'தி சண்டே இந்தியன்’ வார இதழ் (ஜன.14-20) திராவிடத்தின் எதிர்காலம் - என்ற முகப்புக் கட்டுரை வெளியிட்டு, திராவிடர் இயக்கம் பற்றிய விரிவான அலசல்களை முன் வைத்துள்ளது. அதில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரை இது.
பெரியாரின் திராவிடர் இயக்கக் கோட்பாட்டை வேறு மொழியில் கூற வேண்டுமானால் கல்வி, அரசியல் அதிகாரங்கள், பல்வேறு சமூகத்தினருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் ‘சமூக ஜனநாயகம்’ முறையாக நடைமுறைக்கு வரும்போது தான், ‘அரசியல் ஜனநாயகம்’ அர்த்தம் பெறும் என்பதுதான்.
மறுக்கப்படுகிற சமூக ஜனநாயகத்திற்கு எதிரானவற்றின் ஆணிவேர்களைப் பெரியார் பிடுங்கி எறியும் முயற்சிகளில் இறங்கியபோது, ‘வகுப்புத் துவேசி’, ‘தேச விரோதி’, ‘பிரிவினைவாதி’, ‘கடவுள் மத எதிரி’, ‘பிரிட்டிஷ் கைக்கூலி’ என்ற பட்டங்களை அவர் சுமக்க வேண்டியிருந்தது.
காந்தியடிகளின் சமூக சீர்திருத்தத்தில் ஈர்க்கப்பட்டு, தேசிய அரசியலுக்கு வந்து, உழைத்த பெரியார், அந்த ‘தேசியம்’, ‘சமூக ஜன நாயகத்தை’ மறுக்கிறது என்பதை உணர்ந்து சுயமரியாதை இயக்கம் கண்டு, திராவிடர் இயக்கமாக வளர்த்தெடுத்தார். அவரது திராவிடர் கோட்பாடு சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட அனைத்துப் பிரிவினைரையும், அனைத்து மதத்தினரையும் உள்ளடக்கியிருந்தது. காலம் காலமாக சாதிய நோய்க்கு உள்ளாக்கப்பட்டு, வாழ்க்கையை ரணமாக்கிக் கொண்டிருந்த புரை யோடிக் கிடந்த நோய்க்கு பெரியார் கண்ட மாமருந்து, ‘வகுப்புவாரி பிரதி நிதித்துவம்’ என்ற கொள்கை. இது இன்று இடஒதுக்கீடு என்ற மற்றொரு வடிவம் பெற்று திகழ்கிறது.
பிரிட்டிஷ் இந்தியாவிலேயே சென்னை மாகாணத்தில் இதற்கான உரிமைக் குரல் கேட்டது. அந்தக் குரலை அழுத்தமாக ஒலிக்கச் செய்தவர் பெரியார். காலம் காலமாக இந்த உரிமைகளை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுத்தவர்கள் தங்களது அதிகாரச் செல்வாக்கைப் பயன்படுத்தி, அதைத் தடுக்க முயன்றபோது, பெரியார் அந்த எதிர்ப்புகளை உறுதியுடன் எதிர்கொண்டு மக்களை அணி திரட்டினார்.
எந்தப் பதவியிலும், எந்த அரசியல் அதிகாரத்திலும் இல்லாத பெரியாரின் போராட்டத்தால்தான், 1951 இல் அரசியல் சட்டம் முதன்முதலாகத் திருத்தப்பட்டு, நீதிமன்றங்களால் பறிக்கப்பட்டிருந்த, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கல்வி வேலை வாய்ப்பு உரிமைகள் மீண்டும் உறுதி செய்யப்பட்டன. ஜோதிபாபுலே, சாகு மகராஜாக்களால் மராட்டியத்திலும், கர்நாடகத்திலும் ஒலித்த உரிமைக் குரல், விரியம் பெற்றது திராவிடர் இயக்கத்தினால்தான் என்று கூற முடியும். பெரியார் காங்கிரசில் இந்தக் கோரிக்கைக்காகப் போராடிதான் வெளியேறினார். அதே காங்கிரஸ் இன்று இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டுவிட்டது.
