பெங்களூரில் மூவாயிரம் பார்ப்பனர்கள் திரண்ட ‘கர்நாடக பிராமண மகா சபாவில்’ (19/01/2025) பேசிய காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திர சரஸ்வதி ‘பிராமண வெறியை’ தூண்டி விட்டு இருக்கிறார். அவர் இந்து மதம் பற்றிப் பேசவில்லை; வேதமதம் பற்றி பேசியிருக்கிறார். வேத மதம்தான் சனாதனம் என்றும் ‘பிரமாணிசம்’ மட்டுமே வேத மதத்தைக் காப்பாற்றும் என்பதால் ‘பிராமணர்கள்’ ஒன்றுபட வேண்டும் என்றும் பேசியிருக்கிறார். ‘பிராமணர்கள்’ தங்கள் பிறவி அடையாளங்களை உறுதி செய்ய மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறைகளையும் பட்டியலிட்டுள்ளார்.
“1. ஒவ்வொரு நாளும் தங்களுக்கு உரிய வேத சடங்குகளை வீட்டில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வீட்டில் சமைத்த உணவுகளையே சாப்பிட வேண்டும்.
2. பிராமணர்கள் வெளிநாடு போகக்கூடாது. (கடல் தாண்டுவது குற்றம் என்று சாஸ்திரம் கூறுகிறது). இங்கேயே தங்கி சனாதன கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டும்.
3. ‘பிராமணர்கள்’ மட்டுமே குடியிருக்கும் ‘அக்கிரகாரங்களை’ உருவாக்க வேண்டும். சுமார் 100 பிராமணர்கள் வசிக்கக் கூடிய தனிக் குடியிருப்புகள்(gated communities) உருவாக்க வேண்டும். ஆச்சாரமான உடைகளை (மடிசார், பஞ்சகச்சம்) அணிவதோடு குழந்தைகளை ‘வேத’ பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும்.
4. கிராமத் தொடர்புகளை துண்டித்துவிடக் கூடாது. கிராமங்களில் ஆசிரியர்களாக, தலைவர்களாக இருந்து சனாதன பாதையில் மக்களை வழிநடத்த வேண்டும்.
5. தங்களின் குலம் மற்றும் கோத்திரங்களை ஆவணப்படுத்திப் பாதுகாக்க வேண்டும்.
6. கலை இலக்கியங்களைப் பயன்படுத்தி சனாதனத்தை பரப்ப வேண்டும்.
7. கடந்த காலங்களில் காஷ்மீர் உட்பட அதிகார மய்யங்களில் நாம்தாம் இருந்தோம். மீண்டும் அந்த நிலை வர வேண்டும்."
இப்படி பச்சையாக ‘பிராமணர்’ என்ற வர்ணத்தின் அடிப்படையில் பேசியிருக்கிறார். மனுசாஸ்திரப்படி ‘பிராமணன்’ என்ற அடையாளம் ஏனைய மக்களை சூத்திர பஞ்சமர்களாக இயல்பாகவே இழிவுபடுத்துகிறது.
வர்ணாஸ்ரம பாகுபாடு என்ற எல்லையோடு அவர் நிற்கவில்லை. ‘பிராமணர்கள்’, ‘பிராமணர்கள்’ அல்லாதவரோடு கலந்து உறவாடக்கூடாது;
ஒன்றாக குடியிருக்கக் கூடாது, உணவருந்தக் கூடாது (வீட்டிலியே சமைத்து சாப்பிட வேண்டும்) என்று இன ஒதுக்கலை (apartheid) அவர் பேசி இருக்கிறார்.
தென்னாப்பிரிக்காவில் வெள்ளை நிற வெறியர்கள் கறுப்பின மக்கள் மீது “இன ஒதுக்கல்” கொள்கையை 1948 முதல் திணித்து வந்தனர். உலகம் முழுவதும் இதை எதிர்த்தது. கறுப்பின மக்கள் உறுதியுடன் நெல்சன் மண்டேலா தலைமையில் போராடினர். மண்டேலா 25 ஆண்டுகள் சிறைப்படுத்தப்பட்டார். 1990 இந்த ‘இன ஒதுக்கல்’ முடிவுக்கு வந்தது.
ஐ.நா.சபை 1966-இல் ‘இன ஒதுக்கல்’ மனித குலத்துக்கு எதிரானது என்று அறிவித்தது. 1994-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நெல்சன் மண்டேலா தென் ஆப்பிரிக்காவில் அதிபராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெள்ளை நிறவெறி ஆதிக்கம் சர்வதேச அழுத்தத்திற்கு பணிந்தது என்பது வரலாறு.
சமூக அரசியல், பண்பாட்டுத் தளத்தில் சமூக ஆதிக்கக் கொடுமையை எதிர்த்துப் பெரியார் குரல் கொடுத்தார். பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தைக் கைவிட்டு, பார்ப்பனர் அல்லாத மக்களை சமத்துவமாக ஏற்க முன்வர வேண்டும் என்று போராடினாரே தவிர ‘இன ஒதுக்கலை’ பெரியார் பேசவில்லை. ஆனால் சங்கராச்சாரிகளோ பார்ப்பனர் அல்லாத மக்களை தனிமைப்படுத்தி இன வெறுப்பையும் ‘இன ஒதுக்கலையும்’ பேசுகிறார்கள்.
