சென்ற வாரத்திற்கு முந்திய வாரத்தில் “இந்தியக் கடவுள்கள்” என்பதைத் தலையங்கப் பெயராகக் கொண்டு ஒரு தலையங்கம் எழுதியிருந்தோம். அதாவது இந்தியாவில் உள்ள பதினாயிரக்கணக்கான கோயில்களில் ஒன்றாகிய திருப்பதி கோயில் என்கின்ற ஒரு கோயிலுக்கு மாத்திரம் வருடம் ஒன்றுக்கு 20 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட வரும்படி உள்ளதென்றும், இந்த வருமானம் பெரிதும் யாத்திரைக்காரர்களால், அதாவது, இமயமலை முதல் கன்னியாகுமரி வரையிலிருந்து செலவு செய்து வரும் யாத்திரைக்காரர்களால், காணிக்கையாகவும் வேண்டுதலை என்னும் பெயரால், தங்கம், வெள்ளி, ரத்தினங்கள் ஆகிய நகைகள் முதலிய அரும் பொருள்களாகவும் மற்றும் பலவாறாய் கொடுக்கப்படுகின்றதென்றும், மேலும் திருப்பதி என்கிற இந்த ஒரு வேதஸ்தானத்திற்கு மாத்திரம் கட்டிடம், நகை, வாகனம், சாமான், பூமி ஆகியவைகளில் ஏழு கோடி ரூபாய்க்கு மேல்பட்டும் மதிப்பிடக்கூடிய சொத்துக்கள் முடக்கமாய் இருக்கின்ற தென்றும், இவைகளால் மொத்தத்தில் கிட்டத்தட்ட ஆண்டு ஒன்றுக்கு ஒருகோடி ரூபாய் போல் திருப்பதி வெங்கிடாசலபதி சாமியால் மாத்திரம் ஏழை இந்திய தேசப்பணம் வீணாகின்றதென்றும், இன்னும் இதுபோல் இந்தியாவில் எத்தனையோ கடவுள்களும், புண்ணியஸ்தலங்களும் இருக்கின்றன வென்றும் அவைகளுக்கும் இது போலவே வரவு செலவு கணக்குகள் போட்டுப் பார்த்தால் மேற்கொண்டும் இத்துடன் இனி எத்துணையோ கோடி ரூபாய்களாகும் என்றும் அதாவது இப்போது நாம் கொடுமையான அரசாங்கம் என்று சொல்லும் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் நம்மிடம் “மிகக் கொடுமையாய்” வசூலிக்கும் வரியைவிட குறையாத தொகையாகும் என்றும், ஆகவே இந்தியாவின் தரித்திரத்தையும், கல்வி, பகுத்தறிவு, தொழில்திறம், ஆராய்ச்சி ஆகியவைகள் இல்லாமையையும், அடிமைத்தனத்தையும் ஒழிக்க வேண்டுமானால், முதலாவது இவ்வித கடவுள்களும், புண்ணியஸ்தலங்களும் பூகம்பத்தின் மூலமோ, புயல் காற்றின் மூலமோ, சமுத்திரம் பொங்கி வருதல், மண்மாரி, கல்மாரி, பேரிடி, எரிமலைக் கொந்தளிப்பு இவைகள் மூலமோ, அடியோடு அழிந்து பாழாகி மண்மூடிப் போனாலொழிய வேறு மார்க்கமில்லை என்பதாகவும் பொருள்பட எழுதி இருந்தோம்.
ஆனால், அந்த வியாசம் எழுதி எழுதுகோலை கீழேவைக்கும் முன்னரேயே, வியாசம் எழுதிய எழுத்துக்களின் இங்கியின் ஈரம் புலர்வதற்குள்ளாகவே, இந்திய மடாதிபதிகள், அரசர்கள் என்னும் தலைப்புப் பெயர்கொடுத்து ஒரு தலையங்கம் எழுத நேர்ந்ததற்கு நாம் மிகவும் வருந்துகின்றோம்.
என்னை? திருப்பதிக் கடவுளுக்கு அடுத்தபடியாக திருவாங்கூர் அரசாங்கம் என்பது பற்றியும், சங்கராச்சாரிகள் என்பது பற்றியும் நாம் எழுத நேர்ந்ததால் திருவாங்கூர் அரசாங்கம் என்பது சுதேச சமஸ்தானங்கள் என்று இந்திய அரசர்களால் ஆளப்படும் தேசங்களில் இது ஒரு நடுத்தர அரசாங்க மாகும். இந்த அரசாங்கத்தின் எல்லை சென்னை மாகாண ஜில்லாக்களில் இரண்டு ஜில்லாக்களுக்கு அதாவது சேலம், கோயமுத்தூர் ஜில்லாக்களுக்கு சமானமானதாக இருக்கும். இதன் சனத்தொகை சுமார் நாற்பது லட்சமாகும். இதன் பரப்பு 7500 சதுரமைல்களாகும்.
