ஆண்டுக்கு 3900 கோடி ரூபாய் அரசுக்கு வருவாயாக வரவேண்டும் என்று எதிர்பார்த்து, தன்னை ஆட்சிக் கட்டிலில் ஏற்றிய நாட்டு மக்களின் தலைகளில் கடுமையான வரிச்சுமைகளை ஒரே நாளில் ஏற்றிவிட்டார் ஜெயலலிதா.

வள்ளுவர் சொல்கிறார், “ வேலொடு நின்றான் ‘ இடு ’ என்றது போலும், கோலொடு நின்றான் இரவு”. இதன் பொருள், ஆட்சியதிகாரம் கையில் இருப்பதால், அதிகாரத்தைப் பயன்படுத்தி முறைகேடாக வரிபோடுவது என்பது, கூர்மையான வேல் ஆயுதத்தைக் கையில் வைத்துக் கொண்டு, ‘ இருப்பதை எல்லாம் கொடு ’ என்று வழிப்பறி செய்வதற்கு ஒப்பானது. திருவள்ளுவரின் இந்தக் கண்டனம், இன்றைய ஜெயலலிதா அரசுக்குப் பொருத்தமாகி விட்டது.

நல்லதைச் சொன்னால் ஜெயலலிதாவுக்குப் பிடிக்காது. திருவள்ளுவர் பாவம், நல்லவர். அதனால்தான் சமச்சீர்க்கல்விப் பாட நூல்களில் இருக்கும் அவர் படத்தின்மேல் ‘ஸ்டிக்கரை’ ஒட்டி மறைத்துக் கொண்டிருக்கிறார் ஜெயா.

முதலில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு முறையானதன்று என்கிறார் கலைஞர். “ ஜெயலலிதா அரசின் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 4ஆம் நாள், காலை 10.40 மணிக்குப் பேரவையில் வைக்கப்படும் என்று ஆளுநரால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அது ஏடுகளின் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டும் விட்டது. வழிவழியாகப் பின்பற்றப்பட்டு வரும் சட்டப்பேரவை மரபுகளின்படி, சட்டமன்றக் கூட்டத் தொடர் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டால், அதன்பின் அரசின் முக்கிய அறிவிப்புகளோ, நிதித்துறையின் வரிகள் தொடர்பான மாற்றங்களோ செய்வதில்லை. அப்படிச் செய்யப்படுமானால் அது அவையின் உரிமையைப் பாதிக்கக் கூடியதாகும்.

ஆனால் இன்றைய நாளேடுகளில் ரூபாய் 3900 கோடி வருவாய் கிடைக்கும் வகையில், வரிவிதிப்பு மாற்றங்கள் செய்யப்பட்டு அது இன்றுமுதல் (12.07.2011) அமலுக்கு வரும் என்றும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

மேலும் ரூபாய் 1200 கோடி அளவிற்கு மது பானங்களின் மீதான வருவாய் கூடுதலாகக் கிடைக்கும் அளவிற்கு அறிவிப்பு ஒன்றும் வெளியாகியுள்ளது. புதிய மருத்துவத் திட்டம் ஒன்றும் தொடங்கப்படவுள்ளதாக முதலமைச்சரா லேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பேரவையின் உரிமையைப் பாதிக்கின்ற செயல்கள் ஆகும் ” முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை நடவடிக்கைகளை முழுமையாகத் தெரிந்து வைத்திருப்ப வருமான கலைஞரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது.

மக்களால் தேர்வு செய்யப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் ‡ மக்கள் பிரதிநிதிகள். தமிழ்நாட்டின் 234 மக்கள் பிரதிநிதிகளும் அமர்ந்து மக்கள் பிரச்சினைகளைப் பேசவேண் டிய மக்கள் மன்றம், சட்டப்பேரவை.

சட்டமன்றம் கூடவிருக்கும் இந்த நேரத்தில், மக்கள் மன்றத்தைப் புறக்கணித்துவிட்டு, அதற்கு வெளியி லிருந்து மக்கள் மீது வரிகள் விதித்துள் ளதாக அறிவித்தால், பிறகு ஏன் சட்டமன்றம்? எதற்காகத் தேர்தல்கள்?