மத்திய அரசுப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு என்ற ஆணையை 1990களில் அன்றைய பிரதமர் வி.பி. சிங் பிறப்பித்தபோது, அதற்கு சாதி ஆதிக்கவாதிகள், ஊடகங்கள், அதிகார வர்க்கங்களிலிருந்து எழுந்த கடும் எதிர்ப்புக்குப் பிறகுதான் பெரியாரின் கொள்கைகளை ஏற்க மறுத்த பல்வேறு அமைப்புகள், உண்மையை உணரத் தொடங்கின.
‘வர்க்கப் பார்வையை’ இந்த சாதிவாரியான இடஒதுக்கீடுகள் பங்கப்படுத்திவிடும் என்று கூறி வந்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களது குரலை மாற்றிக் கொண்டன. தென் மாநிலங்களில், திராவிடர் இயக்கத்தின் தாக்கத்தால் உறுதி யாக முன்னெடுக்கப்பட்டது இந்த இடஒதுக் கீட்டுக் கொள்கை.
அதன் காரணமாகத்தான் வடமாநிலங்க ளோடு ஒப்பிடுகையில் தென் மாநிலங்கள், இன்று வளர்ச்சிப் பெற்று திகழ்கின்றன. தனிநபர் பற்றி அரசு தரும் புள்ளி விவரங்களே இதற்குச் சான்றுகளாகும். உள்நாட்டுத் தொழில்துறைகளில் மட்டுமல்ல, வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களிலும் பெருமளவில் உயர் தொழில்நுட்பப் பதவிகளைப் பெறுவோர் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னகத்தில்தான். (சுமார் ஒன்றரை லட்சம் பொறியாளர்கள் ஒவ்வோர் ஆண்டும் வெளிநாடு செல்கின்றனர்) ஆனால் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.எஸ். போன்ற உயர் தொழில் கல்வி மையங்களில் இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. நீதித்துறையில் இடஒதுக்கீடே இல்லை. (இதற்கான சட்டரீதியான உரிமை வழங்கப்பட்டிருந்தாலும் அமலாக்கப்படாமல் முடங்கிக் கிடக்கிறது.)
அகில இந்திய மருத்துவ ஆய்வு மையத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஆதிக்க சாதி மாணவர்களும், பேராசிரியர்களும் ஒன்று சேர்ந்து போராடியதையும் அதற்கு பன்னாட்டு ஊடகங்கள் தந்த விளம்பரங்களையும் பார்த்தால் திராவிடர் இயக்கத்தின் இடஒதுக்கீட்டுக் கோட்பாட்டை மேலும் வலிமையாக முன்னெடுக்க வேண்டிய அவசியம் புரிகிறது.
வெகுமக்கள் ‘சமூக ஜனநாயகத்தை’ மறுக்கும் உயர்சாதி ஆதிக்கவாதிகளுக்குப் பாதுகாப்பாக சமூகத்தில் அரண் அமைத்தது, மதங்களும் அதன் நிறுவனக் கோட்பாடுகளும் என்பதை உணர்ந்த பெரியார், சமூக ஜனநாயகத்துக்கான போராட்டத் தில் மதவாத எதிர்ப்பையும் உள்ளடக்கி அதன் மீதான நம்பிக்கைகளை மக்கள் மன்றத்தில் தகர்த்தெறிய மக்கள் மொழியிலேயே பேசினார்.
சரிந்து வரும் தங்களின் செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்த, சாதி ஆதிக்க சக்திகள் மீண்டும் மதவாதத்தைத் தூக்கிப் பிடித்துள்ளதை நாடு பார்க்கிறது. மண்டல் பரிந்துரையை அமுல்படுத்திய வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அயோத்தி பிரச்சினைதான் முன் வைக்கப்பட்டது.
சாதியக் கட்டமைப்பை இறுக்கிப் பிடிக்கும் இந்துத்வா கோட்பாட்டை முன்னிறுத்தி அதன் ஆபத்துகளை உணர முடியாத நிலையில் பெரும்பான்மை மக்கள் இருப்பதால்தான், குஜராத்துகளில் மோடிகள் மீண்டும் முடிசூட்டிக் கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் திராவிடர் இயக்கம், மக்கள் மன்றத்திலே மதவாதத்துக்கு எதிராக நடத்திய போராட்டங்களும் பிரச்சாரங்களும்தான், தமிழ்நாட்டை மதவாத சக்திகளுக்கு இடமின்றி தடுத்து வைத்திருந்தன.
