கி.பி.1749. மராட்டியப் பேரரசின் இறுதி மன்னரும், சிவாஜியின் பேரனுமான சத்ரபதி சாகுஜி மரணமடைந்தார். அப்போது படைத்தலைவனாக இருந்த பேஷ்வா பார்ப்பனரான பாலாஜி பாஜிராவ், மன்னர் சாகுஜியின் வாரிசைச் சிறையில் அடைத்துக் கொன்றுவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினார்.
1749 வரை படைத்தலைவனாக இருந்து இந்துமதக் கொடுஞ்சட்டமான மனுசாஸ்திரத்தை மேலோட்டமாகச் செயல்படுத்திய பாலாஜி பாஜிராவ், ஆட்சிக்கு வந்தவுடன் மிகக் கடுமையாக நடை முறைப்படுத்தத் தொடங்கினான். அவனது வழிவந்த இரண்டாம் பாஜிராவ் 1796 ல் மராட்டிய அரசனாகிறான். இவனது ஆட்சிக் காலத்தில் நடந்த பார்ப்பனக் கொடுமைகள் தான் ஒட்டு மொத்த மராட்டியப் பேரரசும் முடிவுக்கு வருவதற்குக் காரணமானது.
தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களது ஜாதியின் அடையாளமாக கையில் கருப்புக்கயிறு கட்டியிருக்க வேண்டும். அதைப் பார்த்துப் பார்ப்பனர்கள் தலித்துகளிடமிருந்து ஒதுங்கிச் சென்று விடுவார்கள். தெருவில் நடக்கும் போது கழுத்தில் ஒரு பாத்திரத்தைக் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டே நடக்க வேண்டும். எதற்காக? ஒரு வேளை எச்சில் துப்ப வேண்டி வந்தால், தலித்துகளின் எச்சில் பார்ப்பனர்கள் நடக்க வேண்டிய மண்ணில் விழக் கூடாது. பார்ப்பனர்கள் அதை மிதித்து விட்டால் பெரும் தீட்டு. அதனால், தலித்துகள் கழுத்தில் கலயத்தைக் கட்டி நடக்க வேண்டும்.
இடுப்புக்குப் பின்னால் ஒரு பனை ஓலை அல்லது வெளக்கமாரைக் கட்டித் தொங்கவிட்டு நடக்க வேண்டும். அந்தப் பனை ஓலை தலித்துகள் நடந்து செல்லும்போது மண்ணில் பதியும் அவனது காலடித் தடத்தை அழித்துக் கொண்டே செல்ல வேண்டும். தலித்துகளின் காலடித் தடித்தைப் பார்ப்பான் மிதித்து விட்டால் தீட்டாகிவிடும். தாழ்த்தப்பட்டோர் கல்வி கற்கக்கூடாது. ஆயுதங்கள் எதையும் வைத்திருக்கக்கூடாது.
பேஷ்வாக்களின் படைப்பிரிவில் இஸ்லா மியர்கள்கூடச் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் அதில் சேர்க்கப்படுவதில்லை. இப்படி மிகக் கடுமையான தீண்டாமை வன் கொடுமைகள் சட்டமாக்கப்பட்டன. இவற்றை மீறினால் மரண தண்டனை வரை விதிக்கப்பட்டது.
இந்த நடத்தை விதிகளும், அவைகளை மீறினால் கொடுக்கப்படும் தண்டனைகளும், இந்து மதத்தின் புனித நூலான மனுசாஸ்திரத்தில் விளக்க மாக எழுதப்பட்டுள்ளன. கி.பி 1 ஆம் நூற்றாண்டி லிருந்து - இந்துப் பார்ப்பனர்களின் ஆட்சி தொடங்கிய நாளிலிருந்து இந்த மனுசாஸ்திரக் கொடுமைகள் சட்டமாகவே மாறிவிட்டன. அதன் தொடர்ச்சிதான் மராட்டிய பேஷ்வாக்களின் ஆட்சிக் காலத்திலும் நடந்தது.