இந்த நாற்பது லட்சம் சனத்தொகையில் ஏறக்குறைய சரி பகுதி சனங்கள், அதாவது இருபது லட்சம் பேர்கள் இந்துக் கள் அல்லாதவர்களான கிறிஸ்துவர்களும், மகமதியர்களுமே யாவார்கள். எஞ்சி உள்ள இருபது லட்சத்திலும் சுமார் பன்னிரண்டு லட்சம்பேர்கள் தீண்டக்கூடாதவர்கள், தெருவில் நடக்கக்கூடாதவர்கள், கண்ணில் தென் படக்கூடாதவர்கள் ஆகிய மிருகங்களிலும் கீழானவர்கள் ஆவார்கள்.
இப்படியாக முப்பத்தியிரண்டு லட்சம் சனங்கள் போக எஞ்சியுள்ள சுமார் எட்டு லட்சம் பேர்களே, “ஜாதி இந்துக்கள்” அதாவது, மனித உரிமை யுடையவர்கள் ஆவார்கள். இதில் 50,000 பேர்கள் பார்ப்பனர்கள். இப்படி யாக 40 லட்சம் சனத்தொகை கொண்ட இந்த அரசாங்கத்திற்கு வருஷாந்திர (ரிவினியூ) வருமானம் சுமார் எழுபது லட்ச ரூபாயாகும்.
எனவே, இந்த நிலையில் உள்ள மேற்படித் திருவாங்கூர் ராச்சியத்தில் தேவஸ்தான சம்பந்தமாக செலவு செய்யும் தொகையோ பதினேழு லட்ச ரூபாயாகும். இந்த 17 லட்ச ரூ. தொகையானது இந்து மத சம்பந்தமான தேவஸ்தானங்களில் செலவு என்று சொல்லப் பட்டாலும், இவைகள் ஏறக்குறைய, ஏன் முழுவதும், மேலே காட்டப்பட்ட 50 ஆயிரம் பார்ப்பனர்களுக்கே அவர்களது சாப்பாட்டிற்கே செலவு செய்யப்பட்டு வருகின்றது.
ஒரே அரசன் தனது ராச்சியத்தில் உள்ள எல்லா மக்களிடத்திலிருந்தும் வரிவசூலித்து ஒரு ‘ஜாதி’க்கு மாத்திரம் அதுவும் அநேகமாக வரி கொடுக்கக் கூடாத ஜாதியும், கஷ்டப்படாமல் பிறர் உழைப்பில் தேகம் நோகாமல் வாழ்கின்ற ஜாதியும், தங்களைத் தவிர மற்ற மக்களெல்லாம் கீழ்ஜாதி, இழிகுலத்தவர்கள், தங்களது வைப்பாட்டி மக்களாய் இருக்கத் தகுந்தவர்கள் என்று கருதிக் கொண்டிருக்கும் ஜாதியுமாகிய பார்ப்பனர்களுக்கே போய் சேருகின்றது என்றால், அந்த ராச்சியத்தின் நீதிக் கும் புத்திக்கும் வேறு எதை ஒப்பிடுவது என்பது நமக்கு விளங்கவில்லை.
அந்த ராச்சியத்தில் உள்ள பார்ப்பனர்கள் எத்தனை பேர்களானாலும் மற்றும் வெளி நாட்டிலிருந்து அந்நாட்டுக்குச் சென்று குடியேறும் பார்ப்பனர்கள் எத்தனை பேர்களானாலும் அவர்கள் அத்தனைப் பேருக்கும் ஆண், பெண், குழந்தை, குட்டிகள் சகிதம் அவர்கள் எந்த வேலையில் எவ்வளவு சம்பாதித்தாலும், எந்த உத்தியோகத்தில் எவ்வளவு சம்பளம் பெற்றாலும், எந்த வியாபாரத்தில் எவ்வளவு லாபம் அடைந்தாலும், அதைப் பற்றி சிறிதும் கவலையில்லாமல் பார்ப்பனர் என்கின்ற பேருக்கு மாத்திரம் தினம் இரண்டு வேளை கோயிலிலும் ஊட்டுப்பரை என்னும் சாப்பாட்டு சத்திரங்களிலும் தாராளமாகவும் நிரந்தரமாயும் சாப்பாடு போடப்பட்டு வருகின்றது. இது நிற்க; மற்றபடி, “பண்டிகை நாட்களிலும் “புண்ணியநாள்”கள் “விரதநாள்கள்” என்பவைகளிலும் சிரார்த்த நாள்களிலும் மிகுதியும் விசேஷமான சாப்பாடும், தவிர பணமும் கால், அரை, ஒன்று என்பதாக தட்சணையும் கொடுக்கப்பட்டு வருகின்றது.
