இந்தியாவில் ஒப்பீட்டளவில் தமிழ்நாடு தனித்துவமானது. இன்னும் வேகமான வளர்ச்சிகளை எட்டியிருக்க வேண்டும் என்பதும் உண்மைதான்; மறுப்பதற்கில்லை. பார்ப்பனரல்லாதார் இயக்கமான நீதிக்கட்சி ஆட்சி காலத்திலேயே வளர்ச்சிக்கான அடித்தளம் போடப்பட்டுவிட்டது.

சுதந்திரத்துக்குப் பிறகு இங்கே நடந்த காங்கிரஸ் ஆட்சியானாலும் தொடர்ந்து அதிகாரத்தில் மாறி மாறி வந்த தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஆட்சிகளானாலும் நிறைகுறைகள் இருந்தாலும் மதவெறியற்ற சமூக நீதிக் கொள்கை வழியிலேயே தமிழ்நாட்டைச் செப்பனிட்டு வந்திருக்கின்றன.

பெரியார் - அண்ணா அடையாளங்களாகிவிட்ட தமிழ்நாடு, ஆரிய - பார்ப்பனியத்துக்கு உறுத்துதலாகவே இருந்து வந்தது. இத்தனைக்கும் பார்ப்பனர்களுக்கு பாதுகாப்பான நாடாகவும் தமிழ்நாடு இருக்கிறது என்பது உண்மை. அவர்கள் சமூக பண்பாட்டு மேலாதிக்கத்தை மட்டும் கேள்விக்கு உட்படுத்தி வருகிறது.

பார்ப்பனியம் மதவாத அரசியலை முன் வைத்து ஒன்றிய அதிகாரத்தைப் பிடித்த பிறகு தமிழ்நாட்டைக் குறி வைக்கத் தொடங்கி விட்டது. ‘கழகங்கள் இல்லாத தமிழகம்’ என்ற முழக்கத்தோடு கால்பதிக்க முயன்ற பா.ஜ.க., கலைஞர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் முடிவெய்தியதற்குப் பிறகு தங்கள் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தின.

ஜெயலலிதா உருவாக்கிய அ.இ.அ.தி.மு.க.வை இரண்டாகப் பிளவுபடுத்தினார்கள். வலிமையில்லாத தலைமை, ஆட்சியதிகாரப் போட்டி மற்றும் ஊழல் முறைகேடுகளைப் பயன்படுத்தி அ.இ.அ.தி.மு.க.வை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது பா.ஜ.க. இதற்கு அரசு அதிகாரங்களை முறைகேடாகப் பயன்படுத்தி அச்சுறுத்தினார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் இந்த பார்ப்பனிய சூழ்ச்சிகளையும் அதற்குப் பணிந்து போன அ.இ.அ.தி.மு.க.வையும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதை வாக்குகள் வழியாக தமிழக மக்கள் பதிலடித் தந்தனர்.

இரண்டாவது முறையாக பெரும்பான்மை பலத்துடன் ஒன்றிய அதிகாரத்துக்கு வந்த பா.ஜ.க., தமிழ்நாட்டில் மாறி மாறி அதிகாரத்துக்கு வரும் திராவிடக் கட்சிகளை வீழ்த்துவதற்கு திட்டமிடத் தொடங்கியது.

அ.இ.அ.தி.மு.க.வை முதலில் பலவீனப் படுத்தி விழுங்கி விடலாம் என்று காய்களை நகர்த்தத் தொடங்கியது. எதிர்த்து நிற்க முடியாத நிலைக்கு அ.இ.அ.தி.மு.க. பலவீனமாகிப் போனது. தமிழ்நாட்டுக்கு தரப்பட வேண்டிய நிதியை வழங்க மறுத்த போதும் அதை ஜெயலலிதாவைப் போல் தட்டிக் கேட்கும் துணிவு இல்லாத கட்சியாக மாறிப் போனது.

அடையாளங்களுக்காக அவ்வப்போது மென்மையான எதிர்ப்புகள் மட்டுமே வந்தன. இப்போது தேர்தல் களம் தி.மு.க. - அ.இ.அ.தி.மு.க. என்ற திராவிடக் கட்சிகளின் இருமுனைப் போட்டிக் களமாக இருந்துவிடக் கூடாது என்பதே பா.ஜ.க.வின் திட்டமாக இருக்கிறது. இதற்காக பல கட்சிகள் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளன.

நடிகர் ரஜினி, நடிகர் கமல்காசன், மு.க. அழகிரி, சீமான் என்று பலரும் தனிக் கட்சிகளாக களமிறங்கி யுள்ளனர். தி.மு.க. வலிமையான அடித்தளத்தோடு மக்கள் ஆதரவோடு களத்தில் உள்ள நிலையில் அ.இ.அ.தி.மு.க. - பா.ஜ.க. எதிர்ப்பு ஓட்டுகள் தி.மு.க. அணியின் பக்கம் போய் சேர்ந்து விடக் கூடாது என்பதே பலமுனைப் போட்டிகளை உருவாக்கியிருப்பதன் பின்னணியில் உள்ள சதி.

வாக்குகள் பிளவுபட வேண்டும் என்பது முதல் நோக்கம்.  அ.இ.அ.தி.மு.க.வை களத்திலிருந்து படிப்படியாக பலவீனப்படுத்தி அந்த இடத்துக்கு பா.ஜ.க.வை முன்னோக்கி நகர்த்த வேண்டும் என்பது இரண்டாவது நோக்கம்.

பா.ஜ.க. - அ.இ.அ.தி.மு.க. எதிர்ப்போடு களமிறங்கும் கட்சிகளுக்கு கிடைக்கும் வாக்குகள் பா.ஜ.க.வை மறைமுகமாகக் காப்பாற்றுறவும் அதன் எதிர்ப்புகளை சிதறடிப்பதையும் நோக்கமாகக் கொண்டவையே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவிலேயே மதவாதத்துக்கு எதிராக சமூக நீதிக்காக மாநில உரிமைக்காக வலிமையாகப் போராடும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் ஒற்றை ஆட்சி நோக்கிய பா.ஜ.க. ஆட்சியின் திட்டத்துக்கு அது மிகப் பெரும் தடையாக நிற்கிறது.

தமிழ்நாட்டை உ.பி.யாகவோ, பீகாராகவோ, ராஜஸ்தானாகவோ மாற்றி விடும் சூழ்ச்சிக்கு தமிழர்கள் ஒரு போதும் பலியாகிவிடக் கூடாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எதிர்வரும் சட்டமன்றத்  தேர்தல் என்பது, தமிழ்நாட்டின் தனித்துவத்தைக் காப்பாற்றப் போகிறோமா? அல்லது வடநாட்டு பார்ப்பன மதவாத சக்திகளிடம் தமிழ்நாட்டை இழந்து விடப் போகிறோமா என்ற கேள்விக்கு விடை தேடும் தேர்தலாகவே இருக்கும் என்பதை கவலையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It