பெரியார் பிறந்த நாளையொட்டி ‘தமிழ் இந்து’ நாளேடு, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் பெரியார் பற்றிய கட்டுரையை கேட்டிருந்தது. பொதுச் செயலாளர் எழுதிய கட்டுரை செப்.19 இதழில் மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளது. அக்கட்டுரையின் முழு வடிவம் இங்கே பதிவு செய்யப்படுகிறது.

நாதசுரக் குழாய் இருந்தால் ஊதியாக வேண்டும்; தவுலாக இருந்தால் அடிபட்டுத் தானாக வேண்டும் என்பதுபோல் எனக்கு தொண்டைக்குரல் உள்ள வரை பேசியாக வேண்டும்; பிரசங்கம் செய்தாக வேண்டும்.                                                      - பெரியார்

அரசு மக்களுக்கு வழங்கிடும் ‘இலவசங்கள்’ தேவைதானா? என்ற சூடான விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் சமூகத்தையே அரித்துக் கொண்டிருக்கிற ஒரு ‘இலவசம்’ குறித்து விவாதங்கள் நடப்பது இல்லையே! மக்களின் பொதுச் சிந்தனைக்குள் கொண்டு வரப்படாத அந்த ‘இலவசம்’தான் ஜாதி; இந்த ஜாதியை எவரும் தியாகம் செய்தோ, உழைத்தோ, விலை கொடுத்தோ வாங்குகிறார்களா என்ன? இந்த ‘இலவசம்’ ஒரு சமூகத்தில் மனிதர்களின் நிலையை தீர்மானிக்கிறது. இந்த இலவசம் சமூகத்தின் பெரும் பகுதி மக்களின் கலாச்சார உரிமைகளை மறுத்தது; வாழ்வுரிமைகளுக்கு தடை போட்டது; சமூகத்துக்கு இந்த ‘இலவசத்தை’ வழங்கியது - ஆட்சிகள் அல்ல; ‘ஆண்டவனால்’ வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

உறவுகளோடும் உரிமைகளோடும் பிணைந்து நிற்க வேண்டிய சமூக அமைப்பில் பெரும் பகுதியினர் வெளியேற்றப்பட்டு, ஜாதி, மதில் சுவர்களால் தடுக்கப்பட்டபோது அந்த சுவரை தகர்க்கக் கடப்பாரையுடன் புறப்பட்டவர்தான் பெரியார்.

கருணையினால் - கடவுள் தந்த இலவசமாக ஜாதி இருக்க முடியுமா? என்ற கேள்வியை பெரியார் கேட்டபோது, அவரை கடவுளின் எதிரி என்றார்கள். மதம் தந்த இலவசம் என்றால் அது நீதியான மதமாக இருக்க முடியுமா? என்று சமூக நீதிக் குரலை எழுப்பியபோது மத விரோதி என்றார்கள். ஆனாலும் அவர் குரல் ஓயவில்லை. ‘எதிரி’, ‘துரோகி’ என்ற பட்டங்களை சுமக்க நான் தயாராகி விட்டேன். அப்படியே என்னை அழையுங்கள் என்று நெஞ்சு நிமிர்த்திக் கூறி பயணத்தைத் தொடர்ந்தார். இந்தப் புள்ளியில்தான் பெரியாரின் தனித்துவம் பொதிந்திருக்கிறது.

“என்னை மகாத்மா என்றோ, தெய்வத் தன்மை பொருந்தியவன் என்றோ கருதுவதைவிட, அயோக்கியன், சுயநலக்காரன், இழிவானவன் என்று சொல்லுங்கள். அதில் தான் எனக்கு இலாபம்” என்று கூறிய பெரியார், அதற்கான விளக்கத்தையும் முன் வைத்தார். “எனது படத்தைப் பூஜையில் வைத்துப் பூஜிக்கவோ, உற்சவம் செய்யவோ நான் கருதவில்லை. அந்தக் குணத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று கருதி வெளிப்பட்டவன்” என்ற பெரியார், - அடுத்த வரியிலேயே இப்படி எழுதினார்:

“என்னை அக்கதிக்கு ஆளாக்காதவர்களே எனது நண்பர்கள் ஆவார்கள். எனது கொள்கைக்கும் துணைப் புரிந்தவர்கள் ஆவார்கள்.”

