திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு 2021 2022 இடைக்கால வரவு செலவுக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்குத் தனியானதொரு கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான குழு பற்றிய அறிவிப்பை 2021 அக்டோபரில் வெளியிட்டது.

"தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோளுக்கு ஏற்ப, மாநிலத்திற்கென தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்குக் கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்" என முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்.

அறிவிப்புக்குப் பிறகு எட்டு மாதங்கள் கழித்து, தில்லி உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதிநாயகமான த. முருகேசன் அவர்கள் தலைமையில் குழு ஒன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டது. சென்னை சவிதா பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தரான ஜவகர் நேசன், இசைக்கலைஞர் டி எம் கிருஷ்ணா, சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், தேசியக் கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் மேனாள் கணினி அறிவியல் பேராசிரியர் ராமானுஜம், மாநிலத் திட்டக் குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இசுமாயில், பேராசிரியர் ராம. சீனிவாசன், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) அமைப்பின் மேனாள் சிறப்புக் கல்வி அலுவலர் அனிதா ரத்னம், கல்வியாளர்கள் துளசிதாஸ், மாடசாமி, நாகப்பட்டினம் குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இரா. பாலு, அகரம் அறக்கட்டளையைச் சார்ந்த ஜெய் ஸ்ரீ தாமோதரன் உள்ளிட்டவர்கள் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். ஓராண்டிற்குள் இக்குழு தமிழ்நாட்டுற்கெனப் புதிய கல்விக் கொள்கையை அறிவிக்கும் எனவும் செய்திகள் வெளியாயின.govt school 615நீதி நாயகம் முருகேசன் அவர்கள் தலைமையிலான கல்விக்குழு தமிழகத்தில் சில பகுதிகளில் கூட்டங்களை நடத்திப் பல்வேறு பரிந்துரைகளைப் பெற்றுக் கொண்டது.

ஒன்றிய அரசு செயல்படுத்தத் துடிக்கும் தேசியக் கல்விக் கொள்கை 2020 மிகவும் பிற்போக்காக உள்ளதால், மையப்படுத்தப்பட்ட அக்கொள்கைக்கு மாற்றாகத் தமிழ்நாட்டின் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் நிலவியது. அதை எதிரொலிக்கும் வகையில் எதிர்க்கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம், தேசியக் கல்விக் கொள்கை 2020 ஐக் கடுமையாக எதிர்த்து வந்தது. அதை முற்றிலும் ஏற்க முடியாது எனவும் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.

ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, அரசு மற்றும் அதிகாரிகள் தெரிவித்த சில கருத்துகள் குழப்பத்தை உண்டாக்கின. "தேசியக் கல்விக் கொள்கை 2020 - இல் இருக்கின்ற நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு நாங்கள் கண்டிப்பாகச் செயல்படுவோம்" எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் நீதிபதி முருகேசன் ஆகியோர் 2021 திசம்பரில் தெரிவித்தனர். அது மட்டுமல்லாமல், "இந்தியைத் தமிழகத்தில் படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. மூன்றாம் மொழியாக எதையும் படிக்கலாம்" எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்த கருத்து அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது.

இந்த நிலையில்தான் துணைக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்ட பேராசிரியர் ஜவகர் நேசன் அவர்கள் கல்விக் குழுவிலிருந்து விலகுவதாக வெளியிட்ட அறிக்கை, பெரும் புயலை உருவாக்கியுள்ளது.

