ரஜினி! ஏறக்குறைய கால் நூற்றாண்டுக் காலமாகத் தமிழ்நாட்டு அரசியலில் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும் பெயர்! அரசியல் பற்றி நான்கு வார்த்தைகள் இவர் கூடுதலாகப் பேசினாலும் பேசினார் மொத்தத் தமிழ்நாடும் திசைக்கு ஒரு விதமாய் எகிறிக் குதிக்கிறது! “அவர் வந்தால் வரவேற்போம்” என இப்பொழுதே துண்டு போடுகின்றன சில கட்சிகள். “வந்தால் எதிர்ப்போம்” என இதற்குள்ளாகவே முட்டி முறுக்குகின்றன வேறு சில கட்சிகள். “வந்தால் வெல்வாரா தோற்பாரா” என விவாத மேடையே நடத்தத் தொடங்கி விட்டன ஊடகங்கள். சமூக வலைத்தளங்களிலோ அவருக்காகக் காவடி தூக்குவது முதல் கழுவி ஊற்றுவது வரை எல்லாம் நடக்கின்றன.
எப்படியோ, இருபத்து நான்கு ஆண்டுகளாக வருவாரா, மாட்டாரா என்பது மட்டுமே சர்ச்சையாக இருந்தது மாறி, வந்தால் நல்லதா, கெட்டதா; தாக்குப் பிடிப்பாரா, இல்லையா என்கிற அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கிறது சிக்கல். அந்த வகையில் ரஜினிக்கும் ரஜினி விசிறிகளுக்கும் மட்டுமில்லாமல் ரஜினியை மையப்படுத்தித் தமிழ்நாட்டு அரசியலில் நிலவும் குழப்பத்துக்கும் இது நல்ல முன்னேற்றம்தான்.
ஆனால், ரஜினி அரசியலுக்கு வருவது நல்லதா கெட்டதா?
அவருக்கு அதற்கான தகுதி இருக்கிறதா, இல்லையா?
தமிழ்நாட்டு அரசியலில் ரஜினி போன்ற ஒருவரின் தேவை என்ன?
அக்கு வேறு ஆணி வேறாக அலசலாம் வாருங்கள்!
ரஜினியும் அரசியல் எதிர்ப்பும்...
நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களைச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்ததன் மூலம் நடிகர்களை நாடாள வைத்து அழகு பார்ப்பதில் உலகத்துக்கே முன்னோடியாகத் திகழ்வது தமிழ்நாடு! அப்படிப்பட்ட மண்ணில் உட்கார்ந்து கொண்டு நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனப் பேசுவது பொருளற்றது!
“நடிகர்கள் நாட்டை ஆண்டது போதும். இன்றைய நிலைமையில் நடிகர்கள் வந்து என்ன செய்து விடுவார்கள்? நடிகர்கள்தாம் (தமிழ்)நாட்டையே பாழாக்கி விட்டார்கள்” என ‘நடிகர்’ எனும் சொல்லையே வரிக்கு வரிச் சுட்டிக்காட்டி, ஏதோ நடிகராக இருப்பதாலேயே ரஜினி அரசியலுக்கு வரத் தகுதியற்றவர் என்பது போலப் பேசுகிறார் அன்புமணி இராமதாசு. நடிகராக இருப்பது மட்டுமே அரசியலுக்கு வரப் போதுமான தகுதி இல்லை என்பது சரி என்றால், நடிகராக இருப்பதே அதற்கான தகுதிக்குறைவாகவும் ஆகி விடாது, இல்லையா?