ஆனால் தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை மட்டும் ஏற்றுக் கொண்டு, பெரியார் இயக்கத்தின் மதவாத எதிர்ப்பில் தீவிரம் காட்டாமல் திராவிட அரசியல் கட்சிகள் ஒதுங்கி நின்றதால்தான், இன்று தமிழகத்தில் ‘திராவிடத்தின்’ பெயரிலேயே ஜெயலலிதா, ஒரு மதவாத கட்சியை நடத்தும் நிலையும் சேது சமுத்திரத் திட்டத்தையே மதத்தைக் காட்டி முடக்கும் பரிதாபகரமான நிலைமையையும் தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
இந்துத்வா எதிர்ப்பில் உறுதியான அணுகுமுறையைக் கைவிட்டு மென்மை முகம் காட்டினால் தோல்விதான் மிஞ்சும் என்பதை குஜராத் பாடமாக உணர்த்தி நிற்கிறது.
தமிழ்நாட்டின் கிராமங்களில் தலித் மக்கள் மீதான தீண்டாமை பல்வேறு வடிவங்களில் உயிர்த் துடிப்புடன் இருக்கின்றது. வேறு மாநிலங்களில் இதன் வெளிப் பாடுகள் மேலும் கொடூரம். எனவே, ‘சமூக ஜனநாயகம்’ கிராமப்புறங்களுக்குப் போய்ச் சேர வேண்டியது அவசியமாகிறது. அதற்கான சமூக நெருக்கடிகளும் நிர்ப்பந்தங்களும் வெடித்துக் கிளம்பியுள்ள நிலையில் பெரியார் வலியுறுத்திய திராவிடர் இயக்கத்தின் கோட்பாடான ‘பறையன் பட்டம் போகாமல் சூத்திரன் பட்டம் ஒழியாது’ என்ற கருத்தைத்தான் சாதியைத் திணிக்கும் ஆதிக்க சாதியினரிடம் சாதிகளைக் கடந்த சாதி எதிர்ப்பாளர்கள் ஒன்றுபட்டு போராடிக் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. திராவிட அரசியல் கட்சிகள் பகுத்தறிவுப் பிரச்சாரத்தைக் கை கழுவியதால்தான், சாமியார்களும் அவர்களிடம் ஏமாறும் அப்பாவி மக்களும் அதிகரித்து வருகிறார்கள்.
உலகமயமாக்கலுக்குப் பிறகு பன்னாட்டு மூலதனங்கள் படையெடுத்து வருகின்றன. இந்த ‘பகாசுர’ வளர்ச்சியால் அரசின் பொதுத் துறைகள் மூடப்பட்டு, தனியார் தொழில் நிறுவனங்கள் பெருகி வருவதும் கிராமங்களும் விவசாயத் துறையும் முழுமையாகப் புறக்கணிக்கப்படுவதுமான நிலை வந்து விட்டது. இந்த இடைவெளியை இட்டு நிரப்பி, வளர்ச்சித் திட்டங்கள் அடித்தளத்தில் உழலும் மிகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடம் வந்து சேருவதற்கான இயக்கங்களும் போராட்டங் களும் தேவைப்படுகின்றன. தனியார், பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உரிமைகள், கல்வி உரிமைகள், பொருளாதார, வாழ்வியல் உரிமைகள் என்ற இயக்கங்களை நடத்துவதற்கு வழிகாட்டும் வெளிச்சமாக பெரியாரின் திராவிடர் இயக்கக் கோட்பாடுகளாகவே இருக்கிறது.
சுதந்திரப் போராட்டம் நடந்த காலத்தில் உருவான பெரியாரின் திராவிடர் இயக்கக் கொள்கைகளின் தேவை ‘சுதந்திர இந்தியாவில்’ உணரப்பட்டது. ‘உலகமயமாக்கல்’ காலத்தில் இதன் தேவை மேலும் அதிகரித்துள்ளது. ‘சமூக ஜனநாயகம்’ என்ற இலக்கு நோக்கியப் பயணத்தில் பெரியாரின் திராவிடர் இயக்கக் கோட்பாட்டின் தேவை அதிகரித்தே வருகிறது.