"அறிவியல் ரீதியாக நிறுவப்பட்ட முறைகளையும், தரவுகளையும் பின்பற்றாமல், தனித்துவம் மிக்க கல்விக் கொள்கையை உருவாக்க முடியாது. மேலும் ஒவ்வொரு கொள்கையையும் அமல்படுத்துவதில் உள்ள பொருளாதார, சமூகச் சிக்கல்களை ஆய்வு செய்து நமக்கானதைத் தேர்வு செய்ய வேண்டும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு, கல்விக் கொள்கை வடிவமைப்புப் பணியில் ஈடுபட்டு வந்தோம். அதில் உலக அளவில் 113 வல்லுநர்கள் கொண்ட 13 துணை குழுக்கள் அமைத்தது, 22 கல்வி நிறுவனங்களில் மாதிரி ஆய்வுகள் முடித்தது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் அடங்கும். இறுதியாக எனது ஆய்வு முடிவுகள் மற்றும் 13 துணை குழுக்களின் பரிந்துரைகளைக் கொண்டு இடைக்கால அறிக்கையைத் தயாரித்துக் குழுவின் தலைமையிடம் சமர்ப்பித்தேன். இது நீண்ட காலம் வழிகாட்டக் கூடியது. எனினும் சனநாயகமற்ற முறையில் செயல்படும் தலைமை மற்றும் சில மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் அதிகாரத் தலையீடுகளால் இயங்க முடியாமல் குழு தடுமாறி வருகிறது" எனவும், அமைக்கப்பட்ட குழுவின் போக்கு, ஒன்றிய அரசின் தேசியக் கல்வித் திட்டம் 2020 ஐத் தழுவியே இருப்பதாகவும், தமிழ்நாட்டுக்கான தனித்துவமான கல்விக் கொள்கையை இக்குழு உருவாக்குவது ஐயமே எனவும் தற்பொழுது பேராசிரியர் ஜவகர் நேசன் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்.

தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றான கல்விக் கொள்கையை வலியுறுத்தியதால் அவர் மிகக் கடுமையான அழுத்தத்திற்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் சிலர் அவரை மிகவும் இழிவான முறையில் நடத்தியதாகவும், தனது அறிக்கையில் ஜவகர் நேசன் பதிவிட்டுள்ளார். மேலும் குழுத் தலைவர், குறுக்கீடு செய்யும் அதிகாரிகளைச் சங்கடப்படுத்த விரும்பவில்லை எனவும், அவர்களின் தலையீட்டைத் தொடர அனுமதித்தார் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்திற்கான புதிய கல்விக் கொள்கை உருவாக்கம் என்பது, வெறுமனே கல்வித் துறை மட்டுமே தொடர்பானது அல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அது மாநிலங்களின் அதிகார எல்லை மற்றும் இறையாண்மை குறித்ததுமாகும்.

இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு என்ற கூச்சல் அடிக்கடி எழுப்பப்பட்டாலும், அது அதிகாரங்கள் அனைத்தையும் மையப்படுத்தி வைத்திருக்கும் ஒற்றை ஆட்சி என்பதுதான் மெய் நடப்பாகும். எனவேதான் தமிழக ஆளுநர் ரவி, ஐஏஎஸ் / ஐபிஎஸ் அதிகாரிகள் கூட்டத்தைத் தனியே கூட்டி, அவர்கள் ஒன்றிய அரசுக்குத்தான் கட்டுப்பட்டவர்கள் எனவும், அதற்கு அவர்கள் விசுவாசமாக இருக்க வேண்டும் எனவும் அருள்வாக்கு வழங்குகிறார். ஆகவே அதிகாரத்தைச் செயல்படுத்தும் உயரதிகாரிகள், ஒன்றிய அரசின் மனங்கோணாமல் நடந்து கொள்ள வேண்டும் என்ற மனக்கட்டமைப்புக் கொண்டவர்களாக உள்ளனர். அதன் விளைவுதான் ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை மாநில அரசின் கல்விக் குழுவில் திணிக்கும் அணுகுமுறை மேலோங்குகிறது.

"இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன் போன்ற திட்டங்கள் மூலம் தேசியக் கல்விக் கொள்கையின். பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது" என அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் குறிப்பிட்டதை இத்தருணத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும்.

