வருகின்ற ஜனவரி2021 முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின்  அனைத்து அகில இந்திய வானொலி நிலையங்களிலிருந்தும் (சென்னை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, புதுச்சேரி, நாகர்கோவில், காரைக்கால்) நேரடி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப் படுவது நிறுத்தப்பட்டு சென்னை நிலையத்தை மையமாக வைத்து ‘ஆகாசவாணி தமிழ்நாடு’ என்ற பெயரில் மட்டுமே நிகழ்ச்சிகள் அஞ்சல் செய்யப்படவுள்ளன. ஏனைய நிலையங்கள் மையத்தொகுப்பிற்கு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்க மட்டுமே முடியும்.

இதோ போல் பண்பலை அலைவரிசைகளும் ‘ஆகாசவாணி தமிழ்’ என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டு அஞ்சல் நிகழ்ச்சிகள்தான் ஒலிபரப்பப்படவிருக்கின்றன.

பொதுச் சேவை துறைகளை ஒழித்துக் கட்டுவதின் நீட்சியான இந்த நடவடிக்கையை  வட்டார வழக்கு, பண்பாடுகளை மொத்த மாநிலமும் அறிவதற்கான ஏற்பாடு  என நடுவணரசு மழுப்புகின்றது.

இந்த புதிய ஏற்பாடு  மாவட்ட வட்டாரங்களின் மொழி, பண்பாட்டு, வாழ்வியல் தனித் தன்மைகளை  அழித்து உருக்கி  ‘ஒரே நாடு ஒரே வானொலி’ என்ற ஒற்றையாக்கத்தில் போய் முடியும். அத்துடன் நிறைய அறிவிப்பாளர்களும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும் வேலையிழப்பை எதிர்கொள்ளும் மன உளைச்சலில் உள்ளனர்.

வட்டார நிலையங்கள் முற்றிலும் ஒழிக்கப் பட்டு சமூக ஊடகங்கள் / இணைய வழி ஒலி பரப்பை முன்னெடுக்கவும் பொது ஒலிபரப்புத் துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கான முன்னெடுப்புதான்  இது.

இணைய வழி சேவைகளை முடக்கிப் போடும் பேரிடர் காலங்களில் தரைவழி வானொலி ஒலிபரப்பு மட்டுமே இயங்க முடியும் என்பது காலத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

-----------------------

ஆல் இந்தியா ரேடியோ , அகில இந்திய வானொலி என்றே தமிழ் நாட்டில் அறியப்பட்டு வந்த பொது சேவை ஒலிபரப்பின் பெயரை ஆகாசவாணி என்ற வடமொழியாக்கும் முயற்சியையும் ஏற்க இயலாது.

இந்திரா காந்தியின் காலத்தில் ஆகாசவணி என தமிழக நிலையங்கள் அறிவிக்கத் தொடங்கியபோது மக்களிடையே எதிர்ப்பு ஏற்பட்டு அது கைவிடப் பட்டது.

அதே போல தில்லியிலிருந்து ஒலிபரப்பாகும் ஹிந்தி செய்திகள் தமிழ் நாட்டிற்கு தேவையில்லை என கலைஞர் கடிதம் எழுதியதால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது.

- விடுதலை இராசேந்திரன்

 

Pin It