நவீன கால வரலாறு கல்வி மறுமலர்ச்சியால் துவங்குகிறது, தொழிற்புரட்சி அதன் அசுர குழந்தையாக அவதரிக்கிறது. தொழிற்புரட்சியால் ஏற்பட்ட துயரங்கள் தாங்க முடியாமல் போன பொழுது காரல் மார்க்ஸ் கண்டுபிடித்த அருமருந்துதான் விஞ்ஞான கம்யூனிசம். மார்க்ஸின் மகத்தான சிந்தனைகளை செயல்படுத்த லெனின் செய்த முயற்சிதான் ரஷ்ய புரட்சி. இந்த புரட்சி கண்டு வியந்த அறிஞர்களும் உண்டு, பயந்து ஓடிய கொடியவரும் உண்டு.
இந்த நவீன காலம் ஐரோப்பியர்களின் ஆதிக்கத்தின் காரணமாக இந்தியாவில் நுழைந்தது. அறிவின் அடிப்படையில் அமைந்த நவீன காலம், ஆரியர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொண்ட பார்ப்பனர்களுக்குப் பயனுற அமைந்து விட்டது.
உழைக்காமல் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வேதம் ஓதி வாழ்ந்த கூட்டம், நவீன காலத்தில் உடல் உழைப்பின்றி உண்டு கொழுக்க ஏற்றதாகக் கல்வி மறுமலர்ச்சி உதவுவதை தங்களுக்கு உகந்ததாக ஏற்றுக் கொண்டனர். பள்ளி, கல்லூரிகளில் அவர்களே ஆக்கிரமித்து இருந்தனர். அரசு அலுவலகங்களில் அவர்கள் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. உழைத்து உழைத்து ஓய்ந்து போன திராவிட இனம் நவீன காலத்தில் வாழ முடியாமல் தவித்தனர். வாழ்வில் பின்தங்கினர். கல்வியில் கீழ் நிலையில் கிடந்தனர். பதவிகளை பிராமணர்க்கு பலி கொடுத்தனர். உதவுவார் இன்றி உயிர் வதைய தவித்தனர்.
திராவிடர்கள் வேதத்தை படிக்கக்கூடாது கேட்கக்கூடாது என்று பார்ப்பனர்கள் வேதகாலத்திலேயே தடை போட்டனர். எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே சூத்திரர்க்கு (திராவிடர்க்கு) என்று சதி செய்தனர். ராஜாஜி 8500க்கும் மேற்பட்ட திராவிடர்கள் கற்கும் பள்ளிச் சாலையை இழுத்து மூடினார். தாங்கள் மட்டுமே கற்றால் தான் தலைமைப் பதவியில் இருக்க முடியும் என்று எண்ணினார். திராவிடர்களைத் தங்களுக்கு தொண்டு செய்யும் தொண்டர்கள் நிலையிலேயே வைத்துக் கொள்ள துடித்தனர்.
இந்த நிலையில் தான் தவிக்கும் திராவிடர்களின் துயர் துடைக்க வந்தது நீதிகட்சி என்னும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம். டாக்டர் நடேச முதலியார், ஜி.வி. நாயர், பிட்டி தியாகராயச் செட்டியார் போன்ற திராவிடத் தலைவர்கள் துவங்கிய இந்தக்கட்சி 1917 - 1937 வரை திராவிடர்கள் நலம் கருதி பற்பல சட்டங்கள் செய்தனர். திட்டங்கள் தீட்டினர். அதன் பயனாய் திராவிடர்களின் வாழ்வு துளிர்த்தது.
போலி தேசியமும் போலி சுதந்திரமும் பேசிய போலி தலைவர்களிடம் மாயையில் மயங்கிய திராவிடர்களாகத் தங்களுக்கு உழைத்த தாயத்த திராவிட இயக்கமான நீதிக்கட்சியைத் தோற்கடித்தனர். திராவிடர்கள் தங்கள் வாழ்விற்குத் தாங்களே தீயிட்டுத் தீய்ந்தனர். தொலைந்தார்கள் திராவிடர்கள் என்று பார்ப்பனர்கள் பறைசாற்றி பெருமை பட்டுக்கொண்ட பொழுது ஏமாந்த திராவிடர்கள் ஏங்கி அழுதபோது இருள் போக்கும் எழுஞாயிறாய், வசந்தம் தரும் வான்மழையாய், விடிவெள்ளியார் தந்தை பெரியார் என்று அழைக்கப்பட்ட ஈ.வெ.ராமசாமி அவர்கள் திராவிடர்களின் நலம் காக்க தன் உயிர் ‘உடல்' உடைமைகளை ஒப்படைத்தார். ஓயாது உழைத்தார். ஆரிய பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்கு காரணம் என்னவென்று அயராது ஆய்வு செய்தார். அவர்களது மதம் அவர்களது ஆதிக்கத்திற்கு உதவுவதைக் கண்டார். அவர்களின் இந்து மத ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று உறுதி கொண்டு ஓயாது உழைத்தார், படித்தார், எழுதினார், பேசினார்...
