2015 சூலை 15 முதல் 2017 செப்டம்பர் வரை எந்த நிகழ்ச்சிக்கும் என்னை அழைக்காதீர்கள்!

91ஆம் பிறந்த நாளில் வே. ஆனைமுத்து வேண்டுகோள்!

அன்பார்ந்த தமிழ்ப் பெருமக்களே!

என் இனிய மா.பெ.பொ.க. தோழர்களே!

அனைத்து அமைப்புகளிலும் உள்ள பெரியார் தொண்டர்களே!

என் இனிய பொதுவாழ்வுக்கு என் குடும்பத்தார் தம்மால் முடிந்த எல்லா ஒத்துழைப்பையும் மனமு வந்து அளித்தார்கள்; இனியும் அளிப்பார்கள் என நம்புகிறேன்.

நான் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாகவும் தக்க தரவுகளுடனும் பல தொகுதிகளாக எழுதி வெளியிட விரும்புகிறேன். இதற்கு வேண்டப்பட்ட தரவுகளையும் சான்றுகளையும் நிழற்படங்களையும் மேலே குறிக்கப்பட்ட நீங்கள் தாம் - பெரியார் தொண்டர்களும் தமிழ்ப் பெருமக்களும்தாம் திரட்டித் தர முடியும்.

பெரியார் 94 ஆண்டுகள் 98 நாள்கள் நம்மிடையே வாழ்ந்தார். 95ஆம் அகவையில் 35 நாள்கள் பயணம் செய்தார்.

அவருடைய அரசியல் பொதுவாழ்வு 1912இல் தொடங்கியது.

அவருடைய பள்ளிப் படிப்பு 11ஆம் அகவையோடு நின்றது.

இந்த இரண்டையும் நிறுவிட ஏற்ற ஆவணச் சான்று களை நான் திரட்ட முடிந்தது.

ஈரோடு வெங்கட்ட ராமசாமி எந்தப் பள்ளியில் படித்தார் - எந்த ஆண்டுகளில் படித்தார் - என்ன பாடங்களை எடுத்துப் படித்தார் - எதை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்தார் என்பதை நிறுவிட ஏற்ற சான்றுகளை என்னால் திரட்ட முடிந்தது.

இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் - மற்றும் அவர் மேற்கொண்ட கொள்கை முடிவுகள், போராட்டங்கள், இயக்க நடப்புகள் பற்றிய முடிவுகள் ஆகிய ஒவ் வொன்றுக்கும் தக்க சான்றுகள் தரப்பட வேண்டும் என நாம் விரும்புகிறேன்.

உலகப் புகழ்பெற்ற :

1. பாஸ்வெல் எழுதிய, “டாக்டர் ஜான்சனின் வரலாறு”;

2. அறிஞர் லீ எழுதிய, “விக்டோரியா மகாராணி யின் வரலாறு”;

3.அபாட் எழுதிய, “நெப்போலியனின் வரலாறு”;

4.  புதுவை ஆனந்தரங்கப் பிள்ளை எழுதிய தன் வரலாறு

என, இப்படிப்பட்ட தன்மையிலான - பெரியாரின் எல்லா நடப்புகளையும் வெற்றிகளையும் தோல்விகளையும் அரிய படிப்பினைகளையும் எல்லோரும் தெரிந்துகொள்ளத் தக்க வகையில், பெரியாரின் வரலாற்றைப் பல தொகுதிகளாக எழுதி வெளியிட விரும்புகிறேன்.

பெரியார் வாழ்ந்த காலத்தில் அவர் 1971-72இல் என்னிடம் ஒப்படைத்த எல்லா அச்சிட்ட தரவுகளையும், நான் 1975இல் மணியம்மையாரிடம் திருப்பித் தந்துவிட்டேன். எவ்வளவு தேடினாலும் இனி அவற்றை ஒருசேர நான் ஒருவனே தேடிப் பெற்றிட முடியாது.

அப்படிப்பட்ட தரவுகளும், பெரியார் பங்கேற்ற நிகழ்ச்சியின் படங்களும் எவரிடம் இருந்தாலும் அவற்றை ஒளிப்படி (Xerox) செய்து விடுத்து உதவுங்கள் என அன்புடன் வேண்டுகிறேன். அதற்கான எல்லாச் செலவுகளையும் தவறாமல் நான் விடுத்துவைப்பேன்.

இப்பணியினை வெற்றியாகச் செய்து முடிக்கும் வரையில், நான் வெளியூர்களுக்கு எதற்காகவும் பயணம் போவதை அறவே ஒதுக்கிவிட்டு, ஒரே இடத்தில் தங்கியிருந்து எழுத முற்பட்டால்தான், பெரியாரின் முழு வரலாற்றை எழுதி முடிக்க இயலும்.

நான் வரும் 21.6.2015 அன்று 91ஆம் ஆண்டில் நுழைவேன்.

அதன்பிறகு 2 ஆண்டுகள் 6 மாதங்கள் - 2017 திசம்பர் முடிய நான் நல்ல நினைவாற்றலுடனும் நல்ல உடல் நலத்துடனும் வாழ்ந்து இந்த ஒரு பணியை முடிப்பேன் என்று திடமாக நம்புகிறேன். அப்படி நான் உறுதி பூணுவது பெரியார் தொண்டர்கள் எல்லோ ரையும், தமிழ்ப் பெருமக்களையும் நம்பித்தான்.

இந்த என் வேண்டுகோளை ஏற்று,

1. திராவிடர் கழகம்

2. தந்தை பெரியார் திராவிடர் கழகம்

3. திராவிடர் விடுதலைக் கழகம்

4. மற்றுமுள்ள, தேர்தலில் பங்கேற்கும் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க. முதலான திராவிட அமைப்புகள்

5. திராவிட இயக்கத் தமிழர் பேரவை

6. தனிப்பட்ட திராவிடரியக்க - தமிழியக்க அறிஞர்கள்

ஆகியோர் இப்பணிக்கு உதவுங்கள் என அன்புடன் வேண்டுகிறேன்.

நான் திடமான நம்பிக்கையோடு செயல்படுகிறேன்.

நீங்கள் எல்லோரும் திறந்த மனத்துடன் எல்லா வகைகளிலும் என் இந்த ஒரு பணிக்கு எனக்குத் துணைபுரியுங்கள் என அன்புடனும் பணிவுடனும் இறுதியாகவும் வேண்டுகிறேன்.

2017ஆம் ஆண்டில், “பெரியார் ஈ.வெ.ரா. வாழ்க்கை வரலாறு” - நூல் வெளியீட்டு விழாவில் உறுதியாக நாம் எல்லோரும் சந்திப்போம்.

தன்னம்பிக்கையும், இடையறாத உழைப்பும் நாணயமும் நான் தேடிப்பெற்ற சொத்துக்கள்.

அந்த என் சொத்துக்களை நான், காப்பாற்றிட, நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பங்களிப்பை மனமுவந்து ஈந்திட முன்வாருங்கள்! முன்வாருங்கள்! என மீண்டும் அன்புடன் அழைக்கிறேன்.

1-6-2015

Pin It