kolathur mani‘பெரியாரும் - மார்க்சியமும்’ தலைப்பில் கொளத்தூர் மணி உரை (6)

குமரி மாவட்டம் குழித்துறையில் ஜன.24, 2021 அன்று ‘பெரியாரும் மார்க்சியமும்’ என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை இது.

எம்.சி.பி.அய்.(யு) என்ற மார்க்சிய கட்சி - தமிழ்நாட்டில் மார்க்சியர்கள் - பெரியாரியலை உள்வாங்கிக் கொள்ளவில்லை என்ற விமர்சன அறிக்கையை வைத்திருந்தது. அதைத் தொடர்ந்து இக்கட்சி வெளியிட்டுள்ள கொள்கை அறிக்கையில், “சாதி - மதப் பிரிவினை சக்திகள் வலிமை பெற்றிருக்கும் இக்காலக்கட்டத்தில் பெரியார், அம்பேத்கரின் தேவையை கட்சி பூரணமாக உணர்ந்துள்ளது” என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. அந்தப் பின்னணியில் இந்தக் கருத்தரங்கையும் ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.

ஏ.எஸ்.கே அய்யங்கார் என்று ஒருவர் இருந்தார். நான் ஐயங்கார் என்று சொல்கிறேன், பின்னால் அவர் 1969இல் ‘அய்யங்கார்’ என்பதை எடுத்துவிட்டு ஏ.எஸ்.கே என்று கெசட்டில் பதிவிட்டு பெயர் மாற்றம் செய்து கொண்டார். பெரியாரோடு மிக இணக்கமாக இருந்தவர்.

ரொம்ப நெருக்கமாக இருந்தவர். அவர் எழுதிய ஒரு நாவல் ‘தங்கம்மா’, அது அவருடைய அம்மா பெயர். அந்த நாவலைக் கூட பெரியாருக்குத் தான் காணிக்கை என்றார். இந்த நாட்டில் சிவப்பு விதைகள் முளைப்பதற்கு நிலத்தை பக்குவப்படுத்திய பெரியாருக்கு சமர்ப்பணமாக அதை வைத்தார். அவர் ஒரு நூல் எழுதியிருக்கிறார். ‘கடவுள் கற்பனையே’ என்றும், இன்னொன்று ‘பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா’ என்றும் எழுதியிருக்கிறார்.

பெரியார்கூட அவரிடம் வேடிக்கையாகச் சொல்லுவாராம். ஏன் கெசட் நோட்டிஃபிகேஷனில் ஐயங்கார் என்பதை எடுத்தீர்கள் என்றாராம். தமிழ் நாட்டில் ஜாதிப் பெயரோடு இருக்க எனக்கு கூச்சமாக இருக்கிறது என்றாராம் அவர். பெரியார், நீங்கள் ஜாதிப் பேரை வைத்துக் கொண்டிருந்தால் தான் நன்றாக இருக்கும், என்றாராம்.

நீங்கள் அய்யங்கார் என்ற பெயரோடு பார்ப்பனரை எதிர்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நீங்கள் போய் அய்யங்கார் என்பதை எடுத்துவிட்டீர்களே என்று பெரியார் வருத்தப் பட்டதாக வேடிக்கையாக சொல்லுவார்கள். அதை எதற்காக எழுதினார் என்றால், கம்யூனிஸ்ட்டுகள் நாத்திக பரப்புரையை செய்தாக வேண்டும் என்பதற்கு, அவரின் நூலின் முன்னுரையில் ஒரு மேற்கோளைத் தருகிறார். லெனினுடைய நூலைத் தான் அவர் சொல்கிறார்.

On the significance of Militant Materialism என்று; புரட்சிகர பொருள் முதல்வாதத்தின், அல்லது, நாத்திகத்தின் தேவை. அதனுடைய தமிழ் மொழி பெயர்ப்பை நான் சொல்லுகிறேன். அது ஆங்கிலத்தில் இருந்தது.

“இன்றைய சமூக அமைப்பு பல இலட்சக் கணக்கான உழைப்பாளி, விவசாய மக்களை, அறியாமை இருள், மூட பழக்க வழக்கங்கள் அழித்து வைத்திருக்கிறது. இந்த பிடிப்புகளிலிருந்து இவர்களை விடுதலை அடையச் செய்ய ஒரே வழி, தூய்மையான மார்க்சிய கல்வி யறிவைப் புகட்டுவது தான் என்று ஒரு மார்க்சியவாதி நினைத்தால், இதைத் தவிர மிகப் பெரிய இமாலயத் தவறு வேறு எதுவும் இருக்க முடியாது.