அவர்களுடைய காலம் மாறி விட்டதை உணர்ந்தார். திராவிடர்களின் விஞ்ஞான அறிவை வளர்க்க வேண்டும் என்று விழைந்தார். பகுத்தறிவைப் பரப்பினார். மதிகெட்டு மானங்கெட்டு மாற்றானின் காலடியில் மதத்தின் பெயரால் மக்கிப்போய் கிடந்த திராவிட மக்களை ஆரியரின் மத ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப் போராடினார். நவீன உலகத்திற்கு திராவிடர்களை நயந்து நயந்து அழைத்தார். நவீன காலத்தில் கிடந்த எல்லா மாற்றங்களையும் வரவேற்றார். தன் மக்களையும் ஏற்கச் செய்தார். அவற்றில் ஒன்றுதான் காரல் மார்க்ஸின் கம்யூனிசம். அதை செயல் படுத்திய 1917 ரஷ்யபுரட்சி. பொதுவுடமைக் கொள்கை பல அறிஞர்கள், தலைவர்களை ஈர்த்தது. பெரியார்
ஈ.வெ.ரா. அவர்களையும் ஈர்த்தது. ஆனால், அதை ஒரு மாற்றத்துடன் பெரியாரும் நடைமுறைப் படுத்தினார்.
பெரியாரின் கம்யூனிச கவர்ச்சி
காரல் மார்க்ஸின் கம்யூனிச அறிக்கையை 04-10-1931 முதல் தனது குடியரசு ஏட்டில் தமிழகத்தில் முதன்முதலாக பெரியார் தொடர் கட்டுரையாக வெளியிட்டார். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரும் மற்றும் பிற பொதுவுடைமை சிந்தனையாளர்கள் பொதுவுடைமை குறித்தும் சோவியத் ஒன்றியம் குறித்தும் எழுதிய பற்பல கட்டுரைகளைக் குடியரசு ஏட்டில் விரும்பி வெளியிட்டார்.“1 திருத்துறைப்பூண்டி மாநாட்டில் தலைமையுரை ஆற்றும் பொழுது பெரியார் “நான் ரஷ்யாவிற்கு போவதற்கு முன்பே பொதுவுடமை தத்துவத்தை சுயமரியாதை இயக்கத்துடன் கலந்து பேசி வந்தது உண்மைதான். தீவிரமாக பிரச்சாரம் செய்ததும் உண்மைதான்”2 என்று பேசிய பேச்சு அவரின் பொதுவுடைமைப் பாசத்தை புரிந்து கொள்ள பயன்படுகிறது.
பெரியார் ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு 1931 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13ம் தேதி பயணம் மேற்கொண்டார். 1932 ஆம் வருடம் நவம்பர் மாதம் 11ந் தேதிதான் தமிழகம் திரும்புகிறார். ஏறத்தாழ 11 மாதங்கள் சுற்றுப் பயணம் செய்த இந்தத் தருணத்தில், அதிக நாட்கள் ரஷ்யாவில்தான் செலவிட்டார்.”3
ரஷ்யாவிலிருந்து திரும்பிய பெரியார் சிந்தனை சிற்பி சிங்காரவேலருடன் கலந்து ஆலோசித்து சுயமரியாதை சமதர்ம கட்சியை துவங்க ஏற்பாடு செய்தார். தனது மனைவி நாகம்மை உட்பட அனைவரையும் தோழர் என்று கம்யூனிஸ்ட்டுகள் போல அழைக்கும் பழக்கத்தை அமைத்துக் கொண்டார். தனது தொண்டரின் படைகளையும் அவ்வாறே அழைக்கும்படி அறிவுறுத்திய அவரது மாண்பு போற்றுதற்குரியது.
அவர் பேசுகிற பொழுது ஒருமுறை “நான் என்றைய தினம் சுயமரியாதை இயக்கம் என்று ஆரம்பித்தேனோ அன்று முதலேதான் இவ்வியக்கத்தைப் பற்றி பலரால் இது பொதுவுடைமை இயக்கமென்று சொல்லப்பட்டு வந்திருக்கிறது. என்பதோடு சுயமரியாதை இயக்கத்தின் முடிவான இலட்சியமாகவும் எடுத்துச் சொல்லும் போதெல்லாம் நாமும் மேற்கண்ட தத்துவத்தையேதான் சொல்லி வந்திருக்கிறோம்”4 என்று பெரியார் தன் இயக்கத்தின் கொள்கையும் ஒன்று தான் என்று கூறி வந்திருக்கிறார்.
சென்னை பக்கிங்காம் கர்னாட்டிக் மில் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாகத் திருவல்லிக்கேணி கடற்கரையில் பேசும் பொழுது பெரியார் “நீங்கள் தொழிலாளர்கள் என்றாலும் நாங்கள் உங்கள் தொண்டர்கள், உங்களுக்காகவே உயிர் வாழ்பவர்கள். இதை உணருங்கள்5 என்கிறார்”
தொழிலாளர்கள் நலம் காக்கும் பொருட்டு தொழிலாளர்களுக்கே தான் தொண்டன் என்று உணர்ச்சி ஊற்றெடுக்க உரையாற்றியது அவரது தொழிலாளர் நலத்தில் உள்ள அக்கறையைக் காட்டுகிறது. திராவிடர் கழகமே தொழிலாளர் இயக்கமாகும் என்று அடிக்கடி கூறிவந்தார்.