நடிகர்கள் நாடாண்டதால் சீரழிவுகள் ஏற்பட்டிருப்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது என்பதை நாம் மறுக்க முடியுமா? “மருத்துவக் கல்வித் தரத்தில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருப்பது நாங்கள்தாமே? எங்களுக்கு எதற்கு நுழைவுத்தேர்வு?” என இன்று நாம் குரல் உயர்த்திக் கேட்கிறோம் என்றால் அதற்குக் காரணமும் இத்தனை ஆண்டுக் காலம் தமிழ்நாட்டை ஆண்ட இதே நடிகர்கள்தாம்! தேசியக் கட்சிகள் தலைமுறை தலைமுறையாக ஆளும் மற்ற மாநிலங்களை விடக் கல்வி, மருத்துவம், தொழில்நுட்பம், சாதி, சமயம் போன்ற சமூக மதிப்பீடுகள், தனிமனித முன்னேற்றம் எனப் பலவற்றிலும் தமிழ்நாடு பல மடங்கு முன்னேறித்தான் இருக்கிறது. இவையெல்லாம் இதே நடிகர்கள் ஆண்ட காலத்தில் ஏற்பட்ட வளர்ச்சிகள்தாம்.
அதே நேரம், ஊழல், கையூட்டு, இனத்தையே விட்டுக்/காட்டிக் கொடுத்தல் போன்றவற்றிலும் தமிழ்நாடு முன்னேறித்தான் இருக்கிறது, மறுக்கவில்லை. ஆனால் அதற்குக் காரணம், நாட்டை ஆண்டவர்கள் நடிகர்கள் என்பதாலா அல்லது தனிப்பட்ட அவர்களின் தன்னலப் போக்கினாலா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!
எனவே, நடிகராக இருப்பதாலேயே ஒருவர் அரசியலுக்கு வரக்கூடாது என்பது ஒரு சிறிதும் ஏற்க முடியாதது!
“ரஜினிகாந்த் தமிழர் இல்லை. அதனால் அவர் முதல்வராக வரக்கூடாது” என்பது அவருக்கு எதிராக முன்னிறுத்தப்படும் இன்னொரு முதன்மையான காரணம். சீமானை மட்டும் சொல்லவில்லை; ரஜினிக்கு எதிராகப் பல காலமாய்ப் பலரும் முன்வைக்கும் காரணம்தான் இது. ஆனால், இது சரியா?
ஒருவர், ஒரு துறைக்கு வரலாமா கூடாதா என்பதை அவருடைய துறை சார்ந்த தகுதிகளையும் தகுதியின்மைகளையும் வைத்துத்தான் முடிவு கட்ட வேண்டுமே தவிர, இப்படிப் பிறப்புச் சார்ந்த காரணங்களையெல்லாம் முன்வைப்பது மிக மிக மிகத் தவறானது!
அப்படிப் பார்த்தால், விடுதலைப்புலிகளைக் காட்டிக் கொடுத்தே ஈனப் பிழைப்பு நடத்தி வரும் டக்ளஸ் தேவானந்தா, சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்த கருணா, நடந்த இனப்படுகொலைக்கு அன்றைய நிதியமைச்சர் என்ற முறையில் இரண்டாயிரம் கோடிக்குக் காசோலை தீட்டிக் கொடுத்த சிதம்பரம், இவர்கள் எல்லாரும் பிறப்பால் தமிழர்கள்தாம். அதற்காக, இவர்களைத் தமிழர்கள் என ஏற்றுக் கொள்ள முடியுமா? எனவே, ஒருவர் தமிழரா இல்லையா என்பதை அவர் வாழ்க்கை முறையை வைத்துத்தான் சொல்ல வேண்டுமே ஒழிய பிறப்பை வைத்து இல்லை.