இந்த இந்து மதக் கொடுமைகளால் ஒடுக்கப் பட்ட தலித் மக்கள் மனதில் விடுதலைக்கனல் கனன்று கொண்டே இருந்தது.அந்த நேரத்தில்,1817-ல் ஆங்கிலேயர்களுக்கும், பார்ப்பன பேஷ்வா மன்னர்களுக்கும் இடையே இருந்த வரி வசூல் ஒப்பந்தத்தில் முரண்பாடு ஏற்பட்டு, இரு பிரிவுக்கும் இடையே போர் மூண்டது.
இந்து மத சாஸ்திர சம்பிரதாயங்களால் அடக்கப்பட்டிருந்த மக்களுக்கு, இப்போர் பெரும் வாய்ப்பாக வந்தது. 1927 ல் இந்தியாவுக்கு சைமன் கமிஷன் வந்த போது, அதைப் பெரியாரும், அம்பேத்கரும் வரவேற்று, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் விடியலுக்கு அக்குழுவைப் பயன்படுத்திக் கொண்டதைப் போல, 1817 ஆம் உருவான போரை மராட்டிய தலித் மக்கள் பயன்படுத்திக் கொண்டனர்.
Bombay Native Infantry regiment என்ற ஆங்கிலேயப் படைப்பிரிவுக்கும் பார்ப்பன இரண்டாம் பாஜிராவின் படைப்பிரிவிற்கும் போர் நடந்தது. ஆங்கிலேயரின் படைப்பிரிவின் தலைவராக Colonel FF Staunton இருந்தார். இப்பிரிவில் தாழ்த்தப்பட்ட மகர் எனும் ஜாதியைச் சேர்ந்தோர் 500 பேர் வீரர்களாக இணைந்தனர். வரலாற்றில் இப்படை ‘மகர் ரெஜிமண்ட்’ என்று அழைக்கப் பட்டது. இந்த மகர் ரெஜிமண்ட்டில், தாழ்த்தப்பட்ட மகர் ஜாதியினர் மட்டும் அல்ல; பிற்படுத்தப் பட்டவர்களும், மலைவாழ் மக்களும், பழங்குடி யினரும், இஸ்லாமியரும் பங்கேற்றிருந்தனர் என்பதே மிக முக்கியமான வரலாறு.
தலித்துகளின் தலைமையில் - பெரும் பான்மையில், பிற்படுத்தப்பட்டவர், பழங்குடியினர், மலைவாழ் மக்கள், இஸ்லாமியர் என இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்களான திராவிடர்கள் அனை வரும் ஒன்றிணைந்து - இந்த ஒட்டு மொத்த மக்களுக்கும் எதிரிகளான, அந்நியர்களான பார்ப் பனர்களை எதிர்த்தும் - பார்ப்பன ஆதிக்கத்திற்கு அடிப்படையான வேதங்கள், சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்களுக்கு எதிர்த்தும் ஒரு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்தியப் பகுதியில் நடந்த உண்மையான சுதந்திரப் போராட்டம் என்றால்அது இந்தப் போராட்டம் தான். 1847 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் நாள் இரவு 8 மணிக்கு, புனே அருகிலுள்ள கோரிகான் என்ற சிற்றூரில் உள்ள பீமா என்ற நதிக்கரையில் போர் தொடங்குகிறது.
இரண்டாம் பாஜிராவின் படைத்தலைவன் பார்ப்பன கோகலே தலைமையில் 20000 படைவீரர்கள் அணிவகுத்தனர். இதில் 15000 க்கும் மேற்பட்டவர்கள் பார்ப்பன பேஷ்வாக்கள். இருபதாயிரம் பார்ப்பனப் படைக்கும், வெறும் 500 பேர் கொண்ட திராவிடர் படைக்கும் நேரடிப் போர் தொடங்கியது.