தமிழ்த்தென்றல். திரு.வி.கலியாணசுந்தர முதலியார் அவர்கள் 13.11.1936-ம் தேதியில் நவசக்தியில் ‘நாயக்கர்' என்ற தலைப்பில் பெரியார் ஈ.வெ.ராவிற்கு சில கேள்விகள் கேட்டு அறிவுரைகள் கூறி இருந்தார். அதற்கு விடை கூறும் விதமாகப் பெரியார், “ராமசாமிக்கு சமதர்மம் தெரியும். எப்போது பிரச்சாரம் செய்வது என்பதும் அவருக்குத் தெரியும்”6 என்று குடியரசில் தன் நண்பன் என்றும் பாராமல் வெகுண்டு வேகத்துடன் பதில் எழுதியது அவர் எந்த அளவிற்கு பொதுவுடைமைச் சித்தாந்தத்தில் பற்று கொண்டிருந்தார் என்பதைப் புலப்படுகிறது.
அதனால் தான் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் கே.டி.கே. தங்கமணி, பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி அவர்கள் எழுதிய நூலில் கீழ் வருமாறு கூறுகிறார்.
“இன்னும் ஐநூறு ஆண்டுகளானாலும் இந்திய வரலாற்றில் இடம் பெறக் கூடியவர்களாக மா. சிங்காரவேலர், தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி ஆக இரண்டு பேர்களாகத்தான் இருப்பார்கள்”7
அதனால் தான் திராவிட கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் "தந்தை பெரியார் தம் சுயமரியாதை இயக்கம் வேறு, பொதுவுடமை இயக்கம் வேறு என்று பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை பொதுவுடமை + பொதுவுடமை + சமதர்மம் = சுயமரியாதை இயக்கம்”8 என்று எழுதினார்.
ரஷ்யப் புரட்சி
இந்தியாவில் இருந்த 51 தொழிற்சாலைகளில் 43 தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருந்தன.8 தொழிற்சாலைகள் மட்டுமே திறந்து இருந்தன. 80,000 தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருந்தனர். அந்த நேரத்தில் ரஷ்யாவை புகழ்ந்து,
“முதலாளித்துவ ராஜ்ஜியத்திலும் 3கோடி 4கோடி வேலையில்லாமல் திண்டாடி, அவதியுறும்போது, ரஷ்யாவோ தங்கள் நாட்டில் வேலையில்லாது ஏங்குவோரோ அல்லது நாளைக்கென்ன செய்வோம் என்று கவலையுறுவோரோ இல்லாமல் செய்து விட்டது. 5 ஆண்டு திட்டத்தின் மூலம் உற்பத்தி பொருட்கள் கைத்தொழில் வளர்ச்சிகள் முதலியன அளவுக்கு மீறி ஏற்பட்டிருக்கின்றன“9 என்று தனது புரட்சி இதழில் பெரியார் எழுதி உள்ளார்.
“ரஷ்ய தேசத்தில் அரசியல் ஆதிக்கமோ, ஜாதிமத ஆதிக்கமோ செல்வந்தர்கள் ஆதிக்கமோ ஒன்றும் கிடையாது. அந்த நாட்டில் உள்ள வாலிபர்களுக்கு அரசியல் என்றால் என்ன ‘மதம் என்றால் என்ன' ஏழை பணக்காரர்களுக்கு அர்த்தமே தெரியாது”10 என்று ஆதிக்கம் அற்ற சமத்துவ சமுதாயம் சமைத்த ரஷ்ய அரசைப் பாராட்டி பேசினார்.
ரஷ்யர்கள் சமூக சேவை செய்வதற்கு மிக முக்கியமான முதன்மையான இடத்தை ஒதுக்கி உள்ளதையும், எல்லா தொழில்களையும் கூட்டுறவு முறையில் செய்து கூட்டுயர்வு நாட்டுயர்வு என்ற நல்லதொரு கொள்கை கொண்டு நாளும் வாழ்வதால் தான் அவர்கள் உத்வேகத்துடன் மகிழ்வுடன் வாழ்கிறார்கள் என்று பெரியார் உண்மையிலேயே நம்பினார். நம்பியதையே மக்களிடம் எடுத்துக் கூறினார்"11.