அவ்வகையில் பார்த்தோமானால், கருநாடகத்திலேயே பிறந்து வளர்ந்து, இளைஞர் பருவம் வரை கன்னடத்தையே தாய்மொழியாகக் கொண்டு வாழ்ந்த ரஜினிகாந்த் அவர்கள், தமிழ்நாட்டில் நிலைபெற்ற பின் வீட்டிலேயே கூடத் தமிழில்தான் பேசுகிறார்; தமிழ்நாட்டில்தான் தன் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பவை நாம் நினைத்துப் பார்க்க வேண்டியவை. எத்தனையோ கோடித் தமிழர்கள் இன்னும் திருக்குறளைக் கூட முழுமையாகப் படிக்க ஆர்வமில்லாமல் இருக்க, தமிழரின் மொழி, பண்பாடு, வரலாறு, நாகரிகம் என அனைத்துக்கும் கருவூலமாகத் திகழும் தொல்காப்பியத்தின் உரை வடிவமான ‘தொல்காப்பியப் பூங்கா’வைப் படித்தவர் ரஜினிகாந்த். அதுவும் தொல்காப்பியப் பூங்கா நூலுக்குப் பக்கக்காட்டியாக (Bookmark) மயில்பீலியைப் பயன்படுத்தும் அளவுக்குத் தமிழ் ரசனையுள்ளவர் என்றால் இதற்கு மேல் தமிழர் எனச் சொல்லிக் கொள்ள வேறென்ன தகுதி வேண்டும்?
எனவே, பிறப்பால் கன்னடர் என்பதால் மட்டும் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்பதையும் அவ்வளவாக ஏற்க முடியாது.
ரஜினி பா.ஜ.க-வின் சார்பாகத்தான் அரசியலில் நுழைகிறார் என்பது அடுத்த குற்றச்சாட்டு. திகைக்க வைக்கும் குற்றச்சாட்டுதான் என்றாலும் இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. புலனாய்வு இதழியல் எனும் பெயரில் இப்படிப்பட்ட தகவல்களைத் தரும் அதே ஊடகங்கள்தாம், தங்கள் கட்சியில் சேருமாறு பா.ஜ.க., தரும் தொல்லை தாங்காமல் ரஜினி தனிக் கட்சி தொடங்குகிறார் என்றும் எழுதுகின்றன. முழுக்க முழுக்கத் திரைமறைவில் நடக்கும் அரசியல் நாடகம் இது. இதில் ரஜினி வில்லனா கதாநாயகனா என்பது போகப் போகத்தான் தெரிய முடியுமே தவிர இப்பொழுதே இது பற்றி நாம் எந்த முடிவுக்கும் வர முடியாது.
அடுத்ததாக, “ரஜினி வேண்டுமானால் அரசியலுக்கு வந்து தலைவராகச் சேவை செய்யட்டும்; ஆனால், முதல்வராக ஆள அவர் விரும்பக்கூடாது” என்கிறார் சீமான். சேவை அரசியலுக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கையே புரிந்து கொள்ளாத பேச்சு இது. தேர்தல் அரசியலை விடச் சேவை அரசியலுக்குத்தான் செல்வாக்கு நிறைய.
இந்தியாவில் காந்தியடிகளை விட மக்களின் நன்மதிப்பைப் பெற்ற அரசியலாளர் வேறு யாரும் கிடையாது. தமிழ்நாட்டில் பெரியாரை விடப் பெரிய அரசியல் ஆளுமை வேறொருவரும் கிடையாது. இவர்கள் இருவருமே தேர்தல் அரசியலில் ஈடுபடாதவர்கள்தாம்.
வெறும் மக்கள் தொண்டு செய்யும் வாய்ப்பு மட்டுமே போதும் என ஒருவர் அரசியலுக்குள் வந்தால், அப்பொழுதே மக்கள் அவர் மீது எல்லையற்ற அன்பும் நன்மதிப்பும் கொண்டு விடுகிறார்கள். பணம், பதவி, ஆட்சி, அதிகாரம் என அத்தனையையும் வாரி வழங்கும் தேர்தல் அரசியலை விட்டுவிட்டு மக்கள் தொண்டுக்காக மட்டும் ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அவர் எப்பேர்ப்பட்ட நல்லவராக இருப்பார் என அப்பொழுதே மக்கள் அவரை நம்பத் தொடங்கி விடுகிறார்கள்.
