பார்ப்பனர் என்றால் எல்லோரையும் சமமாகப் பார்ப்பவர்கள் என்று கூறும் பார்ப்பன அடிமைகளே! இதோ காஞ்சி சீனியர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் கருத்துக்களை தொகுத்துத் தந்து இருக்கிறோம் இதற்கு என்ன பதில்….
“நான்கு வர்ணம் தேவையே!”
சங்கராச்சாரியார் ‘தெய்வத்தின் குரல்’ என்ற நூலிலே வெளிப்படையாகவே சொல்லு கின்றார். “நம் மதத்தில் (இந்துமதம்) ‘பிராமணர்’, ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நான்கு வர்ணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த “வர்ணங்களை நாம் “ஜாதி” என்கிறோம்.
வாஸ்தவத்தில் ஜாதி வேறே, வர்ணம் வேறே: வர்ணங்கள் மேலே சொன்ன நான்குதான். இதற்குள்ளேயே ஒவ்வொன்றிலும் பல ஜாதிகள் இருக்கின்றன. “பிராமண” வர்ணத்திலேயே அய்யர், அய்யங்கார், ராவ் என்று பல சாதிகள் இருக்கின்றன. நான்காம் வர்ணம் ஒன்றிலேயே முதலியார், பிள்ளை, ரெட்டி, நாயக்கர், நாயுடு, கவுண்டர், படையாட்சி என்கிற மாதிரி எத்தனையோ ஜாதிகள் இருக்கின்றன.
நான்கு ஜாதிகளுக்கும் (அதாவது வர்ண ங்களுக்கும்) சாஸ்திரங்களில் வெவ்வேறு விதமான கர்மாக்களையும் ஆசாரங்களையும் விதித்திருக்கிறது. இதனால் ஒரே மதத்தினரிடையிலேயே ஏகப்பட்ட வித்தி யாசங்கள் உள்ளன. ஒருவர் சமைத்ததை இன்னொருவர் சாப்பிடக் கூடாது; ஒருவரோடு ஒருவர் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. ஒருவர் செய்யும் காரியத்தை மற்றொருவர் செய்யக் கூடாது என்று இப்படி எவ்வளவோ வித்தியாசங்கள் இருக்கின்றன.
நமக்குள்ளேயோ ஒரே மதமாக இருந்தாலும் விதிகளும் நிஷேதங்களும் பல வகைகளாக இருக்கின்றன. ஒரு காரியத்தை ஒருவன் செய்தால் தர்மமாகிறது. அதையே வேறொருவன் செய்தால் அதர்மம் என்கிறோம்” என்று சொல்கிறார். எனவே இதிலிருந்து இன்னமும் குலதர்மத்தை நியாயப்படுத்தத்தான் சங்கராச்சாரியார் இருக்கிறார் என்பது தெளிவாகிறது.
“வேதம் பிராமணர்களுக்கு மட்டுமே”
“வேதம் அதிலே அதிகாரம் பெற்றவர்களிடத்தில் மட்டும் பேசிற்று, இன்னின்ன பாகங்களை நீங்கள் மறைவாகப் போற்றி வாருங்கள் என்று அதிகாரிகளுக்கு சொல்லிற்று. தமிழ் பாஷை வேதியர்களுக்கு மட்டும் எடுத்துக் கொள்ளாமல் சமஸ்த ஜன சமூகத்தை எடுத்துக் கொண்டு பேசும்போது- எப்படி வேதமானது பிராமணர்களுக்குள்ளேயே சில பாகங்களை ரஹஸ்யமாக இரட்சிக்க வேண்டும் என்றதோ அதேமாதிரி சகல வருணத்தாரையும் எடுத்துக்கொள்ளுகிறபோது வேதம் முழு வதையும் அதில் அதிகாரமுள்ளவர்கள் -அதிகாரமில்லாதவர்களிடமிருந்து ரஹஸ்யமாக இரட்சிக்க வேண்டுமென்று கருதியே முழுவதற்கும் “மறை” என்று பெயர் கொடுத்துவிட்டது.