இதுதவிர, மாதம் தவறாமல் உற்சவங்களுக்கும் இப்படியே நடக்கின்றது. இவைகள் தவிர அந்த நாட்டு பார்ப்பனரல்லாத உயர்ந்த ஜாதிபெண்கள் என்பவர்கள் பார்ப்பனர்களை புணருவது மோட்ச சாதனம் என்றும் கற்பிக்கப்பட்டிருக்கின்றது. இதை தவிர ஆறு வருஷத்திற்கு ஒரு முறை ஜபம் என்னும் பெயரால் சுமார் எட்டு லட்ச ரூபாய் செலவில் ஒரு சடங்கும் கொண்டாடப்படுகின்றது. இச்சடங்கானது 56 நாள்களுக்கு தொடர்ச்சியாய் நடத்தப்படுவதாகும்.
இந்த ஐம்பத்தியாறு நாள்களுக்கும் சுமார் பதினையாயிரம் பார்ப்பனர்கள் வரை மூன்று வேளை உணவுகளும், ஒவ்வொரு வேளைக்கும் பத்து இருபது வகை காய்கறிகளுட னும், 5, 6 வகை பலகாரங்களுடனும், 2, 3 வகை பாயாசங்களுடனும், 2, 3 வகை அப்பளங் களுடனும் விருந்துகள் நடக்கும். இவ்விருந்து செய்வதற்காக சமையல் காரர்கள் மாத்திரம் தினம் ஆள் ஒன்றுக்கு இரண்டு, மூன்று ரூபா கூலியில் 600, 700 பேர்கள் அமர்த்தப்படுவார்கள். தவிரவும் மேற்கண்ட பதினை யாயிரம் பேர்களுக்கும் தினம் இவ்வித விருந்தளிப்பதுடன் நபர் ஒன்றுக்கு நாலணா எட்டணா ஒரு ரூபாய் வீதம் தட்சணையும் கொடுப்பார்கள்.
மற்றும் ஆயிரக்கணக்கான பார்ப்பனரல்லாதார் குழந்தைகளை உடன் கூட்டிக் கொண்டு போய் அவைகளையும் பார்ப்பன பிள்ளைகள் என்று காட்டி அவைகளுக்கும் தட்சணை வாங்கிக் கொள்ளுவார்கள். அன்றியும் தூர தேசங்களில் இருந்து வரும் பதினாயிரக்கணக்கான நம்பூதிரி பார்ப்பனர்க ளுக்கு போக வர பிரயாணச் செலவும் சாப்பாடு, தட்சணையும் கொடுத்து ஆள் ஒன்றுக்கு ஒவ்வொரு கட்டில் மெத்தை, இரண்டு தலையணை, சால்வை நான்கு, நான்கு ஜோடி வேஷ்டிகள் முதலியவைகளும் கொடுப்பார்கள். மற்றும் இவை போன்ற பல செலவுகளுக்காக மேற்கண்ட எட்டு லட்ச ரூபாயும் 56 நாள்களில் பஞ்சு பஞ்சாய்ப் பறந்து செலவாகிவிடும்.
இப்படி செலவு செய்து நடத்தப்பட்டும். இந்த முறை ஜபமானது எதற்காக என்றால், சுமார் 200 வருஷத்திற்கு முன் இருந்த ஒரு ராஜா அந்நாட்டில் செய்த ஏதோ ஒரு சிற்றரசர்கள் யுத்தத்தில் சில பார்ப்பனர்கள் இறந்து போனதால் அந்தப் பாவம் தீர்ந்து தங்களுக்கு சந்ததி விர்த்தியா வதற்கு பிராயச்சித்தமாக இப்படி இந்த இருநூறு ஆண்டுகளாக ஆறு வருஷத்திற்கு ஒருமுறை எட்டு லட்ச ரூபாய் (அதாவது, அந்த பார்ப்பனர் களின் குடும்பத்திற்கு போய் சேரும்படி) செலவு செய்து முறை ஜபம் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த மாதிரியான முட்டாள்தனமான கொள்கை கள் உடையவர்களாகிய இந்து அரசர்களால் இந்தியா ஆளப்பட்டு வந்து இருந்ததினால்தான் இன்றைய தினம் இந்தியா ஆயிரக்கணக்கான வருஷங்களாக அந்நியநாட்டு நன்மையின் பொருட்டு அன்னியர்களால் ஆளப்படுவதில் ஏதாவது ஆச்சரியமிருக்க முடியுமா என்று கேட்கின்றோம். நிற்க இந்தப்படி ஆறு ஆறு வருஷத்திற்கு ஒருமுறை எட்டு எட்டு லட்ச ரூபாய் செலவு செய்து முறை ஜெப பிராயசித்தம் செய்து வந்தும், அந்த ராஜாங்கத்திற்கு சந்ததி இல்லாமல் அடிக்கடி சுவீகாரம் செய்துதான் பிள்ளைகள் உண்டாக்கி பட்டம் கட்டி ஆளப்பட்டு வருகின்றது.