மூட பழக்க வழக்கங்களில் மூழ்கிக் கிடக்கிற இந்த இலட்சக்கணக்கான மக்களுக்கு, நாம் நாத்திகப் பிரச்சாரத்தில் எளிமையான, அவர்கள் புரிந்துக் கொள்ளக் கூடிய பல வழிகளையும் கடைபிடிக்க வேண்டும். அவர்களின் சொந்த வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்து பல நிகழ்ச்சிகளின் உதாரணங்களை எடுத்துக் காட்டி, மதத்தின் மாயைகளிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும்.

பல கோணங்களிலிருந்து பிரச்சாரம் செய்து, அவர்களின் உள்ளத்தில் ஆர்வத்தையும் எழுப்பிவிட வேண்டும். ஒரு கம்யூனிஸ்டாக இருப்பவன், அவன் மார்க்சிய வாதியாக இருக்கும் பட்சத்தில், மூடப் பழக்கங்கள், மத நம்பிக்கையில் மூழ்கி கிடக்கும் வளர்ச்சி யடையாத மக்கள் மனதில் அறிவுபூர்வமான ஆர்வத்தை மத விஷயங்களில் தூண்டி, விஞ்ஞான பூர்வமாக விமரிசனம் செய்து, மதத்தின் பிடி யிலிருந்து அவர்களை விடுவிக்கப் பாடுபட வேண்டும். இல்லையெனில் மார்க்சிய வாதி என்ற பெயரில் மார்க்சியத்தைக் கொச்சைப்படுத்து பவனாகத்தான் ஒரு கம்யூனிஸ்ட் இருக்க முடியும்”, என்று அவர் சொல்லு கிறார்.

அவர் எழுதியதில், On the significance of the Militant Materialism என்கிற நூலில் அதைக் குறிப்பிடுகிறார். ஏ.ஏஸ்.கே. இது 1968இல் எழுதிய புத்தகம், பெரியார் இருக்கும்போது எழுதிய புத்தகம் தான். அப்பொழுது அந்த தேவை இருக்கிறது, நாம் அதைச் செய்ய தவறி விட்டோம் என்பதை அவர் அழுத்தமாக இறுதி வரை சொல்லிக் கொண்டு இருந்தார்.

அவர் ஒரு பெரிய தொழிற்சங்க தலைவராகவும் இருந்தார். அவர் குடும்பத்தில் எல்லோரும் திருமணமானவர்கள். இவர் மட்டும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. (அவரின் அண்ணன் தம்பிகள் எல்லோருமே, ஜாதி மறுத்து ஒருவர் மட்டும், மற்ற இருவரும் வேறு மதத்திலும் திருமணம் செய்துக் கொண்டவர்கள்) அப்படிப்பட்ட ஒரு மார்க்சிய குடும்பம் தான் அது. ஆனால், அவர் பிறந்ததிலிருந்து நீண்ட நாளாக ஆந்திராவில் இருந்துவிட்டு இங்கு வருகிறார். திருக்குறளில் ஆழ்ந்த புலமையுள்ளவர் அவர்.

அவருக்கும் இங்கிருந்த மார்க்சியவாதிகளுக்கும் முரண்பாடுகள் இருந்துக் கொண்டே தான் இருந்தது. இங்கிருந்த கம்யூனிஸ்ட்களுடன், மார்க்சியவாதி களுடன் இல்லை, கட்சியினருக்கும் அவருக்கும் பிரச்னைகள் இருந்துக் கொண்டே இருந்தது. அந்த விமரிசனம் வைத்தார். ஏனென்றால், இந்த வேளை யில் பெரியாரைப் பற்றி சொல்லுகிற போது, அதை நாம் சொல்ல வேண்டி வரும் என்று கருதுகிறேன்.

பெரியாரைப் பற்றி இன்னொரு செய்தியை நான் சொல்ல வேண்டும். ரஷியாவிற்கு போனது ஒன்று. பின்னரும் உளவுத் துறையினர் அவரை துரத்திக் கொண்டே இருந்தார்கள். பின்னர் என்னைக் கூட ஒரு முறை ஈழத்திற்கு சென்று வந்த போது கேட்டார்கள். நீ ஒரு பெரியாரியவாதி, நேர்மையாக இருக்கவேண்டும், நீ எப்படி ஒளிந்துக் கொண்டு போனாய். திருட்டுத்தனமாக படகு ஏறி போவது என்ன நியாயம் என்று கேட்டார்கள். பெரியார் கூட அப்படித் தானப்பா போனார் என்று நான் பதில் சொன்னேன்.