எல்லோருக்கும் என்று (democratise) பண்ணிவிடக் கூடாது. என்பதுதான் தமிழ் ஜனங்களின் தொன்று தொட்ட அபிப்ராயம் என்பது “மறை” என்ற இந்த வார்த்தையிலிருந்தே தெரிகிறது” ஆகவேதான் இது ரொம்பவும் மிக முக்கியமானது என்று சொல்லுகிறார். இதிலிருந்து மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது என்பதுதான் வேதம் என்கிறார். தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகம் வேதமும் தமிழ்நாடு என்ற தலைப்பில் கூறுகிறார்
“நாத்திகர்களுக்கு மருத்துவம் செய்யாதே”
இது “தெய்வத்தின் குரல்” மூன்றாவது பாகம். இதில் 148-ஆவது பக்கத்தில் “தெய்வப் பணியும், மக்கட் பணியும்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவம் அனைவருக்கும் தேவை என்றுதான் மனிதநேயம் கொண்ட எவருமே கூறுவார்கள். ஆனால் காஞ்சி சங்கராச்சாரி நாத்திகர்களுக்கு மருத்துவமே செய்யக் கூடாது என்கிறார். “நாஸ்திகளுக்கு வைத்தியம் பண்ணி ஆயுளை நீடிக்கச் செய்தால் அவன் மேலும் நாஸ்திக பாவத்தை விருத்தி செய்துகொள்ள இடம் தருவதாக ஆவதால் அவனுக்கு வைத்தியம் பண்ணாதே” என்று ஆயுர்வேத சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது.
ஆனபடியால் மக்கள் பணியெல்லாம் அந்த மக்களை பகவானிடம் சேர்ப்பதற்குத்தான். அதனால், எல்லோருமாகச் சேர்ந்து ஆலயத் திருப்பணி செய்தால், மெய் வருந்தி ஒரு கோயிலுக்கு மதில் கட்டினால், அதுதான் ஜனங்களுக்கு மஹா பெரிய ச்ரமதானம்,’’ -எனவே இவருடைய தத்துவப்படி நாஸ்திகனுக்கு வைத்தியம் செய்யக்கூடாது.
மேலும் மூன்றாம் பகுதி 734-ஆவது பக்கத்தில் விரிவாகச் சொல்கிறார். “ஆயுர்வேதத்தில் இந்த விஷயம் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. “நாஸ்திகனுக்கு வைத்தியம் செய்யாதே” என்று அதில் சொல்லியிருக்கிறது. அது இந்த உள்ளர்த்தத்தில்தான். கேட்கிறபோது, இதென்ன? கருணையேயில்லாமல் இப்படிச் சொல்லியிருக்கே!. என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் இப்படிச்சொன்னதே கருணையில்தான்’’
“வியாதியில்தான் கஷ்டம் தெரிகிறது. கஷ்டம் என்று வரும் போதுதான் எப்படியாவது அதிலிருந்து மீளவேண்டுமென்ற தவிப்பில். “கடவுள் இருப்பது நிஜமானால், வேத சாஸ்திரம் இருப்பது நிஜமானால் என்னை அவன் காப்பாற்றட்டும் நான் அப்புறம் வேத சாஸ்திரப்படி பண்ணுகிறேன்” என்று ஒரு நாஸ்திகன் நினைக்க முடிகிறது.” “வைத்தியன் சிகிச்சை பண்ணமாட்டான் என்று வைத்துவிட்டால் அப்போது நாஸ்திகன் பகவான் பக்கம் திரும்பத்தான் செய்வான்.’’