இதை அந்த ராஜியத்திலுள்ள ஒவ்வொரு ராஜாக்களும் ஆண்டு வந்திருந்தும், இம் மாதிரியான மூடநம்பிக்கை இவர்களை விட்டுப் போகவில்லையானால், இவர்கள் ஒரு நாட்டை ஆள யோக்கியதை உடையவர்களா என்று கேட்கின் றோம். நமது இந்து கடவுள்களைவிட இந்து ராஜாக்களால் இந்திய நாட்டு செல்வங்கள் இம்மாதிரி மதத்தின் பேராலும், சடங்கின் பேராலும் வருஷம் வருஷம் பல கோடிக்கணக்கான ரூபாய்களாக பாழ்படுத்தப் பெறுகின்றன.
திருவாங்கூர் ராஜாங்கம் வருஷம் வருஷம் இந்தப்படி இவ்வளவு லட்சரூபாய்கள் மத சம்பந்தமாகவும், சடங்கு சம்பந்தமாகவும் செலவு செய்து வந்தும் இன்றைய தினம் தோட்டத்தில் பகுதி கிணறு என்பது போல் அந்த ராஜாங்கத்தில் உள்ள மக்களில் அரைவாசிப்பேர் கிறிஸ்துவர்களும் மகமதியர் களுமாக இருக்கவும், மீதியிலும் அரையே அரைக்கால் வாசிப்பேர் “சண்டாளர்” அதாவது நிழல் கூட மேல்படக்கூடாதவர்களாக இருக்கவும், ஆன நிலையில் இருக்கின்றதென்றால் இந்த மதமும் சடங்கும் ஒரு காதறுந்த ஊசிக்காவது உபயோகப்பட்டிருக்கின்றதா என்று தான் கேட்கின்றோம்.
கடந்த ஒரு ஆயிர வருஷ காலமும் இந்தியாவின் மற்றபாகமும், சுதேச அரசர்களால் ஆளப்படும் சுயராஜ்ஜிய தேசமாய், ராம ராஜ்ஜிய தேசமாய் இருந்திருக்கு மானால், இந்தியாவிலுள்ள மலைகள் எல்லாம் உடைக்கப்பட்டு கோயில்களாகவும், பாறைகள் எல்லாம் உடைக்கப்பட்டு சாமிகளாயும், சொத்துக்கள் எல்லாம் அந்த சாமிகள் பேரில் எழுதிவைக்கப்பட்ட மானியங்களாகவும், பெண்களில் அரை வாசிப் பேருக்கு மேலாக அந்த சாமிக்கு பொட்டுக்கட்டி விடப்பட்டு தாசிகளாகவும், மற்றும் அரைவாசிப்பேர் பார்ப்பனர்களைப் புணர்ந்தால் மோட்சம் என்று கருதிக் கொண்டிருக்கின்றவர்களாகவும், இருப்பதோடு, இன்றைய தினம் காப்பிக்கடையில் எச்சில் கிண்ணம் கழுவும் பார்ப்பனர் முதல் தாசித் தெருவில் தரகுக்கடை வைத்திருக்கும் பார்ப்பனர் வரை ஒருவர் தவறாமல், ரிஷிகளாகவும், முனிவர்களாகவும் சங்கராச்சாரிகளாகவும், மடாதிபதிகளாகவும், ஜீயர்களாகவும் குலகுருக்களாகவும், மகந்துகளாகவும் இருந்திருப்பதோடு பார்ப்பனர் தவிர மற்றவர்கள் எல்லாம் அந்தப் பார்ப்பனர்களுக்கு தொண்டு செய்து கொண்டு அவர்கள் எச்சிலையில் மீதி விட்டதைப் பொறுக்கி சாப்பிட்டு கொண்டும், அவர்கள் கட்டி கிழித்து தெருவில் எறிந்து விட்ட கந்தைகளை கட்டிக்கொண்டு பார்ப்பனர்கள் வீட்டு வாயில்களில் மேல் வேஷ்டியில்லாமல் முழங்காலுக்குக் கீழாக துணி தொங்காமல் சுருட்டிக் கட்டிக் கொண்டு, இடதுகையை மடக்கி வலது கச்சத்தில் வைத்து வலது கையால் வாயைப் பொத்தி நின்று கொண்டிருக்க வேண்டி இருக்குமா? அல்லவா என்பதை இன்றையதினம் திருவாங்கூரைப் பார்த்த எந்த தேசியவாதியாவது, மதத்தைக் காப்பற்ற தவம் கிடக்கும் மிதவாதியாவது, சடங்கைக் காப்பாற்ற உயிரைவிடும் ஆஸ்திகவாதியாவது ஆட்சேபிக்க முன்வரக் கூடுமா என்று கேட்கின்றோம்.
