உலக மானிடம் கவலையற்ற வாழ்வு பெற மார்க்சியம் காட்டிய வழியில் பொதுவுடைமை மலருவது ஒன்றே ஏற்ற மருந்தெனக் கண்டவர் பெரியார்.

“கம்யூனிச இரயில் இங்கே ஓட நான் தண்டவாளம் போடுகிறேன்.”

“கம்யூனிசப் புரட்சிப் படைக்கு நான் தூசிப்படையாகவே (Sappers and Miners) என் இயக்கத்தை நடத்துகிறேன்.”

என ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் உரத்துக் குரல் தந்தவர் பெரியார்.

“ஓர் சமதர்மவாதி சமதர்மப் புரட்சியை எந்த நாட்டில் விளைவிக்க விரும்புகிறானோ அந்த நாட்டின் சமூகம் எப்படி அமைந்திருக்கிறது என்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு தான் செயல்பட வேண்டும். எல்லா நாட்டுக்கும் எல்லாச் சமூகத்துக்கும் பொருந்துவதான ஒரு ரெடிமேடு மருந்தாக (Ready-made recipe) அவனுக்கு முன்னால் ஓர் சமதர்ம வேலைத் திட்டம் இருக்க முடியாது” என்பதே மார்க்சின் எச்சரிக்கை; இலெனின் நடைமுறை.

இந்த நடைமுறையை அப்படியே பின்பற்றி சார் மன்னன் காலத்திய சோவியத்து நாட்டின் சமூக நிலையை- தேசிய இனப் பிரச்சினைகளை மனத்திற்கொண்டு இலெனின் வகுத்த புரட்சித் திட்டத்தினால்தான், மார்க்சின் எதிர்பார்ப்புக்கு மாறாக - விவசாய நாடான சோவியத்து இரஷ்யாவில் முதன்முதலாக சமதர்மப் புரட்சி வெடித்தது; வென்றது.

அதே சம காலத்தில் டிராட்ஸ்கி காண விரும்பிய “அய் ரோப்பிய அய்க்கிய நாடுகள் (United States of Europe)” என்கிற-“தொழிற்புரட்சி வளர்ந்த நாடுகளில் சமதர்மப் புரட்சி” என்பது மார்க்சிய சித்தாந்தத்துக்கு மாறுபட்ட நிலை உடைய தாக ஆகி, அப்போது பின்ன டைந்தது.

இந்திய சமூக அமைப்பு குறுக்கு வாட்டத்திலும் நெடுக்கு வாட்டத்திலும் பிறவி சாதியின் பேரால் வெட்டுண்டு கிடப்ப தாகும்.

இங்கே இழக்க ஏதும் இல்லாதவர்களாக நெடுங் காலம் வைக்கப்பட்டுவிட்டோர் ஓர் குறிப்பிட்ட சாதி மக்களே.

சிறு சிறு நில உடைமை உடையவர்களாக இருப்போர், இழக்க ஏதுமில்லாதவர்களை அடுத்த மேல்தட்டில் உள்ளவர்களே.

இந்த மேல்தட்டு என்பது பொருளாதாரம் என்ப தனால் இருப்பது ஒன்று; பிறவி சாதியினால் இருப்பது மற்றொன்று.

ஒரே ஒரு தடுப்பினால் பிரிக்கப்பட்டுக் கிடப்பதற்குப் பதிலாக இரு வேறு தடைகளினால் இவர்கள் தடுக்கப்பட்டுக் கிடப்பது கண்கூடு.

இந்த இருவேறு கும்பல்களிலும் இழக்க ஏதும் இல்லாதவர்கள் இருப்பது உண்மை. ஆனாலும் இப்படிப்பட்ட இவர்கள் ஒன்றுசேராமலே இருக்க இவர்கள் பெற்றுள்ள சாதிக் கலாசாரம்-பழக்கங்கள், வழக்கங்கள், நடப்புகள், வாழ்க்கை முறைகள் காரணமாக இருக்கின்றன.

இந்த இருபெரும் பிரிவுகளுக்கு மேலே உள்ள தட்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் உடைமைக்காரர் களாகவே உள்ளனர். இவர்களிலும் இழக்க ஏது மில்லாதோர் சிலரும், சிறு சிறு நில உடைமைகள் வைத்திருப்போர் பலரும் உள்ளனர் என்பதும் உண்மை.

