தில்லை தீட்சிதர்கள் அறநிலயத்துறைக்கு சவால் விட்டு வருகிறார்கள், கோயிலில் ’ஆதி திருமஞ்சனம் உற்சவம்’ நடக்கும் போது சிற்றம்பல மேடையில் நாங்கள் மட்டுமே ஏற முடியும் ஏனைய பக்தர்களுக்கு அந்த உரிமை இல்லையென்று அறிவிப்பு பலகை ஒன்றை எழுதி மாட்டினார்கள். அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த பலகையை அகற்றி சிற்றம்பல மேடையில் ஏறி தரிசனம் செய்ததோடு பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. வன்முறையில் இறங்கிய தீட்சிதர்கள் இப்போது நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். சிற்றம்பல மேடை கோயில் கற்பகிரமல்ல, இங்கு பக்தர்கள் குறிப்பிட்ட திருவிழா காலங்களில் சாமி தரிசனம் செய்யக்கூடாது என்பது தீண்டாமைக் குற்றமாகும். ஏனைய காலங்களில் வழிபடும் உரிமை இருக்கும் போது திருவிழாவின் போது மட்டும் அனுமதி மறுப்பது ஏன்?
இந்துமத ‘பார்ப்பன அகராதியில் பழக்கவழக்கம் என்ற சொல் மதத் தீண்டாமையை நியாயப்படுத்த’ பயன்படுத்தப்படுகிறது, இதற்கு அரசியல் சட்டமும் ஏற்பு வழங்கியுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டுவர துடிக்கும் ஒன்றிய ஆட்சி இந்துமத்திற்க்கு உள்ளேயே அனைவருக்குமான பொது சிவில் உரிமைகளை முதலில் கொண்டுவர வேண்டும். சட்டங்களில் நுழைக்கப்பட்ட ’பழக்கவழக்கம்’ ’மதச் சுதந்திர அடிப்படை உரிமை’ போன்ற பிரிவுகளை நீக்க வேண்டும். ஜாதியைப் பாதுகாக்கும் உரிமைச் சட்டத்தில் இருந்து நீக்கும் போது தான் அனைத்து இந்துக்களும் பொது சிவில் சமூகமாக மாற்றப்படுவார்கள். மாறாக ஜாதியக் கட்டமைப்புக்குள் இருக்கும் வரை ஏற்றத்தாழ்வுக்குரிய சமூகமாகவே இந்து சமூகம் இருக்கும். பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரத் துடிக்கும் அதே பா.ஜ.க. தான் தில்லைக் கோயிலில் தீட்சிதர்கள் திணிக்கும் தீண்டாமைக்கு ஆதரவாக போராடுகிறது. இது இரட்டை வேடம்.
சிற்றம்பல மேடையில் தேவாரம் உள்ளிட்ட தமிழ்த் திருமுறைகளை தொன்றுதொட்டுப் பாடும் உரிமை தீட்சிதர்களுக்கு மட்டும் தான் உண்டு என்ற வாதத்தில் துளியும் உண்மையில்லை. தேவாரம் பாடியதே தில்லைக் கோயில் சைவ சமய பரப்புரையாளர்களான சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரமூர்த்தி மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோர் தான். இவர்கள் தமிழில் பாடிய ஓலைச்சுவடிகளை தீட்சத பார்ப்பனர்கள் கோயிலுக்குள்ளேயே ஒரு அறையில் பூட்டி வைத்து சுவடிகளை கரையான் அரிக்குமாறு செய்துவிட்டனர், ராஜராஜசோழன் இந்த திருமுறைகளை தொகுக்க விரும்பி தீட்சிதர்களிடம் நேரில் சென்று கேட்டான், அதற்கு நான்கு சமயத் தலைவர்களும் தங்களிடம் நேரில் வந்தால் தான் தருவோம் என்று தீட்சிதர்கள் அடம்பிடித்தனர். இறந்தவர்கள் எப்படி உயிருடன் வருவார்கள்? ராஜராஜ சோழன் இந்த நான்கு சமயப் பரப்புரையாளர்களின் சிலைகளை செய்து அதை தீட்சிதர்களிடம் காட்டி தேவார சுவடிகளை தருமாறுக் கேட்டபோது இது வெறும் சிலைகள் தானே என்று தீட்சதர்கள் கூறிவிட்டனர். அப்படியானால் நடராஜனும் ஒரு சிலை தானே என்று கேட்ட ராஜராஜசோழன் பூட்டிய அறையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து எஞ்சிய ஓலைச்சுவடிகளை மீட்டான், நம்பியாண்டார் நம்பி என்பவரிடம் அவைகளை தொகுக்கச் சொன்னான், தேவாரப் பாடல்களே அதற்குப் பிறகுதான் வெளியே வந்தன. ராஜராஜ சோழன் இதை மீட்காவிட்டால் அந்த பாடல்களே உலகிற்கு தெரியாமல் போயிருக்கும்.
இப்படி தொகுக்கப்பட்டதற்கு பிறகு தானே சிற்றம்பல மேடையில் பாடியிருக்க முடியும் ? ஆனால் கோயில் தோன்றிய காலத்திலிருந்தே சிற்றம்பல மேடையில் தீட்சிதர்கள் தான் தேவாரம் பாடி வந்தார்கள் என்பது உண்மைக்கு மாறானது. அறநிலையத்துறை இதில் மேற்கொண்டுள்ள உறுதியான நடவடிக்கை பாரட்டிற்குரியது, பார்ப்பனியம் தன்னுடைய கோரமுகத்தை இந்த நூற்றாண்டிலும் இப்படி வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் போது கடந்த காலங்களில் இதன் கோரத்தாண்டவம் எப்படி இருந்திருக்கும் என்பதை இளைய தலைமுறை சிந்திக்க வேண்டும்.
- விடுதலை இராசேந்திரன்