untouchability in chidambaram templeகடந்த ஞாயிறு 13.2.2022 அன்று, தில்லை நடராஜர் கோயிலில், கனக சபை எனப்படும் திருச்சிற்றம்பல மேடை ஏற முயற்சித்ததற்காக ஜெயசீலா என்ற பட்டியலினத்துப் பெண்ணை சாதீய ரீதியாகக் கடுஞ்சொற்களால் தாக்கியும், உடல்ரீதியாகத் துன்புறுத்தியும் கோயிலில் இருந்து வெளியேற்றி உள்ளது ஒரு தீட்சிதர் குழு.

சிதம்பரம், தில்லை நடராஜர் கோயில் என்பது உலகெங்கும் சைவ சமயத்தைப் பின்பற்றும் சற்றொப்ப 4 கோடி தமிழர்களின் நம்பிக்கைத் தலமாகும். சோழர்கள் காலத்தில் 10 ஆம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்கச் சோழன் வேளாண் பெருமக்களின் நிலங்களைக் கோயிலுக்குத் தானமாகக் கொடுத்து நிறுவப்பட்டது.

இன்று 40 ஏக்கர் நிலப்பரப்பில் இருக்கும் அந்தக் கோயிலின் சொத்து சுற்றிலும் 2500 ஏக்கர் நிலம், நகர்ப்புற சொத்துகள், இலங்கையில் நிலம் என பல ஆயிரம் கோடிகளைப் பெறும். ஆண்டு உண்டியல் வருமானம் மட்டுமே சில கோடிகள். தானமாக வரக்கூடிய பல்வேறு செல்வங்கள் தனி. கைலாயத்திலிருந்து வந்ததாகச் சொல்லிக்கொள்ளும் “தீட்சிதர்கள்” எனும் பார்ப்பனக் கூட்டம் இக்கோயிலைக் கைப்பற்றிக்கொண்டு, தமிழ் மொழியைக் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிவிட்டு, அவர்கள் ஆளுகையின் கீழ் வைத்து, அதன் செல்வங்களை ஏகபோகமாக அனுபவித்து வருகிறார்கள்.

முதலில் 3000 பேராக இருந்த அந்தக் கூட்டம் இப்போது 400 பேர் என்று குறைந்தாலும் வற்றாத செல்வங்களைக் கொண்ட கோயிலைத் தமிழரிடம் விட்டுக்கொடுக்க அவர்கள் தயாராக இல்லை.

தமிழை வளர்த்த சைவர்கள் தாங்கொணாமல் தமிழ்மொழிக்காகவும் வழிபாட்டு உரிமைகளுக்காகவும் கோயிலுக்குள் நிகழ்த்தும் போராட்டங்கள் நந்தன் காலம் தொட்டு தொடர்கின்றன. நந்தனார் நுழைந்ததால் தெற்கு வாயிலையே தீட்சிதர்கள் அடைத்து விட்டதாகச் சொல்கிறார்கள். 1983-84 காலகட்டங்களில் இவர்களிடையே குழுக்கள் உண்டாகி, கோயிலுக்குள் நகைத்திருட்டு, போதைப் பொருட்கள், அசைவ விருந்து(?), வன்முறை, கொலை போன்ற குற்றங்கள் வெளிவரத் தொடங்கின. அப்போது கோயிலை அரசுடைமையாக்க எடுத்த முயற்சிகளையும் அவர்கள் அப்போதிருந்த எம்.ஜி.ஆர் அரசின் உதவியோடே முறியடித்தனர்.

2007இல் ஆறுமுகச்சாமியைத் தமிழில் ஓதவிடாமல் அடித்து விரட்டியபோது மீண்டும் இச்சிக்கல் பெரிதானது. அப்போதிருந்த கலைஞர் அரசு எல்லா சதிகளையும் முறியடித்து நடராசர் கோயிலை அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வந்தது. அப்போதுதான் கோயிலின் வருமானம் சொத்து ஆகியவை அரசுக்குத் தெரிய வந்தது. அதுவரை அவர்கள் சொற்ப வருமானத்தையே கணக்குக் காண்பித்து வந்துள்ளனர். அவாள் அரசு மீண்டும் 2011 இல் வந்தவுடன், அவர்கள் விசுவ இந்து பரிஷத்தின் அன்றைய தலைவர் அசோக் சிங்கால். சுப்ரமணிய சுவாமி ஆகியோர் உதவியுடன் உச்ச நீதிமன்றத்தை வளைத்து மீண்டும் கோயிலை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர்.

கொரோனா காலத்தில் சிற்றம்பல மேடையில் ஏறி வழிபடத் தடை இருந்தது. இப்போது தளர்வுகள் அனுமதித்தும், தீட்சிதர் குழுக் கூட்டத்தில் ஒரு குழு மட்டும் தடையை நீக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கனகசபையில் ஏற முயன்ற கணேச தீட்சிதரை அடித்துள்ளனர். அவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். அவருடைய மகள், ஜெயசீலா என்ற லட்சுமி, என்ற பெண்ணை கனக சபையில் ஏறச் சொல்ல, அவரையும் சாதீய அவதூறு செய்து மானபங்கப் படுத்தி விரட்டி உள்ளனர். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் 20 தீட்சிதர்களின் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

அந்த மேடையில் ஏறினால் கோயிலின் எல்லாப் பக்கங்களையும் எல்லா இண்டு இடுக்குகளையும் பார்த்து விடலாமாம். அங்கே நடக்கும் இரகசியங்களை மக்கள் பார்க்காமல் இருக்கவே இந்தத் தடையை ஒரு குழு நீடிக்கச் சொல்வதாக விரட்டிவிடப்பட்ட அந்தப் பெண் சொல்லுகிறார்.

கோயில்கள் மக்களின் பொதுச் சொத்தாகவே இருக்க வேண்டும். தில்லை நடராஜர் கோயில் போல பார்ப்பன ஆதிக்கத்திலிருக்கும் எல்லாக் கோயில்களையும் அரசுடைமை ஆக்குவதே இதற்குத் தீர்வாகும். தொடரப் போகும் பார்ப்பன சதிகளையும் எதிர்பார்த்து அவற்றை முறியடிக்கும் போராட்டங்களைத் தமிழ் மக்கள் அனைவரும் முன்னெடுக்க வேண்டும்.

சாரதாதேவி

Pin It