கோயம்புத்தூர் மாவட்டம், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவையொட்டி இரண்டு நாட்கள் நடைபெறும் கருத்தரங்கம், கவியரங்கம், கலை நிகழ்ச்சி, பேரணி மற்றும் பொது மாநாட்டை (26–04–2025) தொடங்கி வைத்து, விழாவில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், தி.மு.க. நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் தொடக்க உரையாற்றினார்.
இம்மாநாட்டில் கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் பேசியதாவது:–
“அண்ணன் சுபவீ அவர்கள் இந்த மாநாட்டிலே நீ கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டபோது... எத்தனையோ பெருமைகள் நமக்கு கிடைக்கலாம், தேர்தலிலே வெற்றி பெறும் வாய்ப்பு கிடைக்கலாம், நம் உழைப்பை அங்கீகரித்து நாம் சார்ந்திருக்கும் இயக்கங்கள் நமக்கு பொறுப்புகள் அளிக்கலாம்.
ஆனால் இதையெல்லாம் விட பெருமையாக நான் நினைப்பது, தலைவர் கலைஞர் அவர்கள் என்னைப் பற்றி மேடையிலே குறிப்பிட்டுச் சொன்னார்கள். எங்கள் வீட்டில் எல்லாரும் திமுக என்றால் என் மகள் கனிமொழி திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர் என்று.
என் தந்தையாக தலைவராக அவர் எனக்கு தந்திருக்கும் பெருமையாக, பொறுப்பாக கருதுவது இந்த வார்த்தைகளைதான். அந்த வார்த்தைகளின் நினைவோடுதான் இறுமாப்போடு இந்த மேடையில் நிற்கிறேன்.
சுயமரியாதை – வீரியமிக்க சொல்!
அழகான வீரியமிக்க வார்த்தை இருக்கிறது என்றால் அது சுயமரியாதை என்ற சொல்தான். வேறு எந்த அடிப்படைத் தேவைகளைத் தாண்டி ஒரு வாழ்க்கை வாழ்க்கையாக இருப்பதற்கு தேவை சுயமரியாதைதான்.
சுயமரியாதையோடுதான் உணவு தேவைப்படுகிறது. சுயமரியாதையோடுதான் நமக்கு இருக்க இடம் தேவைப்படுகிறது. சுயமரியாதையோடுதான் நமக்கு எதிர்காலம் தேவைப்படுகிறது. இப்படி சுயமரியாதையை உருவாக்கி கட்டமைத்து பாதுகாத்துத் தந்த இயக்கம்தான் திராவிட இயக்கம்.
இந்த உலகத்தில் பல நாடுகளில் பல ஏற்றத் தாழ்வுகள் இருந்திருக்கிறது. இன்றுவரை இருப்பது ஆண் பெண் ஏற்றத் தாழ்வு. பெண் இரண்டாம் பட்சம்தான் என்ற இந்த நிலை இன்றுவரை இருக்கிறது. நிறம், மதம், மொழி, பொருளாதாரத்தின் பெயரால் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அத்தனை ஏற்றாத் தாழ்வுகளையும் மாற்றிவிடலாம், ஆண் பெண் என்பதைத் தவிர, பொருளாதாரத்தை ஈட்ட முடிந்தால் இரு தலைமுறைகளுக்குப் பின் நாம் மேட்டுக்குடியாகிவிடலாம்., படித்தவர் படிக்காதவர் என்ற ஏற்றத் தாழ்வையும் நம்மால் மாற்றிவிட முடியும்.
ஆப்பிரிக்கர்களை நூற்றாண்டுகளாக அடிமைகளாக நடத்தியபோதும், அமெரிக்க அதிபராக ஒரு கறுப்பர் வந்து அமர்ந்ததையும் நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம்.
மதம் – கடவுள்!
தந்தை பெரியாரிடம் ஒருவர் கேட்கிறார், ‘ஏன் மதத்தை எதிர்க்கிறீர்கள்? ஏன் கடவுளை எதிர்க்கிறீர்கள்’ என்று கேட்கிறார்.
அதற்கு பெரியார், உன் அலுவலகத்தில் உனக்கு கீழ் வேலை செய்யும் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரும் நீயும் ஒரு கோயிலுக்கு போனீர்கள் என்றால்… அவரை உள்ளே விடுவாங்களா, உன்னை உள்ளே விடுவாங்களா என்று கேட்கிறார். அப்போது, ‘அவரைத்தான் உள்ளே விடுவார்கள்; என்றார்.