கோடிக்கணக்கில் தொண்டர்களைக் கொண்ட பெரிய கட்சிகள் கூடச் சாராயமும் சாப்பாட்டுப் பொட்டலமும் கொடுத்து மாநாட்டுக்கு ஆள் சேர்க்கும் இந்நாட்டிலே இனப்படுகொலை நினைவேந்தல், ஏறு தழுவல் என மே பதினேழு போன்ற அரசியல் இயக்கங்கள் வெறுமே சமூக ஊடகங்களில் நிலைத்தகவல் இட்டாலே கூட்டம் கூட்டமாக மக்கள் தமிழர் கடலில் அலைமோதுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் என்ன? தேர்தல் அரசியல் சாராத சேவை அரசியல் இயக்கங்கள் மீது மக்கள் கொண்டிருக்கும் அந்த நம்பிக்கைதான்.
இந்தளவுக்குக் கண்மூடித்தனமான நம்பிக்கை ரஜினி மீது ஏற்படுவதைத்தான் விரும்புகிறாரா சீமான் அவர்கள்?
ஒருவர் பொதுவெளியில் எவ்வளவுதான் பெரும்புள்ளியாக இருந்தாலும் அரசியல் என வரும்பொழுது தேர்தல் அரசியலை அவர் தேர்ந்தெடுத்தால் அவருடைய செல்வாக்கு ஒரே தேர்தலில் தெளிவாகி விடும். மாறாக, அவர் சேவை அரசியலைத் தேர்ந்தெடுத்தால் பொதுவாக அவருக்கு இருக்கிற செல்வாக்கே அவருடைய அரசியல் செல்வாக்காகப் பார்க்கப்படும். கண்டிப்பாக அவர் கைகாட்டுபவர்தான் தேர்தலில் வெல்வார் என்கிற மாயத் தோற்றம் ஊடகங்களாலும் மற்றவர்களாலும் வெகு எளிதாகக் கட்டமைக்கப்படும். அதுவும் ரஜினி போல ஒருவர் சேவை அரசியலுக்கு வந்தால் இது இன்னும் பன்மடங்காகும்.
அரசியல் கொள்கைகள், தமிழர் பிரச்சினைகள், சமூகச் சிக்கல்கள் பற்றியெல்லாம் தெளிவாக எந்த நிலைப்பாட்டையும் இன்னும் அறிவிக்காத ரஜினி போன்ற ஒருவர், சேவை அரசியலில் நுழைவது மூலம் எடுத்த எடுப்பிலேயே இப்பேர்ப்பட்ட வானளாவிய செல்வாக்கைப் பெறுவது எந்த விதத்திலும் நல்லதில்லை. அரசியலுக்கோ சமூகத்துக்கோ மட்டுமில்லை, சீமானுக்கும் ரஜினிக்குமே கூட அது நல்லது கிடையாது.
எனவே, ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்பதற்குச் சொல்லப்படும் காரணங்களுள் எதுவுமே அவ்வளவு சரியானதாகத் தென்படவில்லை. மாறாக, அரசியலில் நுழைவதற்கென அடிப்படையான தகுதி ஒன்று உண்டு. அரசியல் மட்டுமில்லாமல், எந்த ஒரு துறையில் காலெடுத்து வைக்கவும் இன்றியமையாத தகுதி என இன்னொன்று உண்டு. இவை இரண்டும் இருந்தால் ரஜினி மட்டுமில்லை, யார் வேண்டுமானாலும் தாராளமாக அரசியலுக்குள் வரலாம். அவை என்னவென்றால்...
ரஜினியும் அவருடைய அரசியல் தகுதிகளும் (1):
ஒருவர் அரசியலுக்கு வருவதன் மூலம் சமூகத்தில் ஓரளவாவது நல்ல மாற்றம் ஏற்பட வேண்டுமானால், அவர் சமூகத்தின் மீதும் மக்கள் மீதும் கொஞ்சமாவது அக்கறையுள்ளவராக இருக்க வேண்டும். இதுதான் அரசியலுக்கு வருவதற்கான அடிப்படைத் தகுதி.