பெரியாரின் பொதுவுடைமைக் கொள்கை
காரல் மார்க்ஸின் கம்யூனிச தத்துவத்தால் கவரப்பெற்று இருந்தாலும், ரஷ்யப்புரட்சியைப் பார்த்து மெய் சிலிர்த்தாலும், அவர்களின் அடிப்படையான பொருளாதார சமுத்துவத்தை ஏற்ற, இந்திய மக்களின் பண்பாட்டிற்கு ஏற்ப ஒரு பொதுவுடைமை கண்ணோட்டத்தை உருவாக்கிக் கொண்டு அதை, “பொதுவுடைமை என்பது ஒரு குடும்பத்தில், உள்ள சொத்துக்கள், வரும்படிகள், தொழில்கள் இலாப நஷ்டங்கள், இன்ப துன்பங்கள், போக போக்கியங்கள், பொறுப்பு கவலைகள் முதலியவைகள் எல்லாம் எப்படி அக்குடும்ப மக்களுக்குப் பொதுவோ அது போலத்தான் ஒரு கிராமத்திலோ ஒரு பட்டணத்திலோ, ஒரு மாகாணத்திலோ, ஒரு தேசத்திலோ, ஒரு கண்டத்திலோ, ஒரு உலகத்திலோ உள்ள மேற்கண்டவைகள் எல்லாம் ஆங்காங்கு உள்ள அவ்வளவு பேருக்கும் பொதுவானது ஆகும். சுருக்கமாய் சொல்ல வேண்டுமானால் பொதுவுடைமை கொள்கையின் கட்சி இலட்சியம் உலகம் பூராவும் ஒரு குடும்பம்”12 என்று விளக்கிக் கூறுகிறார்.
ஓராண்டு கழித்து சமதர்மத்தைப் பற்றி அவர் பேசும் பொழுது, “ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் வேலை செய்து சமமாக உண்டு உடுத்தி களிப்புடன் வாழ்க்கை நடத்தவில்லையா? அது போலவே ஒரு கிராமம், ஒரு ஜில்லா, ஒரு மாகாணம் அல்லது தேசத்திலுள்ள எல்லா மக்களும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போலவும் உள்ள பூமியும் பொருளும் எல்லாம் குடும்ப பொது சொத்து போல் எல்லா மக்களுக்கும் பொதுவாகிய அந்த அக்குடும்பத்திற்குச் சொந்தமே அன்றி தனித்தனியாக அவரவர்கள் இஷ்டம் போல் அனுபவிக்கும் தனி உரிமை யாருக்கும் இல்லை. எல்லோரும் ஒன்றுபட்டு, ஆளுக்கொரு வேலை செய்து உண்டு உடுத்தி இன்ப வாழ்வு வாழ வேண்டும் என்பதுதான் சமதர்மம்”13 என்று மீண்டும் தன் சமதர்ம பார்வையைப் பகிர்ந்து கொள்கிறார்.
தொழிலாளி
தொழிலாளி யார் என்று விளக்கம் கொடுக்கும் பொருட்டு, ஒருமுறை பேசும் பொழுது, “இங்கு இருப்பவர் கூலிக்காரர்கள், தொழிலாளர்கள் இல்லை. தொழிலாளி என்பவன் நாட்டின் நன்மைக்காக ஒரு தொழிலைக் கற்று, அத்தொழிலை தானாகவே சுயேச்சையுடன் செய்து, அதன் பயன் முழுவதையும் தானும் தன் நாட்டு மக்களும் அடையும்படியான முறையில் தொழில் செய்பவன்தான் தொழிலாளி”14 என்று தொழிலாளி குறித்த ஒரு விதி வகுக்கிறார். தொழிலாளன் ஒருவன் தானே தன் விருப்பம் போல் ஒரு தொழிலை செய்து அந்தத் தொழிலின் பயன் முழுவதையும் தானே அடைபவனாய் இருக்க வேண்டும் என்ற கொள்கை உடையவராய் இருக்க வேண்டும். அதனால் தான் பெரியார், “முதலாளி சொல்லுகிறபடி வேலை செய்கிறவன் தான் தொழிலாளி என்றும் அவரிடம் கூலிக்குப் போராடுவதைத்தான் தொழிலாளர் இயக்கம் என்றும் சொல்லப்படுகிறது. இவர்கள் எந்த விதத்திலும் தொழிலாளி ஆக மாட்டார்கள்“15 என்று கூறுகிறார்.
“ஒரு தொழிற்சாலைக்கு அங்கு வேலை செய்பவர்கள் பங்காளிகளாக அல்லாமல் கூலிக்காரர்களாக இருப்பது முட்டாள்தனம், அடிமைத்தனம், மானமற்றதனம் ஆகும்16 என்கிறார்"
உழைப்பவனுக்கே தனது உழைப்பின் பயன் சேர வேண்டும். இதுதான் தற்கால நாகரீகத்தின் சரிசமத்துவ வாழ்க்கை. உலகமக்களில் எவருக்கேனும் இந்த சரிசமத்துவ சமதர்மம் குறைவு ஏற்படுமேயானால், அது காட்டுமிராண்டி அநாகரீக வாழ்க்கையே ஒழிய அது நாகரீகமாகாது என்றும் எது நாகரிக வாழ்க்கை எது நாகரிகமற்ற வாழ்க்கை என்பது குறித்தும் தனது கருத்தை பதிவு செய்து உள்ளது பெரியாரின் பொதுவுடைமை பார்வையை விளக்குகிறது.