இந்த இருபதாவது நூற்றாண்டில் உலகமே விஞ்ஞான சாஸ்திர ஆட்சியில் இருக்கும்போது நமது, நாட்டை இம்மாதிரி கடவுள்களும், சுயராஜ்ய அரசர்களும் பாழாக்குவதைப் பற்றியும் இழிவு படுத்துவதைப் பற்றியும், ஒருவருக்காவது வயிறுபற்றி எரியவில்லையானால், நெஞ்சம் குமுரவில்லையா னால், இந்நாட்டுக்குத் தேசிய உணர்ச்சியோ தேசியச் சுயமரியாதையோ கடுகளவாவது இருக்கின்றதா என்று கேட்கின்றோம்.
தேசியம், தேசியம் என்று கடந்த அய்ம்பது வருடகாலமாய் அடிப்பட்ட நாய்கள் தங்கள் வீட்டு வாசற் படியில் நின்று கொண்டு குரைப்பது போல், நாம் எல்லோரும் தான் குரைத்து வருகின்றோம். சந்து பொந்துகளில் எல்லாம் தேசீய உணர்ச்சியை ஊட்ட வேண்டும் என்று வானத்துக்கும் பூமிக்குமாக துள்ளித் துள்ளி குதித்து நமது தேசீயவீரத்தைக் காட்டுகின்றோம்.
பூரணசுயேச்சை வேண்டுமென்கின்றோம். எப்படி இருந்தும் இந்து சாமிகளின் கொள்ளைகளையும், இந்து அரசர்களின் முட்டாள் தனங்களையும், இந்து மதத்தின் அயோக்கியத்தனங்களையும், ஒரு மயிர்க்கால் கூட அசைக்க நம்மால் முடியவில்லையே என்றால், இப்படிப்பட்ட நம்மால் இனி எப்படி 20 மைல் பீரங்கியையும், மணிக்கு 500 மைல் வேகம் போகும் ஆகாயக்கப்பல் வெடிகுண்டையும், விஷப்புகைத் துப்பாக்கியையும் சிறிதாவது அசைக்க முடியும் என்றுதான் கேட்கின்றோம்.
பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்து ராணுவச் செலவைப் பற்றி பிரமாதமாய்ப் பேசுகின்றோம்: செலவு சற்று அதிகமென்பதை நாம் ஒப்புக் கொள்ளுகின்றோம். ஆனாலும் அந்த ராணுவ பலத்தின் ஒரு பாகத்தால்தான் இன்று நாம் ‘எமது சொத்து’, ‘எமது பெஞ்சாதி’, ‘எமது அபிப்பிராயம்’ என்று சொல்லிக் கொள்ள வசதியுடையவர்களாய் இருக்கின்றோம் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டி இருக்கின்றது. அன்றியும், அது இல்லாவிட்டால் இன்றைய தினம், நமது ஜமீன்களும் பாளையங்களும் மற்றும் அதுபோன்ற பாச்சா சாக்கோக்களும் மனுதர்மிகளும் நம்மை என்ன செய்திருப்பார்கள் என்பது நமக்குத் தெரியும்.
எனவே இப்படியே யின்றியமையாத செலவைக் கூட அடியோடு கண்டித்து ராணுவமே வேண்டியதில்லை என்கின்ற நமது தேசியம், இந்த சாமிகள் கொள்ளையையும் மதத்தின் கொள்ளையையும், இந்திய அரசர்கள் முட்டாள்தனக் கொள்ளையையும் சிறிதுகூட கண்டிக்க முன் வருவ தில்லையே. அன்றியும் இவற்றைப் பற்றிப் பேசுவது தேசியமல்ல என்பதாக நமது பூரண சுயேச்சைவாதிகளால் வேதக்கட்டளையும், வெளிப்படுத்தப் பட்டாய்விட்டது.