இந்தத் தன்மைகள் அல்லது அமைப்புகள் பொருள் முதல் வாதக் கண்ணோட்டத்தில் வெறும் மேல் கட்டுமானங்களாக மட்டும் இங்கே இல்லாமல் - சமூக அடித்தளம் என்கிற உற்பத்திச் சக்திகள், உற்பத்திச் சாதனங்கள் யாருக்குச் சொந்தம், யாருக்குச் சொந்த மில்லை என்பதைக் காட்டுகிற அடித்தளமாகவும் கண் கூடான நடப்புகளாக உள்ளன.

இதனைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் - இதற்கேற்ப இங்கே வேலைத் திட்டங்களை வகுத்து இங்கு சமதர்மப் புரட்சி வர வழிகாண வேண்டும் என்பதே பெரியாரின் 60 ஆண்டுகாலப் பணியின் மய்யக் கருத்தாகும்.

சமதர்மப் புரட்சிக்குப்பின் அமையும் தொழிலாளர் வர்க்க ஆட்சியில் இவை மறைந்துவிடும் என்பது உறுதிதான் என்றாலும், அந்தப் புரட்சி என்பது எந்தக் கூட்டத்தால் தூக்கிப் பிடிக்கப்பட வேண்டுமோ, அந்தக் கூட்டம் ஒன்றுசேரவில்லையே ஏன்? இவர்களை ஒன்று சேர்க்க நாம் ஆற்ற வேண்டிய பணி என்ன? என்ப வையே நம் முன் நிற்கும் பிரச்சினைகள் ஆகும்.

பெரியார் சம உரிமைக் கழகம் இந்தக் கண்ணோட் டத்தில் இங்கு சமதர்மப் புரட்சிக்கான வேலைத் திட்டங்களை வகுத்திடவும் செயல்படுத்தவும் முனைகிற ஓர் அமைப்பாகும்.

இந்த அமைப்புக்குச் சொந்தமாக என்றில்லாவிட்டாலும், இந்த அமைப்பின் பெரு முயற்சியினால் உருவாக்கப்பட்ட “பெரியார் அச்சிடுவோர் வெளியிடுவோர் குழுமம்” இந்த இலட்சிய ஈடேற்றத்திற்கான வலிவான பிரச்சார சாதனமாக “சிந்தனையாளன்” வார ஏட்டினை ஏற்று நடத்திட முன்வந்து, 1982 அக்டோபர் 9 வரை திருச்சியிலிருந்து என் சொந்த ஏடாக வெளிவந்ததை மாற்றி, இப்போது சென்னையிலிருந்து தந்தை பெரியார் 105ஆவது பிறந்த நாளான 17-9-1983இல் சுவடி 7, ஏடு 42 என வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

திருச்சியிலிருந்து ஏடு வெளிவந்தபோது என் மகள் தமிழ்ச்செல்வி ஆற்றிய தொண்டு என்றும் மறக்க முடியாதது. நிற்க.

“சாதி ஒழிந்த பிறகுதான் சமதர்மம் வர இயலும்” என்கிற அணுகுமுறைக்கும்-“சமதர்ம ஆட்சியில்தான் சாதி ஒழியும்; மூடநம்பிக்கை ஒழியும்” என்கிற அணுகு முறைக் கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு.

ஆனால் சாதி இறுக்கமாக நிலைத்து அதுவே சமூகத் தின் அடித்தளம் என்கிற பொருளாதார அமைப்பிலும் ஊடுருவி இருக்கிற இந்த சமூகத்தில், சமதர்மப் புரட்சிக்கு எவ்வகைக் கூட்டத்தை அடையாளஞ்சுட்டி ஒன்றுசேர்ப் பது என்பது இங்கு நாம் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.

சிக்கலான - நூதனமான இந்த சமுதாய நிலைமை யைக் கணக்கில் கொண்டு சமதர்மப் புரட்சிப் பாதை யைக் காணத் துடிக்கும் அனைத்துச் சக்திகளும் இது பற்றிச் சிந்தித்து சீரிய வேலைத் திட்டங்களை உருவாக்கி இந்த எண்பதுகளிலேயே இங்கே சமதர்மப் புரட்சி வெடிக்க வழிகோலுங்கள் எனப் பெரியார் இயக்கத்தின ரையும், மார்க்சியவாதிகளையும் மார்க்சிய-இலெனி னியச் சிந்தனையாளர்களையும் இரு கை நீட்டி அழைக் கிறோம்.

- வே.ஆனைமுத்து

“சிந்தனையாளன்”, 17-9-1983 தலையங்கம்

Pin It