1971ஆம் ஆண்டில் சேலத்தில் பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ‘இராமன்’, ‘கிருஷ்ணன்’ கடவுள்களை அவமதிக்கும் படங்கள் எடுத்து வரப்பட்டதாக எதிர்ப்புகள் வந்தன. பல ஊர்களில் பெரியார் படத்தை எரித்தும், செருப்பால் அடித்தும், அவரது ‘கொள்கை எதிரிகள்’ எதிர்ப்பு காட்டியபோது, பெரியார் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். “எனது படத்தை செருப்பால் அடிக்க விரும்புவோருக்கு - பாதி விலையில் இரண்டையும் அனுப்பித் தருகிறேன். நன்றாக அடியுங்கள்; இந்த எதிர்ப்பின் வழியாகவே எனது கருத்துகள் மக்களை சென்றடையும்” என்றார்.

சமூக மாற்றத்துக்கு உண்மையாக தன்னை ஒப்படைத்துக் கொண்ட தலைவர். முதலில் ‘சுய புகழ்ச்சி’ மறுப்பாளராக வேண்டும் என்பதே பெரியாரின் தலைமைப் பண்புக்கான மய்யம். உச்சநீதிமன்றங்களே திணறிப் போகும் அளவுக்கு அவதூறு வழக்குகள் குவிந்து கொண்டிருக்கும் தமிழக அரசியல் சூழலில் பெரியாரின் இந்த ‘சுய புகழ்ச்சி’ மறுப்பு வியக்க வைக்கிறது. அது மட்டுல்ல; ‘சுய ஜாதி மறுப்பு’, ‘சுய குடும்ப நலன் மறுப்பு’ தலைவராகவும் அவர் நிமிர்ந்து நின்றார்.

சமூகத்தின் அனைத்துப் பிரிவினர்களுக்குமான உரிமைகளை உறுதி செய்வதே உண்மையான ‘ஜனநாயகம்’ என்று கூறிய பெரியார், அந்த மக்களின் உரிமைகளை பிடிவாதமாக மறுத்த ஆதிக்க சக்திகளிடம் நடத்திய ‘உரையாடலே’ கிளர்ச்சிகளாகவும், இயக்கங்களாகவும், சுற்றுப் பயணங்களாகவும் வடிவம் பெற்றன.

அந்த உரையாடல்களில் சமரசமற்ற அழுத்தமான சொற்கள் வெடித்துக் கிளம்பின. அனல் வீசிய அவரது சொல்லாடல்களில் உரையாடல்களுக்கான களத்தை விரிவுபடுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருந்தது. அவரது பேச்சு எழுத்துகளை ஊன்றிப் படித்தால் இதை உணர முடியும். அந்தக் களத்தை உயிர்த் துடிப்புடன் நீடித்திருக்கவே கொள்கைகளில் சமரசமற்ற நிலையையும் நடைமுறையில் ‘விட்டுக் கொடுத்தல்’களையும் அவர் மேற்கொண்டிருந்ததை அவர் வரலாறு நெடுக நாம் காண முடிகிறது.

பெண்-ஆண், கீழ் ஜாதி-உயர் ஜாதி, ஏழை-பணக்காரன் என்ற பாகுபாடுகளுக்கு எதிராக அவர் இயக்கங்கள் நடத்தினார். இந்த பாகுபாடுகளுக்கு முதன்மையான எதிரியாக அவர் ஜாதியமைப்பை அடையாளம் கண்டார். அதனைப் புனிதப்படுத்தும் நிறுவனங்கள், சடங்குகள், பண்டிகைகளை புறக்கணிக்க மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

புனையப்பட்ட புராணங்கள் வழியாக அறிமுகமான பண்டிகைகள், சடங்குகளின் உள்ளடக்கங்களை அவர் கேள்வி கேட்டார். தேவர்கள் என்ற உயர்குலத்தோர், ‘அசுரர்’கள் என்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தை அழித்தொழிப்பதை நியாயப்படுத்துவதை எப்படி கொண்டாட முடியும் என்று அவர் கேட்டது பலருக்கும் கசப்பாகவே இருந்தது. மக்கள் அதன் கொண்டாட்டங்களில் மட்டுமே மூழ்கினார்களே தவிர, உள்ளடக்கம் பற்றி சிந்திக்கவில்லை. இப்போது கேரளாவில் ‘ஓணம்’ பண்டிகையை ‘வாமன ஜெயந்தி’யாக மட்டுமே கொண்டாட வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கூறுகிறார். ஆர்.எஸ்.எஸ். அதிகாரப்பூர்வ ஏடு ‘கேசரி’யும் அதே கருத்தை திணிக்கிறது.