நிற்க; இம்மாதிரி முட்டாள் அரசாங்கத்தையும், அக்கிரமத்தையும் அயோக்கிய தேசியத்தையும் இனியும் வைத்துக் கொண்டு வெறும் பார்ப்பனர்களை மாத்திரம் குற்றம் சொல்வதில் ஏதாவது பொருள் இருக்க முடியுமா என்றும் கேட்க வேண்டி இருப்பதற்கு வருந்துகின்றோம். இன்றைய தினம் திருவாங்கூர் பார்ப்பனர்களுக்கு நாம் என்ன புத்திமதி கூறுவது என்பது நமக்கு விளங்கவில்லை இதற்காக அவர்கள் மீது, என்ன குற்றம் சொல்லுவது என்று நமக்குத் தோன்றவில்லை.
உதாரணமாக, “ஓ பார்ப்பனர்களே! எங்கள் ராஜா பைத்தியக்காரர் ஆதலால் அவர் ஏதாவது பணம், கட்டில், மெத்தை, வேஷ்டிகள் கொடுத்தால் வாங்காதீர்கள், சாப்பாடு போட்டால் சாப்பிடாதீர்கள், எங்கள் பெண்கள் அறிவில்லாதவர்கள் ஆதலால் அவர்கள் கூப்பிட்டால் போகாதீர்கள் என்று சொல்ல முடியுமா” என்று கேட்கின்றோம்.
அப்படிச் சொல்லுவதானாலும் அது ஒருவன் மற்றொருவனைப் பார்த்து “ஓ! அய்யாவே! எங்கள் வீட்டுப் பெண் சற்று ஒரு மாதிரி நடவடிக்கை உள்ள பெண் ஆதலால் தங்கள் வீட்டுப் பையன் எங்கள் வீதிப் பக்கம் நடக்கவிடாமல் அடக்கி வையுங்கள்” என்று சொல்லுவது போல்தான் இருக்கும்.
இன்னும் அநேக பார்ப்பனர்கள் நம்மை இதே கேள்விகள் தான் கேட்கின்றார்கள். பல மொட்டைக் கடிதங்களும் எழுதுகின்றார்கள். அதாவது! “ஓய் குடி அரசு ராமசாமியாரே! நீர் ஏங்காணும் பார்ப்பனர்களை வீணாய் திட்டுகின்றீர்? உங்கள் ஜனங்கள் புத்தி இல்லாமல் முட்டாள் தனமாய் எங்கள் வீடு தேடிவந்து கூப்பிட்டுக் கொண்டுபோய் எங்கள் காலில் விழுந்து, பணம் காசு வேஷ்டி கொடுத்து சோறும் போட்டால் அதற்கு நாங்கள் என்ன செய்வோம்? நீர்தானாகட்டும் யாராவது சும்மா ஒரு காசு கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லி விடுவீரா? அப்படி இருக்கும்போது எங்கள் காலிலும் விழுந்து காசும் கொடுத்தால் வேண்டாம் என்றால் அது எங்கள் முட்டாள்தனமாகாதா” என்று எழுதி இருக்கிறார்கள். திருவாங்கூர் போன்ற அரசாங்கத்தை வைத்துக் கொண்டு இதற்கு என்ன பதில் சொல்வது என்பது நமக்கு புலனாகவில்லை.
நமது நாட்டு ஏழைகள் கூலிகள் முதல் செல்வவான்கள், கற்றவர்கள், பெரும் அதிகாரி கள், அரசர்கள் ஆகிய எல்லோருமே பெரிதும் இப்படிப்பட்ட மூடர்களா யிருப்பதோடு “தேசீய வீரர்கள்” “பூரண சுயேச்சைக்காரர்கள்” ஆகிய “பொது நலத் தொண்டர்கள்” என்பவர்களும் அவர்களுக்கு உதவியாய் இருந்தால் இந்த நாட்டுக்கு எப்படிதான், என்றுதான் விடுதலையும் சுயமரியாதை யும் உண்டாக்க முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை.