1818 ஜனவரி 1 ஆம் நாள் பார்ப்பனப் படைப்பிரிவு அழித்து ஒழிக்கப்பட்டது. 12 மணி நேரத்திற்குள் சுமார் 600 பார்ப்பனர்கள் களத்திலேயே கொல்லப்பட்டார்கள். பலர் சிதறி ஓடினார்கள். பலர் ஓரிரு நாட்களில் இறந்தார்கள். பார்ப்பனப் படைத்தலைவனும் களத்திலேயே கொல்லப்பட்டான்.
மராட்டியப் பார்ப்பனப் பேரரசு முடிவுக்கு வந்தது. இரண்டாம் பாஜிராவ் அரசாங்க விருந்தாளியாக அழைத்துச் செல்லப்பட்டார். 1851 ல் ஆங்கிலேய அரசாங்கம் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பீமா நதிக்கரைப் போரின் நினைவாக, போர் நடந்த பீமா நதிக்கரையிலேயே ஒரு நினைவுத் தூணை எழுப்பியது. வீரஞ்செறிந்த அப்போரின் 200 வது ஆண்டு வீரவணக்க நாள் 2018 ஜனவரி 1 ல் வருகிறது.
1927 ஜனவரி 1 ஆம் நாள் தோழர் அம்பேத்கர் தனது தோழர்களுடன் கோரிகான் பீமா நதிக் கரையில் உள்ள மகர் ரெஜிமண்ட் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினார். இப்போரின் வெற்றியின் அடையாளமாகத்தான் ‘ஜெய்பீம்’ என்ற முழக்கமும் முழங்கப்பட்டது.
இன்று ‘மன்னராட்சி’ என்ற நிர்வாக முறையிலிருந்து ‘மக்களாட்சி’ என்ற முறைக்கு இந்தியா மாறிவிட்டது. ஆனால், பார்ப்பன புஷ்யமித்ர சுங்கன் ஆட்சி காலம் தொடங்கி, குப்தர்களின் ஆட்சி, பேஷ்வாக்கள் ஆட்சி என நம்மைத் தொடர்ந்து ஒடுக்கிவரும் இந்து மத வேதங்களும், மனுசாஸ்திரச் சட்டங்களும் இன்னும் ஒழியவில்லை.
மராட்டிய பேஷ்வாக்களை நேரடியாகப் போர்க்களத்தில் வென்றோம். ஆனாலும் அடிமைத்தனம் ஒழியவில்லை. ஏனென்றால், நாம் அடக்கப்படுவது ஒரு தனி மனிதராலோ - ஒரு குறிப்பிட்ட பேரரசாலோ, ஒரு குறிப்பிட்ட கட்சி ஆட்சியாலோ மட்டுமல்ல. பார்ப்பனர்களுக்கும், அவர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் அரசர்களுக்கும், பிரதமர்களுக்கும் மேலே நிரந்தர ஆதிக்கக் கருத்தியலாக இருக்கும் இந்துமத வேதங்களாலும், சாஸ்திரங்களாலும் அவை உருவாக்கியுள்ள பண்பாடுகளாலும்தான் அடிமைப்படுத்தப்பட்டோம். அவற்றை அழித்து ஒழிக்காமல் நமக்கு வெற்றி என்பது உண்மையல்ல.
பீமா கோரிகான் என்ற களத்தில் பார்ப்பனர் களான சில தனி மனிதர்களை வென்றோம். ஆனால், நம்மை அடிமைப்படுத்தும் இந்து மதத்தை நாம் இன்னும் வெல்லவில்லை. பார்ப்பனர்களுக்கு எதிராகவும், நமக்குள்ளும் உள்ள பார்ப்பனியத்துக்கு எதிராகவும் போரைத் தொடங்குவோம், வெல்வோம் என்று 200 வது ஆண்டில் உறுதி ஏற்போம்!