தொழிலாளர் இயக்கம்
தொழிலாளர் இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என்று தனது எண்ணத்தை வெளிப்படுத்தும் பொழுது, தொழிலாளர்கள் இயக்கத்தின் போக்கை கண்டித்தும் உள்ளார். “எஜமானன் அதிக லாபம் அடைவதைப் பார்த்து பொறாமை கொண்டோ, தொழிற்திறத்திற்கு என்று அல்லாமல் வயிற்றுக்கு போதாது என்ற காரணத்தினாலோ தாங்கள் இல்லா விட்டால் வேலை நடக்காது என்று நினைத்து தங்களுக்கு அதிக கூலி வேண்டும், தராவிடின் வேலை நிறுத்தம் செய்வோம் வேறு ஒருவன் அந்த வேலையை செய்யவும் அனுமதிக்க மாட்டோம்.
முதலாளி எங்கள் வேலை நிறுத்தத்தால் நஷ்டமடைய வேண்டும் என்பது கூலிக்காரர்கள் இயக்கம்”17 என்று கூறுகிறார்.
"அரசியலில் தொழிலாளர்கள் ஈடுபடக்கூடாது. அரசியல் அவர்களிடம் வந்து சேரட்டும் என்று அவர் அரசியல்வாதிகளின் ஆசைக்கு பலிகடா ஆக வேண்டாம் என்று அறிவுறுத்தினார்”18
தொழிலாளர் தலைவர்கள்
பல தேச பக்தர்கள் என்பவர்கள் முதலாளிகளிடம் கூலி பெற்றுக் கொண்டு தொழிலாளர்களை அரசாங்க பக்கம் திருப்பி விட்டு விடுகிறார்கள். இப்போதும் இந்நாட்டில் உள்ள துன்பத்திற்குக் காரணம் என்று தவறாக தொழிலாளிகள் கருதுகிறார்களே தவிர முதலாளிகள் என்று அவர்கள் கருதுவதில்லை. அரசால் அதிக நட்டம் தொழிலாளர்களுக்கு இல்லை என்பதை தொழிலாளர்கள் உணர வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
“சென்னை பார்ப்பன தலைவர்கள் தங்களைத்தான் தொழிலாளர் விஷயத்தில் அதிக அக்கறை உள்ளவர்கள் என்றும், தொழிலாளர்களுக்கு வேண்டிய சகல சௌக்கியங்களும் தாங்களே செய்யக்கூடுமென்றும் காங்கிரஸ் சுயராஜ்ய கட்சியில் சேர வேண்டும் என்பது சூழ்ச்சி என்று தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை செய்தார்”19
“காதினிக்க பேசுபவர்களைக் கண்டு தொழிலாளர் மயங்குவது அறிய பெரிதும் தான் வருந்துவதாகவும் கூறி வருத்தப்பட்டார்”20
தொழிலாளர்களாக இல்லாதவர்கள் தொழிலாளி தலைவர்களாக வருவதை பெரியார் வெறுத்தார். தொழிலாளர்களே தொழிலாளிகளின் தலைவர்களாக வர முடியா விட்டால் தொழிலாளர் சங்கமே வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். தொழிலாளிகள் முன்னேற்றத்திற்கு தொழிலாளர்களையே நம்புங்கள் என்றும் அறிவுறுத்தினார்.
பிராமணர் அல்லாதாருக்கு பிராமணர் குருவாய் இருப்பது போலவும் இந்தியரை ஐரோப்பியர் ஆள்வது போலவும் தொழிலாளர்களுக்கு அரசியல்வாதிகள் தலைவர்களாய் வருவது ஒக்கும் என்று அரசியல்வாதிகளைத் தலைவர்களாக ஏற்க வேண்டாம் என்றும் தொழிலாளர்களை எச்சரித்தார்.