2024-ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று “சென்னையில் ‘பிராமணர்கள்’ தங்களை பாதுக்காக்க தனிச் சட்டம் வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அங்கே என்ன பேசப்பட்டது? “பிராமணர்கள் உணர்வு அழிக்கப்படுகிறது, இதுவும் இனப்படுகொலைதான்” என்று பேசினார்கள். அது என்ன ‘பிராமண’ உணர்வு? அதைத்தான் இப்போது காஞ்சி விஜயேந்திரன் அம்பலப்படுத்தியுள்ளார். அதாவது தங்களுக்கு கீழான பார்ப்பனர் அல்லாத மக்களை ‘இன ஒதுக்கல்’ செய்வதுதான் அவர்களின் உணர்வு.
1911-இல் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற “தமிழ்நாட்டு பிராமணர்கள்” தங்களுக்கென்று தனி இடம், தனி சமையல் வேண்டும் என்று கேட்டனர். தாங்கள் ‘போஜனம்’ செய்வதை பிற ஜாதி காங்கிரஸ்காரர்கள் பார்த்துவிடக் கூடாது என்று திரையிட்டு மூடிக் கொண்டனர். இதை காந்தியே கண்டித்து ‘யங் இந்தியா’ பத்திரிக்கையில் எழுதினார்.
காங்கிரஸ் கட்சி நடத்திய சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பன வீட்டுக் குழந்தைகளுக்கு தனி இடத்தில் உணவு வழங்கப்பட்டதை எதிர்த்து பெரியார் போர்க்கொடி தூக்கினார்.
காங்கிரஸ் கட்சித் தலைவராக பெரியார் சுற்றுப்பயணம் செய்தபோது. குற்றாலம், பெரியகுளம் போன்ற ஊர்களில் பார்ப்பன வீடுகளில் பெரியாருக்கு மட்டும் தனியாக உணவு போடப்பட்டது. மூன்று வேளையும் அவர் சாப்பிட்ட எச்சில் இலைகளையை எடுக்காமல் அப்படியே விட்டு விட்டனர்.
தொடர்வண்டி நிலைய உணவு விடுதிகளில் பார்ப்பனர்களுக்கு மட்டும் தனி இடம் ஒதுக்கப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் இந்த நிலை இருந்தது. பெரியார் எதிர்த்துப் போராடிய பிறகு 1940-இல் இந்த பாகுபாடு ஒழிக்கப்பட்டது.
சென்னை கீழ்ப்பாக்கம் மனநோய் மருத்துவமனையில் கூட ‘பிராமண’ மன நோயாளிகள் ஏனைய மன நோயாளிகளிடமிருந்து பிரித்து தனியாக வைக்கப்பட்டனர். இப்படி நீண்ட பட்டியலிட முடியும். செயற்கை நுண்ணறிவு காலத்தில் கூட பார்ப்பனர்கள் பிறவி ஆணவத்தைக் கைவிடத் தயாராகவில்லை.
தனிக் குடியிருப்பு பேசும் ‘பிராமணர்கள்’ தங்கள் வீடுகளின் கட்டுமானத்தை அவர்களே
கட்டிக் கொள்வார்களா? பராமரிப்பு வேலைகளை அவர்களே செய்து கொள்வார்களா? வீதிகளை சுத்தம் செய்ய ‘பிராமணர்கள்’ வருவார்களா?
அனைத்து ஜாதியினரும் ஒன்றுபட்டு வாழும் ‘சமத்துவபுரம்’ திட்டங்களை தமிழ்நாட்டில் உருவாக்கி வரும் நிலையில் அதற்கு நேர் முரணாக அக்ரஹாரங்கள் உருவாக வேண்டும் என்ற இனவெறிக் குரல் கேட்கிறது. இந்த இன ஒதுக்கலைக் கண்டித்து சங்கராச்சாரி மீது நடவடிக்கை கோரி திராவிடர் விடுதலைக் கழகம் எதிர்வரும் ஏப்ரல் 21 அன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறது.
பெரியாருக்கு எதிராக முன்வைக்கும் அவதூறு பிரச்சாரங்களை ஊதிப் பெருக்கும் பார்ப்பனிய ஊடகங்கள் சங்கராச்சாரியின் திமிர்ப்பேச்சை இருட்டடிப்பு செய்து விட்டதை சுட்டிக்காட்டுகிறோம்.
ஜனநாயக சக்திகளும் வர்ணாசிரம எதிர்ப்பாளர்களும் பார்ப்பன சமுதாயத்திலேயே மாற்றத்தை விரும்பும் முற்போக்கு சிந்தனையாளர்களும் இந்த இன ஒதுக்கலை எதிர்த்துக் குரல் கொடுக்க முன்வர வேண்டும்.
- விடுதலை இராசேந்திரன்