கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை; கடவுளை கற்பித்தவன் முட்டாள்; கடவுளை பரப்பியவன் அயோக்கியன்; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என, சமதர்மத்தை மறுக்கின்ற மநு தர்மத்திற்கு எதிராக, சுயமரியாதையைப் பறிக்கின்ற தீண்டாமைக்கு எதிராக, தீண்டாமையை உள்ளடக்கிய சாதீயத்திற்கு எதிராக, சாதீயத்தை தாங்கிப் பிடிக்கின்ற மதத்திற்கு எதிராக, மதத்தை உயிரோட்டமாக வைத்திருக்கின்ற கடவுளுக்கு எதிராக கனலாகத் தெரித்த ஈரோட்டு கருப்புச்சட்டை பகுத்தறிவின் நெருப்புக் குரல் இன்னும் ஓங்கி ஒலிக்கவேண்டிய தேவை தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

        தமிழ்மொழியில் கலந்துள்ள ‘ஜாதி’ ‘மதம்’ என்ற வடமொழிச் சொற்களை தமிழ் மொழியிலிருந்து நீக்கிவிட்டால் ‘ஜாதி’ ‘மதம்’ என்ற சொற்களுக்கு ஈடாக தமிழ்ச்சொல் ஒன்றும் இல்லை. ஜாதி, மதத்திற்கு ஈடான தமிழ்ச்சொல்லே தமிழில் இல்லாதபோது பண்டையத் தமிழர் காலத்தில் சாதிமதப் பிரிவினை ஏதுமின்றிதான் மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதை மிகவும் அற்புதமாக நிறுவுகிறார், பெரியார். இதுபோல் சொர்க்கம், நரகம், திவசம், திதி, கல்யாணம், மோட்சம் போன்ற மக்களை மூடர்களாக்குகின்ற வார்த்தைகள் எல்லாம் தமிழ்ச்சொல் அல்ல. இப்படிப்பட்ட வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்தபிறகுதான் கடவுள், மதம், சாதி போன்றவற்றை நம்ப துவங்கினான். ஆனால், தற்போது இந்த வார்த்தைகளெல்லாம் தமிழ்ச்சொல்லாகவே வலம் வருகின்றன.

        வெறுமனே கடவுள் மறுப்பை மட்டும் அவர் செய்யவில்லை. ஆதிக்கச் சுரண்டலும், அடக்குமுறையும், ஒடுக்குமுறையும் எங்கெல்லாம் தலைதூக்கியதோ அங்கெல்லாம் தலையிட்டு அவையனைத்தையும் எதிர்த்தார். இதில் பார்ப்பன ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் அவற்றை பெரியார் எதிர்க்கும் போது, அவர் பார்ப்பனியத்திற்கு மட்டும் எதிரானவர் என்ற முத்திரை குத்தப்பட்டார். கடவுள் இல்லை என்று கூறிய அதே சமயத்தில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தவரும் அவர்தான்.

        அரசியல், சமூகம், பொருளாதாரம், பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கை, பிற்போக்குத்தனம், சமூக நீதி என அனைத்திலும் தனது கருத்துக்களை குழப்பமற்ற, மிகவும் தெளிந்த துணிச்சலோடும் தெரிவித்தவர்.

        சுதந்திரம் வரும்போது சுயராஜ்ஜியம் வரும். ஆனால், சுயமரியாதை ராஜ்ஜியமாக இருக்காது. எனவே, சுதந்திர நாளான ஆகஸ்ட் 15 துக்க நாளென சொன்ன துணிச்சல்காரர் அவர். ஒருவனுக்கு அரை ஏக்கர் கூட இல்லை. மற்றவனுக்கு 1500 ஏக்கர் சொந்தம். எப்படி வந்தது அவனுக்கு 1500 ஏக்கர்? யாரை ஏமாற்றி வந்தது? என்பதை ஆராயவேண்டும். அதைவிடுத்து அரிஜனுக்கு ஒருவீடும் அரை ஏக்கர் நிலமும் கொடுத்துவிடுவதால் ஜாதி ஒழியாது என்பதை தீர்க்கமாகச் சொன்னவர். பெண்ணடிமைத்தனம் போக ஆண்மை அழியவேண்டுமெனச் சொன்னவர். விவாகரத்து, விதவை மறுமணம் அவர்களது உரிமை என குரலெழுப்பியவர்.

        நாட்டுப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று, மதப்பற்று, ஜாதிப்பற்று போன்றவையெல்லாம் பாசிசத்தை நோக்கி பயணிக்கும் காரணிகள் என்பதால் அனைத்தையும் சமமாகப் பாவிக்கவேண்டுமென விரும்பியவர்.