அப்படியென்றால் உன்னால் ஜாதியை தாண்டி தடுப்பைத் தாண்டி போக முடியாத நிலையை இந்த மதம், கடவுள் உருவாக்கி வைத்திருக்கிறது. அதை மாற்றத்தான் அவை இரண்டையும் எதிர்க்கிறேன் என்கிறார் பெரியார்.
நீங்கள் படித்து வெளிநாட்டில் போய் வாழலாம், எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால் சாதி உங்களோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது இறந்தால் கூட மேல்சாதிக்கான சடங்கு வேறு, நமக்கான சடங்கு என்பது வேறு,
பிறப்பதற்கு முன்பாகத் தொடங்கும் சாதிக் கட்டமைப்பு இறப்பைத் தாண்டியும் தூக்கி சுமக்கக் கூடியதாக இருக்கிறது.
ஒடுக்கப்பட்டோருக்கு போராடியவர் பெரியார்!
`எனக்கும் கடவுளுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. . எனக்கு இந்த சாதி என்பது பிடிக்க வில்லை. யார் ஒடுக்கப்பட்டவர் என்று நினைத்தாலும் அதை எதிர்த்தவர்தான் பெரியார். சாதியின் பெயரால், நிறத்தின் பெயரால் யார் ஒடுக்கப்பட்டாலும், ஒடுக்கப்பட்டவருக்காக போராடுவேன் என்று சொன்னார் பெரியார். சாதி எப்படி வந்தது? மதத்தால் வந்தது. மதத்தின் காப்பாளர் கடவுள்.
ஒரே ஒரு உதாரணம்: ஒரு ஊரில் ஒரு சிலருக்கு தோல் சம்பந்தப்பட்ட சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்றால் அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் சென்று சரி செய்ய முடியும், ஊருக்கே பிரச்சினை வந்தது என்றால் அதன் வேர் எங்கே என்று தேட வேண்டும். அது ஒரு தொழிற்சாலையில் இருந்து வருகிறது என்றால்.. அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற வேண்டும் என்றால் அந்த தொழிற்சாலையைத் மூட வேண்டும்.
காற்றை நிலத்தை நீரை நஞ்சாக்கும் அந்த ஆலையை மூட வேண்டும். என்று போராடி 13 பேரை பலிகொடுத்த தூத்துக்குடியில் இருந்து கேட்கிறேன். தொழிற்சாலையைத் தானே மூடுகிறோம்?
அதைத்தான் பெரியார் சொன்னார். எந்த இடத்தில் இருந்து பிரச்சினை உருவாகிறதோ அது மதமாக இருக்கட்டும், கடவுளாக இருக்கட்டும் அதை மூடு. ஒவ்வொருத்தராக கூப்பிட்டு வைத்தியம் பார்க்க முடியாது என்று சொன்னதுதான் சுயமரியாதை இயக்கம்.
அதனால்தான் எந்த மதமாக இருந்தாலும் தவறான கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்த்தாலும் அதை எதிர்த்தார்.
இன்று நிறைய பேர் சொல்கிறார்கள். திராவிட இயக்கம் இந்து மக்களுக்கு எதிரானது என்று. அதை நான் ஜஸ்டிஃபை பண்ணப் போவது இல்லை. அதற்கான அவசியமும் கிடையாது.
நான் இங்கே இரு விஷயங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன். அவர்கள் சொல்கிறார்கள், நாங்கள்தான் பெரும்பான்மை இந்து மக்களின் பாதுகாவலர்கள், இந்து மக்களின் அடுத்த தலைமுறையை நாங்கள்தான் பாதுகாக்கிறோம் எங்களை நம்புங்கள் என்று சொல்கிறார்கள்.
உரிமைகளை பெற்றுத் தந்தது திராவிட இயக்கம்!
1910 களில் வந்த இரு கணக்கெடுப்பை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். சென்னை பல்கலைக் கழகத்தில் பதிவு செய்த பட்டதாரிகளாக 650 பேர் இருந்தார்கள். அதில் நான் பிராமின்ஸ் என்று சொல்லக் கூடிய பிற்படுத்தப்பட்ட மக்களான இந்துக்கள் 12 பேர். மீதி 74 இருக்கும் 500க்கும் மேற்பட்டவர்கள் 3% இருக்கும் பிராமண சாதியை சேர்ந்தவர்கள்.
ஆனால் இன்று தமிழ்நாட்டில் இருக்கும் பட்டதாரிகள் தேசிய சராசரியை விட அதிகமாக இருக்கிறோம். அதில் எத்தனை சதவிகிதம் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்று கணக்கெடுத்துப் பார்த்தோம் என்றால் யார் பெரும்பான்மை இந்து மக்களுக்காக பாடுபட்டிருக்கிறார்கள். யார் அவர்களுக்கு உதவியிருக்கிறார்கள் என்று தெரியும்.