முதலாளிகள்
“தொழிலாளிகளை மோசம் செய்யும் முதலாளிகளின் செயல்கள் எல்லாம் தொழில் திறமையாகவும், நிர்வாகத் திறமையாகவும் கருதப்படுவதைக் கண்டு வருதப்பட்டார்”21
“ஒரு முதலாளிக்கு அவனுடைய நாய்க்குட்டியோ மைனாக் கிளியோ, எருமை மாடோ மாண்டு போனால் அதை நட்டமாகக் கருதி துக்கப்படுவதும் ஒரு தொழிலாளி மரணித்தால் அதற்கு வருத்தப்படாமலிருப்பதும் கண்டு வருத்தமும் கோபமும் பட்டார்“22
“சம்பளத்தை ஏற்றிக் கொடுக்கும் முதலாளிகள் விலைவாசியை ஏற்றிக் கொடுத்த சம்பளத்தை தொழிலாளிகளிடமிருந்து பிடுங்கி விடும் ஏமாற்று வேலையைக் குறித்தும் எச்சரித்துள்ளார்“23
அரசியல் கட்சிகளின் மோசடி
பண்டித ஜவகர்லால் நேரு தலைவராய் இருப்பதால் தாங்கள் காங்கிரசில் சேர முடியாது என்று பம்பாய் வர்த்தகர்கள் அறிக்கை விட்டதைக் கண்டு அஞ்சி, அவர்களை சமாதானம் செய்யும் பொருட்டு நேராக பம்பாய் சென்று அவர்களை சமாதானம் செய்யும் வழியாக தன் சமதர்மம் என்பது வெறும் பிரச்சாரமே தவிர கட்டாயமில்லை என்று சொல்லியதை எடுத்துக்காட்டி நேருவை தொழிலாளர்கள் நம்ப வேண்டாம் என்று எச்சரித்தார். காங்கிரஸ் சமதர்மத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சத்தியமூர்த்தி ஆனைமலையில் நடந்த ஐரோப்பியர் சங்கத்தில் ஐரோப்பியர் முன்னிலையில் பேசியதைக் குறிப்பிட்டு காங்கிரஸை தொழிலாளர்கள் நம்பக் கூடாது என்றும் எச்சரிக்கை செய்தார்“24
வரதராஜூலு நாயுடு மற்றும் அன்னிபெசன்ட் அம்மையார் போன்ற தலைவர்கள் தங்கள் அலுவலகங்களில் அதிக எண்ணிக்கையில் பார்ப்பனர்களை வேலைக்கு அமர்த்தி உள்ளதையும் சுட்டிக்காட்டி இந்திய தலைவர்கள் பலரை நம்ப வேண்டாம் என்றார்“25
அப்போது இங்கிலாந்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த தொழில் கட்சியின் போலித் தனத்தையும் அதன் முகமூடியை கிழித்தும் தொழிலாளர்களுக்கு காண்பித்தார்“26
தொழிலாளர் போராட்டமும் பெரியாரும்
ஈரோட்டில் நடந்த தொழிலாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு தீர்மானத்தை முன்மொழிந்ததோடு நில்லாமல் தன்னால் ஆன பண உதவிகளையும் ஆன உதவிகளையும் செய்வதாக தொழிலாளர்களுக்கு வாக்களித்தார்“27 தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேசனில் இருந்த சாதி பாகுபாடு கொண்ட பிராமணர்களுக்கு இருந்த தனி சாப்பாட்டு இடம் பிராமணர் அல்லாதாருக்கு தனி சாப்பாட்டு இடம் என்று இருந்த ஏற்பாட்டை எதிர்த்தார்“28 தங்களுக்குள்ளேயே ஒரு தலைவரை தேர்ந்தெடுத்த காரணத்திற்காக நாகை தொழிலாளர் சங்கமே உண்மையான சங்கம் என்று மனதாரப் பாராட்டினார்“29 நாகை தென்னிந்திய இரயில்வே தொழிலாளர்களுக்கும் இரயில்வே அதிகாரிகளுக்கும் நாகையில் பொன்மலைக்கு தொழிலாளர் குடிபுக வேண்டிய விஷயமாய் ஏற்பட்ட சிறு தகராறு சுமுகமாய் தீர்ந்து விட்டது அறிந்து பெரியார் மகிழ்ச்சி அடைந்தார்“30
கோயம்புத்தூரில் நூலாலை தொழிலாளர் வேலை நிறுத்தம் ஏற்பட்டதைப் பற்றி மிகவும் வருத்தம் அடைந்தார்“31
தென்னிந்திய ரயில்வே தொழிலாளர்கள் தங்கள் குறையை எடுத்துச் சொல்லவும், அதை நிவர்த்தி செய்ய தாங்கள் கொண்டுள்ள முறைக்கு ஆதரவு தேடியும் ஊர் ஊராய் செல்லும் போது, ஆங்காங்கு உள்ள பொது மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொண்டார்“32
வங்காளத்தைப் பின்பற்றி சென்னையிலும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டதை கடுமையாகக் கண்டித்தார்“33 ஜமின்தார் முறையை ஒழிக்க வேண்டும் என்று விழைந்தார்“34
இலேவாதேவிக்காரர்கள் அல்லாதார் மகாநாடு, முதலாளிகள் அல்லாதார் மாநாடு, தொழிற்சாலை சொந்தக்காரர்கள் அல்லாதார் மகாநாடு, வீடுகளின் சொந்தக்காரர்கள் அல்லாதார் மகாநாடு, மேல் சாதிக்காரர்கள் அல்லாத மகாநாடு, பணக்காரர்கள் அல்லாதார் மகாநாடு என்று பலவிதமான மாநாடுகளை நடத்திக் காட்டினார்.