இது ஒருபுறம் இருக்க, கலைஞர், “ தி.மு.க. ஆட்சியில் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக இந்த அளவுக்கு வரி உயர்வே செய்யவில்லை ” என்று தெளிவாகச் சொல்கிறார்.

ஆனால் இந்த 3900 கோடி வருமான வரிவிதிப்பு குறித்த ஆணையைப் பிறப்பித்த நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே. சண்முகம், அவரின் ஆணையில், “ தமிழகத்தில் முன்பிருந்த அரசு, ரூபாய் 1 இலட்சம் கோடிக்கும் அதிகமாகக் கடன் வைத்துவிட்டுச் சென்றுள்ளது. அந்தக் கடனை அடைப்பதுடன், வட்டி செலுத்த வேண்டிய கடமையும் அரசுக்கு ஏற்பட்டு இருக்கிறது ” என்று சொல்லி இருக்கிறார்.

அரசின் வரவு செலவு திட்டங்களைப் பற்றிப் பேசவேண்டிய அரசின் உயர் அதிகாரி, ஓர் அரசியல் வாதியைப் போல பேசியிருப்பது அந்தப் பதவிக்கு அழகன்று!

தவிர இந்த வரிவிதிப்பால் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகிறார்கள்.

சமையல் எண்ணெய் விற்பனையைப் பொறுத்தவரை ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வரை வரிவிலக்கு இதுவரை இருந்தது. ஆனால் அரசின் ஆணையால் அது 5 கோடியாக குறைக்கப்பட்டதன் விளைவாக அதன் விலை ஏறிவிட்டது. அன்றாடம் வீட்டில் பெண்கள் பயன்படுத்தும் பாமாயில்‡ சன்பிளவர் ஆயில் ‡ தேங்காய் எண்ணெய் ‡ கடலை எண்ணெய்‡நல்லெண்ணெய் என்று இவைகளின் விலை எல்லாமே ஏறிவிட்டது.

ஜவுளித் துறையில் 5 சதவீதம் வரி உயர்வை அரசு விதித்து இருக்கிறது. இது போதாதென்று, கைத்தறிச் சங்கங்களுக்கு இனி மூன்றாண்டுகளுக்கு முன்பணமோ, கடனுக்கு நூலோ வழங்கப்போவ தில்லை என்றும், நூலுக்கான தொகையை 100 சதவீதம் கொடுக்க வேண்டும் என்றும் கோ‡ஆப் டெக்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குனர் விசைத் தறிச் சங்கங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்தி ருக்கிறார்.

எனவே கருவிகள், நூல்விலை உள்ளிட்ட வைகளால் உற்பத்திச் செலவு அதிகமாகும். உற்பத்தி செய்யப்பட்ட துணிகளின் விலை கணிசமாக உயரும். மக்களும் பாதிக்கப்படுவார்கள்; நெசவுத் தொழிலும் பாதிக்கப்படும்.

இதே நெசவாளர்கள்தாம் இதே அம்மையாரின் முந்திய ஆட்சியின்போதும் பாதிக்கப்பட்டனர். அப்போது அவர்களுக்காகக் கஞ்சித் தொட்டி திறக்கப்பட்டது என்பது இன்றும் நினைக்கத்தக்கது.

செல்போன்(கைப்பேசி) என்பது இன்று மக்களின் வாழ்வாதாரப் பொருள்களில் ஒன்றாக மாறிவிட்டது. சாமானிய மக்களும் இன்று கைபேசி யைப் பயன்படுத்துகிறார்கள். இதற்கு 4 சதவீதமாக இருந்த வாட் வரியை 14.5 சதவீதமாக அரசு உயர்த்தியதால் இதன்விலை கடுமையாக உயர்கிறது. தொலைக்காட்சிப் பெட்டி, எல்சிடி தொலைக் காட்சிப் பெட்டி ஆகியவைகளுக்கும் 14.5 சதவீதம் வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது.

வீட்டு உபயோகப் பொருள்களான மின்விசிறி, மண்ணெண்ணெய் அடுப்பு, அயன்பாக்ஸ், குக்கர், ஸ்டெபிலைசர் போன்ற பொருள்களுக்கான வாட் வரி 4இல் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டு விட்டது.

அதுபோல பத்திரப்பதிவுக் கட்டண உயர்வு மக்களைப் பெரிதும் அதிர்ச்சியுறச் செய்துள்ளது.

