திராவிட இயக்க நூற்றாண்டு விழா - தலைவர் கலைஞர் முழக்கம்

varalaru_620

1912ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை ஐக்கிய சங்கம், 1913இல் திராவிடர் சங்கம் என மாற்றப்பட்டது. அந்தச் சங்கமே திராவிட இயக்கத்தின் தோற்றம் என்பதால் அச்சங்கத்தை நிறுவிய, மருத்துவர் நடேசனாரின் நினைவுநாளான பிப்ரவரி 18 (1937) தொடங்கி, ஓர் ஆண்டிற் குத் திராவிட இயக்க நூற்றாண்டு விழாவைத் தமிழகமெங்கும் கொண்டாடும்படி தலைவர் கலைஞர் வேண்டுகோள் விடுத்தார்.

களைகட்டியது தமிழகம். தி.மு.கழகத்தின் மாவட்டச் செயலாளரும், மத்திய இணையமைச் சருமான பழனி மாணிக்கம், தலைவரின் அறிக்கை வந்த அன்று மாலையே (18.02.2012), தஞ்சையில் மிகச் சிறப்பான விழா ஒன்றினை நடத்தினார்.

எனினும் முறைப்படியான தொடக்க விழா, சென்னை, அறிவாலயம் கலைஞர் அரங்கில் 27.02.2012 மாலை கலைஞர் தலைமையில் நடைபெற்றது. தளபதி மு.க. ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்த, இனமானப் பேராசிரியர் அன்பழகனார் முன்னிலை வகித்தார். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, நீதியரசர் மோகன், பேராசிரியர் மா. நன்னன், திராவிட இயக்கப் பொதுச்செயலாளர் சுப. வீர பாண்டியன் ஆகியோர் விழாவில் கருத்துரை ஆற்றினர்.

வழக்கமாய் நடக்கும் பல்வேறு விழாக்களைப் போல் அல்லாமல், எழுச்சியும், மகிழ்ச்சியும் நிறைந்த விழாவாக அது அமைந்திருந்தது. வரலாறு காணாத கூட்டம் என்று சொல்லத்தக்க அளவிற்குப் பெருந்திரளாய் மக்கள் கூடியிருந்தனர். அரங்கம் நிறைந்து, வெளிக்கூடம் நிறைந்து, அறிவாலயமே நிறைந்து போகும் அளவுக்கு இன உணர்வாளர்கள் திரண்டிருந்தனர்.

அரங்கில், திராவிட - ஆரிய வரலாற்று முரண்கள் செறிவாக எடுத்துச் சொல்லப்பட்டன. அனைத்து விதமான ஆதிக்கங்களையும் எதிர்க்கும் தமிழர்களே திராவிடர்கள் எனப்படு கின்றோம் என்று தலைவர்கள் எடுத்துரைத்த போது, மக்கள் மகிழ்ந்து வரவேற்றுக் கையயாலி எழுப்பினர்.

அன்று அனைவருடைய பேச்சும், உதடுகளின் அசைவாய் இல்லாமல், உணர்ச்சி களின் வெளிப்பாடாய் இருந்தது.

இனமானப் பேராசிரியர், தன் 90 ஆண்டுகால அனுபவப் பிழிவை அன்று மேடையில் வழங்கினார். ஒன்றாம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை தனக்கு ஆசிரியர்களாக இருந்த அனைவரையும், அவர்களின் பெயர்களோடும் சேர்த்துக் குறிப்பிட்டுச் சொன்னார். அனைவரும் அய்யர் அல்லது அய்யங்கார்களாகத்தான் இருந்தனர் என்பதையும், அவர்கள் மாணவர் களை எப்படி நடத்தினார்கள் என்பதையும் எடுத்துரைத்தார்.

கீர்த்தி வாசன் என்னும் ஆசிரியர் சரியாய்ப் படிக்காத மாணவர்களுக்கு எப்படி அறிவுரை சொல்வார் என்பதைப் பேராசிரியர் நயமாக எடுத்தரைத்தார். அந்த மாணவன் பார்ப்பனனாய் இருந்தால், ‘ஏன்டா அம்பி, நீ பிராமணப் பையன். படிப்புதானடா உன்னைக் காப்பாத்தும், படிக்க வேணாமோ’ என்று கேட்பாராம். அதே ஆசிரியர் அன்று மாணவராய் இருந்த நம் பேராசிரியரைப் பார்த்து, ‘என்ன ராமையா, ஒழுங்கா படிக்காம இருக்கியே... உங்க அப்பாவோட கதர்க்கடையில போய் உக்காந்துரலாம் என்று இருக்கியா’ என்பாராம். ஒரு பிற்படுத்தப்பட்ட மாணவன் சரியாகப் படிக்கவில்லை என்றால், ‘உனக்கெல்லாம் எப்படிடா படிப்பு வரும். மாடு மேய்க்கத் தான் நீ லாயக்கு’ என்று கடிந்து கொள்வாராம். அதுவே ஒரு ஆதிதிராவிட மாணவனாக இருந்தால், ‘உங்களை எல்லாம் பள்ளிக்கூடத்தில சேத்ததுனாலதான் ஊரே கெட்டுப்போச்சி’ என்று சலித்துக் கொள்வாராம்.

