மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் வாலாசா வல்லவன் கழக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதால் பெரியார் திடல் நூலகத்தில் நுழைய தடை செய்யப்பட்டுள்ளார். இது பற்றி அவர் எழுதியுள்ள கடிதம்:

கடந்த 25 ஆண்டுகளாக எந்தவித ஊதியமும் இன்றி பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவதே என் முழு நேர லட்சியமாகக் கொண்டு செயல்பட்டு வருபவன் நான். திராவிடர் இயக்கம் தொடர்பான ஆய்வு நூல்களையும், கவிஞர் கருணானந்தம் எழுதிய பெரியார் வாழ்க்கை வரலாற்றையும் என் சொந்தப் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டு வருகிறேன். 27.9.08 அன்று பெரியார் திடல் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது ஒருவர் வந்து கவிஞர் கலி. பூங்குன்றன் உங்களை அழைக்கிறார் என்றார். நான் சென்று அவர் அறையில் சந்தித்தேன். நீங்கள் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசியதையெல்லாம் சி.டி.யில் போட்டுக் கேட்டோம். மற்றவர்கள் பேசியது ஒரு மாதிரியாக இருந்தது. உங்கள் பேச்சு வேறுவிதமாக இருந்தது.

அது இருக்கட்டும், நீங்கள் "கோவில் நுழைவு போராட்டங்களில் திராவிட இயக்கங்களின் பங்களிப்பு" என்ற நூலை எழுதியுள்ளீர்கள். அதில் இந்த நூல் நிலையத்திற்கு ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை. அப்படிப்பட்ட உங்களை எப்படி நூலகத்தில் அனுமதிக்க முடியும், இனி நீங்கள் இங்கு படிக்க வரக்கூடாது என்றார். அதற்கு நான் இப்போது பெரியாரின் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்று தான் போராடினோம். இனிமேல் பெரியார் திடல் நூலகத்தையும் நாட்டுடைமையாக்க போராட வேண்டி வரும் என்று கூறி வந்து விட்டேன்.

கி.வீரமணி அவர்கள் பேசும் பொழுது அடிக்கடி பயன்படுத்துகிற வார்த்தை அறிவு நாணயமற்றவர்கள் என்பதுதான். முதலில் அவர் அறிவு நாணயம் உள்ளவரா என்பதை அவர் சிந்தித்து பார்க்க வேண்டும். தோழர் ஆனைமுத்து அவர்கள் 1972 இல் பெரியாரின் அனுமதி பெற்று பெரியாரின் எழுத்துக்களையும், பேச்சுகளையும் தொகுத்து பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் என மூன்று பெரும் தொகுதிகளாக திருச்சி சிந்தனையாளர் கழகம் மூலம் வெளியிட்டார்.

பெரியாரின் கொள்கைகளை முழுமையாக அறிந்து கொள்ள அந்நூல் மட்டுமே இன்று வரை ஆதாரமாக இருந்து வருகிறது. ஆனைமுத்து தொகுத்தார் என்ற ஒரே காரணத்திற்காக வீரமணியும் அவரது அடியார் கூட்டமும் இன்று வரை அப்படி ஒரு நூல் இருப்பதையே மறைத்து வருகிறதே, என்றைக்காவது விடுதலையிலோ, அல்லது உண்மையிலோ அப்படி ஒரு நூல் இருப்பதாக எழுதி உள்ளார்களா, இத்தனைக்கும் அதில் உள்ள கட்டுரைகளை வேண்டும்போது பயன்படுத்துகிறார்கள் இது அறிவு நாணயமா? அவர்களுக்கு 2200 பக்கமுள்ள பெரியாரின் எழுத்துக்கள் தெரியவில்லை. அதை தொகுத்த ஆனைமுத்து மட்டுமே அவர்கள் கண்ணுக்கு தெரிவதுதான் காரணம்.