இரங்கல் செய்திகள்
மகத்தான தொழிலாள தலைவர்கள் மறைந்த பொழுது அவர்களின் மறைவிற்கு இரங்கல் செய்திகள் வெளியிட்டார். சக்லத்வாலா அவர்கள் 26.01.1936 - அன்றும், பகவத்சிங் 29.03.1931 அன்றும், சிந்தனை சிற்பி 16.02.1948 அன்றும், டிராட்ஸ்கி 25.08.1940-ம் அன்றும் மறைந்த பொழுது இரங்கல் செய்திகளை வெளியிட்டு தான் கம்யூனிஸ்ட் கொள்கையின் மீது இருந்த ஈடுபாட்டை வெளிப்படுத்தி உள்ளார்.
மே தினம்
உலகெங்கும் கடந்த 50 வருடங்களாக மேதினத்தை ஒரு பெருநாளாகத் தொழிலாளர்கள் விவசாயிகள் முதலாளிகள் கவனித்து வருகின்றார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் எமாற்றப்பட்டவர்களுக்கும் இந்நாள் ஒன்றே சிறந்த தினமாகும். இந்நாளில் கோடான கோடி மக்கள் தாங்கள் படும் கஷ்டங்களையும் குறைகளையும் தெரிவிக்க வேண்டி ஆங்காங்கு கூட்டங்கள் போடுவதும், ஊர்வலம் வருவதும் உபன்யாசங்கள் செய்வதும் வழக்கமாயிருக்கிறது. England, France, Russia, Germany, Italy> U.S.A., India உள்ள பரிகாரம் தேடி35 போவதும் பற்பல தீர்மானங்கள் செய்வதும் வந்திருக்கின்றன.
ஒழுங்காயும், நியாய முறைப்படி கூட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்“36 என்று மேதினத்தைப் பற்றி கூறியுள்ளார்.
இந்து சூத்திரர்களே கம்யூனிச தொழிலாளர்கள்
இந்து மதத்தில் உள்ள சூத்திரர் பஞ்சமர் என்ற திராவிட மக்களுக்கு உழைப்பதையே கம்யூனிஸம் போற்றும். அவ்வாறு போற்றக்கூடிய தொழிலாளர்களின் நலத்திலும் அக்கறை செலுத்தினால் அதுவும் உழைப்பதற்கு ஒப்பாகும் என்று பெரியார் வாதிடுகிறார். சாதி இருக்கிறவரையில் எப்படிப்பட்ட பொதுவுடைமை திட்டம் ஏற்பட்டாலும் அந்தணர்களின் வாழ்வானது முன்புபோலவே நடக்கும் என்றும் கூறினார்.“37 இந்தியாவில் இந்து மதம் உள்ளவரையில் கம்யூனிஸம் வந்துவிடும் என்று யாரும் பயப்பட தேவையில்லை என்று கேலி செய்கிறார்“38 இந்தியாவை பொறுத்த வரையில், வர்க்கத்தைக் கூட வருணம் தான் நிர்ணயிக்கிற முக்கிய காரணியாக விளங்குகிறது என்றும் விளக்கினார்“39 சமதர்ம உணர்ச்சி ரஷ்ய நாட்டை விட இந்தியாவில் முதன் முதலில் ஏற்பட்டு இருக்க வேண்டும். கல்வி, அறிவு, உலகஞானம், சமதர்ம உணர்வு ஏற்படாமல் காட்டு மிராண்டிகளாய் இந்தியர்கள் இருக்கக் காரணம் இந்து மதமும், இந்து கடவுள்களும், இந்து கடவுள் சித்தாந்தமும், இந்து விதி கோட்பாடுகளும் என்று நம்பி, அதை மக்களும், தொழிலாளர்களும் உணர வேண்டும் என்று ஓயாமல் உரைத்துக் கொண்டே இருந்தார்“40
அதனால் மக்களிடமும், அதில் தொழிலாளர்களும் உணர வேண்டும் என்பதற்காகப் பின்வருமாறு கேள்விகள் கேட்டார்.
“தொழிலாளிகள் யார்? பிராமணர்களா? சத்திரியர்களா? அல்லவே! சூத்திரர்கள் தானே இது மாதிரியான தொழிலாளிகளாய் இருக்கிறார்கள். அந்த சூத்திரர்கள் யார்? திராவிடர்களாகிய நாம் தானே சூத்திரர் என்ற பட்டியலில் சட்டப்படியும், சாத்திரப்படியும் கடவுள் படைப்புப்படியும் தின நடவடிக்கை வாழ்க்கை முறையில் இருந்து வருகின்றோம். திராவிடன், தொழிலாளி, சூத்திரன் என்பவன் காங்கிரசில் கொடி தூக்கி பார்ப்பனர்களுக்கு வால்பிடித்து அனுமார் வாழ்வு வாழ்வதைப் பார்க்கிறோமே"41 என்றார்.
