தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 3 பார்ப்பனர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

மயிலாப்பூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி நடராஜனும், காரைக்குடி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் எச். ராஜாவும், கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி  மய்யம் சார்பில் கமலகாசனும் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினர்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தன்னை ‘பாப்பாத்தி’ என்று சட்ட மன்றத்தில் அறிவித்தார். முழு அதிகாரமும் ஜெயலலிதா ஒருவரிடம் மட்டுமே இருந்தது.

கடந்த சட்டமன்றத்தில் நடராஜன், மயிலாப்பூர் தொகுதியிலிருந்து தேர்ந் தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

தி.மு.க. வேட்பாளர்களில் 73 சதவீதம் பேர் வெற்றி

தி.மு.க. 173 தொகுதிகளில் போட்டியிட்டு 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 73 சதவீத வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

ம.தி.மு.க., மனித நேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர். மொத்தம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள்

தி.மு.க.வின் கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களிலும், சி.பி.அய். 6 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களிலும், சி.பி.அய்.எம். 6 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களிலும் (இதில் 2 பொதுத் தொகுதிகளும் அடங்கும்), ம.தி.மு.க. 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களிலும், கொ.ம.தே.க. 3 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்திலும், மனித நேய மக்கள் கட்சி 2 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

அ.தி.மு.க. அணி

அ.தி.மு.க. அணி 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் 179 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க. 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 37 சதவீதம் வெற்றி.

கூட்டணியில் இடம் பெற்ற பா.ம.க. 5 இடங்களிலும் (போட்டியிட்டது 23), பா.ஜ.க. 4 இடங்களிலும் (போட்டியிட்டது 20) வெற்றி பெற்றுள்ளது. புரட்சி பாரதம் ஒரு இடத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் 7  இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியைத் தழுவியது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பசும்பொன் தேசிய கழகம் தலா ஒரு இடத்திலும், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஒரு இடத்திலும், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஒரு இடத்திலும் போட்டியிட்டு தோல்விகளைத் தழுவின.

கோயில் நகரங்களைக் கைப்பற்றிய தி.மு.க.

திருத்தணி, திருவொற்றியூர், மயிலாப்பூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, நாமக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், பழனி, கும்பகோணம், மதுரை, சங்கரன்கோவில், திருச்செந்தூர் ஆகிய நகரங்கள் பக்தர்களால் ஆன்மிக நகரங்களாகக் கருதப்படுபவை.  இந்த தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்று அதனை தங்கள் வசப்படுத்தி உள்ளனர்.

தேர்தல் நேரங்களில் மதத்தை அடிப்படையாக கொண்டு முன்வைக்கப்பட்ட பிரச்சாரங்கள் பொது மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதை இந்த தேர்தல் முடிவு உணர்த்துகிறது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It