பெரியார் ஒரு சீர்த்திருத்தக்காரரேயன்றி, புரட்சியாளர் அல்லர் என்று, தங்களைப் புரட்சிக்காரர்காளாகக் கருதிக் கொணடிருக்கும் சிலர் காலகாலமாகச் சொல்லி வருகின்றனர். மேலோட்டமாகப் பார்க்கும்போது, ஆம், பெரியார் புரட்சி எதையும் நடத்தவில்லை. சீர்த்திருத்தக் கருத்துகளை மட்டும்தான் சொல்லி வந்தார் எனத் தோன்றும். ஆழ்ந்து பார்க்கும்போது மட்டுமே, பெரியார் ஒரு புரட்சியாளர் என்பதும், திராவிட இயக்கம் ஒரு புரட்சிகர இயக்கம் என்பதும் தெளிவாகும்!

சுயமரியாதை இயக்கம், படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி பெற்ற இயக்கம் என்று கூறலாம். இடஒதுக்கீடு, பெண்விடுதலை, சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, பொதுவுடைமை, தனித்தமிழ்நாடு என ஒவ்வொரு தளமாகச் சுயமரியாதை இயக்கம் முன்னேறியது. 1929ஆம் ஆண்டு, செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநில மாநாடும், அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் வரலாற்றுப் புகழ் பெற்றவை. தமிழகத்தின் அன்றைய சமூக நிலையில் மிகப்பெரிய மாற்றங்களை முன்மொழிந்த மாநாடு அது!

அம்மாநாடு நடைபெறுவதற்கு ஓராண்டு முன்பாகவே, பெரியாரிடமிருந்து புரட்சிப் பொறிகள் வெளிப்பட்டுள்ள தன்மையை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. 26.11.1928 அன்று, சென்னையில் நடைபெற்ற, தென்னிந்தியச் சீர்திருத்த மாநாட்டில் பெரியார் ஆற்றியுள்ள தலைமை உரை, அவருடைய புரட்சிகரப் போக்கை விளக்குவதாக உள்ளது.

உரையைத் தொடங்கும்போதே, சமூகச் சீர்திருத்தம் என்பதில் தனக்கு நம்பிக்கை குறைந்து கொண்டே போவதாகப் பெரியார் சொல்கின்றார். அப்படியானால் சீர்திருத்தத்தை விட்டு விலகி அவர் எங்கே செல்கிறார் என்பதை அவரே சொல்கிறார்.

நமது நாட்டுப் பெரும்பான்மையான மக்களுக்குச் சுயமரியாதையும், சமத்துவமும், விடுதலையும் உண்டாக்கச் செய்ய வேண்டும் என்பவர்களுக்கு, எதிரில் இருக்கும் வேலை, சீர்திருத்த வேலை அல்ல என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம். மற்றென்னையெனில், உறுதியும் தைரியமும் கொண்ட அழிவு வேலையே ஆகும். அளவுக்கு மீறின பொறுமை கொண்ட யோசனையின் மீதே, நான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்.

பெரியார் கூற்றில் உள்ள இரண்டு செய்திகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஒன்று, அவர் குறிப்பிடும் அழிவு வேலை. இரண்டாவது, அந்த முடிவுக்கு அவர் எந்த மனநிலையில் வந்துள்ளார் என்னும் தகவல். அளவுக்கு மீறின பொறுமையாக எடுத்த முடிவு இது என்கிறார். உணர்ச்சிவயப்பட்ட நிலையில் அவர் எந்த முடிவையும் எடுப்பதில்லை.

அழிவு வேலை என்னும் சொல்லைக் கண்டதுமே பலர் அலறிக் குதிப்பார்கள். பார்த்தீர்களா...பார்த்தீர்களா...  ராமசாமி நாயக்கர் ஒரு அழிவு வேலைக்காரர், அவரே அதைச் சொல்லிவிட்டார் என்று சிலர் ஆனந்தக் கூப்பாடும் போடுவார்கள்.

பலமுறை பழுது பார்த்த பின்னும், ஒரு கட்டிடம் சரிவரவில்லையெனில், அதனை முழுவதுமாக இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டுவதுதான் சரியாக இருக்கும். உடை, இடி, கட்டு என்பது இதுதான். உடைப்பதும், இடிப்பதும் புதிதாய்க் கட்டுவதற்காகத்தான் என்பது புரிந்தால், இடித்துத்  தகர்க்கும் அழிவு வேலை கண்டு நாம் அஞ்சத் தேவையில்லை.

புதிதாய் ஆக்குவதற்காகவே, இருப்பதை அழிப்பது குறித்துப் பெரியார் பேசுகின்றார். இன்றைய சமூகத்தில் பல்வேறு நச்சுத் தன்மைகள் மிகுந்து விட்டதால், இனி அதனைச் சீர்திருத்திக் கொண்டிருக்க முடியாது -முற்றிலுமாய் அழித்துவிட்டுப் புதிதாய் அதனை உருவாக்க வேண்டும் என்ற கருத்தையே, தனக்கே உரிய பாணியில் பெரியார் வெளிப்படுத்துகின்றார்.