ஆனால், ரஜினிக்குத் தமிழ் மக்கள் மீது அப்படியெல்லாம் பெரிதாக அக்கறை ஏதும் இருப்பதாக எந்நாளும் தெரிந்ததில்லை. அப்படி இருந்திருந்தால் தமிழ் இனமே அழித்து ஒழிக்கப்பட்ட அந்நாட்களில் அவர் தானாக முன்வந்து குரல் எழுப்பியிருக்க வேண்டும்! தெருவுக்கு வந்து போராடியிருக்க வேண்டும்! தன் நண்பரான கருணாநிதியோடு அது குறித்துச் சண்டை இட்டிருக்க வேண்டும்! அப்படியெல்லாம் அவர் எதுவுமே செய்ததாகத் தெரியவில்லை.
ஈழப் பிரச்சினை மட்டுமில்லை, தமிழ் மீனவர் படுகொலை, அணு உலைப் பிரச்சினை போன்றவை முதற்கொண்டு அண்மைய பிரச்சினைகளான சல்லிக்கட்டு, மருத்துவப் பொது நுழைவுத் தேர்வுத் திணிப்பு, இந்தித் திணிப்பு என எதிலுமே அவர் ஒருபொழுதும் தானாக முன்வந்து போராடியதோ கருத்துரைத்ததோ கிடையாது.
தமிழினத்தின் தலை போகிற பிரச்சினைகளுக்குக் கூட இதுவரை ஒருமுறையும் குரல் கொடுக்காத இப்படிப்பட்டவருக்கு இந்த மண்ணின் மீதோ மக்கள் மீதோ என்ன பெரிய அக்கறை இருந்து விட முடியும்? அப்படி அக்கறை இல்லாத ஒருவர் அரசியலுக்கு வருவதால் என்ன பெரிய நன்மை நிகழ்ந்து விட முடியும்? இவை நாம் கட்டாயம் சிந்திக்க வேண்டிய கேள்விகள்!
ரஜினியும் அவருடைய அரசியல் தகுதிகளும் (2):
ஒருவர் ஒரு துறையில் நுழைந்து வெல்ல வேண்டுமானால், அந்தத் துறை சார்ந்த அறிவு, நுட்பம், பக்குவம், துணிச்சல், செயல்திறம் என எத்தனையோ தகுதிகள் தேவை. ஆனால், இவை எல்லாவற்றையும் விட முதன்மையான அடிப்படைத் தேவை அந்தத் துறையில் ஈடுபட வேண்டும் எனும் ஆர்வம். அரசியலுக்கு மட்டுமில்லை எல்லாத் துறைகளுக்குமே இது பொருந்தும். அப்படி, அரசியலில் ஈடுபட வேண்டும் எனும் ஆர்வம் முதலில் ரஜினிக்கு இருக்கிறதா என்பதே இங்கு கால் நூற்றாண்டுக் காலக் கேள்விக்குறியாக இருக்கிறது!
“அரசியலுக்கு வருவீர்களா?” என யார், எப்பொழுது, எப்படிக் கேட்டாலும் ரஜினி தரும் ஒரே விடை, “ஆண்டவன் ஆணையிட்டால் வருவேன்” என்பதுதான். தெரியாமல்தான் கேட்கிறேன், இப்படி ஆண்டவன் ஆணையிடுவது வரை காத்திருப்பது தவிர வேறு எதுவுமே செய்யாமலேதான் திரைத்துறையில் இந்தளவுக்கு ஆளானாரா ரஜினி அவர்கள்?
எத்தனையோ திரைப்பட நிறுவனங்களில் ஏறி இறங்கி, எவ்வளவோ தோல்விகளையும் வெறுப்புகளையும் சந்தித்து, அப்படியும் விடாமல் வாய்ப்புத் தேடி அலைந்து, படாதபாடுகளெல்லாம் பட்டு இப்பேர்ப்பட்ட உச்சத்தை எட்டியவர் ரஜினி அவர்கள். ஆனால், திரையுலகுக்கு வருவதற்கு மட்டும் இந்த அளவுக்குப் போராட ஆயத்தமாக இருந்தவர், கோடிக்கணக்கான மக்களை வழிநடத்துகிற மாபெரும் பொறுப்பான அரசியலுக்கு வருவதற்கு மட்டும் “கடவுளாகப் பார்த்துக் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளலாம்” என விட்டேற்றியாக இருக்கிறார். எனில், அரசியல் மீது ரஜினிக்கு இருப்பது உண்மையிலேயே ஆர்வமா அல்லது வெறும் ஆர்வக்கோளாறா எனும் கேள்வி எழுகிறது.