‘மகாவிஷ்ணு’ வாமன அவதாரம் எடுத்து, ‘மாபலி’ எனும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த அசுரனை தனது இடது காலால் மிதித்து ‘பாதாளத்துக்குள்’ அழுத்தினார் என்கிறது புராணம். ஆனால் மக்களுக்கு நல்லாட்சி வழங்கிய ‘அசுரன்’ மாபலி மீண்டும் கேரளாவுக்கு வருவதை வரவேற்று கொண்டாடுகிறார்கள் கேரள மக்கள். இதுவே ‘ஓணம்’ பண்டிகையின் ‘அய்தீகம்’. ஆனால், ‘அசுரர்களைக் கொண்டாடாதே! அழிக்க வந்த அவதாரத்தைக் கொண்டாடுங்கள்’ என்று பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். தலைமை கட்டளையிடுகிறது. ‘ஓணத்தை’ தீபாவளியாக மாற்ற துடிக்கிறார்கள்.

“ஓணம் உயர்ஜாதிக்கே சொந்தமானது என்று மரபை மாற்றும் இந்த முயற்சியை கேரள மக்கள் ஏற்க மாட்டார்கள்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயனும், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் கண்டனம் தெரிவித் துள்ளனர். பெரியார் பண்டிகைகளின் உள்ளடக்கத்தைக் கேள்வி கேட்டதற்கான நியாயம் இப்போது புரிந்திருக்கும்.

பெரியார் தொடங்கிய சமூக நீதிக்கான போராட்டங்களின் நியாயங்கள் இப்போதும் உணரப்படுகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களில் சமூகநீதி வேண்டும் என்ற உரிமைக் குரல் கேட்கிறது.

பெண்களை ஒடுக்கும் தேவதாசி முறை குழந்தைகள் திருமண முறைகளுக்கு எதிராக சட்டங்கள் வந்தபோது வைதீகர்கள் எதிர்த்தார்கள். பெரியார், பெண்ணுரிமைக்கான அந்த சட்டங்களை அழுத்தமாக ஆதரித்தார். இப்போது வேறு ஒரு பெண்ணின் கருவை சுமந்து குழந்தைகள் பெற்றுத் தருவதற்கான “வாடகைத் தாய்மார்களை”யே ஆட்சியாளர்கள் ஏற்கும் காலம் வந்துவிட்டது.

இப்படி அறிவியல் வாழ்க்கைப் பயணத்தில் ஆர்வம் காட்டும் சமூகம், ‘ஆண்டவன்’ இலவசமாக வழங்கியதாகக் கூறும் ‘ஜாதி’யை உயிர்த் துடிப்போடு தக்க வைத்துக் கொள்ளவே விரும்புகிறது. இதை வீழ்த்துவதற்கு ‘சுய ஜாதி மறுப்பாளர்கள்’ முன் வர வேண்டும். அவர்கள் இயக்கமாக வேண்டும். ‘சுய புகழ் மறுப்பு’, ‘சுய குடும்ப நலன் மறுப்பு’, ‘சுய ஜாதி எதிர்ப்பு’ என்னும் உன்னதமான கோட்பாடுகளை பின்பற்றி பெரியார் வாழ்ந்து காட்டி விடை பெற்றிருக்கிறார்.

இப்போதைய தேவை பெரியார் படத்தைப் போடுவதோ, அவருக்கு சிலைகளை வைப்பதோ அல்ல, அவர் வழி நடத்திய பாதையில் பயணிக்க இளைய தலைமுறை தயாராக வேண்டும் என்பதுதான்!

Pin It