அசையாச் சொத்துக்களான, நிலம் , வீடு போன்றவைகளை விற்க, குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கும் பவர்‡ஆப்‡அட்டர்னி என்ற உரிமையை வழங்கப் பதிவுக் கட்டணம் ரூபாய் 100 என்பது 1000ஆக உயர்ந்துவிட்டது.

குடும்ப உறுப்பினர்கள் அல்லாமல் வெளி ஆட்கள் என்றால் இப்போதுள்ள 1000 ரூபாய் ,  10,000 என்று உயர்த்தப்பட்டுவிட்டது. குத்தகை(லீஸ்) ஆவணப் பதிவுக்கட்டணம் 5000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுவிட்டது. இது சாதாரண மக்களைப் பெரும் பாதிப்பிற்கு அல்லவா ஆளாக்கிவிடும்.

மக்கள், அரசின் வரி விதிப்பில் பாதிக்கப் படுகிறார்கள். அவர்களுக்கு அந்தப் பாதிப்பில் இருந்து மீள அரசு வருவாய்க்கு வேறு வழிகளை அல்லது மக்களைப் பாதிக்காத வகையில் வேறு வழிகளைக் காணவேண்டியது ஓர் அரசின் கடமையாகும்.

ஆனால் நிதித்துறை முதன்மைச் செயலாளர், ஆந்திரத்தில் அவ்வளவு சதவீதம், குஜராத்தில் இவ்வளவு சதவீதம் வரி விதித்திருக்கிறார்கள், அதனால் தமிழ்நாட்டிலும் இவ்வளவு சதவீதம் வரிகளை உயர்த்துகிறோம் என்ற வகையில் கூறியிப் பது, மக்கள் நலனைக் கருத்தில் கொண்ட ஆட்சியின்  செயலாகத் தெரியவில்லை.

ஜெயலலிதா அறிவித்துள்ள புதிய காப்பீட்டுத் திட்டம் என்பது தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டம்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனினும் சில மாற்றங்கள் அதில் இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக 642 நோய்கள் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் இருந்தது. இப்பொழுது கூடுதலாக நோய்களின் பெயர்களைச் சேர்த்து 950 நோய்களுக்கான சிகிச்சை என்கிறது புதிய காப்பீட்டுத் திட்டம். எண்ணிக்கை மட்டுமே இங்கு மாறுதல் அடைந்துள்ளது.

கலைஞர் காப்பீட்டில் ஒரு குடும்பத்திற்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை 1 இலட்சம் ரூபாய் சிகிச்சை  செய்ய வழி செய்யப்பட்டு இருந்தது. புதிய காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு 4 ஆண்டுகளுக்கு 4 இலட்சம் என்று பரபரப்பாக அறிவித்திருக்கறார் ஜெயலலிதா.

இப்படி தி.மு.க. அரசின் திட்டங்களை சில மாற்றங்களுடன் புதிய பெயர்களைச் சூட்டி ஜெயாவின் திட்டம் என்று அறிவித்துக் கொண்டிருக்கிறார். மற்றொரு புறம்  வரிமேல் வரிகளைப் போட்டு மக்களை வாட்டியயடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கி இருக்கின்றன.

ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. இந்த இரண்டு மாதங்களில் மக்கள்படும் துயரம் இதுவென்றால், இனிவரும் 4 ஆண்டுகள் 10 மாதங்கள்... என்னாகும் தமிழ்நாடு?

“ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர், காவலன் காவான் எனின்” இதன் பொருள்,

நாட்டின் அரசு சரியான ஆட்சியால் மக்களைக் காக்கத் தவறினால், அந்த நாட்டின் உழவு, கல்வி, தொழில், வணிகம், அரசுப்பணி, கலைத்துறை என்ற அறுவகைத் தொழிலும் அழிந்துவிடும், அதன் அறிவை மக்கள் இழந்து விடுவார்கள். அதாவது மக்களின் கல்வி, பொருளாதாரம் சமூக முன்னேற்றம் அனைத்தும் சிதைந்துவிடும்.

எச்சரிப்பவர் திருவள்ளுவர்! சிந்திக்க வேண்டியவர்கள் மக்கள்!

Pin It