நான் கவிஞர் கருணானந்தம் எழுதி 1979 இல் வெளியிட்ட தந்தை பெரியாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை 2007 டிசம்பரில் வெளியிட்டேன். தந்தை பெரியாரைப் பற்றிய முழுமையான வாழ்க்கை வரலாறு அதுதான். பெரியார் திடலில் நூல் மதிப்புரைக்கு 2 நூல்களைக் கொடுத்தேன்.

இன்று வரை அப்படி ஒரு நூல் வந்ததாக 'விடுதலை'யிலோ, 'உண்மை'யிலோ ஒருவர் கூட எழுதவில்லையே ஏன்? இதுதான் அறிவு நாணயமா? 'தினமணி'யில் பார்ப்பன ஆசிரியர் இருந்தும்கூட இதற்கு மதிப்புரை எழுதினார்கள். ஆனால் தாங்கள் தான் பெரியாரின் உண்மையான வாரிசு என்பவர்கள் ஒருவரி கூட எழுதவில்லையே ஏன், இவர்களுக்கு அந்நூலில் பெரியார் வரலாறு தெரிவதைவிட வாலாசா வல்லவன் அவர்கள் கண் முன்னால் தெரிவதுதான் காரணம்.

இன்று பெரியார் திராவிடர் கழகம் 27 தொகுதிகள் குடிஅரசை வெளியிடுகிறது என்றால் உண்மையான பெரியார் தொண்டர்களாயிருந்தால் மகிழ்ச்சி தான் அடைவார்கள். ஆனால், அவர்கள் கண்களுக்கு 10000க்கும் மேற்பட்ட பெரியாரின் பேச்சுகளும், எழுத்துகளும் தெரிவதைவிட, அவர்களிடம் இருந்து பிரிந்து போன, கொளத்தூர் மணியும், இராமகிருஷ்ணனும், விடுதலை இராசேந்திரனும் தான் அவர்கள் கண்களுக்கு தெரிகிறார்கள். ஏற்கனவே பெரியார் தி.க. வெளியிட்ட குடிஅரசு 3 தொகுதிகள் என்றைக்காவது விடுதலையிலோ, உண்மையிலோ வெளியிட்டார்களா? இதுதான் அவர்களின் அறிவு நாணயமா?

கவிஞர் நாரா. நாச்சியப்பன் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னால் கீதைக் காட்டும் பாதை என்ற நூலெழுதி, கீதையை பெரியார் பார்வையில் பார்த்து விமர்சனம் செய்தார்கள். அந்நூல் திடலிலே தான் வெளியிடப்பட்டது. இன்றைக்கு கீதையின் மறுபக்கம் எழுதிய வீரமணி, நாரா. நாச்சியப்பன் தனக்கு முன்பே இப்படியொரு நூல் எழுதி உள்ளதை எங்காவது ஒரு வரி எழுதியுள்ளாரா? இது அறிவு நாணயத்தின் அடையாளமா?

அதே நாரா.நாச்சியப்பன் குருகுலப் போராட்டம் என்ற தலைப்பிலே நூல் எழுதினார். அவர் மறைந்த பிறகு அந் நூலின் சில பகுதிகளை கூடுதலாக சேர்த்து அண்மையில் வீரமணி அவர்கள் அதே தலைப்பிலே ஒரு நூலை வெளியிட்டார். நாரா.நாச்சியப்பன் இப்படியொரு நூலை எழுதியிருப்பதை எங்காவது ஒரு வரி எழுதியுள்ளாரா? இது தான் அறிவு நாணயமா?

பெரியார், "நான் நன்றி பாராட்டாத சேவை செய்கிறேன். 'தேங்க்ஸ் லெஸ் ஜாப்' என்று அடிக்கடி சொல்வார். தன்னுடைய சேவைக்கு யாரும் நன்றி சொல்லத் தேவையில்லை" என்பார். ஆனால் இன்று அவர் தொண்டர்கள் அவர்களுடைய நூலகத்திற்கு நன்றி தெரிவிக்கவில்லை என்று கூறி என்னை நூலகம் வரக் கூடாது என்கிறார்கள். இது என்ன நியாயம்?

Pin It