மனிதர்கள் பணம் சம்பாதிக்கும் போது எவ்வளவு தந்திரமாய், எவ்வளவு புத்திசாலித்தனமாய், எவ்வளவு சாமர்த்தியமாய், எவ்வளவு கன்னெஞ்சமாய் எவ்வளவு புரட்டு பித்தலாட்டம், அயோக்கியத்தனம் ஆகியவைகள் செய்து ஒன்றுக்கு இரண்டு விலை, ஒன்றுக்கு இரண்டு கூலி, ஒன்றுக்கு இரண்டு சம்பளம், ஒன்றுக்கு இரண்டு வட்டி ஆகிய முறையில் நாட்டு மக்களைக் கசக்கிப் பிழிந்து சம்பாதித்து அந்தப் பொருளை சிறிதாவது கவலை இல்லாமலும் அறிவில்லாமலும் ஆராய்ந்து பார்க்காமலும் சிக்கனமில்லாமலும் கண்ணை மூடிக் கொண்டு குடிகாரன் தனது அதிக போதையினால் கையிலிருந்தும் மடியிலிருந்தும் கீழே விழும் பணங் களை கவனிக்காமல் அந்த போதையை அனுபவிப்பது போல் இந்த மாதிரி சாமி என்றும் சடங்கு என்றும் பாழாக்குவதாயிருந்தால் எப்படி ஒரு நாட்டின் பணம் ஒரு நாட்டின் ஏழைகளின் நம்மைக்கு உபயோகப்படும் என்பது நமக்கு விளங்கவே இல்லை.
இந்த நாட்டுக்கு தொழிலாளிகள் முன் வரவேண்டுமானால் ஏழைகளின் கஷ்டம் நீங்க வேண்டுமானால் நாட்டின் தரித்திரம் தொலைய வேண்டுமானால் - முதலில் இந்த நாட்டு பணக்காரர்களும் பெரும் பணம் சம்பாதிக்கின்ற முதலாளிகளும் அதிகாரிகளும் அரசர்களும் யோக்கியர்களாக வேண்டும். அறிவாளிகளாக வேண்டும் இல்லாதவரை இவர்கள் அடியோடு முதலில் அழிக்கப்படவேண்டும்.
அந்தப்படி இவர்கள் யோக்கியர்களாகவோ அழிக்கப்படவோ, வேண்டுமானால் முதலில் இந்த மாதிரியான கடவுள்களும், மதமும் ஒழிந்தாக வேண்டும், அப்படிக்கில்லாமல் எந்தப் பேராலாவது எந்த மாதிரியிலாவது இப்படி கடவுள்களையும் மதங்களையும் வைத்துக் கொண்டிருக்கின்றவரையில் என்ன தேசீயம் பேசினாலும் ஒருக்காலும் நமது நாடு நாடாகாது என்றுதான் சொல்லுவோம்.
அதாவது காடுபோல் வலுத்து இளைத்ததை ஆதாரமாய்க் கொள்ளும் இடமாகுமென்றுதான் சொல்லு வோம். நிற்க, இனி இந்திய மடாதிபதிகள் என்று சொல்லிக் கொண்டு இந்திய செல்வங்களை கொள்ளை யடித்து பாழாக்குகின்றவர்கள் எத்தனை பேர்கள் என்பதை சற்று யோசித்துப் பார்க்க வேண்டுகின்றோம்.
சங்கராச்சாரிகள் என்று ஒரு ஏழு எட்டு பார்ப்பனர்கள் இந்தியாவிற்குள் தினமும் கிராமம் கிராமமாய் பட்டணம் பட்டணமாய்ச் சுற்றிசுற்றி அடிக்கும் பகற்கொள்ளைக்கு ஏதாவது அளவு கண்டுபிடிக்கக் கூடியதாக இருக்கின்றதா? ஒவ்வொரு சங்கராச்சாரி களும் அரண்மனை போல் மடமும், யானை, குதிரை, பல்லக்கு, படைகள், நகை கள், கூட்டங்களுடனும் தளங்களுடனும் சுற்றுப் பிராயணங்கள் நடப்பதைப் பார்த்தால் மனம் பதைக்கின்றது.
இரத்தங் கொதிக்கின்றது. இவர்களுக்கு ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள பணக்காரர்கள் பதினாயிரம், ஐயாயிரம், ஆயிரம், ஐந்நூறு, இருநூற்றைம் பது ரூபாய்கள் என்கின்ற கணக்குப்படி காணிக்கைகளும் 108-1008 ரூபாய்கள் என்கின்ற கணக்குப்படி பாதபூசைகளும், தினம் ஒரு வேளை பிச்சைக்கு என்று 427-436 ரூபாய்களும் கொடுக்கப்பட்டு வருகின்றது. அத்தோடு அவர்கள் காலிலும் விழுந்து கால் கழுவின பாத தீர்த்தம் அருந்தப்படுகின்றது.
இப்படியாக ஆயிரக் கணக்கான வருஷங்களாக நாளெல்லாம் நடந்து வருகின்றது. ஆனால் இப்படிப்பட்ட சங்கராச்சியாரிகளைப் பற்றி பணம் கொடுக்கின்றவர்களில் எந்த மூடர்களாவது சிந்தித்துப் பார்த்து பணம் கொடுக்கின்றார்களா! என்று பார்த்தால் அது ஒரு சிறிதும் தென்படுவ தில்லையே.