        கடவுள் இல்லை என்று சொல்கிறீர்கள். ஆனால், ராமசாமி என்று பெயர் வைத்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு, “அறியாத வயதில் எங்க அம்மா அப்பா வைத்த பெயர். அந்தப் பெயர் மேல எனக்கெந்த மரியாதையும் கிடையாது. அந்தப் பெயர் உங்களுக்குப் பிடிக்கலைன்னா என்ன ‘மசுரு’ன்னு கூப்பிடுங்க, எனக்கொன்னும் ஆட்சேபணை கிடையாது” என மிகவும் சர்வசாதாரணமாக பேசுபவர்.

        வரலாற்றுச் சிறப்பு மிக்க கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை இந்திய மொழிகளிலேயே முதன்முதலில் தமிழில் வெளியிட்டு அறிமுகப்படுத்தியவர். இப்படி, ‘லெனினும் மதமும்’, ‘கம்யூனிசத்தின் கொள்கை’ மாவீரன் பகத்சிங்கின் ‘நான் ஏன் நாத்திகனானேன்?’ முதலிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட பெருமை பெரியாரையே சாரும். பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய மூவரையும் ஆங்கிலேய அரசு தூக்கிலிட்டபோது பகத்சிங்கின் கொள்கை சுயமரியாதைக் கொள்கை என பிரச்சாரம் செய்தார்.

        இப்படிப்பட்ட பகுத்தறிவுப் போராட்டங்கள் நடத்திய பெரியாரின் வழிவந்தவர்கள் நாங்கள் என கூறிக்கொள்ளும் தி.க, திமுக, அதிமுக, மதிமுக போன்ற திராவிடக் கட்சிகள் அவரின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டுசெல்ல செய்த முயற்சிகள் என்ன?

        ஆனால், இந்த திராவிடக்கட்சிகள் அனைத்துமே தங்கள் கட்சிகளின் விழாக்களுக்கு அச்சடிக்கும் டிஜிட்டல் பேனர்களில் ஏதாவது ஒரு மூலையில் பெரியாரின் படம் இருக்கும். அவ்வளவுதான். பெரியாரின் கருத்துக்களை பேசினால் அது தங்களுக்கு எதிரான கருத்தாகவே இருக்கும் என்பதை திராவிடக் கட்சிகள் உணர்ந்துள்ளன. சொத்துக்குவிப்பிற்கு எதிராக பெரியாரின் கொள்கைகளை ஆசிய பணக்கார வரிசையில் வந்துகொண்டிருக்கும் திமுகவால் பேசமுடியுமா? பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை அதிமுக முன்வைக்குமா? மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் தலித்துகளுக்கு எதிராக தீண்டாமைச் சுவர் எழுப்பிய கொடுமையில் அம்மக்களுக்கு ஆதரவாக திக வீரமணி போராட்டம் ஏதாவது நடத்தினாரா? கலைஞர் கலந்துகொள்ளும் மேடைகளில் அவரை வாழ்த்திப் பேசுவதுதான் பெரியாரின் கொள்கைகளா?

        பெரியாரின் எழுத்து, பேச்சு போன்ற அறிவுசார் சொத்துக்களுக்கு வாரிசு தாங்களே எனவும் பெரியாரின் குடியரசு இதழின் தொகுப்புகளை வெளியிட யாருக்கும் உரிமை இல்லை என நீதிமன்றம் போன வீரமணிக்கு நீதிமன்றம் மிகவும் சரியான சவுக்கடி கொடுத்திருக்கிறது.

        “பெரியாரின் 130வது ஆண்டாக மலரப்போகும் 2009ல் பெரியாரின் எழுத்துக்கள், பதிப்புரிமை பிரச்சனைக்குள் சிக்கி, சட்டங்களின் சண்டைக்களமாக மாற்றப்படுவதை கடும் வேதனை வலியுடனே இந்த நீதிமன்றம் பார்க்கின்றது. அவரது சிந்தனைகளை சகோதர சண்டைக்குள் பெரியாரை சிக்க வைத்து, நீதிமன்றங்களில் காகிதக்கட்டுகளுக்குள் புதைத்துவிடக்கூடாது...” என நீதிபதி கே.சந்துரு பெரியாரின் வரலாற்றுப்பக்கங்களை உதாரணமாக வைத்து நெஞ்சம் நெகிழ்ந்து இத்தீர்ப்பை வழங்கியுள்ளார்.

        பெரியாரின் சொற்பொழிவுகளை எல்லாம் ஒலிநாடாவில் பதிவு செய்திருந்தால், அந்த ஒலிநாடா, 2 ஆண்டுகள், 5 மாதங்கள், 11 நாட்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட பகுத்தறிவின் சிகரமான, பெரியார் இறந்தும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

- இரா.சரவணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It