யார் அவர்களின் தலைமுறையை மீட்டெடுத்து சிலிகான் வேலியில் இருந்து உலகம் முழுதும் பிற்படுத்தப்பட்டத் தமிழர்கள் கோலோச்சுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் திராவிட இயக்கம்தான்.
அதேபோல்; சப் கலெக்டர் 55% பதவிகளில் 3% இருந்த ஒரே இனத்தை சாந்தவர்கள்தான். துணை நீதிபதிகளாக 83% அவர்கள்தான் இருந்தார்கள். 72% முன்சீபுகள் அவர்கள்தான்.
இன்று எத்தனை கலெக்டர்கள், அரசுப் பதவிகளிலே இருக்கிறார்கள். நாட்டிலேயே இத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்றால் பிற்படுத்தப்பட்ட மக்கள் வந்திருக்கிறார்கள் என்றால் திராவிடஇயக்கம்தான்காரணம். இதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். உங்களுடைய உரிமைகளை போராடி உங்களுக்கு பெற்றுத் தந்த இயக்கம் திராவிட இயக்கம்.
நம் முன்னால் பல கேள்விகள் விஸ்வரூபம் எடுத்து நின்று கொண்டிருக்கிறது.
எல்லா மதங்களிலும் இருக்கும் மதவாதிகள் நமக்குத் திரும்பத் திரும்ப சொல்லித் தரும் ஒன்று… சமூகக் கட்டமைப்பை கேள்வி கேட்டுவிடக் கூடாது என்பதற்காக, ‘நீ இந்த வாழ்வில் கஷ்டப்பட்டால், கேள்வி கேட்காமல் இருந்தால், உனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை நீ ஏற்றுக்கொண்டால் இதைத் தாண்டி உனக்கு பிரமாதமான சொர்க்கம் இருக்கிறது.
நீ எவ்வளவு அடிமையாக நடத்தப்பட்டாலும், உன்னிடம் இருந்து உரிமைகள் பறிக்கப்பட்டாலும் அதெல்லாம் அடுத்த ஜென்மத்தில் ஈடு செய்யப்படும்’ என்றெல்லாம் சொல்லி நம்மை வார்த்தெடுத்தார்கள்.
திரும்பத் திரும்ப சொல்கிறோம்!
யுவெல் ஹராரி என்ற மிக முக்கியமான சிந்தனையாளர்:
‘மனிதர்களுக்கு கதைகள் தேவைப்படுகிறது. அதற்கு மதங்கள் தேவைப்படுகிறது. நீ வைத்திருக்கும் இரண்டு வாழைப் பழங்களில் ஒன்றை என்னிடம் கொடுத்துவிட்டால் அடுத்த ஜென்மத்தில் நன்றாக இருக்கலாம். உனக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்குமென்று சொல்லி அந்த வாழைப் பழத்தை ஏமாற்றி நீ வாங்கிவிட முடியும்.
ஆனால் இதை ஒரு சிம்பன்ஸியிடம் போய் , இதேபோல் கேட்டால் அது என்ன பண்ணும்? சிம்பன்ஸியிடம் இருந்து அடிதான் வாங்கிக் கொண்டு வரவேண்டும்.
மிருகங்களிடம் கூட சொல்லி செல்லுபடியாகாத ஒரு கதையை மனிதர்களிடம் திரும்பத் திரும்ப நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
இதே கதைகளை பெண்களிடம், ஒடுக்கப்பட்ட சமூக மக்களிடம், நீ கஷ்டப்படு… இதுதான் உனக்கு விதிக்கப்பட்டது என்று பாசிசம் இன்று சொல்லிக் கொண்டிருக்கிறது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று நம்முடைய முதலமைச்சர் ஒவ்வொன்றையும் எதிர்த்துக் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். அதனால்தான் அவரைப் பார்த்தாலே மேலே நடுக்கம் ஏற்படுகிறது.
நீங்கள் எதையெல்லாம் தேசியம் என்று கட்டமைக்கிறீர்களோ, எதிர்த்து கேள்வி கேட்பவர்களை எல்லாம் தேச விரோதிகள், நக்சல்கள் என்று கட்டமைப்பீர்களோ… நான் இந்த நாட்டின்பால் உள்ள அக்கறையில் கேட்கிறேன் என்று முதலமைச்சர் கேட்கிறார்.
(தொடரும்…)
- கனிமொழி கருணாநிதி