"ஒவ்வொரு இந்து கடவுளும் கற்சிலைகளாக இருந்தாலும், கோடிகணக்கில் வருவாய் ஈட்டும் முதலாளிகள் கல் முதலாளிகள் என்றார்"42
"இந்திய சமூகத்தில் சுகபோகிகள் எல்லாம் மேல் சாதிக்காரர்களாகவும், பாட்டாளிகள், உழைப்பாளிகள் எல்லாம் கீழ்ச்சாதிக்காரர்களாகவும் இருப்பதைக் கண்டு மனம் பதைத்தார்"43
அதனால் தான் பெரியார், "உயர்வு தாழ்வை ஒழிப்பதை முதல் அபேதவாதமாகக் கருதினார். பிறகு தான் பொருளாதார சமத்துவ அபேதவாதம் ஒழிக்க முயற்சிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்“44
இறுதியாகத் தனது சமதர்ம கொள்கையைப் பற்றி பின்வருமாறு கூறி முடிக்கிறார்.
இன்று சமதர்மவாதியாவதை தயவு செய்து கொஞ்ச நாளைக்காவது, பணக்காரனை வைவதை மறந்துவிட்டு ஜாதியை ஒழிக்கும் வேலையில் ஈடுபட்டு, சமுதாய சமதர்மத்தை உண்டாக்கவும், சமுதாய புரட்சிகளை உண்டாக்கவும் பாடுபடுவார்களாக எதிர்பாராதச் சம்பவங்களால் நிலைமை அனுகூலமாய் இருக்கும் சமயம், பொருளாதாரத்தைப் பற்றியும் யோசிப்போமாக“45 என்கிறார்.
பெரியார் கம்யூனிச கொள்கையில் முதலில் கவரப்பட்டதைக் கண்டோம். ஆனால், இறுதியில் தன் சுயமரியாதை இயக்கம் மேற்கொண்டுள்ள சமூகநீதி போராட்டத்திற்கு முதன்மை அளித்தார் என்பது தெரிகிறது.
இந்து மதத்தின் வருணாஷ்ரம தர்மப்படி சமுதாயத்தில் அமைந்துள்ள சூத்திர பஞ்சம எனும் நான்காம் ஐந்தாம் சாதியினரே இந்தியாவில் தொழிலாளர்களாக இருப்பதால் அவர்களுக்கு செய்யும் தொண்டே தொழிலாளர்களுக்குச் செய்யும் தொண்டு என்று கருதினார். சாதி அழிந்து சமதர்ம சமுதாயம் அமைக்கப்பட்டு விட்டால் இந்தியாவில் தொழிலாளர் என்பவரின் துன்பங்கள் தீரும் என்று அவர் வாதிட்டதையும் நம்பியதையும் காணமுடிகிறது.
பின்குறிப்புகள்
- கி. வீரமணி, தந்தை பெரியாரின் பொதுவுடமை சிந்தனைகள், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம், சென்னை - 600007, 2019, P-XXVIII.
- குடி அரசு - 21.03.1935
- கி. வீரமணி. அணிந்துரை பெரியாரும் பொதுவுடமை கொள்கையும், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிருவனம், சென்னை - 600007, 2019, P-IX
- குடி அரசு - 01.01.1933
- குடி அரசு - 06.07.1946
- குடி அரசு - 22.11.1936
- கி. வீரமணி. அணிந்துரை பெரியாரும் பொதுவுடமை கொள்கையும், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிருவனம், சென்னை - 600007, 2019, P-XXI
- கி. வீரமணி, தந்தை பெரியாரின் பொதுவுடமை சிந்தனைகள், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிருவனம், சென்னை - 600007, 2019, P-V
- புரட்சி - 29.04.1934
- குடி அரசு - 12.03.1933
- குடி அரசு - 12.11.1933
- குடி அரசு - 10.09.1933
- குடி அரசு - 10.06.1934
- குடி அரசு - 30.05.1926
- குடி அரசு - 28.06.1925
- புரட்சி - 01.04.1934
- குடி அரசு - 28.06.1925
- குடி அரசு - 30.05.1926
- குடி அரசு - 16.04.1933
- குடி அரசு - 24.04.1927
- குடி அரசு - 25.06.1930
- குடி அரசு - 11.12.1932
- குடி அரசு - 01.10.1933
- குடி அரசு - 30.05.1931
- குடி அரசு - 15.01.1928
- குடி அரசு - 18.12.1932
- குடி அரசு - 29.07.1925
- குடி அரசு - 05.06.1926
- குடி அரசு - 21.11.1926
- குடி அரசு - 21.11.1926
- குடி அரசு - 04.09.1927
- குடி அரசு - 15.07.1928
- குடி அரசு - 01.10.1949
- குடி அரசு - 27.08.1933
- குடி அரசு - 27.08.1933
- குடி அரசு - 14.05.1933
- கி. வீரமணி. அணிந்துரை பெரியாரும் பொதுவுடமை கொள்கையும், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிருவனம், சென்னை - 600007, 2019, P-V - XI
- மேலது, V - XIV
- மேலது, V - XIX
- குடி அரசு - 04.10.1931, 11.10.1931, 18.10.1931, 25.10.1931, 01.11.1931.
- குடி அரசு - 06.07.1946
- மேலது, V - VII
- குடி அரசு - 29.11.1936
- குடி அரசு - 01.08.1937
- குடி அரசு - 29.11.1936
- முனைவர் க.கிருஷ்ணமூர்த்தி