ஒன்றை மாற்றுவது என்று முடிவுக்கு வந்தபின், அதனை வேருடன் அழிக்கத் தயாராயிருக்க வேண்டும் என்கிறார் அவர். ஒரு சிறு தாரையாவது, கிளை வேரையாவது மீத்து வைத்துக் கொண்டு, சீர்திருத்தம் செய்யலாமென்று எந்தவிதமான சீர்திருத்தக்காரர்கள் நினைத்தாலும், அவர்கள் ஒருக்காலமும் வெற்றிபெற மாட்டார்கள் என்பது எனது உறுதி என்று மிகத் தெளிவாகத் தன் பார்வையைப் பெரியார் முன்வைக்கின்றார்.

இந்தப் பார்வை அவரிடம் நாளுக்கு நாள் உறுதிபெற்றமையால்தான், கம்பராமாயணம் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களை எரிப்பது என்னும் எல்லைக்கே அவர் செல்கிறார். அவரைப் பின்பற்றி அறிஞர் அண்ணாவும் தீ பரவட்டும் என முழங்கிய அந்த நாள்களைத் தமிழகம் நன்கு அறியும்.

இதுபோன்ற கடுமையான போக்கை மக்களால் உடனடியாக ஏற்க முடியாது என்பதை அவர் உணர்ந்துள்ளார். பழைய ஓவியங்களையும், சின்னங்களையும், இலக்கியங்களையும் அழிக்கலாமா என்று மக்கள் கேட்கத்தான் செய்வார்கள் என்கிறார். இப்போக்கிற்கு எதிராக விவேகானந்தர், காந்தியார் முதலியோர் கூறியுள்ள வார்த்தைகளைப் பெரியோர்கள் சிலர் எடுத்துக் காட்டவும் கூடும் என்று கூறும் பெரியார், அப்பெரியோர்களுடைய வார்த்தைக்கு நான் முற்றும் முரண்பட்டவன் என்பதைக் கண்ணியமாய் ஒப்புக் கொள்கிறேன் என்று தன் நிலையைத் தெளிவுபடுத்துகின்றார்.

காந்தியார், விவேகானந்தர் எல்லோரும் பெரியவர்கள்தாம். ஆனாலும் அவர்கள் கருத்தோடு நான் முரண்படக் கூடாதா என்று கேட்கும் துணிவு எப்போதும் அவருக்குண்டு.

சீர்திருத்தங்கள், இறுதி வெற்றிக்குப் பயன்படாது என்னும் தன் கருத்திற்கு அரண் சேர்க்கும் வகையில், ஓர் எடுத்துக்காட்டையும், அன்றையத் தன் தலைமை உரையில் பெரியார் முன்வைக்கின்றார்.

உதாரணமாக, இராமானுஜர், நாமத்தையும், பூணூலையும், பழைய சின்னம் என்பதாகக் கருதி, அதை வைத்துக் கொண்டு, பறையன், சக்கிலி, பள்ளன் என்பவர்களையயல்லாம் பிடித்து, நாமமும், பூணூலும் போட்டு, மக்களைச் சமத்துவமடையச் செய்வதென்பதான சீர்திருத்தங்களைச் செய்தார் என்பதாகச் சொல்லப்படுகின்றது. இதனால் பழைய சின்னம் காப்பாற்றப்பட்டதே தவிர, மக்களுக்குச் சமத்துவம் கிடைத்ததா? சமத்துவ உணர்ச்சி உண்டாயிற்றா?

என்று கேட்கும் அவர் வினாக்களில்தான் எவ்வளவு ஆழம்!

பாரதியார் கனகலிங்கம் என்னும் தாழ்த்தப்பட்ட தோழனுக்குப் பூணூல் மாட்டிவிட்ட செய்தியைப் புரட்சிகரமான செயல் என்பது போல இன்றும் பலர் பேசுவதைப் பார்க்கிறோம். அதனால் பூணூலின் பெருமைதான் பேசப்படுமே தவிர, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வில் என்ன மேம்பாடு வந்து சேரும்? பூணூல் புனிதமானது என்னும் கருத்துருவாக்கம்தான், இது போன்ற நிகழ்வுகளால் ஏற்படுகிறது.

புனிதங்களை உடைத்த புரட்சியின் சொந்தக்காரராகப் பெரியாரே நம் கண்களுக்குத் தெரிகின்றார்.

அவர் வெறும் சீர்திருத்தக்காரர் அல்லர்; தமிழ்ச் சமூகப் பழைமைவாதத்தை வேரோடு வெட்டி எறியப் போராடிய புரட்சிக்காரர்.

Pin It