மேலும் ஒன்றிய அரசின் கல்விக்கான துணை அமைச்சர் தமிழ்நாட்டிற்கு வந்த பொழுது, "தேசிய கல்விக் கொள்கை 2020 - ஐ மறுப்பதாக இதுவரை எழுத்து மூலமாகத் தமிழக அரசு, ஒன்றிய அரசுக்குத் தெரிவிக்கவே இல்லை" எனக் குறிப்பிட்டார். ஒன்றிய அரசு அமைச்சரின் இக்கருத்துக்கு மாநில அரசு மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை என்பது கருதத்தக்கது.

தேசியக் கல்விக் கொள்கை 2020 ஐத் தமிழகம் ஏன் ஏற்க மறுக்கிறது என்பது முக்கியமான கேள்வியாகும். தேசியக் கல்விக் குழுவில் உள்ளவர்களின் பின்னணியை அறிந்து கொண்டாலே இக்கேள்விக்கான விடை துலங்கும்.

குழுவின் தலைவரான கஸ்தூரி ரங்கன், முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ் ஆதரவாளர். காவித் துண்டு அணிந்து கொண்டு கூட்டங்களில் பங்கேற்பவர்.

இக்குழுவின் மிக முக்கியமான உறுப்பினர் எம்.கே. சிறீதர். இவர் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் தேசியத் தலைவராக ( சர்சங்சலக் ) இருப்பவர். மேலும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யின் தேசியத் துணைத் தலைவராகவும் உள்ளார். வேத கணிதத்தையும், , சமஸ்கிருதத்தையும் என்றுமே உயர்த்திப் பிடிப்பவர். மற்றோர் உறுப்பினரான கிருஷ்ண மோகன் திரிபாதி, இலக்னோ ஆர்எஸ்எஸ் ஆய்வு மையத்தின் தலைவர் ஆவார். அடுத்து, இந்திரா காந்தி பழங்குடி பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரான டி.வி. கட்டிமணி, பல்கலைக் கழகத்திலேயே அதிரடியாக அனுமன் சிலையை நிறுவி, அதற்குப் பூசை செய்து கொண்டாடுபவர். மற்றொருவரான மஜார் ஆசிப் என்பவர் சவகர்லால் நேரு பல்கலைக் கழக நிர்வாகத்தின் கைப்பாவையாக இருந்து சனாதனக் கொள்கையைத் திணிப்பதில் முன்நிற்பவர். இப்படி முழுக்க முழுக்க இந்துத்துவ அடியாட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் தேசியக் கல்விக் கொள்கை 2020. எனவே இதை வேரோடும், வேரடி மண்ணோடும் தோண்டிப் புதைத்தால் ஒழிய, விடிவு கிடையாது.

கல்வி மூலமே சனாதனக் கொள்கையை எளிதில் பரப்ப முடியும் என்பதில் மூர்க்கமாக இருக்கிறது பாரதிய ஜனதா கட்சி அரசு. பிற்போக்கான வேதப் பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கும், சமூக நீதியைப் புறக்கணிக்கும், மும்மொழியைத் திணிக்கும், சமசுகிருதத்தைக் கொண்டாடும், குலக்கல்வியை நுழைக்கும் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்பது, கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை முற்றிலும் சீரழித்துவிடும்.

இந்தியா என்பது ஒரு நாடல்ல, அது ஒரு துணைக் கண்டம். எனவே இந்தத் துணைக் கண்டம் முழுவதற்கும் ஒரே கல்வி முறை என்பது சனநாயகத்திற்கு எதிரானது, மக்களுக்கு எதிரானது, தேசிய இனங்களுக்கு எதிரானது.

எனவே வணிகமயம், காவிமயம், ஒற்றைமயம் (Commercialization, Communalaization, Centralaization CCC) எனக் கல்விப் புலத்தையே நாசமாக்கும் தேசியக் கல்விக் கொள்கை 2020-க்கு மாற்றாக, தற்சார்பு மிக்க, இறையாண்மை மிக்க, தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்கத் தமிழக அரசு உறுதி பூணவேண்டும். அதுதான் உண்மையான "திராவிட மாடல்" ஆக இருக்கும்.

- கண. குறிஞ்சி