“பிராமணனுக்கு தூக்குத்தண்டனை கூடாது”
“பிராமணனு”க்குக் கொலை தண்டனை கொடுக்கக் கூடாது என்பதுதான் நியாயம் என்கிறார்; எப்போது? இந்த இருபதாம் நூற்றாண்டில் என்பதை மறந்து விடாதீர்கள்! இப்பொழுது அவரின் உண்மை வடிவத்தைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
அப்படித் தோன்றினால் அது நியாயந்தான். ஆனாலும் இதன் காரணத்தைப் புரிந்து கொண்டால் இதிலே அநியாயப் பக்ஷதாபமில்லை என்று தெரியும்” என்று சொல்லுகிறார் சங்கராச்சாரியார். இதன் மூலம் ‘பிராமணனு’க்குத் தண்டனை கொடுப்பது நியாயமில்லை.
“குற்றவாளிக்கு ராஜ தண்டனையே பிராயச்சித்த கர்மா ஆகிறது என்றேன். ‘பிராமணன்” வேதமந்திர ரக்ஷணையையே வாழ்க்கையாகக் கொண்டவன். ஒரு நாள்கூட அவனைவிட்டு இந்த வாழ்க்கை ஆசாரம் போகக்கூடாது அப்படிப் போனால் அது தேச க்ஷேமத்துக்கே கெடுதல் . ஜெயிலில் போட்டால் அவன் எப்படித் தன் ஆசாரங்களுக்கு பங்கமில்லாமல் மந்திர ரக்ஷணை பண்ணமுடியும்?”
கண்ணை வாங்கி, காலை வாங்கி அவனைத் தண்டித்தால் அப்போதும் அவனால் ஆகிற வேதரக்ஷணம் அல்லவா கெட்டுப்போகும்? வேததர்மம் இருக்கவேண்டும் என்பதற்குத்தான் ராஜாங்கம் இருப்பதே. அதுவே தன் லக்ஷ்யத்துக்கு ஹானி செய்யலாமா? அதனால்தான் ராஜ சிக்ஷையை தூக்குத் தண்டனையை “பிராம்மணனு”க்கு ரொம்பவும் குறைத்துச் சொல்லியிருப்பது ஆனால், அதற்காக அவனை வெறுமனே விட்டு வைத்து விடவில்லை” என்று சங்கராச்சாரி “தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகத்தில்” கூறுகிறார்.
“ஜாதி தொழிலையே செய்ய வேண்டும்”
“முன்பு வர்ண தர்மத்தைப் போஷிப்பதிலேயே ராஜா பெருமைப்பட்டானென்றால் இப்போது அரசியலிலோ, ஸமூஹ வாழ்விலோ ஆனா ஆவன்னாவே “casteless Society” “ஜாதியில்லா ஸமூஹம்” என்பதாகத்தானிருக்கிறது அந்தந்த ஜாதிக்குண்டான தொழிலை அவரவர் செய்யாமலும் ஜாதிகளை மட்டும் விடாமல் வைத்துக் கொண்டிருப்பது மகா தப்புதான் ப்ராணன் போனபின் பிணத்தைக் கட்டிக்காக்கப் பார்க்கிறது போலத்தான்.
இதில் நாம் சீர்திருத்தக்காரரோடு நூறு பெர்ஸென்ட்டும் ஒத்துப் போவோம். ஆனால் இந்தத் தொழில் பாகுபாடே தப்பு-ஆசார அநுஷ்டானங்களையே இதற்காக வித்யாஸமாய் வைப்பது தப்பு என்று அவர்கள் வாதிப்பதை நாம் கொஞ்சங்கூட ஒப்புக்கொள்வதற்கில்லை. தொழில் பாகுபாடும், ஆசாரங்களைச் சாஸ்திரப்படி அவாளவாள் பின்பற்றுவதும் மாறி இப்போதுள்ள நிலைமை ஏற்பட்டுவிட்டது தான் தப்பு என்று விவேகத்தோடு புரிந்து கொள்ளவேண்டும். “இப்போது எல்லாம் அடியோடு குளறிப் போய்விட்ட ஸ்திதியில் பழைய படி பண்ணுவது ஸாத்யமா”? என்றால், எனக்குத் தெரியாது, ஸாத்யமில்லை என்று விடாமல் இப்போதாவது எங்கே எவ்வளவு முடிகிறது என்று பார்த்து அங்கே அந்த அளவுக்குப் பழைய வழிக்குத் திருப்பத்தான் பாடுபடனும்” “தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகத்தில்” கூறுகிறார்.