சங்கராச்சாரி என்றால் என்ன? அவர் யார்? யாருக்கு குரு? எதற்காக குரு? அவரால் யாருக்கு என்ன பிரயோஜனம்? எதற்காக பணம் கொடுக்க வேண்டும்? அந்தப் பணம் என்ன ஆகின்றது? என்பது போன்ற விஷயங்களில் ஏதாவது ஒன்றைப் பற்றி கவனித்துப் பார்த்து யாராவது பணம் கொடுக்கின்றார்களா? ஒரு சிறிதும் இல்லவே இல்லையே.
அந்தோ! அந்தோ! வெகுபணம் வீணாய்ப் போகின்றதே. இதனால் நமது மானமும், மனிதத் தன்மையும் வீணாய்ப் போகின்றதே. உதாரணமாக எந்த சங்கராச்சாரியும் ஸ்நானம் செய்வதற்கு முன்தான் நம்மைப் பார்ப்பார். ஏனெனில் நம்மை பார்த்தால் சூத்திரனைப் பார்த்த தோஷமும், நமது நிழல் பட்டால் சண்டாள நிழல் ஸ்பரிசமும், நம்முடன் பேசினால் நீச்ச பாஷை உச்சரித்த பாதகமும், அவரை சூழ்ந்து கொள்ளுகின்றன. ஆதலால் இவற்றிற்காக அவர் தோஷப்பரிகார பிராயச்சித்தம் செய்யவேண்டி இருக்கிறது.
இதன் நிமித்தம் அவர் ஸ்நானம் செய்வதற்கு முன்பாகவே நம்மை பார்த்து, நம்மிடம் பேசி நமக்கு தீர்த்தம் கொடுத்து, பணம் பெற்று, அந்தப் பணத்தைக் கொண்டே மேல்கண்ட பிராயச்சித்தங்களும் செய்துவிட்டு பிறகு பூஜை செய்து சாப்பிடு கின்றார். தவிரவும் இந்தப் பணங்களால் சமையல் செய்து ஆயிரக்கணக்கான வெறும் பார்ப்பனர்களுக்கே சாப்பாடு போடுகின்றார். எஞ்சியதை ஊருக்கு அனுப்பு கின்றார்.
இந்தப்படி இனியும் குட்டி ஆச்சாரிகள் மடம் எத்தனையோ? ஆகவே இப்படிப்பட்ட சங்கராச்சாரிகள் கொள்ளை எத்தனை கோடி என்பதை வாசகர் கள்தான் கணக்குப்போட்டுப் பார்த்துக்கொள்ளவேண்டும். மற்றபடி ஜீயர்கள், பட்டர்கள், சுவாமிகள், குலகுருக்கள் என்கின்ற சில்லரைப் பார்ப்பனக்குருக்கள் கொள்ளைகள் ஒரு புறமிருக்க, இனி பார்ப்பனரல்லாத பண்டார சன்னதிகள் என்ற மடாதிபதிகள் கொள்ளைக்கும் கணக்கு வழக்கில்லை.
சாதாரணமாய் தஞ்சை சில்லாவில் மாத்திரம் உள்ள இரண்டு மூன்று பண்டார சன்னதிகளின் வரும்படி ஆண்டு ஒன்றுக்கு 24 லட்ச ரூபாய்களுக்கு குறையாது என்று சொல்லலாம். இது போல் மற்றும் நம் நாட்டில் எத்தனையோ மடாதிபதிகளும் பண்டார சன்னதிகளும் ஆயிரக்கணக்கான பேர்கள் நமது கண்களுக்கு தென்படாமல் இருக்கின்றார்கள்.
இவர்கள் சொத்தும் வரும்படியும் எவ்வளவு ஆகும்? அது என்ன ஆகின்றது? யாருக்கு பலன் கொடுக்கின்றது? இவைகளால் நாட்டிற்கு என்ன பலன்? என்று யாராவது எந்த தேசியவாதி களாவது, மதவாதிகளாவது, ஆஸ்திகவாதிகளாவது கவனிக்கின்றார் களா என்று கேட்கின்றோம். எனவே, நமது நாட்டின் தேசியமும் மதவாதமும் ஆஸ்திகமும் எவ்வளவு புரட்டின் பேரிலும் அயோக்கியத்தனத்தின் பேரிலும் கட்டப் பட்டிருக்கின்றன என்பதை இப்போழ்தாயினும் மக்கள் உணர முடிந்ததா என்று கேட்கின்றோம்.
(குடி அரசு - தலையங்கம் - 01.12.1929)