பெரியார் எழுத்து பேச்சுகளை கி.வீரமணியின் நிறுவனம் மட்டுமே வெளியிட வேண்டும் என்றும்; கருத்துச் சிதைவு இல்லாமல் பெரியாரை அவர் ஒருவரால் மட்டுமே படம் பிடிக்க முடியும் என்றும் திராவிடர் கழக எழுத்தாளர்கள் வண்டி வண்டியாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் பெரியார் கருத்துகளை சிதைப்பவர்களில் பெரியாரின் எதிரிகளைவிட கி.வீரமணியே முன்னணியில் இருக்கிறார் என்பது, வேதனையான உண்மை. கி.வீரமணி - பெரியார் கருத்துகளை திரித்ததற்கு சில சான்றுகளை இங்கே முன் வைக்கிறோம். கி.வீரமணியானாலும் சரி, அவரது தொண்டரடிப் பொடிகள் ஆனாலும் சரி, அவரது அரசவை எழுத்துப் புலவர்களானாலும் சரி, எல்லோருக்குமே அறைகூவல் விடுக்கிறோம்; இவைகளை - மறுக்க முடியுமா?

13.12.2000 அன்று தஞ்சையை அடுத்த வல்லத்தில் திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு கூடி கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியது. “தந்தை பெரியார் காலத்திலேயே திராவிடர் கழகம் பிரிவினை இயக்கம் அல்ல என அறிவிக்கப்பட்டது” என்பது தீர்மானம். இது உண்மை தானா?

1) பெரியார் தனது இறுதிப் பேருரையிலேயே தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தினார்.

2) பெரியார் மறைவுக்கு முன் 1.10.73, 2.10.73 ‘விடுதலை’ நாளேடுகளில் பிரிவினையை வலியுறுத்தி எழுதினார்.

3) “சுதந்திரத் தமிழ்நாடு பெற தூக்குமேடையும் ஏறுவோம் கி.வீரமணி முழக்கம்” என்ற தலைப்பில் கி.வீரமணி பேச்சு 3.10.1973 ‘விடுதலை’ நாளேட்டில் வெளி வந்தது.

4) 14.11.1973 இல் ‘விடுதலை’யில் வெளிவந்த ‘கழகமும் பிரிவினையும்’ என்ற கட்டுரை “திராவிடர் கழகத்தின் வரலாற்றில் இரண்டறக் கலந்து விட்ட கொள்கையே நாட்டுப் பிரிவினை என்பது வரலாறு அறிந்த அனைவருக்கும் தெரியும்” என்று குறிப்பிட்டது. பெரியார் 24.12.73 இல் முடிவெய்தினார். அதற்கு முன்பு சுமார் ஒரு மாத காலத்துக்குள் எழுதியவற்றை மட்டுமே மேலே சுட்டிக்காட்டியுள்ளோம்.

‘விடுதலை’ நாளேட்டில் இதழின் முகப்பில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம் பெரியார் காலத்திலும் பெரியார் மறைந்த பிறகும்கூட இடம் பெற்றிருந்தது. பெரியார் மறைவுக்குப் பிறகு ‘அவசர நிலை’ காலத்தில்தான் அது நீக்கப்பட்டது.

இவ்வளவுக்கும் பிறகு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் தந்தை பெரியார் காலத்திலேயே “திராவிடர் கழகம் பிரிவினை இயக்கம் அல்ல என்று அறிவிக்கப்பட்டுவிட்டது” என்று கி.வீரமணி தலைமையில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு தீர்மானம் போடுவது பெரியாரைத் திரிப்பதா? இல்லையா?

“பெரியார் வலியுறுத்திய பிரிவினை கோரிக்கையை கைவிடுகிறோம்” என்று தீர்மானம் போட்டுக் கொள்ளட்டும். அது கி.வீரமணியின் உரிமை. ஆனால், பெரியாரே பிரிவினையை கைவிட்டார் என்று தனது முடிவை பெரியார் மீது ஏற்றிச் சொல்வதற்கு பெயர் என்ன? பதில் வருமா?

(‘புரட்டுகள் உடைப்பு’  தொடரும்)

Pin It