“தேவதாசி முறை வேண்டும்!”
“தெய்வத்தின் குரல்” மூன்றாவது பாகம், இதில் ‘சாதிதர்மம்’ என்ற தலைப்பின் கீழ் எழுதுகின்றார்; (பக்கம் -806)
“ஈச்வரனுக்கு நாட்டிய உபசாரம் நடக்கவேண்டு மென்பதால்தான் தேவதாஸிகள் என்று ஏற்பட்டது. “தேவ தாஸி” என்பதற்கு நேர் தமிழ் “தேவு அடியாள்” ஈச்வரனின் அடிமை என்று அர்த்தம்.
அவனையே கல்யாணம் பண்ணிக்கொண்டதாகப் பொட்டுக் கட்டிக்கொண்டு அவனுக்கு ந்த்யோபசாரம் பண்ணவேண்டியவள். நடைமுறையில் இது வேறு எப்படியோ போய்விட்டது. தேவதாஸி தடுப்புச் சட்டம் என்றே ஸமீபத்தில் சர்க்கார் செய்யவேண்டியதாயிற்று. தேசத்தின் ஒழுக்கத்தைக் காப்பாற்ற இப்படிச் சில கார்யம் பண்ணவேண்டியிருக்கிறது. ஆனாலும் சாஸ்திரப் பூர்வமாக விதித்த ஒரு உபசாரம் ஸ்வாமிக்கு நடப்பதற்கில்லாமல் ஆகிவிட்டதே என்றும் இருக்கிறது’’ என்று சங்கராச்சாரியார் வருத்தத்தோடு குறிப்பிட்டுள்ளார்.
“ஜாதி சமுகத்துக்கு அவசியம்”
தெய்வத்தின் குரல்” 3 ஆவது பாகத்தில் 807-ஆவது பக்கத்தில் “இந்தக் காலத்தில் எதற்கெடுத்தாலும் ஜாதி போக வேண்டுமென்பதே முழக்கமாயிருந்தாலும், வாஸ்தவத்தில் ஸமூஹத்துக்கு அவசியமான ஒவ்வொரு தொழிலுக்கும் என்றே ஒவ்வொரு ஜாதி என்ற ஏற்பாட்டைப் போல பொது சமுதாய கார்யம் சீராக நடைபெற ஒரு Alternative வும் இல்லை. தப்பு நடந்தாலும் அதுவும் ஒரு சின்ன வரம்புக்குள் Localise ஆகிவிடும்; அதை சரிசெய்துவிடலாம். ஜாதியில்லை என்று எடுத்தால். கட்டியிலே பிடிக்கிற சீழ் அந்த இடத்தோடு நிற்கும்படி தடுத்து ஆபரேட் பண்ணாமல் அதை தேஹம்பூராவும் ரத்த ஓட்டத்தோடு சேர்த்துவிடப் பண்ணிகிற மாதிரிதான் ஆகிறது.”என்று விளக்கம் சொல்கிறார்.
பிராமணனாகப் பிறந்தவன் உள்பட மற்ற எந்த ஜாதியினரும் பாட்டு, நடனம், நடிப்பு முதலியவற்றைத் தொழிலாக நடத்தப்படாது அதற்கு ஒரு ஜாதி என்று தொழில்களையெல்லாம் முறைகெட்டுப் போகாதபடி வரம்பு கட்டிக் காப்பாற்றியிருக்கிறது.” என்று சொல்லிவிட்டு -”இதை ஜீவனோபாயத் தொழிலாகவே பண்ணி, பணம், பரிசு. பட்டம் எல்லாம் வாங்க அதிகாரமுள்ளவர்கள் பரத ஜாதியினர்தான்.”- என்று இதற்கு ஒரு ஜாதியே இருக்க வேண்டுமென்று பச்சையாகச் சொல்கிறார்.