இப்படி ஒவ்வொரு வருணத்திற்கும் ஏற்ற வகையில் அறிவுரைகளைக் கூறிய அன்றைய ஆசிரியர்களைப் பற்றிக்கூட ஒருவகையில் அடக்கமாகத்தான் பேராசிரியர் குறிப்பிட்டார். அவர்கள் எல்லோரும் நல்லவர்கள்தான். இரவு ஏழு மணிக்கு வீட்டுக்குப் போனால்கூட பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால் சமூக அமைப்பும், அவர்கள் நெஞ்சில் படிந்து கிடந்த வருணாசிரமச் சிந்தனைகளும் அவர்களை அப்படிப் பேச வைத்தன என்று தன் உரையில் குறிப்பிட்டார் பேராசிரியர்.

அந்தச் சமூக அமைப்பில் வளர்ந்த என் போன்றவர்கள், ஒரு குறிப்பிட்ட வயதில், அந்த அமைப்பின் ஏற்றத்தாழ்வுகளை எதிர்க்கும் திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டோம். திராவிடன் என்பதே நம் முகம் என்பதை உணர்ந்தோம். இந்து என்பதும், சூத்திரன் என்பதும் நமக்கு அணிவிக்கப்பட்ட முகமூடி களே என்பதையும் பேராசிரியர் தன் பேச்சில் அழுத்தமாக வெளிப்படுத்தினார்.

பெருந்திரளாய்க் கூடியிருந்த தொண்டர்களைக் கண்டு நெகிழ்ந்த கலைஞர், “திராவிட இயக்கத்திற்கு ஆதரவு தர என்றைக்கும்நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை எடுத்துக்காட்டு கின்ற வகையில், இந்த மண்டபம் கொள்ளாத அளவிற்கு குழுமியிருக்கின்ற உங்களுடைய அன்பான எழுச்சி மயமான, உணர்வுக்கு நான் தலைவணக்கம் செய்கின்றேன்” என்று கூறி தன் பேச்சைத் தொடங்கினார்.

1942 மார்ச் 8ஆம் நாள் திராவிட நாடு இதழைத் தொடங்கிய போது, அறிஞர் அண்ணா அவர்கள் எழுதியிருந்த தலையங்கத்தின் ஒரு பகுதியை கலைஞர் மேடையில் படித்துக் காட்டி னார். அந்தத் தலையங்கத்தில், தமிழ்நாடு என்றால் திராவிட நாடு என்றும், திராவிட நாடு என்றால் தமிழ்நாடு என்றும் நாம் எடுத்துக்காட்ட வேண்டிய அவசியம் சிறிதும் இல்லாமல், எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன என்றும், 1926இல் டி.ஏ. சுவாமிநாதய்யர் என்பவரால் வெளியிடப்பட்ட, ஜெம் அகராதியில் கூட, திராவிட என்பதற்குத் தமிழ்நாடு என்று ஆராய்ச்சி நூல்களும், தமிழ்நாடு என்றாலும், தமிழர்கள் என்றாலும் முறையே திராவிடம், திராவிடர்கள் என்றுதான் பொருளே ஒழிய வேறில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் எடுத்துக் காட்டினார்.

முரசொலி மாறன் எழுதிய திராவிட இயக்க வரலாறு, கே.ஜி. இராதாமணாளன் எழுதிய திராவிட இயக்க வரலாறு, க. திருநாவுக்கரசு எழுதிய நீதிக்கட்சி வரலாறு முதலான நூல்களை இன்றைய இளைஞர்கள் படிக்க வேண்டும் என்று கலைஞர் கேட்டுக் கொண்டார்.

திராவிட என்னும் சொல்லின் மீது தேவையற்ற வெறுப்புணர்ச்சி இன்றைக்கு வளர்க்கப்படுகிறது என்று கூறிய கலைஞர், 1847ஆம் ஆண்டே திராவிட தீபிகை என்னும் இதழ் தமிழகத்திலே நடத்தப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டினார். திராவிட என்னும் சொல்லைத் தானோ, பேராசிரியரோ, மேடையில் உள்ள எவருமோ கண்டுபிடிக்கவில்லை என்றும், அது காலகாலமாக இருந்து வருகின்ற சொல் என்றும் அவர் விளக்கினார்.

இந்தியாவின் தேசிய கீதத்தில் கூட, பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டா, திராவிட உத்கல வங்கா என்று வருவதை எடுத்துக்காட்டிய கலைஞர், மாநிலக் கல்லூரியில் அமைக்கப் பெற்றிருக்கும் உ.வே. சாமிநாதய்யர் சிலையிலே கூட, திராவிட வித்யா பூ­ண என்றுதான் எழுதப்பட்டுள்ளது என்பதை நினைவுபடுத்தினார்.

ஒரு கருணாநிதி போனாலும், பல கருணாநிதிகள் வருவார்கள் என்பதை இக் கூட்டம் எடுத்துக் காட்டுகிறது என்று கூறிய கலைஞர், தமிழ் வாழ, தமிழர்கள் வாழ, திராவிடம் செழிக்க நாம் அனைவரும் சேர்ந்து உழைப் போம் என்று கூறித் தன் உரையை நிறைவு செய்தார்.

தமிழகம் முழுவதும் திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாக்கள் தொடரட்டும். திராவிட இயக்கத்தால் தமிழர்கள் பெற்ற மொழி உணர்வை, இனப் பற்றை, சுயமரியாதையை, பகுத்தறிவை அடுத்த தலைமுறை அறிந்து கொள்ளவும், அந்தப் பாதையில் தொடர்ந்து செல்லவும் விழாக்கள் வழிவகுக்கட்டும். 

Pin It