அடிப்படை ஆர்வம் கூட இல்லாமல் அரசியலுக்கு வந்து ரஜினி என்ன செய்வார்? என்ன பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்து விடுவார்? இவை தவிர்க்க முடியாத கேள்விகள்!
ஆனால், ரஜினி என்கிற ஒருவரின் தகுதி – தகுதிக்குறைவு குறித்த இத்தனை கேள்விகளையும் தாண்டி எழும் இன்னொரு கேள்வி – ‘ரஜினி போன்ற ஒரு மனிதருக்குத் தமிழ்நாட்டு அரசியலில் இருக்கும் தேவை என்ன?’ என்பது. மிகவும் இன்றியமையாத அந்தக் கேள்விக்கு விடை காணலாம் வாருங்கள்!
ரஜினியும் தமிழ்நாட்டு அரசியலும்
பொதுவாக, உலகில் தேர்தல் என வந்தாலே மக்கள் இரண்டு காரணங்களின் அடிப்படையில்தாம் வாக்களிக்க முடியும். ஒன்று, தாங்கள் நம்புகிற ஆளுமையின் கட்சிக்கு அல்லது தாங்கள் சார்ந்த கொள்கையின் அடிப்படையிலான கட்சிக்கு. தமிழ்நாட்டு அரசியல் எப்பொழுதுமே நமக்கு இந்த இரு பெரும் தேர்வுகளையுமே வழங்கி வந்திருக்கிறது.
ஒருபுறம் தமிழர் நலன் எனும் கொள்கை சார்ந்த அரசியலை முன்னிறுத்தி வாக்குக் கேட்கிற தி.மு.க., மறுபுறம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எனத் தனி மனித ஆளுமைகளை முன்னிறுத்தி வாக்குக் கேட்கிற அ.தி.மு.க., என இங்கு எப்பொழுதுமே இரண்டு தேர்வுகளும் உண்டு. மற்ற இடங்களில் காணப்படுவது போல் வெறும் தனிமனிதர்களின் ஆளுமைக்கு இடையிலான மோதலாகவோ, வேறுபட்ட கொள்கைகளுக்கு இடையிலான போட்டியாக மட்டுமோ தமிழ்நாட்டு அரசியல் இருந்ததில்லை.
இதனால் ஏற்பட்ட நன்மை என்னவெனில், தமிழ்நாட்டின் அரசியல் களம் மொத்தமாகவே கொள்கை அரசியலுக்கும் ஆளுமை அரசியலுக்கும் இடையிலான இரு முனைப் போட்டியாக மாறிப் போனதுதான். இது தவறான அரசியல் என்று இத்தனை காலமாக நாம் நினைத்திருந்தோம். உண்மையில், திராவிடம் எனும் தமிழர்களுக்கான அரசியல் கொள்கையைச் சார்ந்த தி.மு.க-வுக்கு எதிராக அதே கொள்கை சார்ந்த அ.தி.மு.க-வின் ஆளுமை அரசியல் இங்கு வலுவாக இருந்ததால்தான் மற்ற கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளோ கருத்தியல்களோ இங்கு காலூன்ற இயலாமல் இருந்தது. கொள்கை அரசியலைப் போலவே ஆளுமை அரசியலும் எந்த அளவுக்கு ஒரு சமூகத்துக்கு இன்றியமையாதது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டிய புள்ளி இதுதான்.
