஆக, அன்றைய ‘இந்திய அரசியல் சூழல்’ என்பது மாநில சுயாட்சி மற்றும் தனிநாடு கோரிக்கைகளை மய்யமாகக் கொண்டே சுழன்றன. ‘ஒரே இந்தியா’ என்ற எண்ண ஓட்டமே உருவாகவில்லை. அது இந்தியாவில் நினைத்துப் பார்க்கவே முடியாத கற்பனை என்ற எண்ண ஓட்டமும் அதற்கான அக-புறக் காரணிகளுமே மேலோங்கி நின்றன.

மாகாண சுயாட்சிக்கு இவ்வளவு அழுத்தம் தந்த காங்கிரஸ், சட்டம் உருவாக்கப்படும் காலத்தில் அதை முழுமையாகக் கை கழுவி விட்டது. காரணம், பாகிஸ்தான் பிரிவினைதான். மாநிலங்களுக்கு முழுமையான சுயாட்சி வழங்கப்பட்டால் இந்தியா தனித் தனி நாடாக சிதறிப் போய்விடும் என்ற தவறான கண்ணோட்டமே இதற்குக் காரணம். “மாநில சுயாட்சி பிரச்சினையில் பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு கடிகாரத்தின் பெண்டுலம், ஒரு முனையிலிருந்து நேர் எதிராக வேறு முனைக்குச் சென்றது” என்கிறார் அரசியல் நிர்ணய சபைக்குழு உறுப்பினர் கே. சந்தானம் அய்யங்கார்.

(தொடரும்)

- விடுதலை இராசேந்திரன்