துருக்கியில் பெரியார்குழு கப்பலில் ஏறி அடிமட்டத்தில் இருந்த நிலக்கரி கிடங்கில் மூன்று பேரும் உட்கார்ந்துக் கொள்கிறார்கள், ஏனென்றால் அவர்களை தேடுவார்களே என்று. பெரியாரின் உற்ற துணையாக இருந்த எஸ்.இராமநாதன் அவருடன் சென்றிருந்தார். அவர் ஒரு மார்க்சிய அறிஞரும் கூட.

Revolt-ல் அவர் ஹெகலைப் பற்றி கட்டுரையெல்லாம் எழுதியிருக்கிறார் 1928இல். அப்படி ஒரு ஆழமான புரிதல் உடையவர் இவருடன் சென்றார். இன்னொருவர், இராமு என்பவர். இவர்கள் மூன்று பேரும் போய் நிலக்கரி கப்பலில் அடிமட்டத்தில் போய் உட்கார்ந்து கொண்டு பயணித்தார்கள், ரஷிய எல்லை வந்தவுடன்தான் மேலே வருகிறார்கள். அது நடந்திருக்கிறது.

அதற்கு பின்னால், 1935ஆம் ஆண்டு பெரியார், சீனா போவதற்கு அப்ளை செய்கிறர். அண்மையில் தான் அந்த ஆவணங்கள் கிடைத்தது. சில ஆண்டு களுக்கு முன்னால்தான் தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் வழியாக வெளிவந்தது. இந்திய உள்துறை அமைச்சகம் மறுக்கிறது. என்ன காரணம் சொல்கிறார்கள் என்றால், 10/08/1935-ல் மறுத்து வருகிறது கடிதம், இவர் ஐந்தாம் மாதம் அப்ளிகேஷன் போடுகிறார். எட்டாம் மாதம் வருகிறது.

சென்னை மாகாண சட்டத்துறை துணைச் செயலாளர் DH Boulden-க்கு இந்திய உளவுத்துறை கடிதம் எழுதுகிறது அவரைப் போன்ற கருத்துகளை கொண்டவர்களை, அந்த நாடுகளை பார்வையிட அனுமதிப்பது விரும்பத்தக்கது அல்ல என்று அரசு கருதுகிறது. ஏனெனில், அவர் ஏற்கனவே ஜப்பானில் வாழ்ந்து வருகிற ராஷ்பிஹாரி போஸ் மற்றும் புரட்சிகாரர்களுடன் சேர்ந்துக் கொள்வார் என்று அரசு அஞ்சுகிறது.

திரு. இராமசாமி நாயக்கர் இந்த மாகாணத்தின் சுயமரியாதை லீக்-கின் தலைவராவார். அந்த லீக்-கின் உறுப்பினர்கள் சிலர் இன்னமும் சோசியல்- கம்யூனிசம் (என்ற ஒரு வார்த்தையை அவர் பயன்படுத்துகிறார்) பேசுகிறார்கள், பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர் என்று எழுதுகிறார்கள். அதற்கு இங்கிருக்கிறவன், அது நம் நாட்டுக்கு வருகிறது, இங்கு தமிழ்நாட்டில் இருக்கிறவன் ஒரு கடிதம் அனுப்புகிறான்.

என்னவென்றால், தகவலுக்காக இதை அனுப்புகிறோம். Director, Inteligence Bureau அவர்கள் பார்க்கவும். இதில் சென்னை மாகாண அரசு மேற்கொண்ட நடவடிக்கையானது, எதன் பொருட்டும் - நீங்கள் எந்த நடவடிக்கையாவது எடுங்கள் - எதன் பொருட்டும் திரு இராமசாமி நாயக்கர் பார்க்க விரும்பும் நாட்டுக்கு போகிறேன் என்று முடிவு செய்துவிட்டால், அதை தடுக்கப் பயன்படாது என்கிறார்.

நீ என்ன வேண்டு மென்றாலும் சொல்லிவிடு, அவர் போகலாம் என்று முடிவுசெய்துவிட்டால், அதை தடுக்க முடியாது, என்று அவர் அதில் குறிப்பு எழுதுகிறார், என்று ஆவணங்களில் குறிப்பிட்டு இருக்கிறது.

எனவே அவருக்கு இது மட்டுமல்ல. அடுத்து சீன நாட்டில் எப்படி புரட்சி வந்தது என்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் அவருக்கு இருந்திருக்கிறது. அது நல்லவண்ணம் சென்றிருக்குமேயானால், ஒரு வேளை தமிழ் நாட்டுக்கு மட்டுமாவது ஏதேனும் மாற்றம் வந்திருக்குமோ என்று நாம் நினைக்கிறோம்.

(தொடரும்)

- கொளத்தூர் மணி