“சமபந்தி கூடவே கூடாது”
“தெய்வத்தின் குரல்” மூன்றாவது பகுதி 624-ஆவது பக்கத்திலே அவர் சொல்லுகின்றார்: “உடன் உண்பவர்கள் என்ற தலைப்பிலே”
“இதைப்பற்றிச் சொல்லும்போது ஒரு விஷயம் சொல்ல மறந்துவிட்டோமென்று ஞாபகம் வருகிறது: ஆஹாரத்தோடு ஸம்பந்தப் பட்டவர்களைப் பற்றிச் சொல்லும்போது அதைச் சமைத்தவர்கள், பரிமாறுகிறவர்கள் ஆகிய இரண்டு பேரோடு கூட-கூடச் சாப்பிடுகிறவர்களையும் சொல்லியிருக்க வேண்டும் என்று சொல்லி அவரவர்களும் தனியே இருக்க வேண்டும் என்கிறார்.
வர்ணாசிரம விபாகத்தையும் கவனித்தாக வேண்டியிருக்கிறது. சைவ போஜனமே பண்ணவேண்டிய ஜாதிக்காரன் அசைவ போஜனம் அனுமதிக்கப்பட்ட ஜாதியாருடன் சேர்ந்து சாப்பிட்டால் என்ன ஆகும்? இப்படியெல்லாம் சீர்திருத்தம் பண்ணினால்தான் ஒற்றுமை உண்டாகுமென்கிறார்கள்.
எல்லாரையும் சேர உட்கார வைத்து நியமமில்லாத ஆஹாராதிகளைப் போட்டு விட்டால் ஒற்றுமை உண்டாகிவிடும் என்பதைக் கேட்க உலகத்தின் எல்லா தேசங்களையும் யுத்தத்தில் இழுத்துவிட்டு, ஜன சமுதாயத்துக்கே பெரிய சேதம் விளை வித்த World War - க்குக் காரணமாயிருந்த ராஜாங்கங்களெல்லாம் யுத்தப் பிரகடனம் செய்வதற்கு முதல் நாள் வரையில் பரஸ்பரம் விருந்து கொடுத்துக்கொண்டு, இவருக்கு அவர் டோஸ்ட் அவருக்கு இவர் ‘டோஸ்ட்’ என்று சேர்ந்து சாப்பிட்டு விட்டுத்தான் மறுநாளே ஒருத்தர் தேசத்தை இன்னொருத்தர் நாசம் பண்ண ஆரம்பித்தார்கள் - ராணுவம், ஸிவிலியன், பாபுலேஷன் என்ற விவஸ்தை இல்லாமலே!. இந்த தேக்கச்சேரிகளும், சிற்றுண்டி விருந்துகளும், கலப்பு போஜனங்களும் பிரயோஜனப்படுகின்றனவே தவிர, இதனால் ஒற்றுமையோ, ஸௌஜன்யமோ உண்டாகி விடவில்லை என்பது இந்தப் பழக்கங்கள் நம் தேசத்தில் ஏற்பட்டுப் பல வருஷங்களாகியும், இன்னமும் தினந்தினம் ஸமூஹச் சண்டைகள் ஜாஸ்தியாகிக் கொண்டு தானிருக்கின்றன.
பொதுச் சமையல், ஸமபங்க்தி என்று ‘சீர்திருத்தம்’ பண்ணுவதால் பிராணி ஹிம்ஸைதான் ஜாஸ்தியாயிருக்கிறது’’- என்கிறார்.
(தொடரும்)...
- விடுதலை இராசேந்திரன்