ஆனால், தற்பொழுது தமிழகத்தின் இந்தத் தற்சார்பு அரசியலுக்கு ஆபத்து வந்திருக்கிறது. கொள்கை அரசியலையே தன் முகமாகக் கொண்டிருந்த தி.மு.க., இன்று அதே முகத்தில் ஈழத் தமிழர்களின் குருதிக் கறை, ஊழல் கறை போன்றவற்றைப் பூசிக் கொண்டு நிற்கிறது. மறுபக்கம் தன் அரசியல் ஆளுமைகள் இருவரையுமே இழந்து நிற்கிறது அ.தி.மு.க. தமிழ்நாட்டின் கொள்கை அரசியல் – ஆளுமை அரசியல் இரண்டுமே வீழ்ந்து கிடக்கும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி எப்படியாவது இங்கே கூடாரம் போடத் துடிக்கின்றன தேசியக் கட்சிகள்.
அது நடக்காமல் தடுக்க வேண்டுமானால், கொள்கை அரசியலில் தி.மு.க-வுக்கு மாற்றாகவும், ஆளுமை அரசியலில் அ.தி.மு.க-வுக்கு மாற்றாகவும் வேறு தேர்வுகள் தமிழ் மண்ணிலிருந்தே புத்தெழுச்சி பெற்றாக வேண்டும். தமிழ் தேசியம் எனும் புதிய கொள்கையோடு புறப்பட்டிருக்கும் நாம் தமிழர் போன்ற கட்சிகள் அந்த வகையில் நன்றாகவே செயல்படுகின்றன. தி.மு.க., என்கிற ஒரு கட்சிக்கு மாற்றாக மட்டுமின்றி திராவிடம் எனும் பழங்கொள்கைக்கே மாற்றாகத் தங்களை அவை முன்னிறுத்துகின்றன. ஆக, கொள்கை அரசியலுக்கான மாற்றுத் தேர்வுகள் இம்மண்ணிலேயே உருவாகி வருகின்றன.
ஆனால், எதிர்ப் பக்கம் இன்னும் காலியாகவே இருக்கிறது. அ.தி.மு.க-வின் இடத்தை நிரப்பவும் இங்கு ஆள் தேவை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரைப் போல் தங்கள் தனிப்பட்ட ஆளுமையை முன்னிறுத்தும் வலிமையான தமிழ் அரசியலாளர்கள் தேவை. இல்லாவிட்டால், அந்த இடத்தை நிரப்ப தேசியக் கட்சிகள் உள்ளே வரும்.
தமிழ்நாட்டு அரசியலில் ரஜினி போன்றவர்களின் தேவை இதனால்தான் ஏற்படுகிறது. நிற்க! ரஜினிதான் எனச் சொல்லவில்லை; ரஜினி போன்றவர்கள் எனச் சொல்கிறேன். தமிழ்நாட்டில் வெற்றிடமாக இருக்கும் ஆளுமை அரசியல் இடத்தை நிரப்ப ரஜினியோ கமலோ, நடிகரோ கவிஞரோ, எழுத்தாளரோ அறிவியலாளரோ யாராவது ஒருவர் வர வேண்டும். அப்படி வருபவர் உண்மையாகவே தமிழ் சமூகத்தின் மீது அக்கறை உள்ளவராக இருத்தல் வேண்டும்.
அப்பொழுதுதான் தமிழ்நாட்டு அரசியல், தொடர்ந்து கொள்கை அரசியலுக்கும் – ஆளுமை அரசியலுக்கும் இடையிலான போட்டியாக மட்டுமே நீடித்து இருக்கும். அதுதான், தமிழர்களுக்கு எதிரான கொள்கைகள் இம்மண்ணில் வேரூன்றாமல் தடுக்கத் துணை புரியும். அதுதான் தமிழ்நாட்டு அரசியல் களத்தின் நிறம் மாறாமல் – குறிப்பாகக் காவி நிறத்துக்கு மாறாமல் – தடுக்க ஏதுவாகும்.
- இ.பு.ஞானப்பிரகாசன்